பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 24-08-2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
உரை:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
பழமொழி :
As is the king, so are subjects
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
பொன்மொழி:
மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.
-நபிகள் நாயகம்.
இரண்டொழுக்க பண்பாடு :
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.
2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.
பொது அறிவு :
1.இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்
2.ராகங்கள் மொத்தம் எத்தனை?
16
நீதிக்கதை :
மூளை இல்லாத கழுதை
(The Donkey Without Brain - Panchatantra Stories)
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும் முடியவில்லை. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காமல் அந்த சிங்கம்ரொம்ப கஷ்டப்பட்டது.
சிங்கமும் “எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது? சாப்பிடுவதற்கு ஏதாவது செய்தாகணுமே?”, என்று யோசித்தது.
யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பாதையின் வழியே குள்ள நரி ஒன்று வந்துகொண்டிருந்தது. உடனடியா சிங்கமும் இந்த நரியைத் தவிர வேறு யாரும் இந்த மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டார்கள் என்று நினைத்தது. சிங்கமும் உணவைச் சேகரிச்சிட்டு வர இந்த குள்ள நரியை உதவியாளனாக நியமிக்க முடிவுசெய்தது.
உடனே சிங்கம் நரியை வரவழைத்தது.
“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்” என்று சிங்கம் அந்த குள்ள நரியிடம் கூறியது.
நரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. “ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”, என்று நரி சிங்கத்திடம் கூறியது.
“உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக மத்த விலங்குகளின் பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா? அதனால, எனக்குத் தேவையான உணவை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யணும். அது தான் உன் முதல் வேலை”, என்றது சிங்கம்.
நரியும் பயந்து போய் நின்றது. “சிங்கத்துக்கு எப்படி நம்மால் சாப்பாடு போட முடியும்” என்று, யோசித்து.
சிங்கமும் அந்த நரியை விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிங்கம் நரியை புகழ்ந்து பேசியது. சிங்கத்தின் புகழ்ச்சிப்பேச்சில் மயங்கிய நரியும் ஒப்புக்கொண்டது.
சிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போது ஒரு கழுதை எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்? எங்க போயிட்ட?” என்றது.
“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன்? என்ன விஷயம்?” என்று கழுதை கேட்டது.
“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம காட்டின் சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.
“ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில் என்னைக் கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவர் எதுக்காக என்னை முதல் மந்திரியா தேர்வு செய்ய வேண்டும்? ஆளை விடு” என்றது கழுதை.
“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா இருந்தால், உன் நிலைமை எங்கேயோ போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் வருவாங்க” என்றது நரி.
அப்பாவியான கழுதை, நரியின் பேச்சை உண்மை என நம்பியது. சிங்கத்தைப் பார்க்க நரியோட சென்றது.
நரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்று முதல் நீ தான் என்னோட முதல் மந்திரி” என்று கூறியது.
கழுதையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிங்கத்துக்குப் அருகில் வந்து நின்றது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிச்சது. கழுதை அந்த நிமிடமே உயிரை விட்டது.
சிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க. என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா?” என்று சிங்கத்திடம் நரி கூறியது.
சிங்கமும் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.
நரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.
குளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று கண்டுபிடித்தது. “கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது? உள்ளே ஒன்றுமே இல்லையே
என்று சிங்கம் கேட்டது.
“என்ன மகாராஜா! உங்களுக்குத் தெரியாதா? கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது” என்று நரி சிங்கத்திடம் கூறியது.
சிங்கம் நரியை நம்ப வில்லை. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும்? பொய் சொல்லாதே” என்று சிங்கம் கேட்டது.
“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா?” என்று நரி சிங்கத்திடம் கேட்டது.
நரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகியது.
இன்றைய செய்தி துளிகள்:
1.பள்ளிக் கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறைக்கு மாற்றம்!
2.ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி வசீப்தர் தலைமையில் குழு நியமனம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்
3.சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: ஒம் பிரகாஷ் ராவத்
4.பெரியார், அண்ணா, ஜெயலலிதா-வுக்கு பாரத ரத்னா வழங்க கோரி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்
5.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு எட்டாவது பதக்கம் கிடைத்துள்ளது. பதினைந்து வயது வீரர் ஷர்துல் விஹான் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதல் இறுதிச் சுற்றில் பங்கேற்றார். அதில் முதல் இடத்தை ஒரு புள்ளியில் தவற விட்ட அவர், வெள்ளி வென்றிருக்கிறார்