இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 15, 2015

கோவை மாவட்ட ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்காக புதிய இணையதளம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய இணையதளம் (www.kovaischools.net) தொடங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்கள், மாணவர்கள் - ஆசிரியர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இணையதளம் (https:tnschools.gov.in) செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, கல்வி அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய புதிய இணையதளத்தை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் புதன்கிழமை தொடக்கிவைத்தார். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் என்.அருள்முருகன் கூறியதாவது: கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி விடைத் தாள்கள், பாடத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்படும்.

மேலும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகளுக்குத் தேவையான விவரங்கள், பணி வரன்முறை விவரங்கள், தேவையான விண்ணப்பப் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேவைப்படும் படிவங்களை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல, கல்லூரிக் கல்வி பயில விரும்பும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டி விவரங்கள், கோவை மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தகவல்கள், கல்வியுடன் தொடர்புடைய பிற துறைகளின் இணையதளங்களுக்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய இணையதளம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உதவியாக இருப்பதுடன் கல்வித் துறை அதிகாரிகளை பள்ளிகளுடன் இணைக்கும் பாலமாகவும் இருக்கும் என்றார்.

இடம் பெயர்ந்த இறந்த வாக்காளர் பட்டியல் ஜூலை 18ல் வெளியீடு

வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில், தொகுதியில் இருந்து இடம்பெயர்ந்த, இறந்தவர்களின் தகவல்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரிகளின் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகைகளில் அந்த விவரங்கள் ஒட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தமிழகத்தில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை தமிழகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தகவல் பலகையில் ஒட்டப்படும்: இந்தப் பணியின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் 16.40 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் கள ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், அந்த இடத்தில் இல்லாதவர்கள், இடத்தை வேறொரு இடத்துக்கு மாற்றியவர்கள், இறந்தவர்கள், பல இடங்களில் பெயர் பதிவு போன்றவற்றை கண்டறியவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தப் பணிகளை ஜூலை 15-ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த விவரங்கள் அனைத்தையும் தொகுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரியின் அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி ஒட்டப்பட உள்ளது. ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள இறந்த, இடமாற்றம் செய்த வாக்காளர்களின் விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியின் (ஆட்சியர் அலுவலகம்) அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்படும். மேலும், இதற்கான தகவல்கள் அடங்கிய குறுந்தகடு தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும். அத்துடன், தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும் (www.elections.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்படும் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

Tuesday, July 14, 2015

ஒரே பள்ளியில் 3ஆண்டுகள் பணி புரிந்தால் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்கலாம்

ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது. பார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி, இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார்.

இதில், பணியிட மாறுதல் கோருவதற்காக குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பணியாற்றியிருக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2012-க்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் உபரியாக உள்ளன. எனவே, பணி நிரவலுக்குப் பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும்.

அதுவரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்களின் விவரம்:- பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இப்போது ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காரணங்களுக்காக, 2015-16-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையிலிருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு அலகுவிட்டு அலகு மாறுதல், ஆசிரியர் மாறுதல் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. இதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் வழங்குவதும் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாறுதல் பெற அனுமதிக்கப்பட வேண்டும். விதிகளில் மாற்றம்:- அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர், ஆண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இப்போது, ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையென்றால், அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லையென்றால் பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம் என திருத்தப்பட்டுள்ளது.
இருபாலர் பயிலும் பள்ளிகளில் பொதுமாறுதல் விதிகளின்படி, ஆண், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு எப்போது? இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிகாட்டி நெறிமுறைகளின் படி, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவலுக்குப் பிறகே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைய ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் வெளியிடுவர்.

