இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, December 17, 2018

மாணவர் எண்ணிக்கை குறைவாய் இருந்தால் வேறு பள்ளியில் சேர்க்க உத்தரவு

ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை: குறைவாக இருந்தால் வேறு பள்ளியில் சேர்க்க உத்தரவு

அரசுப் பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களை அருகிலுள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி கணக்கெடுக்கப்படும். அதேபோல் இந்தாண்டும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நிர்ணயம் செய்வதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே அந்த எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் ஒவ்வொரு 30 மாணவருக்கும் ஓர் ஆசிரியரை அனுமதிக்கலாம். 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என நிர்ணயம் செய்யலாம். 60 மாணவர்களுக்கு கூடுதலாக இருந்தால் 2 பிரிவாகப் பிரித்து ஆசிரியர் நிர்ணயிக்கலாம்.
மேலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்கு இணையாக ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் பொழுது தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்வது போலவே, ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தனித்தனியாக ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கு குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால், அந்த வகுப்பில் உள்ள குறைந்தபட்ச மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழிப் பிரிவுகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறைக்கு டிச.29-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Sunday, December 16, 2018

பயோமெட்ரிக்' வருகை பதிவு


அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Morning prayer 17-12-18

17-12-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 105

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

பழமொழி:

Every man is mad on some point

சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே

பொன்மொழி:

பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
ரஷ்யா

2) கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
டென்மார்க்

நீதிக்கதை :

நீதிக் கதைகள் – பேராசை பெரும் நஷ்டம்

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1.அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

2.பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது

3.கஜா புயலால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்கள் எவை? அதிகாரப்பூர்வ பட்டியலை அரசு வெளியிட்டது

4.பெய்ட்டி புயல்: ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை

5.உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

Thursday, December 13, 2018

2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்


தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1, 6, 9,  பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்தனர்.  க்யூ.ஆர். குறியீடு,  பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள்,  பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி  2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.  

இதில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.  இது குறித்து பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் கூறியது:  தமிழக அரசின் சார்பில் இரண்டாவது கட்டமாக 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  

இவற்றில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.  

இதற்காக சிபிஎஸ்இ, பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம்,  ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து சிறந்த விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம்.  

176 பாடங்கள் வடிவமைப்பு:   இந்த நான்கு வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட மொத்தம் 176 பாடங்களை வடிவமைக்க வேண்டும்.  ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழு மேலாய்வு செய்யும்.  தற்போதைய நிலவரப்படி பாடத் திட்டத்தின் ஆங்கில வடிவம் நிறைவு பெற்றுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வடிவமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.  இரண்டாம் கட்ட புதிய பாடத்திட்டத்தில் தற்போதுவரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.  

வரும் ஜனவரி இறுதி வாரத்துக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்ததும் கல்வியாளர்களின் கருத்துகளுக்குப் பிறகு பிப்ரவரி இறுதியில் பாடநூல்களை அச்சடிப்பதற்கு தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.

ரத்தாகுது 3,500 ஆசிரியர் பணியிடம்


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உபரியாக கணக்கிடப்பட்டுள்ள 3,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ரத்தாகின்றன. ஆக., 1ல் மாணவர்கள் வருகைப்படி, ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கபடுகின்றன. கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களை உபரியாக கணக்கிட்டு, வேறு பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப் படுவர். கடந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்ய ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பணி நிரவல் நிறுத்தப்பட்டது.

தற்போது 2017 ஆக., 1 ன் படி உபரியாக கணக்கிட்டு 3,500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை பள்ளிகல்வி இயக்குனரின் பொதுத் தொகுப்பில் ஒப்படைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. இதனால் அப்பணியிடங்கள் அனைத்தும் ரத்தாகின்றன. பணியிடங்கள் குறைவதால், 'டெட்' தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் ஆசிரியராவதில் சிக்கல் ஏற்பட்டது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உபரி பணியிடங்களில் ஆசிரியர்கள் இருந்தால், அப்படியே இருக்கலாம். ஓய்வு, இறப்பு மூலம் காலியான உபரி பணியிடங்களே ரத்தாகின்றன. அவற்றை அடுத்த கலந்தாய்வில் காலியிடங்களாக காட்ட முடியாது. பணியிடங்கள் குறைவதால் புதியவர்களுக்கு வாய்ப்பு குறைகிறது, என்றார்.

