Friday, May 26, 2017
Thursday, May 25, 2017
கலங்கடிக்கும் பருவமுறை தேர்வுகள்! : எளிமைப்படுத்துமா கல்வித்துறை
பள்ளி மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக பள்ளிகளில் மெட்ரிக், ஓரியன்டல், ஆங்கிலோ இண்டியன், மாநில பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
இவற்றை நீக்கிய அரசு, 2010 - 11ல் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது. அதே ஆண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது; அடுத்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, 2012 - 13ல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடங்களை, மூன்று கட்டங்களாக பிரித்து தேர்வுகள் நடந்தன. 2013- 14ல் ஒன்பதாம் வகுப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக '2014- 15 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பிற்கும் இம்முறை அமல்படுத்தப்படும்' என கல்வித்துறை அறிவித்தது; ஆனால், தற்போது வரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு சென்றவுடன் ஒரு ஆண்டு பாடங்களை படித்து தேர்வு எழுத வேண்டியுள்ளது. தற்போது இதற்கு தீர்வாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதே முறையை சமச்சீர் பாடத்திட்டத்திற்கும் கொண்டு வந்தால் எளிய முறையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியும். சி.பி.எஸ்.இ.,ல் மாற்றம் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, இருபருவ முறையில் வரும் கல்விஆண்டு முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஆறாம் வகுப்பில் முதல் பருவ பாடத்தின் 10 சதவீத பகுதிகள், இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும்; ஏழாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 20 சதவீத பாடமும், எட்டாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 30 சதவீத பாடங்களும் இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும். மேலும் ஒன்பது, பத்தாம் வகுப்பில் ஓராண்டு பாடங்களை படித்து தேர்வு எழுதும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 'இதே முறையை தமிழக கல்வித்துறையும் பின்பற்றினால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிய முறையில் எதிர்கொள்ள முடியும்' என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
ப்ளூ பிரின்ட்' வினாத்தாள்: கைவிடுகிறது கல்வி துறை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 'ப்ளூ பிரின்ட்' முறைப்படி, வினாத்தாள் தயாரிப்பதை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துஉள்ளது.
இதற்காக, தேர்வு சீர்திருத்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை தர, அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது, வினாத்தாளை பொறுத்தவரை, அறிவுத்திறனை சோதிக்க, 19 சதவீதம்; பாடத்தை புரிந்து கொள்வதை ஆய்வு செய்ய, 31; படித்ததை பயன்படுத்தும் முறைக்கு, 23; திறனை ஆய்வு செய்ய, 27 சதவீதம் என, 100 சதவீத கேள்விகள் இடம் பெறுகின்றன. அதேபோல், 12 சதவீதம் கடினம், 60 சதவீதம் எளிமை மற்றும், 28 சதவீதம் மிதமான கேள்விகள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது. இதன்படி, 'ப்ளூ பிரின்ட்' என்ற வினா வடிவமைப்பு முறை பின்பற்றப்படுகிறது.
இந்த வினா வடிவமைப்பு அட்டவணை, ஒவ்வொரு பாட புத்தகத்திலும் இடம் பெறும். அதன்மூலம், ஒவ்வொரு பாடத்திலும், எந்த பிரிவில் எத்தனை மதிப்பெண் கேள்விகளை படிக்க வேண்டும்; எந்த பாடத்தில், புத்தகத்தின் பின்பக்க கேள்விகள், எடுத்துக்காட்டுகள், பயிற்சிகளை படிக்க வேண்டும் என்ற விபரம் அறியலாம். பெரும்பாலான பள்ளிகளில், ப்ளூ பிரின்ட் படியே, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்து கின்றனர். அதனால், பல பாடங்கள் மற்றும் வினாக்களை, மாணவர்கள் படிக்காமல் விட்டு விடுகின்றனர்.
