இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 14, 2015

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்க, ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்பு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது.

ஆங்கில மோகத்தின் காரணத்தால், பெரும்பாலான பெற்றோர் ஆங்கில வழிக் கல்வி தரும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்கின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை சந்திக்கிறது. இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு ஆங்கிலம் எழுதவும், பேசவும் கற்றுக் கொடுக்க கல்வித்துறை முயற்சித்து வருகிறது. இந்த வரிசையில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்க (சர்வ சிக்ச அபியான்) திட்டத்தில், ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன்படி, அரசுப் பள்ளிகளின் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, வரும் 16, 17ம் தேதிகளில் முதற்கட்டமாகவும், 19, 20ம் தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் ஆங்கிலப் பேச்சு (ஸ்போக்கன் இங்கிலிஷ்) பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில், அனைத்து ஆரம்பப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆசிரியர்களுக்குப் பேச்சுப் பயிற்சி, மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சியுடன், ஆங்கிலப் பேச்சுக்கான 'சிடி'யும் வழங்கப்பட உள்ளது.

பேப்பர் சேஷிங் நடக்காது தேர்வுத்துறை அதிரடி

இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. விடைத்தாள் களை, 'சேஸ்' செய்வதைத் தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.

முதற்கட்டமாக தமிழ், ஆங்கில மொழிப்பாடங்கள்; வரும், 21ம் தேதி முதல், முக்கியப் பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பல புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், எந்த மாவட்ட விடைத்தாள்கள் எந்த மாவட்டத்துக்கு செல்கிறது என்பதை, ஆசிரியர்களே அறிய முடியும். இது, முறைகேடுகளுக்கு வழி வகுத்தது. மேலும், மாவட்ட தலைநகரில், ஒரு விடைத்தாள் திருத்தும் மையம் மட்டுமே அமைக்கப்படும்.ஆனால் இந்த ஆண்டு, மாவட்ட தலைநகரம் உட்பட, இரண்டு அல்லது மூன்று மையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த மையங்களுக்கு, பிற மாவட்டங்களில் இருந்து விடைத்தாள்கள் அனுப்பப்படுகின்றன. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:ஆண்டுதோறும், அனைத்து மாவட்ட விடைத்தாள்களும் பண்டல் பண்டலாக வைக்கப்பட்டு மொத்தமாக கலக்கப்படும். இதன்பின், விடைத் தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள் கட்டுக்கள் மாவட்ட வாரியாக அனுப்பப்படும். இந்த ஆண்டு, அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் விடைத்தாள்கள் கலக்கப் பட்டு, பிற மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், எந்த விடைத்தாள் யாருக்கு செல்கிறது என்பதை கண்டு பிடிக்கவோ, 'சேஸ்' செய்யவோ முடியாது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில், வசதியுள்ள இடங்களில், கண்காணிப்பு கேமரா வைக்கப்படும். விடைத்தாளை திருத்தியதும், பக்க வாரியாக மதிப்பெண்ணை பட்டியலிட்டு, உடனடி யாக தேர்வுத்துறை இணைய தளத்தில், திருத்துனர்களே பதிந்து கொள்ள வேண்டும்.இப்பதிவுக்கும், விடைத் தாள் மதிப்பெண்ணுக் கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள்களில் கறுப்பு, நீல நிற பேனா எழுத்துக்கள், பென்சில் அடிக்கோடுகள் தவிர, வேறு ஏதாவது வித்தியா சமான குறியீடுகள் இருந் தால், அந்த விடைத்தாளை குறித்துக் கொள்ள வேண்டும்.

விடைத்தாளில், இரண்டு வித எழுத்துக்கள் இருந் தால், அதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மொத்தத்தில் முறைகேடுகள், தில்லுமுல்லுக்கு இடமின்றி, விடைத்தாள் திருத்தம் நியாயமாக மேற் கொள்ளும் வழிகாட்டுதல் கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உபரி ஆசிரியர் பணியிடங்களை சரண்டர் செய்ய உத்தரவு

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர் குறித்த பட்டியலை அனுப்பி வைக்க, தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், உபரியாக உள்ள ஆசிரியர்கள், 'கிலி' அடைந்து உள்ளனர்.

