இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 17, 2015

சென்னை உட்பட 12 நகரங்களில் NDLM மையம் திறப்பு


SAP இந்தியா மற்றும் NASSCOM பவுண்டேஷன் இரண்டும் இணைந்து, 25 புதிய தேசிய டிஜிட்டல் கல்வியறிவு இயக்க (NDLM) மையங்களை 12 நகரங்களில் திறக்க உள்ளது.

நம் நாட்டில் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான திறமைகளை மேம்படுத்தும் வகையில் NDLM மையங்களை SAP இந்தியா மற்றும் நாஸ்காம் (மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு) பவுண்டேஷன் இரண்டும் இணைந்து திறக்கப்பட உள்ளது.

இதன் மூலம் இளம் வயதுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் கணினி திறமைகளை வளர்த்து, மின்-அஞ்சல் அனுப்புதல், சமூக ஊடகங்களை உபயோகித்தல் இணைய தளங்களுடன் தொடர்பு கொண்டு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு, பதிவு செய்தல் போன்ற அரசு சேவைகளை எல்லோரையும் போல அடைய உதவி செய்யும். மேலும் சிறந்த பயனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வசதியும் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் கோடிங், HTML, SAP லுமிரா மற்றும் இணையம் போன்ற தலைப்புகளில் மேம்பட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

இந்த முயற்சியின் மூலம் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மேற்கு வங்காளம் குஜராத் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, November 16, 2015

பணிப்பதிவேடு பராமரிக்க கல்வித்துறைக்கு உத்தரவு

50% அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு அறிவிப்பு


மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:

"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம்' என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

சம்பள கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது. ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது. அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழகத்தில் கனமழை காரணமாக 5 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (17.11.2015)விடுமுறை


*சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராமநாதபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

*வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

மூவகை சான்றிதழ்; 'மூச்சு முட்டும்' ஆசிரியர்கள்: பயன்படுமா 'இ சேவை' மையம்


பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள் (மூவகை சான்று) வழங்குவதற்கு மாணவர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, மின்னணு உபகரணங்கள் வசதி இல்லாததால் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு சார்பில் வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களில், மூவகை சான்றும் ஒன்று. இதை டிசம்பருக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் அனைத்து மாவட்டங்களிலும், மாணவர் விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணியை, கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.ஆனால், பதிவேற்றம் செய்ய தேவையான கணினி, ஸ்கேனிங், உட்பட உபகரணங்கள் எதுவும் இல்லை. இணையதளம் வசதி, கணினி ஆசிரியர் பெரும்பாலான பள்ளியில் இல்லை. இதனால் ஒரு மாணவருக்கு ரூ.30 செலுத்தி, தனியார் மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இதற்குமுன் மாணவரிடம் ஆவணங்கள் பெற்று, அவை தாலுகா அலுவலகங்களில் வழங்கப்பட்டன.

அதை பரிசீலித்து மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தலைமையாசிரியரே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவால் கூடுதல் பணிச்சுமையில் தத்தளிக்கின்றனர்.இதுகுறித்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக செயலாளர் சிவக்குமார், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க செயலாளர் பாஸ்கரன், தலைவர் தனபால் கூறியதாவது:

இது முற்றிலும் வருவாய்த்துறைக்கு உட்பட்டது. தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர் விவரப் பட்டியல், கல்வி உதவி தொகைக்கான வங்கி கணக்கு எண்கள், நலத்திட்ட விவரம் என பல்வேறு பதிவேற்ற பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. மூவகைச் சான்றிதழ் பணிகளை தாலுகா அலுவலகங்களில் செயல்படும் 'இ சேவை' மையங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும், என்றனர்.

Sunday, November 15, 2015

1,093 உதவி பேராசிரியர்கள்:டி.ஆர்.பி., மூலம் நியமனம்


அரசு கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக, 900 பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், 2011 முதல், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. புதிய கல்லுாரிகளில், தலா, ஐந்து உதவி பேராசிரியர்கள் வீதம், 60 பேரும்; புதிய பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில், தமிழகத்தில் மொத்தம், 3,165 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக, காலை நேர வகுப்பு களில் தற்காலிகமாக, 2,072 கவுரவ பேராசிரியர்களை, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கவும், மீதமுள்ள, 1,093 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, டி.ஆர்.பி., மூலம் ஆட்களை தேர்வு செய்யவும், தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல விதிகளின் கீழ், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

'தூய்மை இந்தியா' வரி அமலால் செலவுகள் அதிகரிப்பு: ரயில், மொபைல் போன் கட்டணங்கள் உயர்வு


மத்திய அரசின், 'சுவச் பாரத்' எனப்படும், 'துாய்மை இந்தியா' திட்டத்திற்காக, சேவை வரியில், 0.5 சதவீத கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், செலவுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ரயில், மொபைல் போன் உள்ளிட்ட சேவைகளுக்கு, கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, அருண் ஜெட்லி, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில், 'அனைத்து சேவைகள் அல்லது குறிப்பிட்ட சேவைகளுக்கு, துாய்மை இந்தியா திட்டத்திற்காக, வரை கூடுதல் வரி வசூலிக்க, அரசு திட்டமிட்டுள்ளது' என, தெரிவித்திருந்தார். அதன் படி, நேற்று முதல், அனைத்து சேவைகளுக்கும், துாய்மை இந்தியா திட்டத்திற்காக, 0.5 சதவீதம் அல்லது அரை சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள, 14 சதவீத சேவை வரியுடன், 0.5 சதவீதம் கூடுதல் வரியை சேர்த்து, தற்போது, 14.5 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரி மூலம் கிடைக்கும் நிதி, துாய்மை இந்தியா திட்டத்திற்காக செலவிடப்படும்.