இப்படி அரைகுறையாக படிப்போர், 'நீட்' ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வு களில் தேர்ச்சி பெற முடிவது இல்லை. எனவே, ப்ளூ பிரின்ட் முறையை நீக்க, தமிழக அரசுக்கு, அண்ணா பல்கலை பரிந்துரைத்து உள்ளது. அதன்படி, அடுத்த கல்வி ஆண்டு முதல், ப்ளூ பிரின்ட் படி, பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்படாது என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
61 லட்சம் மாணவருக்கு இலவச காலணிகள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், 61 லட்சம் மாணவர்களுக்கு, கருப்பு மற்றும் காக்கி நிற காலணிகள் வழங்கப்பட உள்ளன. ஐந்து ஆண்டுகளாக, பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இரண்டு ஆண்டுகளாக, புத்தகம், நோட்டு தவிர, மற்ற இலவச பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு, அனைத்து இலவச பொருட்களையும், விடுபடாமல் வழங்க முடிவு செய்யப்பட்டு, கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன், பாட புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு காக்கி நிறத்திலும், மாணவியருக்கு கருப்பு நிறத்திலும், 'பெல்ட்' வைத்த, பி.வி.சி., காலணிகள் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டுகளில், காலணிகளை கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன; துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், எந்த முறைகேடுமின்றி, தரமான காலணிகளை மாணவர்களுக்கு வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. வரும், 28ம் தேதி, இதற்கான, 'டெண்டர்' இறுதி செய்யப்பட உள்ளது. செப்டம்பருக்குள் காலணிகளை தயாரித்து முடிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் காலணிகளை, ஆகஸ்ட் முதல், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மொத்தம், 61.22 லட்சம் பேருக்கு, காலணிகள் வழங்கப்பட உள்ளன.
பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு : ஜூன் 23 முதல் ஜூலை 6 வரை நடக்கிறது
பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 23ல் துவங்குகிறது. மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி அடையாதவர்கள்,பங்கேற்காதவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூன், 23ல் இந்த தேர்வு துவங்குகிறது. ஜூன், 23, 24ல் மொழி பாடத் தேர்வு, 26ல் ரமலான் பண்டிகை விடுமுறை, 27, 28ல் ஆங்கிலம்; 29ல், வேதியியல், கணக்கு பதிவியல், 30ல், வணிகவியல், மனை அறிவியல், புவியியல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜூலை 1ல், கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் அன்ட் டயபெடிக்ஸ்; 3ம் தேதி, தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, முன்னேறிய தமிழ், ஜூலை 4ல், அனைத்து தொழிற்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது) மற்றும் புள்ளியியல்; 5ம் தேதி, உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்; ஜூலை 6ல் இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
காலை, 10:00 மணி முதல், 1:15 மணி வரை, தேர்வுகள் நடக்கும். தேர்வில் பங்கேற்க விரும்புவோர், மே, 29 முதல் ஜூன், 1 வரை, பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பிரவுசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. ஒரு பாடத்திற்கு, 50 ரூபாயும், இதர கட்டணமாக, 35 ரூபாயும், ஆன்லைன் பதிவு கட்டணமாக, 50 ரூபாயும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Wednesday, May 24, 2017
கல்வி அமைச்சரின் அறிவிப்பு 'பணால்' : புத்தக கட்டு சுமந்த ஆசிரியர்கள்
இலவசங்களை அரசே வினியோகிக்கும்' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில், மீண்டும் ஆசிரியர்களையே புத்தகத்தை சுமக்க வைத்துள்ளனர். தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 14 இலவச திட்டங்கள் மூலம், பாடப் புத்தகம், நோட்டு புத்தகம், வண்ண பென்சில்கள் போன்றவை, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் வினியோகிக்கப்படும்.