இந்த துறையில், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2 லட்சம் ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர்.இதில், 150க்கும் குறைவாக மாணவர் உள்ள பள்ளியில், 30 பேருக்கு, ஒரு ஆசிரியரும், 150க்கும்அதிகமான மாணவர் உள்ள பள்ளியில், 40 பேருக்கு, ஒரு ஆசிரியரும் நியமிக்கப்படுகிறது. நடுநிலைப் பள்ளியில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் விகிதத்தில் பணியிடம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும், உபரி ஆசிரியர் பணியிடம் இருக்கக் கூடாது என, காலிப் பணியிடத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில், பணி நிரவல் செய்யப்படுகிறது. உபரி ஆசிரியராக இருப்பவர்கள், மாணவரின் வருகைப் பதிவில் சில முறைகேடு வேலையை செய்து, விதிமுறைக்கு புறம்பாக, உபரி ஆசிரியராகவே காலம் தள்ளி வருகின்றனர்.

இதனால், கல்வித் துறைக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியை அடிப்படையாக கொண்டு, உபரி ஆசிரியர் பட்டியல் தயாரிக்க வேண்டும் எனவும், அது குறித்த விவரங்களை இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிடம் இல்லாத பள்ளியில், உபரி ஆசிரியராக இருப்பவர் விவரத்தை கண்டறிந்து, அதை, 'சரண்டர்' செய்ய வேண்டும் எனவும், அதன்பின், எக்காரணம் கொண்டும், அந்த பள்ளியில் காலிப் பணியிடத்தை காட்டக் கூடாது என்றும், தொடக்கக் கல்வி இயக்குனர் வலியுறுத்தி உள்ளார். வரும் ஆகஸ்ட் அடிப்படையில்கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை:

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர் விகிதம் கணக்கீடு செய்யப்பட்டு, கூடுதலாக உள்ள ஆசிரியர், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுகிறார். இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதி நிலவரத்தின் அடிப்படையில்,உபரி ஆசிரியரை அடையாளம் காண்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நடப்பாண்டு ஆகஸ்ட் இறுதி வரை, மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் உள்ளது. எனவே, நடப்பாண்டு, ஆகஸ்ட் இறுதி நிலவரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

1000 அரசு பள்ளிகள் மூடும் அபாயம்

மாணவர்கள் சேர்க்கை குறைகிறது: 1000 அரசு பள்ளிகள் மூடும் அபாயம்?

தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில்  உள்ள அரசு  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அரசு துவக்கப்பள்ளிகளில் 25 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற  விகிதம் கடைப்பிடிக்க வேண்டும்.  தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் உள்ள 10,000 அரசு துவக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  இவர்கள் தான் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களு க்கு பாடங்களை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது.  2 ஆசிரியர்களில் ஒருவர் விடுமுறையில்  சென்றுவிட்டால், ஒருவர் மட்டுமே பள்ளியை கவனித்து கொள்ள வேண்டிய  நிலை உள்ளது. கல்வித்துறை, தேர்தல், சமூக நலம் என பல்வேறு பணிகளும்  ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன.

துவக்கப்பள்ளிகளில் பெரும்பாலும் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் மாணவர்களின் கல்வித்தரம் குறையும் வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு  பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாகவே அரசு  துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்த பள்ளிகளில் உள்ள 1,000 ஆசிரியர் பணியிடங்களை மீண்டும் திரும்ப ஒப்படைக்க தொடக்க கல்வி இயக்ககம் முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் தற்போது 1,000 ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டதால் வரும்  கல்வியாண்டில் 1,000  துவக்கப்பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு துவக்கப்பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தவும், கூடுதலாக ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் தனியார்  பள்ளிகளை ஊக்குவிக்கும் விதம £க அரசு துவக்கப்பள்ளிகளை மூட மறைமுக முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Friday, March 13, 2015

பி.எப் சந்தா தொகை உயர இருக்கிறது

பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி: பி.எப். சந்தா தொகை உயருகிறது மத்திய அரசின் புதிய மசோதா தயார்
          பணியாளர்களிடம் பிடிக்கப்படும் பி.எப். சந்தா தொகையை உயர்த்தும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது.
பி.எப்.
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அமைப்புசார்ந்த தொழிலாளர்களிடம் பி.எப். எனப்படும் சேமநல நிதி பிடிக்கப்படுகிறது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில்தான் தற்போது பி.எப். சந்தா தொகை கணக்கிடப்படுகிறது.

ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு இருந்தாலும், அதை 15 ஆயிரம் ரூபாய் என உச்சவரம்பாக கொண்டு, அதில் 12 சதவீத தொகை பி.எப். சந்தா தொகையாக பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், ரூ.15 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியர்களிடம் 12 சதவீத தொகையான ரூ.1,800, பி.எப். சந்தா தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது.
இதே அளவு தொகையை அவர் பணிபுரியும் தொழில் நிறுவனமும் செலுத்தி வருகிறது.
ஓய்வூதியம்
ஊழியர்களிடம் பிடிக்கப்படும் 12 சதவீத தொகையில், 3.67 சதவீத தொகை சேமநல நிதிக்கும், 8.33 சதவீத தொகை அவர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கும் செல்கிறது. இதுதவிர, 0.5 சதவீத தொகை, காப்பீட்டு திட்டத்துடன் இணைந்த வைப்புத்தொகையில் செலுத்தப்படுகிறது.
புதிய மசோதா
இந்நிலையில், பி.எப். சந்தா தொகையை அதிகரிக்கும் வகையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம், புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது. பணியாளர்கள் சேமநல நிதி சட்டம்–1952–ல் திருத்தம் செய்து, இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மசோதா, ‘சம்பளம்’ என்பதற்கு புதிய அர்த்தத்தை உருவாக்கி உள்ளது. அதாவது, அடிப்படை சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் சம்பளமாக கருதப்படும். எனவே, தற்போது, பி.எப். சந்தா தொகைக்காக கணக்கிடப்படும் ரூ.15 ஆயிரம் உச்சவரம்பு தொகை அதிகரிக்கும். அதில் 12 சதவீதத்தை கணக்கிடும்போது, பி.எப். சந்தா தொகையும் உயரும். தொழில் நிறுவனங்களும் அதே அளவு தொகையை செலுத்துவதால், பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதுகுறித்து பாரதீய மஸ்தூர் சங்க பொதுச்செயலாளரும், இ.பி.எப். அமைப்பின் அறங்காவலருமான விர்ஜேஷ் உபாத்யாயா கூறுகையில், ‘தொழில் நிறுவனங்கள், தாங்கள் செலுத்த வேண்டிய பி.எப். பங்கை குறைப்பதற்காக, சம்பளத்தை பல்வேறு படிகளாக பிரித்து விடுகின்றன. இந்த மசோதாவின் மூலம், அந்த வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என்றார்.
முத்தரப்பு பேச்சு
இந்த மசோதா தொடர்பாக, தொழில் நிறுவனங்கள், ஊழியர்களின் தொழிற்சங்கங்கள், அரசு தரப்பு ஆகியவை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது. எனவே, மசோதாவுக்கு இறுதி வடிவம் அளிக்கும் பணியில் மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
அனைத்து படிகளையும் சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்று கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதமே இ.பி.எப். அமைப்பு அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பால், அது நிறுத்தி வைக்கப்பட்டது. இதுபற்றி ஆராய அமைக்கப்பட்ட ஒரு கமிட்டியும், அனைத்து படிகளையும் சம்பளத்துடன் இணைக்க சிபாரிசு செய்தது.
இந்த பின்னணியில், மத்திய அரசின் புதிய மசோதா தயாராகி உள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியீடு

10லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு 1 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

குரூப்-4 தேர்வு முடிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் 21-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு எப்போது வெளிவரும் என்று நன்றாக தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். எனவே இந்த தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்வு வைத்து ஆட்களை தேர்ந்து எடுத்து கொடுத்து வருகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு முடிவு இன்னும் 1 மாதத்திற்குள் வெளியிடப்படும். உதவி சித்த மருத்துவ அதிகாரி, ஆயுர்வேதம், யுனானி ஆகியவை உள்ளிட்ட 74 மருத்துவர்களை தேர்ந்து எடுக்க இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும். பின்னர் தேர்வு நடத்தி முடிவு அறிவிக்கப்படும்.

