பள்ளி, கல்லுாரிகளில், 'பிளாஸ்டிக்' தேசியக் கொடியை பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.பள்ளி, கல்லுாரி விழாக்களில், பலவிதமான தேசியக் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன; விழா முடிந்ததும் வெளியே வீசப்படுகின்றன. இவற்றில், பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி மக்கிப் போகாமல், அப்படியே கிடப்பதால், அவமரியாதை செய்யப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதை தவிர்க்க, தமிழகத்தில் பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான, பொதுத்துறை முதன்மைச் செயலர் ஜதீந்திரநாத் ஸ்வைனின் உத்தரவு, பள்ளி, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப் பட்டுள்ளது
Saturday, October 31, 2015
'பிளாஸ்டிக்' தேசிய கொடி பள்ளிகளுக்கு அரசு தடை
விகல்ப் திட்டம் அறிமுகம்
TNPTF MANI
முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளுக்காக "விகல்ப்" திட்டம் அறிமுகம்
முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளின் வசதிக்காக, அதே வழித்தடத்தில் பயணிக்கும் மற்ற ரயில்களில் அவர்களுக்கு இடமளிக்கும் "விகல்ப்" என்ற புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக, விகல்ப் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை நாளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் கடைசி வரை உறுதியாகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் ஓடும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விகல்ப் திட்டத்தை, இணையம் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ரயில்வே துறை கூறியுள்ளது.
இணையம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது, விகல்ப் என்ற தேர்வையும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதே வழித்தடத்தில் ஓடும் அடுத்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று ரயில் திட்டம் நாளை முதல் டெல்லி - லக்னோ மற்றும் டெல்லி - ஜம்மு வழித்தடத்தில் ஓடும் ரயில்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
முதல் சோதனையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மற்ற வழித்தடங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
Friday, October 30, 2015
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து மொத்தம் 959 மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 7.5 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. வெள்ளிக்கிழமை வெளியிட்டது. தேர்வில் பங்கேற்ற அனைவருக்குமான மதிப்பெண் பட்டியலும், தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழும் விரைவில் விநியோகிக்கப்படும் என சி.பி.எஎஸ்.இ. தெரிவித்துள்ளது.
அடுத்த தேர்வுகள்: 2016-ஆம் ஆண்டுக்கான சி.டி.இ.டி. தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியன்றும், செப்டம்பர் 18-ஆம் தேதியன்றும் அடுத்தடுத்து நடத்தப்படும் எனவும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்
தமிழக தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்தில், மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகள், மாநில தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டன.ஆனால், 2003க்கு பின், புதிய ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்ட பின், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருங்கால வைப்புநிதிக் கணக்குகள் அனைத்தும், மாநில கணக்காயர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளன. இனி, வருங்கால வைப்புநிதிக் கணக்குகளை, ஏ.ஜி., அலுவலகத்தில் தெரிந்து கொள்ள, ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தி உள்ளார்.இதற்கிடையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், இதுவரை கணக்கில் வராமல் இருந்த, 21.70 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குகள் சரிசெய்யப்பட்டு உள்ளன. இந்த கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படுவதாக, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நவ2 ல் ப்ளஸ் 2 சிறப்பு தேர்வு முடிவு
ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி
அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது.
இதில், 400 பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வில் தமிழ், அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு, போதிய காலியிடம் இல்லை. நேற்றைய கலந்தாய்வில், 1989ல் பணியில் சேர்ந்த, அறிவியல் பட்டதாரிகளுக்கே பதவி உயர்வு பரிசீலிக்கப்பட்டது. தமிழ் பாடத்தில், 2001; கணிதம், 2002; வரலாறு, 2006ல் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஆங்கிலத்தில் மட்டும், 2014ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு கூட, பதவி உயர்வு கிடைத்தது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறும்போது, 'தமிழ், அறிவியல், வரலாறு பாடங்களில் காலியிட எண்ணிக்கையை விட, அதில் பட்டம் பெற்ற ஆசிரியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது. இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள், ஆங்கில பட்டப்படிப்பு முடிக்காததால், அவர்களால், பதவி உயர்வு பெற முடியவில்லை' என்றனர்
Thursday, October 29, 2015
அஞ்சல் துறை செல்வமகள் திட்டம்: வயது 12-ஆக அதிகரிப்பு
அஞ்சலக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் வயது 10-லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை நகர அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ("சுகன்யா சம்ரித்தி கணக்கு') மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் மொத்தம் 73 லட்சம் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில், தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரையில் முதலீடான தொகை ரூ.2,328 கோடி ஆகும். இதற்கு முன்பு வரையில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் தொடக்க காலம் என்பதால் அரசு இரண்டு ஆண்டு சலுகை வழங்கி திட்டத்துக்கான பெண் குழந்தைகளின் வயதை 12-ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சலுகை வரும் 1.12.2015-ஆம் தேதி முடிவடைகிறது. அதனால் 3.12.2003 முதல் 2.12.2005 வரை பிறந்த பெண் குழந்தைகள் இத் திட்டத்தில் வரும் 1.12.2015 வரையில் சேரலாம். வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு, 10 வயது வரையில் உள்ள குழந்தைகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர்ந்து பலன் அடைய முடியும்.