14-12-18 Morning prayer

14-12-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

உரை:
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

பழமொழி:

Every heart hearth its own ache

தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி

பொன்மொழி:

எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
துருக்கி, இத்தாலி

2) யென் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
ஜப்பான்

நீதிக்கதை :

என் வீடு

பண்ணைபுரம் என்ற ஊரில் விசாகன் என்ற புத்திசாலி கிழவர் வசித்து வந்தார். ஒருமுறை கிழவரது மனைவி, ஊருக்குச் சென்றிருந்தாள். கிழவர் மட்டும் அப்போது வீட்டில் இருந்ததால், வெளியே செல்லும்போதெல்லாம் வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்வது வழக்கம்.

ஒருமுறை அவர் வெளியே சென்று விட்டு வரும்போது, அவர் வீட்டிலிருந்து ஒரு திருடன் மூட்டையுடன் வெளியே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே கிழவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டில் ஒரு பொருள் கூட இல்லை. சுத்தமாக காலி செய்து வைக்கப்பட்டிருந்தது.

கிழவர் வேகமாக வெளியே ஓடி வந்து திருடனைப் பின் தொடர்ந்தார்.
திருடன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து தான் கொண்டு வந்த மூட்டையை அங்கு வைத்து விட்டுக் கொல்லைப்புறம் சென்றான்.

வீட்டுக்குள் வந்த கிழவர், அங்கு பார்த்த போது வீடு முழுவதும் அவருடைய பொருட்கள் நிறைந்திருக்கக் கண்டார்.

அந்த பலே திருடன் ஒவ்வொரு நாளாக கிழவரின் வீட்டிற்கு வந்து, அவருக்கே தெரியாமல் அவருடைய பொருள்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி வந்திருக்கிறான்.

உடனே கிழவர் அங்கிருந்த பாய் ஒன்றை எடுத்துப் போட்டு அதில் படுத்துக் கொண்டார்.

கொல்லைப் புறம் சென்ற திருடன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான். அங்கு கிழவர் படுத்திருப்பதைக் கண்டு, “”யார் நீ?” என்று கேட்டான் திருடன்.

“”என்னைத் தெரியவில்லையா? நான்தான் விசாகன்!” என்று கூறினார்.

“”நீ விசாகனாக இருந்தாலும் சரி, குசாகனாக இருந்தாலும் சரி. என் வீட்டில் உனக்கு என்ன வேலை?” என்று திருடன் அதட்டினான்.

“”உன் வீடா? என் வீட்டிற்குள் நீ வந்து என்னையே மிரட்டுகிறாயா?” என்றார் கிழவர்.

“”உனக்கென்ன பைத்தியமா? என்ன உளறுகிறாய்?” என்றான் திருடன்.

“”இதோ பார்! என் வீட்டிலிருந்த பொருள்களை எல்லாம் நீ இங்கே கொண்டு வந்து வைத்து விட்டாய். அப்படியானால் நான் புது வீட்டிற்கு குடியேறி இருக்கிறேன் என்று தானே பொருள்? நானும் நீண்ட நாட்களாக வீடு மாற வேண்டும் என்று நினைத்திருந்தேன். வீடு நன்றாக இருக்கிறது. வாடகை எவ்வளவு?” என்றார் கிழவர்.

தான் கிழவனிடம் வசமாக மாட்டிக் கொண்டதை அறிந்த திருடன் தான் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் எடுத்துச் சென்று கிழவரின் வீட்டில் திரும்பவைத்து விட்டான்.

