"கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைவில் அடைய, நடுநிலைப்பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர் திட்டம் செயல்படுத்த வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு கால அட்டவணை, விடுமுறை, நலத்திட்ட தேவைகள், மாணவர் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம், தொடர்பான தகவல்கள் அனைத்துமே, கல்வித்துறை அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு, இ-மெயில் மற்றும் தபாலில் அனுப்பப்படுகிறது. கல்வித்துறை சார்ந்த தகவல்கள் விரைவில் பள்ளிகளை சென்றடையவும், காகித பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், "சிந்தியா சாப்ட்வேர்' திட்டம் நடைமுறையில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 890 துவக்க மற்றும் 293 நடுநிலைப்பள்ளிகளில், பல ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
சிறப்பு தினங்கள் மற்றும் மாணவர்களுக்கான உறுதிமொழி எடுப்பது, பேரணி நடத்துவது, மாணவர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை கல்வித்துறைக்கு அனுப்புவது மற்றும் பெறுவதில், நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகள், தபால் சேவை ஒன்றையே பயன்படுத்த வேண்டியுள்ளதால், தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், விழா கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை, உரிய நேரத்தில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து தபால் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், கல்வித்துறைக்கு சென்றடைந்தனவா என்ற குழப்பமும் நிலவுகிறது. ஆசிரியர்கள் மட்டுமின்றி, திடீரென பெறப்படும் தகவல்களால் மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் கல்வித்துறை தொடர்பான தகவல்களை பெற, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் "சிந்தியா சாப்ட்வேர்" முறை நடைமுறையில் உள்ளது.
நடுநிலைப்பள்ளிகளுக்கும் இவ்வசதியை செய்துதர, ஆசிரியர்கள், கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து வரும் நிலையில், அதை பயன்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தரப்படுகிறது. முக்கியமான தகவல்கள் தபால் மூலமாக அனுப்பப்படுவதால், அவை பள்ளிகளை வந்தடைய தாமதமாகிறது. பெரும்பாலும், ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு நேரில் சென்று தகவல்களை பெற வேண்டியுள்ளது. நடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அருகில் உள்ள துவக்கப்பள்ளிகளும் இத்திட்டத்தை பயன்படுத்தும்படி, இணைப்பு சேவை ஏற்படுத்தினால், தகவல்களை பெறவும் அனுப்பவும் வசதியாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.