அரசு -தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகளுக்கு அனுமதியில்லை' என்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை மீறும் வகையில், மாநகராட்சி பள்ளிகளை தனியாருக்கு தரை வார்க்கும் திட்டத்தை அமல்படுத்த, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது, கல்வித் துறையினரிடம், பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.'மாநகராட்சியின் திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்துவோம்' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
'அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படும்' என, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு அறிவித்தது. இதன் மூலம், பள்ளி துவங்க, 60 சதவீத பணத்தை தனியார் கொண்டு வந்தால், 40 சதவீத தொகையை அரசு அளிக்கும்.பள்ளி நிர்வாகம் முழுவதும், தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும். 10 ஆண்டுகளுக்குப் பின், முற்றிலும் தனியார் பள்ளியாக்கப்படும். இத்திட்டத்துக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த, 2013 நவம்பரில், இத்திட்டம் குறித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'விரைவில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. எனவே, அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டம் மாற்றப்படும். தமிழகத்தில், இத்திட்டத்தின் கீழ், பள்ளிகள் துவங்க, எந்த விண்ணப்பமும் பெறவில்லை' என, கூறியிருந்தார். ஆனால், இத்திட்டத்தைப் போலவே உள்ள, ஒரு புதிய திட்டத்தை, சென்னை மாநகராட்சி தற்போது அறிமுகம் செய்ய உள்ளது.
*மாநகராட்சி பள்ளிகளில், 50 மாணவர்களுக்கு கீழ் சேர்க்கை உள்ள, ஏழு பள்ளிகளை, முதல் கட்டமாக தனியாருக்கு அளிக்க உள்ளனர்.
*இப்பள்ளிகளின் கட்டடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் தனியாருக்கு அளிக்கப்படும்.
*இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பிற அரசுப் பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.
*ஆண்டுக்கு, மாணவர் ஒருவருக்கு, 10 ஆயிரம் ரூபாயை, பள்ளியை நடத்தும் தனியாருக்கு, மாநகராட்சி அளிக்கும்.
*பள்ளி நிர்வாகம் முழுவதும், தனியார் வசமே இருக்கும்.இந்த திட்டத்திற்கு, கல்வியாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
எந்த வகையில் சிறந்தவை?
பள்ளிக்கு தேவையான கழிப்பறை, துப்புரவாளர், இரவு பாதுகாவலர், மொழி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என, எதையும் செய்து தராமல், சேர்க்கை விகிதம் குறைந்து விட்டது என, மாநகராட்சி காரணம் சொல்கிறது. 'அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படாது' என, ஜெயலலிதா உறுதி அளித்தார்.அவர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, மாநகராட்சிப் பள்ளிகளை, தனியாருக்கு அளிக்கும் வேலையை, சென்னை மாநகராட்சி மேற்கொள்கிறது. தனியார் பள்ளிகள், எந்த வகையில் தரமானது என்பதை முதலில் அறிவிக்க வேண்டும்; என்ன மாற்றம் வரும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.மேயர் சைதை துரைசாமி, ஐ.ஏ.எஸ்., அகாடமி நடத்துகிறார். அதன்மூலம், பல ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கினோம் என, சொல்பவர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில், அந்த நிர்வாகத்தை ஏன் அமல்படுத்தவில்லை.
பிரின்ஸ் கஜேந்திர பாபு
மாநில பள்ளிகள் பொது மேடை அமைப்பின் பொதுச்செயலர்
தனியாருக்கு துணைபோகும் அரசு :
இலவச கல்வி அளிப்பதை முற்றிலுமாக உதறிவிட, அரசு நினைக்கிறது. அதன் ஒரு கட்டமாக, மாநகராட்சிப் பள்ளிகளை தனியாருக்கு அளிக்கின்றனர்.ஒரு மாணவனுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றால், அத்தொகையை மட்டும் கொண்டு, பள்ளியை தனியார் நடத்தி விடுவரா? மாறாக, மாணவர்களிடம் கட்டண வசூலில் ஈடுபடுவர். இதனால், கல்வி மூலம், தனியார் சம்பாதிக்க அரசே துணை போகிறது.மாணவர் சேர்க்கை குறைவுக்கான காரணத்தை கண்டறிந்து, அதை சீர்செய்ய, மாநகராட்சி ஏன் முன்வரவில்லை. தனியாரிடம் என்ன எதிர்பார்க்கின்றனரோ அதை மாநகராட்சியால் ஏன் செய்ய முடியாது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம், மாநகராட்சி பதில் சொல்ல வேண்டும்.
வசந்தி தேவி,
முன்னாள் துணைவேந்தர்
கொள்கை இல்லாத அரசு:
அட்டவணை பாடம் (Activity Learning), புத்தக வழிப்பாடம் இதில் எதை நடத்துவது என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத்
தெரியவில்லை. இத்தகைய குழப்பமான ஆரம்பப் பள்ளி கல்விக் கொள்கையை, அரசு வைத்து உள்ளது.இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என, மாற்றினர். பல பள்ளிகள், ஓராசிரியர் பள்ளியாகவே நீடிக்கின்றன. இந்நிலையில், 'கல்வித் தரம் குறைந்து விட்டது' என, அரசு எப்படி கூற முடியும்.அரசிடம் தெளிவான கல்விக் கொள்கையோ, இலவச கல்வியை தொடரும் எண்ணமோ இல்லை. தனியாரிடம் கல்வித் துறையை முழுமையாக அளிக்க திட்டமிடுகின்றனர். இத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த, டிச., 7ம் தேதி நடக்கும், எங்கள் கூட்டணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்வோம்.
கண்ணன்,
தலைவர்
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி