தமிழக சட்டசபை இன்று 3-வது நாளாக கூடியது. காலை சட்டமன்றம் கூடியதும் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:
- ஓர் அரசாங்கத்தின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் நலன்களை காக்கும் வகையில், வீடு கட்டும் முன் பணத்தினை 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியது; பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பினை மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதமாக உயர்த்தியது; அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கென திருத்தி அமைக்கப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என பல்வேறு சலுகைகளை எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. நான் முதன் முறை முதலமைச்சராக இருந்த போது, அதாவது 1996 ஆம் ஆண்டு, 25 ஆண்டு காலம் அப்பழுக்கற்ற பணியினை முடித்த அரசு உழியர்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள இந்திரா விகாஸ் பத்திரத்தை வழங்கலாம் என்று ஆணையிட்டிருந்தேன்.
அதன்படி, 25 ஆண்டு காலம் பணியாற்றிய அப்பழுக்கற்ற அரசு ஊழியர்களுக்கு அந்தப் பத்திரம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இந்திரா விகாஸ் பத்திரத்திற்கு பதிலாக கிசான் விகாஸ் பத்திரம் வழங்கப்பட்டு வந்தது. கிசான் விகாஸ் பத்திரம் வழங்குவதை 1.12.2011 முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு கிசான் விகாஸ் பத்திரத்தை நிறுத்தி விட்டதைக் கருத்தில் கொண்டும்; 25 ஆண்டு காலம் அப்பழுக்கற்ற பணியினை முடித்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டும்; இந்தத் தொகையை 500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்திடவும்; அதனை ரொக்கமாக வழங்கிடவும்; அவர்களது பணியினைப் பாராட்டி அரசு சார்பில் சான்றிதழ் வழங்கிடவும் நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமல்லாமல், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 5 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட 2,000 ரூபாய் பண்டிகை முன்பணத்தை 5,000 ரூபாயாக உயர்த்திடவும் நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் அரசு அலுவலர்கள் தங்கள் கடமையை மேலும் செவ்வனே ஆற்ற வழி வகுக்கும் என்ற என் நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.