இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 06, 2015

மாணவர் வாசிப்பு திறன் அதிகரிப்பு இணை இயக்குனர் பெருமிதம்


தமிழகத்தில் தொடக்கக் கல்வி மாணவர்கள் வாசிப்பு திறன் 10 சதவீதம் அதிகரித்துள்ளது," என, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: எஸ்.எஸ்.ஏ., மற்றும் தொடக்கக் கல்வி சார்பில் மாணவர்களை மதிப்பீடு செய்து, தமிழ், ஆங்கிலத்தில் எழுதுதல், வாசித்தல் மற்றும் அடிப்படை கணித அறிவுத் திறனை அதிகரிக்கும் வகையில், மாநில அடைவு தேர்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன.

இதன் மூலம் மாணவர் வாசிப்பு திறன் 90 சதவீதமாகவும், எழுதும் திறன் 80 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. வாசிப்பு, எழுதும் திறன் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை தேசிய அளவில் கல்வி வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி வரும் 'பிரதாம்' நிறுவனமும் உறுதி செய்துள்ளது.அக்.,15 உலக கை கழுவும் தினம். மாணவர்கள் சாப்பிடும் முன்னரும், கழிப்பறையை பயன்படுத்திய பின்னரும், கை கழுவும் முறை குறித்து பள்ளிகளில் செயல் விளக்கம் நடத்த, கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு 'கிரேடு' : மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாணவர்கள் திறன் அடைவு தேர்ச்சிக்கு ஏற்ப அந்த ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை சார்பில் 'ஏ', 'பி', 'சி', என 'கிரேடு' வழங்கப்படுகின்றன. இதில் தொடர்ந்து 'சி' கிரேடு பெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார். மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உடன் இருந்தார்.

10ம் வகுப்பு தேர்வு செய்முறைபயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


அடுத்த ஆண்டு மார்ச்சில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சியில் சேர, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அனைத்து பாடங்களையும் எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள் மற்றும், 2012க்கு முந்தைய பாடத்திட்டத்தில், அறிவியல் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மீண்டும் தேர்வு எழுத, அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.இதற்கான பயிற்சி வகுப்பில், பெயரை பதிவு செய்ய, ஜூன், 10 முதல் 30ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது; தற்போது, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஜூனில் பதிவு செய்யாதவர்களும், செப்., 4ல், எட்டாம் வகுப்பு தனித்தேர்வில், தேர்ச்சி பெற்றோரும் புதிதாக பதிவு செய்யலாம்.செய்முறை பயிற்சியில், 80 சதவீதம் பங்கேற்பவர்கள் மட்டுமே, செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். பங்கேற்காதவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ''விண்ணப்பங்களை, இம்மாதம் 8ம் தேதி முதல், www.tndge.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல் எடுத்து, மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் பொறுப்பு வகிக்கும், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

அக் 8 வேலைநிறுத்தம் தொடரும்

வேலை நிறுத்தம் தொடரும்
இயக்குநருடன் தற்பொழுது நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி.
கோரிக்கைகள் நிறைவேற்ற உறுதியளிக்கவில்லை.
வேலை நிறுத்தம் தொடரும்
ஜேக்டோ திட்டவட்டம்

தகவல்: செ.பாலசந்தர்
பொதுச்செயலாளர் TNPTF

Monday, October 05, 2015

குரூப் 1 தேர்வு: விண்ணப்ப நிலவரம் இணையதளத்தில் வெளியீடு


குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா என்பது குறித்த விவரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 1 தொகுதியில் காலியாகவுள்ள 74 பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கென 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பம்-தேர்வுக் கட்டணங்கள் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பம்-தேர்வுக்கட்டணம் செலுத்தியிருந்தும் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால், பணம் செலுத்தியதற்கான ரசீதின் (Challan) நகலுடன் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு, வரும் 13-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

20 20 ஆம் ஆண்டிற்குள் 1 கோடி ஆசிரியர்கள் தேவை: யுனெஸ்கோ தகவல்


சர்வதேச அளவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியை அளிக்க வேண்டும் என்பதே, சர்வதேச ஆசிரியர்கள் தினத்தில் நாம் எடுத்திருக்கும் தீர்மானம் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பு, இந்தாண்டை. குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட தீர்மானித்துள்ளது.

சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறா முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமல்லாது அவர்களது எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பயிற்சி, குறைவான ஊழியர்கள் மற்றும் அதற்கேற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தினாலேயே குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், 2020 ஆம் ஆண்டிற்குள் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கிடைக்க வேண்டுமென்றால், 10.9 மில்லியன் (1 கோடியே 10 லட்சம்) ஆசிரியர்கள் தேவைப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது

Sunday, October 04, 2015

65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி


தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், ஸ்டெம் (STEM) எனப்படும் பயிற்சியின் மூலம் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செயல்விளக்கங்கள் வாயிலாக நடத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், பட்டதாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்க உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது என்றும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் 8ம் தேதி ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்' பள்ளிகள் உண்டா; மாணவர்கள் குழப்பம்


அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 8ம் தேதி, 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுவதால், அன்று பள்ளிகள் இயங்குமா என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆசிரியர்களுக்கான, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான, 'ஜாக்டோ' பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வரும், 8ம் தேதி, தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறும்போது, ''அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தொகுப்பூதிய காலத்தை முறைப்படுத்துதல் போன்ற கோரிக்கைளை அரசு ஏற்காதது வருத்தமானது. இதே நிலை நீடித்தால், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்பதால் தான் இந்த போராட்டம்,'' என்றார்.

தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறும்போது, ''போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். ஆசிரியர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர். பள்ளிகளை மூடுவதோ, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோ எங்கள் நோக்கம் அல்ல,'' என்றார். காலாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில், 8ம் தேதி பள்ளிகள் உண்டா, விடுமுறையா என, தெரியாமல், பெற்றோர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மவுனமாக உள்ளது.

'வாட்ஸ் ஆப்'பில்...:ஜாக்டோ போராட்டத்துக்கு, ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும், 'வாட்ஸ் ஆப்' மூலம் ஆதரவு திரட்டு கின்றனர். 1.50 கோடி ஆசிரியர்களின் ஓட்டுகள் தான், அடுத்த அரசை நிர்ணயிக்கும் என்பதால், கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே, வரும் தேர்தலில் ஆதரவு என்றும், 'வாட்ஸ் ஆப்' பில், தகவல் அனுப்பி வருகின்றனர்.

Saturday, October 03, 2015

இலவச பொருட்கள் வரவில்லைஅரசு பள்ளி மாணவர்கள் அவதி


கல்வி ஆண்டு துவங்கி, மூன்று மாதம் தாண்டி விட்ட நிலையில், மாணவ, மாணவியருக்கு இன்னும், புத்தகப்பை, காலணிகள், வண்ண பென்சில் போன்ற இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை. தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 14 வகையான இலவச திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. 2011 - 12ல் இந்த திட்டங்கள் அறிமுகமான போது, பள்ளிகள் திறந்தவுடன் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. அதனால், கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.ஆனால், சமீப ஆண்டுகளாக இலவச பொருட்களை பொறுத்தவரை, கல்வி ஆண்டு முடியும் போது தான் மாணவர்களுக்கு கிடைக்கிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டு இறுதித் தேர்வு துவங்குவதற்கு சில வாரங்கள் முன், மார்ச் மாதம் தான், இலவச காலணிகள் வழங்கப்பட்டன.இந்த ஆண்டும், இலவச பொருட்களின் வினியோகம் இதுவரை துவங்கவில்லை. பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடை மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளன.கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில்கள், 'கிரயான்ஸ்' வண்ணக் குச்சிகள், புத்தகப் பை, காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில், இருப்பில் மீதமிருந்த பொருட்கள் மட்டும், சில பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர் சிலர் கூறியதாவது:இலவச பொருட்களில், 'லேப் - டாப்' மற்றும் சைக்கிள் கொடுப்பதில் மட்டும் அதிகாரிகள் அதிக அக்கறை காட்டுகின்றனர். எனினும், இவை கள்ள சந்தையில் விற்பனைக்கு வந்து விடுகின்றன. தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிக மாணவர்களுக்கு, அவர்களின் படிப்புக்கு பயன்படும் பொருட்களை மிக தாமதமாகவே அரசு வழங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.