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலாம் வகுப்பில் 13,573 பேர் தமிழ் வழிக் கல்வியிலும், 8,067 பேர் ஆங்கில வழிக் கல்வியிலும் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகும். ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை இருக்கும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமையில் பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

குறிப்பாக, பெரும்பாலான தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறமை (ஸ்போக்கன் இங்கிலீஷ்) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய குறுந்தகடு வழங்கப்பட்டது. இது ஆசிரியர்களுக்கு ஓரளவுக்கு பயனுள்ளதாக அமைந்தது. இந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழியில் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஆங்கில எழுத்தின் சரியான உச்சரிப்பு, ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் அர்த்தம் ஆகியவை அடங்கிய படத்துடன் கூடிய சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதன் மூலம், ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை மேம்படுவதுடன், மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேசும் திறன் வளரும். இதனால், தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் விளங்குவார்கள். இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் தனியார் பள்ளி மோகம் தணிந்து, அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களின் பார்வை திரும்பும் என்பது கல்வித் துறையின் நம்பிக்கை. மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது விரும்பமும்; அரசுப் பள்ளி மூலம் இது நிறைவேறினால், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

ஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள்வது தொடர்பாக 2 ஆயிரம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஜூலை 13 முதல் 17 வரையும், ஜூலை 21 முதல் 25 வரையிலும் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பிரிட்டன்-இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டம், தேசிய கல்வி திட்டமிடல், நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் போது, பள்ளி மேலாண்மை, ஆசிரியர்களின் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது, ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை எவ்வாறு திருத்துவது உள்பட பல்வேறு பயிற்சிகள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 வேலைவாய்ப்பு பதிவிற்கு ஆதார் எண் கட்டாயமில்லை

“பிளஸ் 2 மாணவர்கள் வேலைவாய்ப்பிற்காக கல்வித்தகுதியை பதிவு செய்ய ஆதார் எண் சமர்ப்பிக்க கட்டாயமில்லை,”என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இன்று முதல் 29ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே அவர்கள் வேலைவாய்ப்பிற்காக கல்வித்தகுதியை 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக மாணவர்கள் 10ம் வகுப்பு வேலைவாய்ப்பக பதிவு அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது ஆதார் அட்டை இல்லாத மாணவர்களை கட்டாயப்படுத்தாமல் அவர்களின் கல்வித்தகுதியை பதிவு செய்ய வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“பிளஸ் 2 கல்வித்தகுதி பதிவுக்காக வரும்போது மாணவர்களின் ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான புகைப்படம் எடுக்க அறிவுரை கூறி கல்வித்தகுதியை பதிவு செய்துதரவேண்டும். இதில் சர்ச்சை கூடாது,”என்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து கல்வி வளர்ச்சி நாள் செலவு செய்ய அனுமதி

அனைத்து பள்ளிகளிலும் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படஉள்ளது.இந்த கல்வி வளர்ச்சி நாள்கொண்டாட்டத்துக்கு மேல்நிலைப் பள்ளிகள் 500 ரூபாய்; மற்ற பள்ளிகள் 250 ரூபாயை பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியிலிருந்து செலவு செய்யலாம் என கல்வித்துறை அனுமதி அளித்து உள்ளது

Monday, July 13, 2015

GO 232 transfer norms

Click below

https://docs.google.com/uc?id=0B5Op1AjDFZGcd2ozUWh0d0NpZzg&export=download

அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1க்கு புதிய பாடத்திட்டம்

பிளஸ் 1 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டில் (2016-17) புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தத் துணைக் குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. இந்தப் பாடத்திட்டத்துக்கு வல்லுநர் குழு கடந்த 2013-ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கியது. அதன் பிறகு, பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்கள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், பல மாதங்களாக இந்தப் பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசின் அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதால், அடுத்தக் கல்வியாண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமலாக வாய்ப்புள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய பாடத்திட்டத்தில் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

ஜூலை 18ல் ஜாக்டோ ஆயத்தக்கூட்டம்

ஜாக்டோ' தொடர் முழக்க போராட்டத்திற்கான மாநில ஆயத்த கூட்டம் ஜூலை 18ல் திண்டுக்கல்லில் நடக்கிறது.மத்திய அரசுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராடி வந்தன. அரசு செவி சாய்க்காததால் 27 சங்கங்கள் ஒன்றுசேர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை (ஜாக்டோ) அமைத்துள்ளன. இந்த அமைப்பு சார்பில் ஆக., 1ல் சென்னையில் தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இப் போராட்டத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளது. போராட்டத்திற்கான ஆயத்தக் கூட்டம் ஜூலை 18ல் திண்டுக்கல்லில் நடக்கிறது. இதில் 27 சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அமல்ராஜ் கூறுகையில், ''தொடர் முழக்க போராட்டம் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும். போராட்ட நடவடிக்கை குறித்து திண்டுக்கல்லில் நடக்கும் ஆயத்த கூட்டத்தில் திட்டமிடப்படும்'' என்றார்.

