இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 20, 2015

ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு : ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் சுமார் 1.50 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பயிற்சியில் எடுத்து கூறப்படுகிறது. இருப்பினும் வகுப்பில் பாடம் நடத்தும் போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தண்டனை வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க கூடாது, திட்டக்கூடாது, மனம் புண்படும்படி எதுவும் சொல்லக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இது தவிர மாணவர்கள் பள்ளிக்கு வரும் போதும், தேர்வு எழுதும் போதும் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டது. அதே போல் ஆசிரியர்களுக்கும் செல்போன் பயன்படுத்துவது தொடர்பான தடை 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை ஆசிரியர்கள் சரியாக பின்பற்றுவதில்லை. இதனால் பள்ளிகளில் விரும்பத்தகாத சம்பவங்கள் மற்றும் ஆசிரியைகளை செல்போனில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுத் தொடங்கின.

மேலும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட்டு விட்டு செல்போனில் பேசிக் கொண்டிருப்பது தொடர்கி றது. வகுப்பில் பாடம் நடத்தும் போது செல்போன் அழைப்பு வருவதால், பாடம் நடத்துவது தடை படுகிறது. நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கேள்வித் தாளை செல்போனில் படம் பிடித்து அனுப்பினர். இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளி நேரத்திலோ, பள்ளி வளாகத்திலோ செல்போன் பயன்படுத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தடை கொண்டு வந்துள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த பிறகு ஆசிரியர்கள் கட்டாயம் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Tuesday, May 19, 2015

வரும் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியா?

நிகழ் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியில் தங்களது குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் கடும் போராட்டமே நடத்த வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிகழ் கல்வியாண்டில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி, அரசுப் பள்ளிகளிலேயே தங்களது குழந்தைகளை எவ்வித சிபாரிசு இன்றியும், நன்கொடை என்ற பெயரில் பெரும் தொகையைக் கட்ட வேண்டிய அவசியம் இன்றியும் சேர்க்க முடியும் என பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பென்சில், அட்லஸ், காலணி, புத்தகங்கள், சீருடை உள்பட 14 வகையான பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.

அந்த விலையில்லாப் பொருள்களும் தங்களது குழந்தைகளுக்கு கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 6 முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ.250 வரையே கட்டணம்! திருவள்ளூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை 1,200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவைகளில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழிக் கல்வியை சுயநிதிப் பிரிவாகக் கருதி ரூ.250 கட்டணம் வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ரூ.200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் கூறியது: ஆங்கில வழிக் கல்வி சில பள்ளிகளில் தொடங்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் மாணவர்ச் சேர்க்கையைப் பொருத்தே அந்தப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடருமா, தாற்காலிகமாக நிறுத்தப்படுமா என்பது தெரியும் என்றார்

பள்ளி திறக்கும் முன் குப்பைகளை அகற்ற வேண்டும்

ஜூன், 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன், குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்; விடுப்பு எடுக்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து, வரும், 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, பள்ளிக் கல்வித் துறையிலிருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஒரு மாதம் வரை பள்ளி விடுமுறை நாளாக உள்ளதால், பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்கள் தேங்கி இருக்கும். அதை சுத்தம் செய்து, கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்த கிணறுகள், பள்ளங்கள் இருந்தால் அதை சீரமைக்க வேண்டும். பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை, பள்ளி திறந்தவுடன் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள் ளோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தபால் துறை சார்பில் புதிய மொபைல் ஆப்ஸ் அறிமுகம்

இந்திய தபால்துறை சார்பில், 'போஸ்ட் இன்போ' எனும், புதிய 'மொபைல் ஆப்ஸ்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பும் ஸ்பீடு போஸ்ட் மற்றும் பார்சல் நிலவரங்களை, 'டிராக்கிங்' மூலம் உடனே அறியலாம். தபால் நிலையத்தின் பெயர் அல்லது பின்கோடு எண்ணை தெரிவித்து, சம்பந்தப்பட்ட தபால்நிலையத்தின் தொடர்பு எண் மற்றும் முழு முகவரியை தெரிந்து கொள்ளலாம். காப்பீட்டு தொகைக்கான பிரீமியம் தொகை, வட்டி விகிதம் உள்ளிட்ட தகவலை, 'இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்' வாயிலாக விரைவில் பெறலாம்.

'போஸ்ட் இன்போ' ஆப்சை, கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தி, எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து கோவை தபால்துறை உதவி கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு கூறுகையில், ''இந்த மொபைல் ஆப்சை பதிவிறக்கம் செய்தால், இன்டர்நெட் வசதியில்லாமலே தபால் துறையின் சேவைகளை பெறலாம். தபால்துறையின் அனைத்து திட்டங்கள் குறித்த தகவலும், இந்த மொபைல் ஆப்சில் இடம் பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கானோர், இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்,'' என்றார்.

பத்தாம் வகுப்பு தேர்வு மறுகூட்டலுக்கு மே22முதல் விண்ணப்பிக்கலாம்

'பத்தாம் வகுப்பு தேர்வில், மறு கூட்டலுக்கு, மே, 22 முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு தேர்வில், விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம். இரு தாள் கொண்ட மொழிப்பாடங்களுக்கு, பாடத்துக்கு தலா, 305; கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, பாடத்துக்கு தலா, 205 ரூபாய், கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் பள்ளியில் கட்டணத்தை பணமாக செலுத்தி, ஒப்புகைச் சீட்டு பெற வேண்டும். ஒப்புகைச் சீட்டின் விண்ணப்ப எண் அடிப்படையிலேயே, மறு கூட்டல் முடிவுகளை அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு உடனடித் துணைத் தேர்வுக்கு, மே, 22 முதல் 27ம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Monday, May 18, 2015

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சென்னையில் காலியாக உள்ள 8 "டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் தாற்காலிக பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பிறகு தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, எம்.எஸ். ஆபீஸ் (சான்றிதழ் படிப்பு) ஆகியவற்றை முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், கல்விச் சான்றிதழ் நகல்களை "மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க கடைசி தேதி மே 25 ஆகும்.

இலவச மாணவர் சேர்க்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பம் பெறுவதற்கான காலக்கெடு, ஜூன், 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலர் பிச்சை கூறியுள்ளதாவது:தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் - 2009ன் படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், 2015 - 16ல், சேர்க்கை இடங்களில், 25 சதவீதத்தை, ஏழை மற்றும் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

ஐசிஎஸ்சி ப்ளஸ் 2 ரிசல்ட் வெளியீடு

மத்திய அரசின், இந்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,க்கான, 10ம் வகுப்பு மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் - ஐ.எஸ்.சி., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. ஐ.சி.எஸ்.இ., மற்றும் ஐ.எஸ்.சி., பாடத்திட்டத்துக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு, நாடு முழுவதும் கடந்த மார்ச்சில் நடந்தது. இந்தியா மற்றும் வெளிநாடு மாணவ, மாணவியர், பிளஸ் 2வில், 72 ஆயிரம் பேர்; 10ம் வகுப்பில், இரண்டு லட்சம் பேர் எழுதினர்.

இதன் முடிவுகள், நேற்று காலை, டில்லில் உள்ள ஐ.சி.எஸ்.இ., கவுன்சில் மூலம், இணையதளத்தில் வெளியிடப்பட்டது.பத்தாம் வகுப்புத் தேர்வில், கோல்கட்டா, மும்பையைச் சேர்ந்த, மூன்று பேர், 500க்கு 496 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்; கோல்கட்டாவை சேர்ந்த மாணவர், பிளஸ் 2வில் முதலிடம் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பில், 98.49 சதவீதம் பேரும், பிளஸ் 2வில் 96.28 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட, மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக, ஐ.சி.எஸ்.இ., கவுன்சில் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை, www.cisce.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

25ஆயிரம் ஆசிரியர்களுக்கு கெடு

அனைத்து ஆசிரியர்களும் இன்னும் ஓர் ஆண்டில் ஆசிரியர்களின் 'டெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 'மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர். 'அரசின் உத்தரவு செல்லும்' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா சமீபத்தில் அனுப்பிய கடிதம் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் மெட்ரிக் இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.'கடந்த 2011 நவம்பர் முதல் கட்டாயக் கல்விச் சட்டப்படி வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி அரசு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் 2016 நவம்பருக்குள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.