இளநிலை உதவியாளர் (பிணையம்) (39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133), வரித் தண்டலர் (22), தட்டச்சர் (1683), சுருக்கெழுத்து தட்டச்சர் (331), மற்றும் நில அளவர் (702), வரைவாளர் (53) என மொத்தத்தில் 4,963 காலிப்பணியிடங்கள் ஆகும்.
இந்த தேர்விற்கு குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டிய கடைசித் தேதி நவம்பர் 12 ஆகும். கட்டணம் செலுத்தக் கடைசி நாள் நவம்பர் 14 ஆகும். தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.
மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள் உள்ளிட்ட 244 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தர பதிவில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படத் தகுதியானவர்கள் ஆவர். மற்றவர்கள் அந்தந்த வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய ரசீதை விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். இணையத்தின் மூலமாகவும் செலுத்தலாம்.
இதுகுறித்த சந்தேகங்களை 044 – 25332855, 044 – 25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 இல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

Friday, October 02, 2015

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விவரங்களை அறிய புதிய வசதி


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்), செல்லிடப்பேசி செயலி, "மிஸ்டு கால்' மூலம் அறிந்துகொள்ளும் வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்து மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர்-2 நிலிந்து மிஸ்ரா வெளியிட்ட செய்தி:

செல்லிடப்பேசி செயலி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் அதன் உறுப்பினர்கள் புதிய செல்லிடப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலி மூலம், தங்கள் பொது கணக்கு எண்ணை (யு.எ.என். நம்பர்) செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். மேலும், தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகையை தெரிந்துகொள்ளவதோடு, இதர தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். எஸ்.எம்.எஸ். வசதி: தங்கள் பொது கணக்கு எண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வர 7738299899 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருமுறை அவ்வாறு, செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டால், உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான மாத பங்களிப்புத் தொகை உள்ளிட்டவற்றை செல்லிடப்பேசியில் அறிந்துகொள்ளலாம். மிஸ்டு கால் வசதி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களை 01122901406 என்ற எண்ணுக்கு "மிஸ்டு கால்' கொடுப்பதன் மூலம் அறிந்துகொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சேவையைப் பயன்படுத்த சந்தாதாரர்கள், தங்கள் பொது கணக்கு எண்ணை (யு.எ.என். நம்பர்) செயல்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு


உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்குக் கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாததால், அந்தப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

அதாவது, மத்திய அரசு ஒரு சதுர அடிக்கு ரூ.600 ஒதுக்குகிறது. ஆனால், கட்டடம் கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.1,300 வரை செலவாகிறது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்டுவதற்காக கூடுதல் நிதியையும் சேர்த்து மாநில அரசு ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக 344 பள்ளிகளைக் கட்டுவதற்காக இப்போது தமிழக அரசின் பங்காக ரூ.380 கோடியும், மத்திய அரசின் பங்காக ரூ.175 கோடியும் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்டடங்களைக் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பொருத்தவரை மாநில அரசின் பங்கீடு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பங்கு 75 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் கட்டடப் பணிகள் ஒரு மாதத்துக்குள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: வித்தியாசம் இல்லாததால் பெற்றோரிடம் ஆர்வம் குறைவு


அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில், எவ்வித மாற்றங்களும் இல்லாததால், அதில் சேர்ப்பதற்கான ஆர்வம் பெற்றோரிடம் குறைந்துவிட்டது. அதிக பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி துவக்கியும், மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவது, கல்வித்துறை அலுவலர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது

.தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். சமீப காலமாக, தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வியின் மீதான ஆர்வம், பெற்றோரிடையே அதிகரித்து வருகிறது. இதனால், அரசு பள்ளிகளில், குழந்தைகளை சேர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால், ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது. இதை தடுக்க, கடந்த, 2012-13ம் ஆண்டில், அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக, அந்த ஆண்டில், 150 பள்ளிகளில் மட்டும் ஆங்கிலவழிக்கல்வி துவங்கியது. 2013-14ம் ஆண்டில், அது, 5,189 பள்ளிகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், 1.03 லட்சம் குழந்தைகள், ஆங்கில வழியில் படிப்பதாக அரசு அறிவித்தது.