பி.எப் கணக்கு விபரங்களை இனி தமிழிலும் அறியலாம்

தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின் கணக்கு இருப்பு மற்றும் பிற தகவல்களை, தமிழில், எஸ்.எம்.எஸ்., மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தாம்பரம் பி.எப்., மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.எப்., சந்தாதாரர்களுக்கு, ஒருங்கிணைந்த நிரந்தர அடையாள எண் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, 'ஆன் - லைன்' மூலம், பி.எப்., கணக்கு விவரங்கள் மற்றும் பிற வசதிகளை பெற முடியும்.

சந்தாதாரர்கள், EPFOHO UAN TAM என, குறிப்பிட்டு, 77382 99899 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அவர்களின் பி.எப்., கணக்கு பற்றிய தகவல்கள், தமிழில், எஸ்.எம்.எஸ்., ஆக வரும். செயலற்ற கணக்குகளை முடிவுக்கு கொண்டு வரவும், பழைய கணக்கில் உள்ள தொகையை, புதிய கணக்கிற்கு மாற்றவும், உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பணிக்கு செல்வோருக்கு, மையப்படுத்திய உறுப்பினர் சான்று வழங்கப்படும்.

'ஆன் - லைன்' மூலம், சந்தாதாரர் கணக்குகளை மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் கணக்குகள், 'ஆன் - லைனில்' பதிவேற்றம் செய்யப்படுகிறது; 2014 - 15ல், 14.5 கோடி உறுப்பினர் கணக்குகள், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும், 'ஆன் - லைன்' மூலம் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 அசல் சான்று நாளை முதல் விநியோகம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு முடித்த மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது 90 நாட்களுக்கு செல்லத்தக்கது; இதன் மூலம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

நாளை முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரிடமும் அசல் மதிப்பெண் சான்றிதழை பெறலாம். வேலைவாய்ப்பு: மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் 10ம் வகுப்பில் பதிவு செய்த வேலைவாய்ப்பு அட்டையின் நகலை பள்ளிகளில் ஒப்படைத்து பிளஸ் 2 தகுதியை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை, எண் குடும்ப அட்டை போன்றவற்றையும் மாணவர்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்;

மொபைல் போன் எண் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும்.வரும் 15 முதல் 29ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மற்றும் கூடுதல் தகவல் சேர்க்கும் பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடக்கும். பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணியை மேற்கொள்ளாவிட்டால் அது குறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம். இத்தகவலை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, July 12, 2015

ஊதிய உயர்வு தடை.அரசு ஊழியர் சங்கம் அதிர்ச்சி

எட்டாவது ஊதிய மாற்றம் செயல்படுத்தும் வரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர்கள் வைக்க வேண்டாம் என அரசு கேட்டு கொண்டுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2006 ஜன.,1 முதல் 7 வது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது. இதில் பல முரண்பாடுகள் இருப்பதாக கூறி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

அதிலும் சில முரண்பாடுகள் இருப்பதாக கூறியதை அடுத்து, 3 நபர் குழு அமைக்கப்பட்டு 89 அரசாணைகள் வெளியிடப்பட்டன. மீண்டும் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்காக 7 வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்திலும் 8 வது ஊதிய மாற்றம் செய்யப்பட உள்ளது. அதுவரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்த வேண்டாம் என, நிதித்துறை கேட்டு கொண்டுள்ளது. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அரசின் அறிவிப்பு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22 ல் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம், ஆக., 22 ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த உள்ளோம், என்றார்.