இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, June 08, 2015

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்.பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆய்வு நடவடிக்கைகளை தொழிலாளர் துறை மேற்கொண்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் (குழந்தைகளின் சுதந்திரமான கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) 2009-இன் படி, 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதைத் தடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் பணியை தொழிலாளர் நலத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்.), 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து குழந்தைத் தொழிலாளர்கள் விவரங்களைச் சேகரித்து புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் 44 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், அந்தப் பட்டியலில் 2.75 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களுடன் தமிழகம் 10-ஆவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புள்ளி விவரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தீவிர மறு ஆய்வு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்படுவதால், 8-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமையன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 9-ஆம் தேதி கையெழுத்து இயக்கமும், 10,11 தேதிகளில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. 12-ஆம் தேதி நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

பள்ளி விடுதிகளில் நூடுல்சுக்கு தடை

பள்ளி விடுதிகள் மற்றும் கேன்டீன்களில் நுாடுல்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியன் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பலவற்றில் கேன்டீன் உள்ளது. இவற்றில் மதிய நேர உடனடி உணவாக, மேகி நுாடுல்ஸ் விற்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.

இது தொடர்பாக விரிவான உத்தரவு பள்ளிக் கல்வித் துறை செயலகத்திலிருந்து பிறப்பிக்கப்படும். அதற்கு முன் தாங்களாகவே கேன்டீன்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை நிறுத்திக் கொள்ள பள்ளி நிர்வாகத்துக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர், என்றனர்.

ரயிலில் அபாயச் சங்கிலி இனி இருக்காது.3000கோடி இழப்பால் மாற்று நடவடிக்கை

ரயில் பயணத்தின் போது, அவசர தேவைக்காக, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் வசதி இனி இருக்காது. இதற்கு மாற்றாக, டிரைவரை மொபைல் போனில் அழைத்து, ரயிலை நிறுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொபைல் போன் எண்: சமீப காலமாக, அவசியம் இல்லாத சிறிய காரணங்களுக்காகக் கூட, சிலர் சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்துவது வாடிக்கையாக இருக்கிறது.இதன் காரணமாக, ரயில்கள் தாமதமாகச் செல்ல நேரிடுவதோடு, ரயில்வே துறைக்கு இழப்பையும் ஏற்படுத்துகின்றன. இந்த சம்பவங்கள் மூலமாக மட்டும், 3,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில், தெரிய வந்துள்ளது.

இதற்கு தீர்வாக, ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் துணை டிரைவர் ஆகியோரின் மொபைல் போன் எண்கள் அச்சடிக்கப்பட்டு, பெட்டிகளில் ஒட்டப்பட்டு இருக்கும். அவசரத் தேவையின் போது, பயணிகள், டிரைவரை மொபைல் போனில் அழைத்து, ரயிலை நிறுத்திக் கொள்ளலாம். என்ன மொழி? பல மொழி பேசுவோர், ரயிலில் பயணிக்கும் போது, பயணி பேசும் மொழியை, டிரைவர் புரிந்து கொள்ள இயலாது. மொபைல் போனில் சிக்னல் கிடைக்காவிட்டாலும், புகார் தெரிவிக்க இயலாது. மொபைல் போனிலும், சிலர் தேவையில்லாமல் டிரைவரை அழைத்து, ரயிலை நிறுத்த வாய்ப்பு உள்ளது. இவற்றையும் ரயில்வே துறை அதிகாரிகள் யோசிக்க வேண்டியுள்ளது.

சுயநிதிப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு கே.ஜி.முதல் ஒன்றாம் வகுப்பில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம்

தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம் என, மெட்ரிக்., பள்ளிகள் இயக்குனரகம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் பெறும் பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் சேர்க்க கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது.