புதிய குரூப்-1 தேர்வு

புதிதாக குரூப்-1 தேர்வு அறிவிப்பு வர உள்ளது. அந்த தேர்வில் , துணை கலெக்டர்கள், துணை சூப்பிரண்டுகள், வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கான 47 பணியிடங்களுக்கு அறிவிப்பு அடுத்த (ஏப்ரல்) மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

அது மட்டுமல்ல புதிதாக நிறைய இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற் கான குரூப்-4 தேர்வுக்கான அறி விப்பு, ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

செயல்நிலை அதிகாரி கிரேடு-1 பதவிக்கு தேர்வு நடத்தப்பட்டு 2 மாதத்திற்குள் முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. டிராப்ட்ஸ் மேன் தேர்வு நடத்தி இறுதி முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. இதுபோல மனோதத்துவர், உதவி மருத்துவ அதிகாரிகள் ஆகிய பணிகளுக்கு தேர்வு நடத்தி விரைவாக முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.

கிராம நிர்வாக அலுவலர்

அதுபோல என்ஜினீயர்கள், அரசு உதவி பொது வக்கீல்கள், அறிவியல் உதவியாளர், குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு தேர்வு நடத்தி விரைவாக முடிவு வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. நிறைய பேர் எழுதிய கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்காக தேர்வு நடத்தி முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதுபோல சிவில் நீதிபதிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படி அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் எவ்வளவு விரைவாக முடிவை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்கி வருகிறோம்.

இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பு

இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான முதல் கட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது.

சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் போட்டித் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்படுவர்.

மொத்தம் 95 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் 190 "அப்ஜெக்டிவ் டைப்' வினாக்கள் இடம்பெற்றிருக்கும் என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு இந்தத் தேர்வுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும். பெரும்பாலும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் போட்டித் தேர்வு நடைபெறும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.

கடந்த 2012-ஆம் ஆண்டில், 1,028 சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஒருவர் தொடர்ந்த வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். போட்டித் தேர்வு, நேர்காணல் மூலம் சிறப்பு ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பு ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்குப் பதிலாக, பதிவு செய்தவர்களிலிருந்து போட்டித் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

பாடத்திட்டம்: இந்தத் தேர்வுக்காக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 5-ஆம் தேதி வெளியிட்டது.

இதில், ஓவிய ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் குழப்பமளிக்கும் வகையில் உள்ளதாக புகார் எழுந்தது. ஓவிய ஆசிரியருக்கான தொழில்நுட்பத் தேர்வு அடிப்படையில் பாடத்திட்டம் இல்லை என்றும், 5 ஆண்டு நுண்கலை (பி.எஃப்.டி.) படிப்பு பாடத்திட்டத்துக்கு இணையாக அது அமைந்துள்ளதாகவும் சிறப்பு ஆசிரியர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

செல்வமகள் சேமிப்பு திட்ட EXCEL sheet

Click below

https://app.box.com/s/t4tdhfxay4r5g41x9sglik0888u2p8y8

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா / கணக்கு)

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் :

v  மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகம் மூலம் சிறப்பு சேமிப்பு திட்டத்தைஅறிமுகம் செய்துள்ளது.

v  10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் /காப்பாளர் உதவியுடன்சுகன்யா சம்தி கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் துவங்கலாம். ( அறிமுக சலுகையாக  11 வயதுள்ள பெண்குழந்தைகள் இந்த வருடம் மட்டும் 02.12.2015 வரைசேர்த்துக்கொள்ளப்படுவார்கள் )

v  ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு வீதம், ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு மட்டும்.***

v  இதற்கு வாரிசு நியமனவசதி இல்லை.