இல்லையென்றால் அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆசிரியர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'டெட்' தேர்ச்சி பெறாமல் அரசு பள்ளிகளில் சில நூற்றுக்கணக்கானோர் மட்டுமே உள்ளனர். ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பட்டப் படிப்பு மட்டும் படித்து விட்டு 2011க்குப் பின் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியராகத் தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளது. இதனால் விரைவில் 'டெட்' தேர்வை அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது:

மத்திய அரசின் அறிவிப்பு படி 'டெட்' தேர்வுக்கு 10 வாய்ப்புகள் தர வேண்டும் அல்லது ஐந்து ஆண்டுகளில் முடிக்க வேண்டும்.ஆனால் அரசு இதுவரை ஒரே ஒரு 'டெட்' தேர்வை நடத்தி விட்டு மவுனமாக இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு இரு முறையாவது 'டெட்' தேர்வு நடத்த வேண்டும் என்றார்.

NEWS

*IGNOU - Term End Examination June 2015 Hall Ticket Published

Date Sheet for Term End Examination June 2015 download in www.ignou.ac.in

*Class X CBSE Board Results 2015 could be announced on May 19 or 20, 2015.

CBSE Class XII Board Results could be announced on May 27 or 28, 2015

CBSE class X & XII Board Results on
www.cbseresults.nic.in
www.cbse.nic.in

புத்தகத்துக்கு குட்பை:கணினி மூலம் மாணவர்களுக்கு புதிய திட்டம்

புத்தகத்துக்கு குட்பை : கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்

கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.

நகரபுறங்களில் மட்டுமே இருந்த இக்கலாச்சாரம், தற்போது ஊரக பகுதியிலும் வேரூன்றி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 173 கன்னட பள்ளிகளை மூடிவிட அரசு முடிவு செய்தது. இதற்கு பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பள்ளிகளை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குழந்தை பருவத்தை ஒடுக்கும் சட்டத்திருத்தம்

குழந்தைப் பருவத்தை ஒடுக்கும் சட்டத் திருத்தம்

தமிழ் நேசன்

சிறார் தொழிலாளர் (தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1986-ல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.
முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்தங்களில் ஒன்று, குடும்பத் தொழிலையும் பொழுதுபோக்குத் துறைகளையும் தவிர, மற்ற தொழில் களில் 14 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறாரை ஈடுபடுத்துவதைத் தடை செய்கிறது. குடும்பத் தொழிலிலும் பொழுதுபோக்குத் துறைகளிலும் சிறார் ஈடுபடுத்தப்படும்போது அந்தச் சிறுவர்களின் படிப்பு தடைபட்டுவிடக் கூடாது என்ற முன்நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும்.
1986-ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாத வகையில் அந்தச் சட்டம் பலவீனமாக இருப்பது நாம் அறிந்ததே.

இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ஏ, கட்டாய, இலவசக் கல்வியைப் பெறுவதில் குழந்தைகளுக்கு உள்ள உரிமைக்கான சட்டம்-2009 ஆகிய இரண்டுக்கும் முரணாக 1986-ம் ஆண்டு சட்டம் இருக்கிறது. மூன்றாவதாக, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் ஒப்பந்தம் 138, 182 ஆகியவை வலியுறுத்துவதைப் போல 1986-ம் ஆண்டின் சட்டம் பதின்பருவத் தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்தவில்லை.
குடும்பத் தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று சொல்வதுதான் பெரும் பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது. இந்தியாவில் நிலவும் வறுமை, சமூக-பொருளாதார நிலைகள் போன்றவற்றைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது, சிறார் தங்கள் குடும்பத் தொழில்களைச் செய்யலாம் என்றும், அவற்றில் சிறாருக்கு ஆபத்து இருக்காது என்றும் இந்தச் சட்டத் திருத்தத்தில் மத்திய அரசு சொல்கிறது. இது நடைமுறையோடு பொருந்திப்போகாமல் போவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். இந்தச் சட்டத் திருத்தம் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகளை ஏற்படுத்தி, அந்த ஓட்டைகள் மூலம் சிறார் தொழிலை நியாயப்படுத்துவதற்கு ஏதுவாகிவிடுகிறது.