இதற்கான கல்வி கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு செலுத்துகிறது. ஒவ்வொரு சுயநிதி பள்ளியிலும் நுழைவு வகுப்புகளில் சேர்க்கலாம் என்ற உத்தரவின்படி கடந்த காலங்களில் கே.ஜி.,முதல், 6 ,9,11ம் வகுப்புகளிலும் மாணவர்களை சேர்த்தனர். 'நுழைவு வகுப்பு' என்பதை தவறாக புரிந்து கொண்ட சில பள்ளிகள் 6, 9, 11ம் வகுப்புகளிலும் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கியது. இவர்களுக்கான கட்டண நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் நேர்ந்தது. இது குறித்து சமீபத்தில் வெளியான மற்றொரு உத்தரவில், “தனியார் சுய நிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பு என்பது கே.ஜி.,முதல் ஒன்றாம் வகுப்பு வரை என்பதை குறிக்கும்.

இதன்படி,அட்மிஷன் வழங்கும் பள்ளிகளுக்கு மட்டுமே கல்விக்கட்டணம் வழங்கப்படும்” என, அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புக்கு மட்டுமே அட்மிஷன் வழங்க வேண்டும். அதிகாரி ஒருவர் கூறுகையில், “ 25 சதவீத ஒதுக்கீட்டில் நுழைவு வகுப்பு என, குறிப்பிட்டது கே.ஜி., முதல் வகுப்பை மட்டுமே. கடந்த சில ஆண்டில் தவறாக அட்மிஷன் வழங்கியதால் இதனை மாற்றியமைக்கும் விதமாக புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல் 25 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை சரியான முறையில் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

Sunday, June 07, 2015

மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை

மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை : பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

ஆசிரியர்கள் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் உகந்ததாக ஆடை அணிய வேண்டும். மாணவிகளை தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. தொந்தரவு செய்வது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கை: மாணவ, மாணவிகளுக்கு நல்லதோர் முன்னுதாரணமாகவும், வழிக்காட்டியாகவும் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் உகந்த ஆடைகளை அணிய வேண்டும். இதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசையோ, அரசு சார்ந்த அதிகாரிகளையோ தேவையற்ற விமர்சனம் செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடத்தைவிதி 12ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும். அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுத்தால், மருத்துவ குழுவிற்கு அனுப்பப்படும். வருடத்திற்கு 3 மாதம் என கணக்கிட்டு விடுப்பு எடுக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது உயர் அலுவலரின் அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது. அவ்வாறு விடுப்பில் செல்லும் போது உதவி ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து செல்ல வேண்டும். பள்ளிகளில் அளவைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

பள்ளி வேலை நேரத்தில் வகுப்பை விட்டு வேறு வகுப்பிற்கோ, வேறு அலுவலகத்திற்கோ செல்லக்கூடாது. உதவி ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பள்ளி நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களை அடிப்பதோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது. மேலும் பெண் பிள்ளைகளை தொடுவதோ, கிள்ளுவதோ, பாலியல் தொந்தரவு செய்வதோ தெரியவந்தால் நடத்தை விதி 20ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர்விடுப்பு (லோக்கல் ஹாலிடே) தேவைப்படுகிற தலைமையாசிரியர் இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.  இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச்சட்டத்தில் ஒதுக்கீடு 25% பட்டியல் குறித்த தெளிவில்லை

கட்டாய கல்வி உரிமைச் சட்டப் படி தனியார் பள்ளிகள் வழங்க வேண்டிய 25 சதவீத ஒதுக்கீடு குறித்த பட்டியலை மெட்ரிக்குலேஷன்  பள்ளிகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்கள் அதில் தெளிவாக  குறிப்பிடவில்லை.

மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கொண்டு  வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு  ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையின் போது, சமூகத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடம்  ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்று  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்பட்டாலும் கடந்த 2 ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை  தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை மட்டும் ரூ.150 கோடி. ஆனால் அதை அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால்  தனியார் பள்ளி நிர்வாகத்தினர்,  மேற்கண்ட 25 சதவீத ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு குழந்தைகளை சேர்க்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் கடந்தும் 25 இட ஒதுக்கீட்டில் சேர்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், 3731  தனியார் பள்ளிகளில்  மாவட்ட வாரியாக  சேர்க்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த விவரங்களை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தனது  இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் எல்கேஜி, ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இடங்கள்  குறித்த  விவரங்களை வெளியிட்டுள்ளது.