இன்றைய செய்தி துளிகள் : 

1.12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தபின்னர் 413 மையங்களில் நீட்தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

2.நாகை மற்றும் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3.புயல், மழையை எதிர்கொள்ள 4 நாட்களுக்கு தென்னைக்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்: தோட்டக்கலைத்துறை

4.நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேன-வின் உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி

5.உலக கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா: அரையிறுதியில் நெதர்லாந்து

Wednesday, December 12, 2018

13-12-18 morning prayer

13-12-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

உரை:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

பழமொழி:

Every cock will crow upon its dung hill

தன் ஊரில் யானை; அயலூரில் பூனை

பொன்மொழி:

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!


இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?

சீனா

2) யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?

பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ்

நீதிக்கதை :

ரொட்டித் துண்டு!

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், “”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். “”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது.


நாளையிலிருந்து ரொட்டிகளைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லாரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய துண்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர்.

ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி.

“”ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள் அவள்.

“”சிறுமியே! உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்…” என்றார் செல்வர்.

துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

இன்றைய செய்தி துளிகள் :

1.அரசு பள்ளிகளில் LKG,UKG - வகுப்புகள் ஜனவரி-21ல் தொடக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்

2.முல்லை பெரியாறில் விரைவில் புதிய அணை கட்டப்படும் : கேரள முதல்வர் திட்டவட்டம்

3.ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

4.தமிழகத்தின் கடலோர பகுதிகளில் டிசம்பர் 15, 16-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

5.சீனாவின் குவாங்ஷுவில் நடைபெறும் உலக பாட்மிண்டன் சம்மேளன டூர் பைனல்ஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

Monday, December 10, 2018

'பென்ஷன்' திட்டத்தில் மத்திய அரசு சலுகை


மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களின் நலனை மனதில் வைத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த திட்டத்துக்கு, அரசு தரப்பில் இருந்தும், ஊழியர்கள் தரப்பில் இருந்தும், 10 சதவீதம் பங்களிப்பு அளிக்கப்பட்டு வந்தது.இதில், அரசு தரப்பு பங்களிப்பை, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு பெற்ற பின் எடுக்கப்படும்,60 சதவீத தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இனி, முழுவதுமாக வரி விலக்கு அளிக்கப்படும்.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும், அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும், இந்த வரி விலக்கு, பொருந்தும். இதனால், 2019 - 20 நிதி ஆண்டில், அரசுக்கு, 2,840 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, December 09, 2018

பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை : கியூ.ஆர்., கோடுடன் வழங்க, 'டெண்டர்'


அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, கியூ.ஆர்., கோடுடன் கூடிய, அடையாள அட்டை வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனை, வரும், 14ம் தேதி நடக்கிறது.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு தொழில்நுட்ப திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன்படி, அனைத்து மாணவ - மாணவியருக்கும், 'சிப்' பொருத்தப்பட்ட, 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

அதில், மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், முகவரி, வகுப்பு, பள்ளியின் பெயர், ரத்தப் பிரிவு, ஆதார் எண் உட்பட, அனைத்து விபரங்களும் இடம் பெறும்.கல்வி மேலாண்மை தகவல் அமைப்பால், மாணவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள, 'எமிஸ்' என்ற, ஒருங்கிணைந்த அடையாள எண்ணும் இருக்கும். மாநிலம் முழுவதும் உள்ள, 37 ஆயிரம் அரசு பள்ளிகள் மற்றும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 71 லட்சம் மாணவர்களுக்கு, அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.இத்திட்டம், 12.70 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அட்டை களில், சுய விபரங்கள் அடங்கிய, கியூ.ஆர்., கோடும் இணைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் நேற்று அறிவிக்கப்பட்டது. தேசிய அளவில் தரம் வாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த நிறுவனங்களுக்கான முன் விளக்க கூட்டம், வரும், 14ம் தேதி, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கிறது. அதில், அடையாள அட்டைக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் குறித்து, அதிகாரிகள் விவரிக்க உள்ளனர். வரும், 18ம் தேதிக்குள், தனியார் நிறுவனங்கள் விண்ணப்பங்களை அனுப்ப அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.