135 ஆண்டு கால வரலாறு முடிவுக்கு வருகிறது: தந்தியை தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா
தந்தியைத் தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 135 ஆண்டு கால மணி ஆர்டர் வரலாறு முடிவுக்கு வருகிறது. நாடு முழுவதும் முன்பு மோர்ஸ் முறையில் இருந்த தந்தி முறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக வழக்கொழிந்தது. தற்போது மக்கள் தகவல் தொடர்புக்காக எஸ்எம்எஸ், இமெயில், செல்போன் என வளர்ச்சி அடைந்து விட்டதால் தந்தி முறையை கைவிட்டனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தபால் நிலையங்களிலும் பயன்பாட்டில் இருந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது.
தற்போது தபால் நிலையங்களை பணம் வினியோகிக்கும் மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள எலெக்டரானிக் மணி ஆர்டர் முறை கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தந்தியைத் தொடர்ந்து படிவத்தை நிரப்பி பணம் அனுப்பும் முறையான மணி ஆர்டர் முறையை முடிவுக்கு கொண்டு வர அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தபால்துறை துணை தலைவர் ஷிகா மாத்தூர் குமார் கூறுகையில், தற்போது உடனடியாக பணத்தை பெறும் வகையிலான எலெக்ட்ரானிக் மணியார்டர் முறை புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே 135 ஆண்டு கால பழமையான படிவத்தை நிரப்பி தபால் மூலம் பணம் அனுப்பும் மணியார்டர் முறைக்கு மூடுவிழா நடத்த அஞ்சல் துறை ஆலோசித்து வருகிறது என்றார். நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள் மூலமாக நேரடி பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறை செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.