இந்திய ரயில்வே இணையதளத்தில், பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்த பயணச்சீட்டின் பி.என்.ஆர். நிலையை அறிந்து கொள்வதற்கான புதிய நடைமுறையால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ரயிலில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பி.என்.ஆர். எண் வழங்கப்படும்.
இந்த எண்ணைக் கொண்டு பயணி ரயிலில் தன்னுடைய இருக்கை அல்லது படுக்கை வசதி உறுதி செய்யப்படுகிறதா என்பதனை அறிந்துக்கொள்ள முடியும். பெரும்பாலும், இந்த விவரங்களை இணையதள வாயிலாக பயணிகள் தெரிந்துக்கொள்வர். எரிச்சல் ஏற்படுத்தும் கணக்குகள்: பயணிகள் பி.என்.ஆர் எண்ணை தெரிந்துக் கொள்ளவதற்காக www.indianrail.gov.in/enquiry/pnrenquiry. htm என்ற ரயில்வே இணையதளத்தின் மென்பொருள் நவீன வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பயணிகள் பிஎன்ஆர் தொடர்பான எந்தத் தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் அவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும் என்பது போல் இருந்தது. தற்போது இரண்டு எண்களை கூட்டி அல்லது கழித்து விடை அளிக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பும் தகவல் கிடைக்கப்பெறும்.
உதாரணமாக 544 - 68 = ? அல்லது 899+ 70 =? என்று கேள்விகள் கேட்கப்படுகிறது. சரியான பதில் அளித்தீர்கள் என்றால் தகவலைப் பெறலாம். கணக்கில் மிகவும் சுமாரானவர்கள் தற்போது பிஎன்ஆர் நிலையை அறிய கால்குலேட்டர்களையோ, மனக்கணக்கு போட்டோ சரியாகவோ, தவறாகவோ பதிலளித்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பொதுவாக இந்த நடைமுறையால் பயணிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவசரமாக ஊருக்கு செல்பவர்கள் தங்களது பயணச் சீட்டை உறுதி செய்வார்களா? அல்லது கூட்டல், கழித்தல் கணக்குகளை போட்டுக்கொண்டு இருப்பார்களா ? இதுகுறித்து புகார்கள் அனுப்பப்பட்டும் இந்த நடைமுறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
இந்திய ரயில்வே இணையதளத்தில் சர்வரின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் புறப்பாடு, நடப்பில் காலியாகவுள்ள இடங்கள், எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறுவது, ரயில்கள் வந்தடையும் நேரம், கட்டண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை விரைவாகப் பெற முடியும். இப்போதைய நிலவரப்படி, பயணிகளின் பிஎன்ஆர் எண் மூலம், ரயில் பெட்டி எண் மற்றும் படுக்கை வசதி அல்லது இருக்கை நிலவரங்களை மட்டுமே பார்க்க முடியும். இனி பிஎன்ஆர் எண் மூலம், அன்றைய தினம் ரயில் புறப்படும் நேரத்தைத் துல்லியமாக பார்க்கும் வசதியை கொண்டுவர உள்ளோம்.
இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிஎன்ஆர் நிலையை அறிய கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறை மேம்படுத்தப்பட்ட மென்பொருளால் வந்ததுதான். பெரும்பாலான பயணிகளுக்கு கூட்டல், கழித்தல் என்ற அடிப்படை கணக்குகள் தெரியும். அதிவிரைவான தகவல்களை பெற்று வரும் நாம், இந்தக் கூட்டல், கழித்தலில் 30 நொடிகள் செலவிடுவது தவறில்லை என்றனர் அவர்கள்.