மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி வீடு, மனை வாங்கும் போது, முன்பணமாக, 20 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக கொடுப்பதும், பெறுவதும் இன்றுமுதல் தடை செய்யப்படுகிறது.
மத்திய அரசின், 2015 -- 16, பட்ஜெட்டில், கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 'வீடு, மனை போன்ற அசையா சொத்துக்கள் பரிமாற்றத்தின் போது, கறுப்பு பணம் புழங்க வாய்ப்புள்ளதால், முன்பணமாக, 20 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேலான தொகையை ரொக்கமாக செலுத்துவது, வருமான வரி சட்டப்படி தடை செய்யப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.வருமான வரி சட்டத்தின், 269வது பிரிவின் படி, நிதி முதலீடு சார்ந்த சில நடவடிக்கைகளில், 20 ஆயிரம் ரூபாய்; அதற்கு மேலான தொகையை ரொக்கமாக கொடுக்கவும், பெறவும் தடை உள்ளது. இந்த தடை உத்தரவு, இப்போது வீடு, மனை விற்பனையில் முன்பணம் கொடுப்பதற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதை மீறி பெறப்படும் தொகையில், 100 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.கடந்த சில ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த ரியல் எஸ்டேட் துறையில், இப்போது தான் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது போன்று தடை விதிப்பது தேவையற்றது என, ரியல் எஸ்டேட், கட்டுமான அமைப்புகள் அதிருப்தியை தெரிவித்துள்ளன. இதுகுறித்து, அடுக்குமாடி கட்டுனர் சங்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: *அவசரகால நிதி தேவைக்காக, வீடு, மனையை விற்போரின் அடிப்படை நோக்கத்தை சிதைக்கும் வகையில், இந்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
*ரொக்கத்தை தவிர்த்து காசோலையாக பெறலாம் என்றாலும், அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அப்பாவி மக்கள், நில அபகரிப்பு செய்யும் நபர்களால் ஏமாற்றப்படலாம்.
*வங்கி வரைவோலை (டி.டி.,) வாயிலாக பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், 48,500 ரூபாய் வரையே வங்கிகளில் ரொக்கமாக செலுத்த முடியும்.
* பதிவு செய்யப்படும் விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், 19,500 ரூபாய் மட்டுமே பெறப்பட்டதாக குறிப்பிட்டு விட்டு, ஆவணத்தில் காட்டாமல், மீதித் தொகையை பரிமாற்றம் செய்தல் போன்ற மோசடிகளுக்கு இந்த உத்தரவு வழிவகுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார். இந்த உத்தரவுப்படி, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முன்பணம் பெறப்பட்டதாக வரும் வீடு விற்பனை ஒப்பந்த ஆவணங்களை பதிவு செய்வது தொடர்பாக, பதிவுத்துறை அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்குவது குறித்து, இத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.