v  கணக்கு துவங்க முதல் தவணை குறைந்த பட்சம் ரூ 1000, மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ. 1,50,000/- ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம்

v  இந்த கணக்கில் 100ன் மடங்காக எத்தனை முறை வேண்டுமானாலும், அனைத்து(CBS) அஞ்சலகங்களிலும் பணம் செலுத்தலாம்.

v  2014-2015 நடப்பு நிதியாண்டில் வட்டி விகிதம் 9.1 %

v  கணக்கு துவங்கிய நாள் முதல் 14 ஆண்டுகள் வரைபணம் செலுத்த வேண்டும்.

v  மேலும், கணக்கு வைத்திருக்கும் பெண்குழந்தையின் 18 வயது முடிந்த பின், கடந்த நிதி ஆண்டு இறுதியில் உள்ள இருப்புத்தொகையில் இருந்து அதிகபட்சமாக 50 சதவீதம் வரை படிப்புக்காக பணம்எடுத்துக் கொள்ளலாம்.

v  21 ஆண்டுகள் முடிந்தபின் கணக்கை முடித்து முதிர்வு தொகையை பெற்றுகொள்ளலாம் அல்லது திருமணத்தின் போது கணக்கை முடித்துக்கொள்ளலாம்

v  செலுத்தும் தொகைக்கு(அசல் & வட்டி) வருமானவரி விலக்கு உண்டு (80-C IT Act 1961 )
 

தேவையான விபரங்கள் :

பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் & புகைப்படம்

பெற்றோர் / காப்பாளரின் இருப்பிட மற்றும் ஆளறி சான்றிதழ் நகல். ( Address & ID Proof )
 

முதிர்வு தொகை :

செலுத்தும் தொகை : ரூ 1000 வீதம் 14 வருடங்கள் ( 1000 x 12 x 14 = 1,68,000 ) வட்டி = 439128  மொத்தம் = 6,07,128 ( தோராயமாக )

மேலும் விவரங்களுக்கு, இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள அருகில்உள்ள  அனைத்து அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்.

Tuesday, March 10, 2015

வாக்காளர் அட்டைக்கும் ஆதார் அட்டைக்கும் ஒரே படிவம்

வாக்காளர் அடையாள அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தீப் சக்சேனா பேசினார். ''வாக்காளர் அடையாள அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.இதற்காக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.இதற்கான பயிற்சிக் கையேடுகள் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் தொடர்பாக மார்ச் 13 -ல் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாட இருக்கிறேன். இதைத் தொடர்ந்து மார்ச் 19-ல் மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.'' என சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

Monday, March 09, 2015

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

'குரூப் - 2' தேர்வு முடிவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நேற்றிரவு, வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த நவ., 8, 9 ஆகிய தேதிகளில், 'குரூப் - 2' பதவிக்கான, 'மெயின்' தேர்வு நடந்தது. துணை வணிக வரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, தொழிலாளர் ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட, 1,130 பதவிகளுக்கு, மொத்தம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில், 5,635 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களின், தேர்வு எண்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின் 'www.tnpsc.gov.in' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். வரும், 26ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது. இதற்காக, ஒவ்வொரு தேர்வருக்கும், தேதி மற்றும் நேரம் குறித்து, தனித்தனியாக, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருந்து, கடிதம் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது.

www.TNNHIS2012.com என்ற வலைத்தளம் சென்று employee login என்பதை கிளிக் செய்து உங்கள் பழைய அட்டை எண்னை user name மற்றும் உங்கள் பிறந்த தேதியை password ஆக உள்ளீடு செய்தால் உங்கள் புதிய மருத்துவ காப்பீடு அட்டை விபரம் காணலாம். அதே பக்கத்தில் ecard என்பதை கிளிக் செய்தால் புதிய அட்டை கிடைக்கும். அதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம் .

NHIS வலைதளம்

Click below

https://tnnhis2012.com/TnHome.aspx