் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவுக் காலியிடங்களுக்கான நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த பி. ரமேஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவு காலியிடங்கள் உள்பட மொத்தம் 3,484 வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெற்றது. வழக்கமான காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு எழுதியவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 19-ஆம் தேதியும், தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்காகத் தேர்வு எழுதியவர்களுக்கு செப்டம்பர் 13-ஆம் தேதியும் முடிவுகள் வெளியிடப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் பின்னடைவு காலியிடங்களுக்காகத் தேர்வு எழுதியவர்களில் எனக்கு 126-வது இடம் கிடைத்தது. தகுதிப் பட்டியலில் 165-வது இடம் உள்பட பட்டியலில் என்னைவிட பின்னே இருந்த பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 126-வது இடம் பெற்றிருந்த எனக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆகவே, சட்ட விதிகளுக்கு முரணாக நடைபெற்ற இந்தப் பணி நியமனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். எனக்கு வி.ஏ.ஓ. பணி வாய்ப்பு வழங்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ரமேஷ்குமார் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ். நாகமுத்து முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மாதம் 30-ஆம் தேதி வரை வி.ஏ.ஓ. பணிக்கான நியமன ஆணை அனுப்புவதை நிறுத்தி வைப்பதாக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வழக்குரைஞர் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த மனு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் விரிவான பதிலளிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டபடி வரும் 30-ஆம் தேதி வரை யாருக்கும் பணி நியமன ஆணையை அனுப்பக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, விசாரணை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.
்