விடுமுறை காலத்தில், ஆசிரியர்கள் புத்தக கட்டுகளை சுமந்து செல்வது வழக்கம்.'இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். 'இந்த ஆண்டே, இலவச திட்டங்களுக்காக, ஆசிரியர்களை அழைக்க மாட்டோம்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
ஆனால், அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக, இலவச திட்டங்களை வினியோகிக்க, அனைத்து பள்ளிகளில் இருந்தும், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். அதனால், விடுமுறையில் இருந்த ஆசிரியர்கள், முக்கிய பள்ளிகளுக்கு வந்து, புத்தக கட்டுகளை சுமந்து செல்லும் பணியில் திடீரென ஈடுபடுத்தப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர் பொதுமாறுதல் அரசாணையில் திருத்தம்
ஆசிரியர் பொது மாறுதலில் கல்வி அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளில் சில திருத்தங்களை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பொதுமாறுதல் கவுன்சலிங் கடந்த 19ம் தேதி முதல் நடக்கிறது. பணியிட மாறுதல் வழங்கும் போது தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஏற்கனவே ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதைப் பின்பற்றி தற்போது மாறுதல் கவுன்சலிங் நடந்து வருகிறது. இதற்கிடையே, அந்த அரசாணையில் சில திருத்தங்களை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறி உள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பலவகை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2017-18ம் கல்வி ஆண்டுக்கான பொதுமாறுதல் வழங்க கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டன. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் சில திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு பணியிடத்துக்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கேட்டால் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வருமாறு:
* முற்றிலும் கண் பார்வையற்றவர்கள்.
* இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள்.
* கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள்.
50 சதவீதம் அதற்கு மேல் மற்றும் 50 சத வீதத்துக்கு கீழ் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று பெற்றவர்கள்.
5 ஆண்டுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு கீழ் ஆசிரியர்களாக பணியாற்றும் ராணுவ வீரர்களின் மனைவி.
* விதவைகள் மற்றும் 40 வயதை கடந்த திருமணம் செய்து கொள்ளாத முதிர் கன்னியர்.
* மன வளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆசிரியர்களாக இருப்பவர்கள்.
* ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அதற்கு மேலும் பணியாற்றிய ஆசிரியர்கள்.
* மேற்கண்ட வகையில் சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் கடந்த ஆண்டு மாறுதல் பெற்றவர்கள், இதே வகையிலான முன்னுரிமையின் அடிப்படையில் 2 ஆண்டுக்கு மாறுதல் பெற இயலாது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ்: அரசாணை வெளியீடு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கொண்ட தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை கொண்ட நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வேறு பள்ளிகளுக்குச் செல்லும்போதும், பிற காரணங்களால் தற்போது பயிலும் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்கள் தொடர்ந்து பயில தகுதி நிர்ணயம் செய்திட பதிவுத்தாள் (Record Sheet) வழங்கும் முறை தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நடைமுறையை மாற்றி பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழைப் (Transfer Certificate) போலவே தொடக்கப் பள்ளி இயக்ககத்தின் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்கலாம்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சேர்க்கை மற்றும் நீக்கப் பதிவேடு (Admission withdrawal Register) பராமரிப்பது போன்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் சேர்க்கை மற்றும் நீக்கப் பதிவேடு பராமரிக்கலாம்.
80 வயதைக் கடந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்?
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் 80 வயதை நிறைவு செய்தால் அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும் என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, நிதித் துறைச் செயலாளர் (செலவினம்) ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
ஓய்வூதியதாரர், குடும்ப ஓய்வூதியதாரர் 80, 85, 90, 95, 100 வயதுகளை நிறைவு செய்யும் மாதத்தின் முதல் நாள் முதலோ அல்லது 1.1.2011 அன்றோ, அதில் எது பின்னரோ அன்று முதல் கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டுள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன்படி, 80 முதல் 100 வயதை நிறைவு செய்யும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது பிறந்த நாள் எந்த மாதத்தில் வருகிறதோ, அந்த மாதத்தின் முதல் நாளில் இருந்து கூடுதல் ஓய்வூதியம், கூடுதல் குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்கலாம்.
உதாரணமாக, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் 80 வயதை ஆகஸ்ட் 2008-ஆம் ஆண்டு நிறைவு செய்தால், அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், கூடுதல் குடும்ப ஓய்வூதியத்தை அந்த மாதத்தின் முதல் தேதியில் இருந்து வழங்கலாம். ஆகஸ்ட் முதல் நாளன்றே 80 வயதை நிறைவு செய்து பிறந்த நாளாகக் கொண்ட ஓய்வூதியதாரர், குடும்ப ஓய்வூதியதாரருக்கு 1.8.2008 முதல் கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம்.
ஆசிரியர் பணியிட மாறுதல்: மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அரசாணை
ஆசிரியர் பணியிட மாறுதலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட முன்னுரிமை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விவரம்: ஆசிரியர் பணியிட மாறுதலில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த 2-ஆம் இட முன்னுரிமை, 6 ஆம் இடத்துக்கு நிகழாண்டு தள்ளப்பட்டது.
