தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக நிகழாண்டுக்கான (2014-15) உத்தேச மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
இதன்படி, வீடுகளுக்கு, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் முன்பைவிட 15 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், மின் பயன்பாட்டு கட்டணத்துடன் வசூலிக்கப்படும் நிரந்தர கட்டணமும் முன்பைவிட ரூ. 10 முதல் 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து கருத்துக்கள், ஆலோசனைகளை நுகர்வோர், தொழில் நிறுவனங்களிடமிருந்து ஒழுங்குமுறை ஆணையம் வரவேற்றுள்ளது.
உத்தேச மின் கட்டண உயர்வு விவரம் (யுனிட் ஒன்றுக்கு இரண்டு மாத பயன்பாட்டுக்கான கட்டணம்):
தாழ்வழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகள், கோயில்கள், குறு நிறுவனங்களுக்கான கட்டண உயர்வு விவரம்:
வீடுகளுக்கு யூனிட் உத்தேச உயர்வுக் கட்டணம் (தற்போதையக் கட்டணம்): 0-100 வரையில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 3 (ரூ.2.60); 0-200 ரூ. 3.25 (ரூ. 2.80); , 201-500 யூனிட்டுகளில் 0 முதல் 200 வரை தனியாகவும், 201 முதல் 500 வரை தனியாகவும் கணக்கிட்டு வசூலிக்கப்படும்.
0-200 ரூ. 3.50 (ரூ.3); 201-500 ரூ. 4.60 (ரூ. 4); , 501 யூனிட்டுக்கு மேல் 0-200, 201-500, 501-க்கு மேல் என்ற அடிப்படையில் தனித்தனியாக கணக்கிடப்படும். 0-200 ரூ.3.50 (ரூ.30); 201-500 ரூ. 4.60 (ரூ. 4); 501-க்கு மேல் ரூ. 6.60 (ரூ.5.75).
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- ஒரு யூனிட் ரூ.5.75 (ரூ. 5). தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு யூனிட் ரூ. 7.50 (ரூ. 6.50). கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள்-ஒரு யூனிட் ரூ. 5.75 (ரூ. 5 ).
காட்டேஜ்கள், குறு நிறுவனங்கள்: 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 4 (ரூ. 3.50); 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் ரூ. 4.60 (ரூ. 4). விசைத்தறி நிறுவனங்கள்- 2 மாதங்களுக்கு 0-500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 5.20 (ரூ. 4); 501-1000 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 5.75 (ரூ. 5).
தொழில் நிறுவனங்கள்- ஒரு யூனிட் ரூ. 7.22 (ரூ. 5.50).
வர்த்தக ரீதியிலான மின் பயன்பாடு-2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ. 4.95 (ரூ. 4.30); 100 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் ரூ. 8.05 (ரூ. 7).
கட்டுமானம் போன்ற தாற்காலிக மின் இணைப்புகள்: ஒரு யூனிட் ரூ. 12.10 (ரூ. 10.50).
குடிசை வீடுகள், விவசாய பயன்பாட்டுக்கான மின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கான மின் பயன்பாட்டு கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டு, மானியமாக மின் வாரியத்துக்கு அளித்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அழுத்த பயன்பாட்டு உத்தேச உயர்வுக் கட்டணம் (தற்போதையக் கட்டணம்): தொழில் நிறுவனங்கள்: ரூ. 7.22 (ரூ. 5.50); ரயில்வே- ரூ. 7.22 (ரூ. 5.50); அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- ரூ. 7.22 (ரூ. 4.50); தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ. 7.22 (ரூ. 5.50); வர்த்தக பயன்பாடு- ரூ. 8.05 (ரூ. 7); தாற்காலிக பயன்பாடு ரூ.11 (ரூ. 9).
மின் வாரியத்துக்கு ரூ. 6,854 கோடி இழப்பு
தமிழ்நாடு மின் வாரியத்துக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கான வருவாய் தேவை ரூ. 39,818 கோடியாகும்.
ஆனால், மின் வாரியத்தின் வருவாய் ரூ. 32,964 கோடி அளவிலேயே உள்ளது. இதனால் ரூ. 6,854 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச உயர்வுக் கட்டணம் மூலம், மின் வாரியத்துக்கு ரூ. 6,805 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
எனினும், மின் வாரியத்துக்கு நிகழாண்டில் ரூ. 49 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.