இணையத்தில் வெளியிட்டுள்ள பட்டியலில் எல்கேஜி வகுப்புகள் குறித்தும், அதில் உள்ள பிரிவுகள் குறித்தும், மொத்த இடங்கள் குறித்தும் தெரிவிக்– ்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 சதவீத இடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள்  கொடுத்த பட்டியல்களை அப்படியே வெளியிட்டுள்ளனர். எத்தனை குழந்தைகள் சேர்க்கப்பட்டனர் என்ற விவரம் இல்லை. மத்திய அரசின் சட்டப்படி  எல்கேஜி வகுப்பில் சேர்க்க அனுமதி உண்டா என்ற விவரங்கள் அதில் இடம் பெறவில்லை.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள இடங்களுக்கு ஏற்ப எத்தனை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன என்ற விவரங்களும் இல்லை. குறிப்பாக  சென்னையில் உள்ள 321 பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் மொத்த இடங்கள் 11130 உள்ளதாகவும், விண்ணப்பங்கள் 2903 தான் வழங்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சோப்பு தர உத்தரவு

சத்துணவு சாப்பிடும் முன், மாணவர்கள் கை கழுவ வசதியாக, கட்டாயம் சோப்பு வாங்கி வைக்கவும், சாப்பிடுவதற்கு துருப்பிடிக்காத, ஸ்டீல் தட்டுகள் வாங்கி வைக்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் மதிய உணவுத் திட்டம் மற்றும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி, சுவை மற்றும் சுகாதாரம் நிறைந்த உணவு வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பல்வேறு விதிகளை ஏற்படுத்தியுள்ளது. இவை, சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என, நாடு முழுவதும் கள ஆய்வுகளையும் நடத்தி உள்ளது. இதில், துருப்பிடிக்காத தட்டுகள் பல பள்ளிகளில் இல்லை என்றும், மாணவர்கள் விளையாடியதால் ஏற்பட்ட கறைகளையும், பேனா, பென்சில் மற்றும் சாக்பீஸ் கறை படிந்தும் உள்ள கைகளை, சாப்பிடும் முன் கழுவ, 'சோப்பு' மற்றும் தண்ணீர் வசதி இல்லை என்றும் கண்டறிந்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மாநிலப் பள்ளிகளுக்கும் மத்திய அமைச்சகம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதன் விவரம்: 

நாடு முழுவதும், 304 மாவட்டங்களில் உள்ள, 11,663 பள்ளிகளில், 38 நிறுவனங்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.  மாணவர்கள் சாப்பிடும்போது ஜாதி, மத ரீதியான பாகுபாடுகள் காணப்படவில்லை.  பல இடங்களில் பரிமாறப்பட்ட உணவு சூடாக இல்லாமல், குளிர்ந்த நிலையில் இருந்தன.  உணவு வைப்பதற்கு பள்ளிகளில் துருப்பிடிக்காத, சில்வர் தட்டுகள் இல்லாததால், மாணவர்கள் சாப்பாடு வாங்க சிரமப்பட்டனர்.  சாப்பிடும் முன் அவர்கள் கைகளை சுத்தமாகக் கழுவ, சோப்பு வசதி செய்யப்படவில்லை. 

பல பள்ளிகளில், உணவுப் பொருட்கள் கிடங்குடன் கூடிய சமையலறை கட்டடம் இல்லை.  மத்திய அரசின் நிதியில் பயன்படுத்தாத நிதி மூலம் சில்வர் தட்டுகள், சோப்பு வாங்கி வைத்து மாணவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்; சூடான சாப்பாடு பரிமாற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

Saturday, June 06, 2015

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு.ஜூன் 3வது வாரத்தில் தேர்வு முடிவு

தமிழகத்தில் பிஎட் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததால், ஜூன் 3வது வாரத்தில் பிஎட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 670 பிஎட் கல்லூரிகள் செயல்படுகின்றன. பிஎட் தேர்வுகள் கடந்த மே 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடந்தது. 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த மே 25ம் தேதி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 இடங்களில் நடந்தது.

விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவு செய்யும் பணி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் நடந்து வருகின்றன.

இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிவடையும் என தெரிகிறது. எனவே பிஎட் தேர்வு முடிவுகள் ஜூன் 3வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலால் ஆசிரியர் கவுன்சிலிங் தாமதம்?

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலால் பணியிட மாறுதல் 'கவுன்சிலிங்' தாமதம் ஆவதாக ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் பணிபுரிகின்றனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் :ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாறுதலுக்கான 'கவுன்சிலிங்' கடந்த சில ஆண்டுகளாக இணைய தளம் மூலம் நடத்தப்படுகிறது.இதற்கு ஏப்ரல் மாத இறுதியில் விண்ணப்பம் கோரப்பட்டு மே மாதத்தின் இறுதி வாரத்தில் 'கவுன்சிலிங்' முடிந்து ஜூனில் பள்ளி திறந்ததும் இடமாறுதல் பெற்றவர்கள் பணியில் சேருவதற்கான உத்தரவு வழங்கப்படுவது வழக்கம். நடப்பு கல்வி ஆண்டிற்கான 'கவுன்சிலிங்'கிற்கு இது வரை விண்ணப்பம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 27 ல் நடைபெற உள்ளதால் 'கவுன்சிலிங்' தொடர்பாக கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில்'ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை காரணம் காட்டி கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அரசியல்வாதிகள் லட்சக்கணக்கில் பேரம் பேசி கல்வி அதிகாரிகள் மூலம் பணியிட மாறுதல் வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியில்லை என கூறப்படுகிறது. தொடக்கக்கல்வித்துறையில் நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்குரிய முன்னுரிமை அளித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பான முறையான அறிவிப்பில்லை. இதனால் தகுதியான வெளி மாவட்ட ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்” என்றனர்.

கணினி இயக்கத் தெரியாத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி தர உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விவரங்களை, கணினியில் பதிவேற்ற ஆசிரியர்கள் திணறுவதால், அவர்களுக்கு மீண்டும் கணினி பயிற்சி அளிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் சரியான எண்ணிக்கை தெரியா மல், கல்வித் திட்டங்களை வடிவமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு மாணவர், எந்த வகுப்புகளில் படிக்கின்றனர் என்ற தெளிவான விவரங்கள் கல்வித்துறையில் இல்லை

. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரின் விவரங்களை, கணினியில் பதிவு செய்ய, இ.எம்.ஐ.எஸ்., என்ற மின்னணு மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், மாணவர் பெயர், வகுப்பு, முகவரி, அங்க அடையாளம் மற்றும் ரத்தப்பிரிவு போன்ற விவரங்களை, கணினியில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக, அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி வழங்கப்பட்டு, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் கணினி பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி மாணவர் விவரங்கள், கணினியில் ஏற்றப்படவில்லை. இதனால், இந்த ஆண்டு ரத்தப் பிரிவுடன் கூடிய நவீன பஸ் பாஸ் வழங்கும் திட்டம் இழுபறியானது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்த போது, 'கணினி சரியில்லை, பழுது, சர்வர் மக்கர்' என, பள்ளிகளில் பல காரணங்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு தெரியாததால், இந்தப் பணிகள் கிடப்புக்குப் போனதை, அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

எனவே, ஆசிரியர் களுக்கு மீண்டும் கணினி இயக்க பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 10ம் தேதிக்குள், திட்டமிட்டு இதற்கு உரிய அறிக்கை தருமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Friday, June 05, 2015

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியருக்கு கெடு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு:2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு
      தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

        மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், 
         அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது.

        சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில்தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்

          தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

           இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடவேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை.

எம்.பி.ஏ,எம்.சி.ஏ விண்ணப்பம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகள், கலை கல்லூரிகள், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் போன்றவற்றில் எம்பிஏ மற்றும் எம்சிஏ சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 8ம் தேதி முதல் 30ம் தேதி முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.

சென்னையில், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், கிண்டி பொறியியல் கல்லூரி, மாநில கல்லூரிகளில் விண்ணப்பம் கிடைக்கும். இதுதவிர அரியலுர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.