இதை பள்ளிகளில் 6,7-ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளின் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், பள்ளிகளில் ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். செல்வமகள் சேமிப்புக் கணக்கை கிளை அஞ்சலகங்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். இந்தக் கணக்கு தொடங்குவதற்கு குறைந்தது ரூ.1000-ம் செலுத்த வேண்டும். அதையடுத்து, ரூ.100 அல்லது அதன் மடங்குகளாகவோ செலுத்தலாம். இதில், குறிப்பிட்ட தவணை முறைகள் இல்லாமல் வசதிக்கேற்ப பணம் செலுத்தும் வசதி உண்டு. எல்லா அஞ்சலகங்களிலும் இதற்கான சிறப்பு சேவை முகாம் நவம்பர் மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் 9.2 கூட்டு வட்டி மிக கணிசமானதாகும் என்றார் மெர்வின் அலெக்சாண்டர்.
வாக்காளர் சரிபார்ப்பு பணி'மொபைல் ஆப்ஸ்' அறிமுகம்
வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 16.94 லட்சம்; நீக்கம் செய்ய, 1.76 லட்சம்; திருத்தம் செய்ய, 2.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் உள்ள விவரம், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது;
விண்ணப்பங்களும், 'ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளன. இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து, 'செக் லிஸ்ட்' தயார் செய்யப்படுகிறது. இது, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்கப்படும். அவர்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர் வீட்டுக்கு சென்று, விண்ணப்பத்தில் உள்ள விவரம் உண்மையா என, ஆய்வு செய்வர். தவறு இருந்தால், திருத்தம் செய்வர். ஆய்வு விவர அறிக்கையை, மொபைல் ஆப்ஸ் மூலம் பதிவேற்றம் செய்து, நேரடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்புவர்.இதனால், நேரம் மிச்சமாகும். மேலும், தங்களுடைய விண்ணப்பம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் அறியலாம். மொபைல் எண் கொடுத்த வாக்காளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.பெண் கல்வியின் முக்கியத்துவம், தனித்திறன் வளர்ப்பு, உடல் நலன் மற்றும் சுயதொழில் போன்ற தலைப்புகளில், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்!'
பள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது. மதுரை மாவட்டத்தில், ஆசிரியைகளுக்கு, 'ஓவர் கோட்' என்ற மேலங்கி அணியும் முறை, ஒரு பள்ளியில் மட்டும், ஒரு மாதத்திற்கு முன் அறிமுகமானது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, வன்னிவேலன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தான் இந்த திட்டம் அறிமுகமானது. 'படிப்படியாக மற்ற பள்ளிகளிலும், இந்தத் திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்த தடையில்லை' என, கல்வித்துறை அதிகாரிகளும் வாய்மொழியாக ஒப்புதல் அளித்தனர்.ஆனாலும், இதுவரை எந்த பள்ளியிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவில்லை. இதுபற்றி விசாரித்த போது, 'ஆசிரியைகளே, 'ஓவர் கோட்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை' என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆசிரியைகள் சிலர் கூறும்போது, 'ஒரு சில மாணவர்கள் தவறாக நடக்கின்றனர் என்பதற்காக, இதுவரை பின்பற்றிய உடை விதிகளை மாற்ற எங்களுக்கு ஆர்வமில்லை. மாணவர்களை திருத்த வேண்டும்; பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, அவர்களை நல்லவர்களாக வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மாறாக, இதுபோன்ற தடுப்புத் திட்டங்கள் கொண்டு வந்தால், தவறான மாணவர்களின் செயல்பாடு அதிகரிக்குமே தவிர, கட்டுக்குள் வராது' என்றனர்.