ஆனால், அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி மாணவர்களும், தமிழ் வழிக்கல்வி மாணவர்களும், ஒரே வகுப்பறையில் படிக்கும் நிலை, ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும் நிலை, ஆங்கிலவழிக்கல்வி ஏ.பி.எல்., கார்டு வழங்காமை உள்ளிட்டவைகளால், ஆங்கிலவழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாத நிலை உள்ளது. ஆங்கிலவழிக்கல்விக்கு தனியாக ஆசிரியர் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இருந்த உபரி ஆசிரியர்களால், அது முடியாமல் போனது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி பெரிதாக, பெற்றோரை ஈர்க்கவில்லை. ஆசிரியர்கள், தங்கள் வருகை பதிவேட்டில் மட்டுமே, ஆங்கிலவழிக்கல்வியாக பராமரித்து வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் மேலும், 3,500க்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி துவக்கப்பட்டும், ஒரு லட்சம் மாணவர்களின் எண்ணிக்கையை தாண்டவில்லை.

ஆங்கிலவழிக்கான ஆசிரியர்களோ, கற்பித்தல் உபகரணங்களோ வழங்காத நிலையில், ஆங்கிலவழியில் மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வியும் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.

அரசு பள்ளிகளில் தனித்திறன் போட்டி


அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரும், 13ம் தேதி முதல் தனித்திறன் போட்டிகள் நடத்துமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுஉள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பாடம் எடுக்கும் போதும், வகுப்புகள் முடிந்த பிறகும், ஒவ்வொரு மாணவரையும், ஏதாவது ஒரு பாடத்தில், துறையில் தனித்திறன் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பைக் கண்டறிய வேண்டும். அதை செயல்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்த வேண்டும். வரும், 13ம் தேதி, கல்வி மாவட்ட அளவில்; 30ம் தேதி, வருவாய் மாவட்ட அளவில்; நவ., 12ல் மாநில அளவிலும் தனித்திறன் போட்டிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, October 01, 2015

நாடு முழுவதும் அவசர அழைப்பு எண் 112: டிராய் பரிந்துரையை ஏற்றது மத்திய அரசு


இந்தியா முழுவதற்குமான அவசர அழைப்பு எண்ணாக டிராய் பரிந்துரை செய்த 112 எண்ணை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த எண் விரைவில் நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன. ஆனால் இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது.

இதைமாற்றி நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம் என தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. மேலும் செல்போனில் அழைப்பு வசதி நிறுத்தப்பட்டிருந்தாலும், வேறு வகையில் தடை செய்யப்பட்டிருந்தாலும், எந்த சூழலிலும் இந்த 112ஐ எண்ணை மட்டும் அழைக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே டிராயின் பரிந்துரையை ஏற்று நாடு முழுவதும் விரைவில் அவசர கால உதவி அழைப்புக்கு எண் 112ஐ அழுத்தவும் என்ற அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

பள்ளி குழந்தைகளுக்குரூ.45.37 கோடியில் 2 ஜோடி சீருடை: மூன்று கட்ட நிதியளிப்பு


பள்ளி குழந்தைகள் சீருடை தைப்பதற்கு ரூ.45.37 கோடி நிதியை அரசு சமூகநலத்துறைக்கு வழங்கியுள்ளது.சமூகநலத்துறை சார்பில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும். தற்போது முதல் ஜோடி சீருடைகள் தைப்பதற்கான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தையல் கூலியாக அரைக்கால் சட்டை, சட்டைக்கு தலா ரூ.22.05ம், முழு கால்சட்டை ஒன்றுக்கு ரூ.55.13ம், முழு நீள சட்டைக்கு (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) ரூ.27.56ம், ஸ்கர்ட் ஒன்றுக்கு ரூ.16.54ம், மாணவிகளின் சட்டை ஒன்றுக்கு ரூ.19.85ம் சல்வார் கம்மீஸ் ஒன்றுக்கு ரூ.55.13ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி சமூகநலத்துறை சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன.முதல் பருவ 2 ஜோடி சீருடைகளுக்கு தையற்கூலியாக ரூ.45 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 827 ஒதுக்கப்பட்டது. அதில், 50 சதவீதத் தொகையான ரூ.21 கோடியே 95 லட்சத்து 27 ஆயிரத்து 676 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ.23 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 151 விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிதியை அந்தந்த மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

'மகளிர் சுய உதவிகுழு கூட்டுறவு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும், என்றார்.