இதற்கு மாற்றுத் திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க மே 22 ஆம் தேதியன்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மாதிரி தேர்வு
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்' மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம், 'ரேங்கிங்' முறைக்கு முற்றுப்புள்ளி, பாடத்திட்ட மாற்றம் என, பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
அறிமுகம் : அந்த வரிசையில், இணையவழி கற்றல் மேலாண்மை தளம் என்ற, 'ஆன்லைன்' கற்றல் திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரனின் மேற்பார்வையில், 'டிஜிட்டல்' திட்ட பணிகள் துவங்கிஉள்ளன. 'இ - லேர்னிங்' இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு, பயன்பாட்டு குறியீடு எண், 'பாஸ்வேர்ட்' என்ற ரகசிய எண் வழங்கப்படும்.
இதன் மூலம், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், இணைய தளத்தை பயன்படுத்தலாம். இதில், பொது தேர்வுகளுக்கான வல்லுனர்களின் பாடக்குறிப்புகள், வினாக்கள், விளக்கங்கள், சிந்தனையை துாண்டும் கேள்விகள் இடம்பெறும். தேர்வு பயம் : மேலும், 'நீட்' ஜே.இ.இ., கிளாட், சி.ஏ., போன்ற நுழைவு மற்றும் போட்டி தேர்வுக்கான வினாக்களும் இருக்கும். மாணவர்கள், எப்போது வேண்டுமானாலும், இணையதளத்தில் மாதிரி தேர்வை எழுதலாம்.
பெரும்பாலும், 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகள் இருக்கும். பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, முந்தைய பொது தேர்வுகளின் வினாக்கள் இடம்பெறும். இதற்கு, மாணவர்கள் பதில் அளிக்கலாம். தவறான பதில் அளித்தால், விடைக்கான குறிப்பை, ஆன்லைனில் பெறலாம். தேர்வு குறித்த பயம் நீங்கும் வகையில், மாதிரி தேர்வு அமையும். அதேபோல், மனப்பாட கல்வியை மாற்றி, புத்தகத்தின் அனைத்து பகுதிகளையும் புரிந்து படித்து, பதில் அளிக்கும் வகையில், வினாக்கள் இடம்பெற உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் வசதி இல்லாத பள்ளிகள்: அறிக்கை
கிராமங்களில், மின் வசதி இல்லாத பள்ளிகள் குறித்த அறிக்கை வழங்குமாறு, தமிழக அரசை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு, நாடு முழுவதும், தடையில்லாமல் மின்சாரம் வழங்க, தீன்தயாள் மற்றும் ஒருங்கிணைந்த மின் திட்டங்களை துவக்கியுள்ளது.
உத்தேச அறிக்கை :
அதன்படி, தீன்தயாள் திட்ட பணிகள், கிராமங்களிலும், ஒருங்கிணைந்த திட்ட பணிகள், நகரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் உள்ள பள்ளிகளில், மின் வசதி இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, அவை தொடர்பான விபரத்தை வழங்குமாறு, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து, மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தீன்தயாள் திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகம், சமூக நலக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு, 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கிய, 2015 - 16 உத்தேச அறிக்கையின் படி, இந்திய கிராமங்களில் உள்ள, 12.37 லட்சம் தொடக்கப்பள்ளிகளில், 7.07 லட்சம் பள்ளிகளில் மட்டும் மின் வசதி உள்ளது. தமிழகத்தில், 439 தொடக்கப் பள்ளி உட்பட, நாடு முழுவதும், 5.29 லட்சம் பள்ளிகளில், மின் வசதி கிடையாது என்ற, தகவல் கிடைத்துள்ளது.
நடவடிக்கை : எனவே, தற்போதைய நிலவரப்படி, கிராம பள்ளி களில் உள்ள மின் வசதி குறித்து, அறிக்கை தருமாறு, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், மின் வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் மின் வசதி இல்லாத கிராமங்களும் இல்லை; பள்ளிகளும் இல்லை. அந்த விபரம், தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.