ரயில் கட்டணம்: புதிய வரி விதிப்பால், நேற்று முதல் ரயிலில், முதல் வகுப்பு மற்றும், 'ஏசி' வகுப்பு கட்டணங்கள் உயர்ந்துள்ளன. 'ரயில் பயணக் கட்டணத்தில், 30 சதவீதத்திற்கு மட்டுமே, சேவை வரி விதிக்கப்படுகிறது. அதனால், 'முதல் வகுப்பு மற்றும் அனைத்து, 'ஏசி' வகுப்பு கட்டணங்களில், 4.35 சதவீதம் மட்டுமே வரி உயர்வு இருக்கும்' என, ரயில்வே அமைச்சகம்தெரிவித்துள்ளது. இதன் படி, சென்னை - டில்லி இடையே, இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டி கட்டணம், 140 ரூபாய் அதிகரித்துள்ளது. டில்லி - மும்பை இடையே, மெயில் மற்றும் விரைவு ரயில்களில், 'ஏசி' வகுப்புகளுக்கான கட்டணம், 206 ரூபாய் உயர்ந்துள்ளது. டில்லி - ஹவுரா இடையே, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' கட்டணம், 102 ரூபாய் அதிகரித்துள்ளது.

உணவகம்: 'ஏசி' உணவகங்களில், மொத்த கட்டணத்தில், 40 சதவீதத்திற்கு மட்டுமே சேவை வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக, 100 ரூபாய் உணவுக்கு, 40 ரூபாய்க்கு மட்டுமே, 14 சதவீத சேவை வரி வசூலிக்கப்படுகிறது. இதன் படி, மொத்த உணவு கட்டணத்தில், சேவை வரி, 5.6 சதவீதமாக உள்ளது. தற்போது, கூடுதலாக, 0.5 சதவீத வரி விதிக்கப் பட்டுள்ளதால், இது, 0.2 சதவீதம் உயர்ந்து, 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.அது போல், மொபைல் போன் சேவைக் கட்டணமும் உயர்ந்துள்ளது. நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், சேவை வரி வசூல், 2.09 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சேவை வரி மற்றும் துாய்மை இந்தியா வரி மூலம், 2016, மார்ச் வரையிலான, நான்கரை மாதங்களில், 3,800 கோடி ரூபாய் கிடைக்கும் என, மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

'பான்' கார்டு கட்டணமும் உயர்வு: மொத்த கட்டணத்தில், கழிவு போக, எஞ்சிய தொகைக்கோ அல்லது, 2006ம் ஆண்டு, சேவை வரி மதிப்பீட்டு சட்ட விதிகளின் படியோ, சேவை வரி விதிக்கப்படுகிறது''சுவச் பாரத் திட்டத்திற்கான கூடுதல் வரி மூலம், ஓராண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,'' என, மத்திய நிதித்துறை செயலர், ஹஸ்முக் அதியாதெரிவித்துள்ளார் சேவைகளுக்கு, 0.5 சதவீதம் கூடுதல் வரி யால், 100 ரூபாய்க்கு, 50 பைசா வீதம்கூடுதலாக செலவாகும்வருமான வரி துறை, நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான் கார்டு' வழங்க, 93 ரூபாயும், அதற்கு, 14 சதவீத சேவை வரியும் சேர்த்து, 106 ரூபாய் வசூலிக்கிறது. சேவைவரி அதிகரிப்பால், இது, 107 ரூபாயாக அதிகரித்துள்ளதுவெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு, பான் கார்டு வழங்க, 93 ரூபாயுடன், சேவை வரியாக, 125 ரூபாயும், தபால் செலவிற்காக, 771 ரூபாயும் வசூலிக்கப்படுகிறதுசேவைவரி அதிகரிப்பால், ரயில்வேக்கு, பயணிகள் போக்குவரத்து மூலம், 35 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

'சுவச் பாரத்' வரியை, மற்றுமொரு வரியாக கருதக்கூடாது. இதை, துாய்மை இந்தியா திட்டத் தில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பாக கருத வேண்டும். இந்த வரியின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும், நாட்டை துாய்மையாக வைத்திருப்பதற்கான திட்டங்களுக்கு செலவிடப்படும்.

25 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை


தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி, நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர், சென்னை, திருவள்ளூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(16-11-15) பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, பெரம்பலூர், கரூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர் துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் மாணவர்களுக்காக 15 பாதுகாப்பு நடவடிக்கைகள்


மழைக்காலங்களில் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

* நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மாணவர்கள் ஆறு, ஏரி, குளங்களுக்கு வேடிக்கை பார்க்கச் செல்ல வேண்டாம்.

