*JACTTO-GEO வழக்கு நிலவரம் : TNPTF பொதுச் செயலாளர் அறிக்கை - 08.11.17*
*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!*
*வணக்கம்.*
*ஜாக்டோ-ஜியோ போராட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகத் தனிநபர் தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது தாங்கள் அறிந்ததே.*
*இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் திரு.N.G.R பிரசாத் அவர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தார்.*
*இவ்வழக்கு விசாரணை தொடர்பான நிர்வாகச் சிக்கல் காரணமாக, உயர்நீதி மன்ற மதுரைக்கிளை நீதியரசர்களால் காணொளிக் காட்சி வாயிலாக இங்கிருந்தே வழக்கை நடத்திட சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்தது.*
*ஆனால், இம்முறையிலான விசாரணை எவ்வகையிலும் தொய்வை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற காரணத்தால், சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்த முறையை நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் ஏற்கவில்லை.*
*அதனால், தற்பொழுது மீண்டும் உயர்நீதி மன்ற மதுரைக்கிளைக்கே வழக்கை மாற்றி, மதுரைக் கிளையில் விரைந்து விசாரணைக்குக் கொண்டு வருவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.*
*எனவே, இன்னும் ஓரிரு தினங்களில் ஜாக்டோ-ஜியோ வழக்கு உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது என்ற தகவலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பது நீதிமன்ற மாண்பினை முழுமையாக மதிக்கும் அதே வேளையில், களப் போராட்டத்தின் வாயிலாக நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும் முனைப்போடு தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்பு என்பது நமது இயக்கத் தோழர்கள் அனைவரும் அறிந்ததே.*
*தனிநபர் தொடுத்த வழக்கின் தலையீட்டாலேயே தற்போதைய நமது களப்போராட்ட வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.*
*நீதிமன்ற மாண்பினை மதிக்கும் நாம் அதன் தீர்ப்பிற்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால், நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் முயற்சிகளுக்கும் மதிப்பளித்து தோழர்கள் அனைவரும் சற்று பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.*
*இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சினையை முழுமையாகக் கலைந்திடும் போராட்ட வியூகத்தை வடிவமைக்க மாநில அமைப்பிற்கு, திண்டுக்கல் மாநிலச் செயற்குழு வழங்கியுள்ள அதிகாரத்தின் மீது தோழர்கள் அனைவரும் கொண்டுள்ள நம்பிக்கையை மாநில மையம் முழுமையாக உணர்ந்தே செயல்பட்டு வருகிறது.*
*தற்போதைய கள ஓய்வை ஆக்கப்பூர்வ அடுத்த கட்ட நகர்விற்கான தயாரிப்புக் காலமாகத் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.*
*ஊதியம் & ஓய்வூதிய உரிமைகளை முழுமையாக மீட்டெடுக்கும் வரை நமது அமைப்பு தொடர்ந்து போராடும்.*
*தோழமையுடன்,*
*செ.பாலசந்தர்,*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*