குடும்பத் தொழில் என்பவையும் சுரண்டல் நிறைந்தவையாகவும், குழந்தைகளுக்குப் பெரும் தீங்கிழைப்பவையாகவும் இருக்கக் கூடும் என்பதையே மத்திய அரசு கவனிக்கத் தவறுகிறது.
குடும்பத் தொழில்கள் என்பவை அமைப்புசாரா பிரிவில் அடங்குபவை. இதனால் அவற்றைக் கட்டுப்படுத்துவதோ கண்காணிப்பதோ இயலாத காரியம். இப்படிப்பட்ட சட்டத் திருத்தத்தால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பெண் குழந்தைகள்தான். அதேபோல், வறுமையின் பிடியில் சிக்கவைக்கப்பட்டிருக்கும் தலித் மக்கள், சிறுபான்மையினர் ஆகிய சமூகங்களில் உள்ள குழந்தைகள் வறுமை காரணமாகத் தங்கள் குழந்தைப் பருவத்தையே இழக்கும் அபாயத்தையும் இந்தச் சட்டத் திருத்தம் ஏற்படுத்திவிடும்.

1986-ம் ஆண்டு சட்டத்தைப் பூசிமெழுகுவதைவிட முக்கியமான காரியம் எதுவென்றால், அந்தச் சட்டத்தையே மேலும் வலுப்படுத்த வேண்டியதுதான். அப்படிச் செய்யும்போது, குழந்தைத் தொழிலாளர், கொத்தடிமை முறை ஆகியவற்றிலிருந்து மீட்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வு கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ‘மீட்பு, மறுவாழ்வு, பள்ளிக்கல்வி’ ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கை அதற்கு அவசியம்.
செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது.

ஆனால், அரசு அவற்றையெல்லாம் விடுத்து, சிறார் தொழிலாளர் முறை ஏதாவது ஒரு வழியில் நீடிப்பதற்கான ஓட்டைகளை ஏற்படுத்தத் துடிக்கிறது. சமீபத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.10,382 கோடிக்கும், முந்தைய அரசு ஒதுக்கிய தொகை ரூ.18,588 கோடிக்கும் உள்ள வித்தியாசமே சொல்லிவிடும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டில் அரசுக்குள்ள அக்கறையை!

இலவச பஸ் பாஸ் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விண்ணப்பம்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 26 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து துறை சார்பில் ஆண்டுதோறும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் பள்ளிகள் திறந்தவுடனே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாணவர்களின் விவரங்களுடன் பள்ளி நிர்வாகிகள் விண்ணப்பித்தால் உடனுக்குடன் பாஸ் வழங்கிவிடுவோம்.
இணையதள முகவரி
மேலும், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு உட்பட்ட பள்ளி நிர் வாகிகள் http://www.mtcbus.org/ என்ற இணையதளத்தில் விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி செய்துள்ளோம். நேரில் வருவோருக்கு விண்ணப்பங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும்.

Sunday, May 17, 2015

பள்ளி திறந்த முதல் நாளில் அனைத்து பொருட்களும் வழங்கி இருக்க வேண்டும்.சுற்றறிக்கை

வரும் கல்வி ஆண்டில், பள்ளிகள் துவங்கும் முதல் நாள் அன்றே, மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடநூல், சீருடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பொறுப்புகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. வரும், 2015-16ம் கல்வி ஆண்டில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் முக்கிய பணிகளும், பொறுப்புகளும் குறித்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றிக்கை விபரம்:

பள்ளி திறக்கப்படும் முதல் நாள் அன்றே அனைத்து மாணவ, மாணவியருக்கும் விலையில்லா பாடநூல், சீருடை, நோட்டு புத்தகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி திறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே, பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கில வழிப்பிரிவு தொடங்கப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விலையில்லா பஸ் பாஸ் தேவைப்படும் மாணவ, மாணவியருக்கு காலதாமதமின்றி பஸ் பாஸ் பெற்றுத்தர போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்வதுடன், இடைப்பட்ட நாட்களுக்கு, பழைய மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பில் புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு அனுமதி பெற்றுத்தருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர், டிவி, சிடி, கற்றல் துணைக்கருவிகள் ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தி மாணவர்கள் பயன் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் பள்ளி வளாகத்தில் திறந்தவெளிக் கிணறுகள், உயர் அழுத்த மின் கம்பிகள், பழுதடைந்த கட்டிடங்கள் போன்றவை இல்லாமல் இருப்பதையும், பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தலைமையாசிரியர், ஆசிரியர் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், தேவையில்லாமல் அடிக்கடி விடுப்பு எடுத்தலை தவிர்க்கும்படி அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமின்றி குறித்த நேரத்தில் வருகை தருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முப்பருவ முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்தியப் பின்னர், மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைந்துள்ளதா என்பதை, அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும், குறைந்த பட்சம், இரண்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆய்வையும், இரண்டு தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பார்வையும் மேற்கொள்வதுடன், குறைந்த பட்சம், 12 பள்ளிகளை பார்வையிட வேண்டும்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், நிதி தொடர்பான செயல்பாடு, நீதிமன்ற வழக்கு, முதல்வரின் மனு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்றவற்றில், முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தற்காலிக மதிப்பெண் சான்று இன்று முதல் டவுன்லோட் செய்யலாம்

பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவ, மாணவியர், நேரடியாக பதிவிறக்கம் செய்யும் வசதி, இன்று முதல் அறிமுகமாகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு தேர்வு முடித்தோருக்கு, நேரடியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல், முதற்கட்டமாக கல்லூரிகளைப் போன்று, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாகி உள்ளது. இந்த சான்றிதழ், மே 7ம் தேதி முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவ, மாணவியர் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி, இன்று முதல் அமலுக்கு வருகிறது. மாணவ, மாணவியர், http://www.dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில், தங்கள் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரத்தைப் பதிவு செய்து, சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். நிரந்தர மதிப்பெண் சான்றிதழ், மறுமதிப்பீடுக்கு பின் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு-ஒத்திவைப்பு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட, 36 வகை மத்திய அரசு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஆண்டுதோறும் மே மாதம் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, மே, 16ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட், 23ல் முதல்நிலைத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நேற்று முன்தினம் திட்டமிட்டபடி அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்ட அறிவிப்பில், மே, 16ம் தேதி தேர்வுக்கான அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு

மத்திய அரசுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி.,யின் செயலர் ஆசிம் குரானா எழுதியுள்ள கடிதம்: கடந்த ஆண்டு, 9.45 லட்சம் பேர், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதினர். இந்தாண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதில், 13 லட்சம் பேர் பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும், 71 இடங்களில், 3,000த்திற் கும் அதிகமான மையங்களில், தேர்வு நடைபெற உள்ளது. அந்தந்த கல்வி மையங்களின் தலைவர்கள், தேர்வை மேற்பார்வைஇடுவர். எனினும், தேர்வுக்கு தேவைப்படும் அதிகாரிகளில், குறிப்பாக, உதவி மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோரில், 50 சதவீதத்தை, அதாவது, 5,000 பேரை, யு.பி.எஸ்.சி., வழங்க வேண்டியுள்ளது. அதனால், இப்பணிக்கு தேவையான, 'குரூப் ஏ' மற்றும் 'குரூப் பி' பணியாளர்களை அனுப்புமாறு, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளை அறிவுறுத்தக் கோரி, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை செயலருக்கு, யு.பி.எஸ்.சி., கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.