* தொடர் மழையின் காரணமாக பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரத்துக்கு மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

* மழை காரணமாக சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய அறைகளை பயன்படுத்தக் கூடாது. அவற்றை பூட்டிவைக்க வேண்டும்.

* மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின்கசிவு, மின்கோளாறு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துக்கொள்ளலாம். அத்துடன் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு மின் கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால், அவை மூடப்பட்ட நிலையில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். விடுமுறை காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக் கூடாது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வழியை தவிர்க்க வேண்டும்.

* சாலையில் செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடுவதோ அல்லது அருகே செல்வதோ கூடாது. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்கள் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.

* சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாத வண்ணம் இருக்கின்றனவா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

* மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது.

* பள்ளியில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். பள்ளங்களைச் சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மழையில் இருந்து காத்துக்கொள்ள மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது என்றும் அவ்வாறு ஒதுங்கினால் இடி, மின்னலால் ஆபத்து நேரிடக்கூடும் என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* பருவகால மாற்றங்களால் ஏற்படக்கூடிய டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, November 14, 2015

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு


பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:- டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள் டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள் டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள் டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள் டிசம்பர் 12 - சனிக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல் டிசம்பர் 14 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல், கணக்குத் தணிக்கை

டிசம்பர் 16 - புதன்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மென் சிவில், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல், பொது இயந்திரவியல் தாள்-2, எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் தாள் 2, தொழில்கல்வி மற்றும் தணிக்கை டிசம்பர் 21 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம் டிசம்பர் 22 - செவ்வாய்க்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), புள்ளியியல், கணக்குப் பதிவியல் மற்றும் கணக்குத் தணிக்கை, செய்முறைத் தேர்வு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும்.

இதில் முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை: டிசம்பர் 9 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள் டிசம்பர் 10 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள் டிசம்பர் 12 - சனிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள் டிசம்பர் 14 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள் டிசம்பர் 16 - புதன்கிழமை - அறிவியல் டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல் டிசம்பர் 21 - திங்கள்கிழமை - கணிதம் தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் கட்டணம் வசூலிக்க உத்தரவு: அரசு ஊழியர்கள் அதிர்ச்சி


மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், பல்வேறு தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 2004 முதல் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பிரச்னை நீடிப்பு:இத்திட்டம் நடைமுறைக்கு வந்து ௧௦ ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் எல்லாம் நிதி பிடித்தம் செய்து, ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தி உள்ளனர். ஆனால், தமிழகத்தில் இதுநாள் வரை ஒரு பைசா கூட, ஓய்வு ஊதிய திட்டத்தில் பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த பிரச்னை ஒரு புறம் நீடித்து வருகிறது. இந்நிலையில், புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்ட சந்தாதாரர்களுக்கு கணக்குகளை பராமரிக்க, கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசின் ஓய்வு ஊதிய துறை உத்தரவிட்டு உள்ளது.

இந்த அறிவிப்பின் படி மத்திய கணக்கு பதிவு முகமைக்கு (சி.ஆர்.ஏ) வந்துள்ள உத்தரவில், கணக்கு துவங்குவதற்கு 50 ரூபாயும், ஆண்டு பராமரிப்பு கட்டணமாக 190 ரூபாயும், ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும் 4 ரூபாயும், ஓய்வு ஊதிய நிதி மேலாளர் களுக்கும் கணக்கு பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், 2004ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட கணக்குளை பராமரிக்க, பராமரிப்பு கட்டணம் வசூல் செய்வதில்லை.

வாக்குறுதி:மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பானது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குமுறுகின்றனர்.

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணை நிர்வாகி பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டு கள் ஆகியும், ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்க வில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது, புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தையே நடைமுறை படுத்த உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதை இதுவரை நிறைவேற்றாததால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கட்டண அறிவிப்பானது, மேலும் அதிருப்தியை அதிகரிப்பதாக உள்ளது.

இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் மவுனம் சாதிப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. குடும்ப ஓய்வு ஊதியம், மற்றும் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சஞ்சாயிகா' சேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் தருமா கல்வித்துறை?


அரசு பள்ளிகளில் முடங்கியுள்ள, 'சஞ்சாயிகா' சிறுசேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க கல்வித்துறை முன்வர வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வித்துறை மூலம், 'சஞ்சாயிகா' என்ற சிறுசேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மாணவர் மத்தியில் சேமிப்பு பழக்கம் வளர்ந்தது. துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திட்டம், நாளடைவில் முடங்கியது. இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர் மத்தியில், பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. மொபைல் போன், சினிமா, சுற்றுலா என, வீணாக இப்பணத்தை செலவிடுகின்றனர். சிறு வயதில் மாணவ, மாணவியர் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

பள்ளிகளில், 'சஞ்சாயிகா' சிறுசேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் தந்து, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, கல்வித்துறை முன்வர வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.