Wednesday, October 28, 2015
Tuesday, October 27, 2015
அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
பள்ளிகளில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட் டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
ஒரு பள்ளியில் ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்யாத மாணவர்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்தப் பள்ளியில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்தப் பணியை சிறப்பாக நடத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருந்து, மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பள்ளி வேலைநாள்களில் பள்ளி தொடங்கும் நேரம் முதல் மாலை 5.30 மணி வரையில் முகாம் நடத்தப்பட வேண்டும்.
விடுமுறை உள்பட அனைத்து நாள்களிலும் நடத்த வேண்டும். பள்ளி வேலை நாள்களில் வேலை நேரம் முடிந்த பின்பும், அனைத்து விடுமுறை நாள்களிலும் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். பள்ளி ஆசிரியரையும், வகுப்பறையும் ஒதுக்க வேண்டும்: ஆதார் முகாம்களுக்கான ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர்களில் ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும். ஆதார் எண் பதிவு செய்யும் கருவிகளைப் பொருத்த ஒரு வகுப்பறைகளை ஒதுக்கி தேவையான வசதிகளைச் செய்ய வேண்டும். பதிவுகளை மேற்கொள்வதற்கான கால அட்டவணையையும் தயாரிக்க வேண்டும். பதிவு செய்யப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருக்கிற பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தப் பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் ஆதார் பதிவு செய்யும் முகாமை தொடர்பு மையமாக அமைத்து, இந்த மாணவர்களுக்கு ஆதார் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அந்தப் பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் எந்த முகாமில் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற கால அட்டவணையை மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகியோர் தயார் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிகளுக்கும் அட்டவணையை முன்கூட்டியே அளிக்க வேண்டும். முக்கியமான இந்தப் பணியில் தனிக் கவனம் செலுத்தி, தங்கள் மாவட்டத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்து 100 சதவீத இலக்கை அடைந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது. இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர் மூலம், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரகசிய எண் மூலம், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், நுாற்றுக்கு நுாறு, 'சென்டம்' எடுக்கும் மாணவர்; மாநில, 'ரேங்க்' பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதற்கு எளிமையான கேள்விகளும், மதிப்பெண்ணில் காட்டப்படும் தாராளமும் காரணம். எனவே, மாணவர்கள் பாடங்களை புரிந்து படித்துள்ளனரா அல்லது மனப்பாடம் செய்துள்ளனரா என, அறிய முடிவதில்லை. இதை, சோதனை செய்யும் விதமாக, இந்த ஆண்டு வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு, பாடங்களின் உள் அம்சங்களில் இருந்து, புதிய கேள்விகள் கேட்குமாறு, உத்தரவிடப்பட்டு உள்ளது.எனவே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், கடினமாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. எனவே, முந்தைய ஆண்டு தேர்வுகளின் வினாத்தாள், கெய்டுகள், புத்தகத்தில் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள வினாக்களை படித்தால் மட்டும் போதாது.
பாடப்புத்தகத்தில் உள்ள வழக்கமான கேள்விகள் மட்டுமின்றி, பாடத்தின் முழு சாராம்சத்தையும் புரிந்து படித்தால்தான், அதிக மதிப்பெண் பெற முடியும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையில், பாடப்புத்தகம் முழுவதையும், மாணவர்களை படிக்க வைக்குமாறு, அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவுறுத்தி உள்ளார்.-
Monday, October 26, 2015
எஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்
மத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது.ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் பயன்பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், எஸ்.எஸ்.ஏ., திட்டங்களை செயல்படுத்தாமல், எங்களது பள்ளிகள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் ஏமாற்ற மடைகின்றனர். எனவே, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தை, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த, திட்ட இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sunday, October 25, 2015
பள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
வட கிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- பருவ மழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளிக் கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் ஆகியன மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது எனவும், இடி, மின்னல் ஆபத்து குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின் அழுத்த மின் கம்பங்கள், அறுந்து தொங்கும் கம்பங்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். சிதிலமடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், துண்டித்த நிலையில் உள்ள மின்சார கம்பிகள் இல்லாதவாறு தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் விழும் நிலையில் உள்ள மரங்கள், பழுதடைந்த சுவர்கள், வகுப்பறை, கழிவறை, சுற்றுச்சுவர்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டடப் பணிகள், புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லத் தடை விதிக்கவும் பள்ளங்களைச் சுற்றிப் பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தலைமையாசிரியர்களால் எடுக்கப்பட வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.