பள்ளி வளாகங்களில், வெளி ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக, தகவல்கள் வருகின்றன. இதை உடனடியாக தடுத்து நிறுத்த, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார். அவரது அறிக்கை: 'பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும், அனைத்து வகை பள்ளிகளிலும், பள்ளி வளாகத்தில், மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என, ஏற்கனவே, தலைமை ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், ஒரு சில இடங்களில், பள்ளி வளாகங்களில், வெளி ஆட்கள் நடமாட்டம் இருப்பதாகவும், பள்ளிகளில் இருந்து, பொருட்கள் காணாமல் போவதாகவும், பள்ளியில் உள்ள பொருட்கள், வெளி ஆட்களால், சேதப்படுத்தப்படுவதாகவும், இயக்குனரகத்திற்கு, தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற போக்கை, உடனடியாக தடுத்து நிறுத்த, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் பாதுகாப்பு மற்றும் பள்ளியில் உள்ள நலதிட்ட பொருட்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி வளாகத்திற்குள், வெளி ஆட்கள் நடமாட்டத்தை, முற்றிலும் தடுக்க வேண்டும். பள்ளிகளில், போதிய பாதுகாப்பு இருப்பதை, முதன்மை கல்வி அலுவலர்கள், உறுதி செய்ய வேண்டும். ஏதாவது, குறைபாடு நடந்தால், அதற்கான முழு பொறுப்பையும், தலைமை ஆசிரியரே, ஏற்க நேரிடும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.