இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, June 22, 2018

ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் திடீர் சிக்கல்


கல்வித்துறையில் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு வெளியிடப்படாததால் ஆசிரியர், அலுவலருக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஜூன் 1 முதல் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை பள்ளிகளும் சி.இ.ஓ.,க்கள் கீழ் கொண்டு வரப்பட்டது

17 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.,) அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்வி ஒன்றியங்களை மாற்றியமைத்து புதிதாக 52 டி.இ.ஓ., அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.இப்புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் உட்பட அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களுக்கும் இதுவரை அனுமதி இல்லை. இந்நிலையில் டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்கள், இடம் பெற்ற பள்ளிகள் விவரம் குறித்த எல்லை வரையறைக்கான அரசு உத்தரவும் வெளியாகவில்லை.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதை மாவட்ட, உதவி கருவூலங்கள், சம்பள கணக்கு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் தான் ஆசிரியர், அலுவலருக்கான சம்பளம் வழங்கப்படும். வரையறை உத்தரவு பிறப்பிக்கப்படாததால் இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், என்றார்.

10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்தரவு


பத்து மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.தமிழக அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். 10 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகளும், ஒரு மாணவர் கூட இல்லாமல், 29 பள்ளிகளும் செயல்படுகின்றன.

இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியமாக பல லட்சம் ரூaபாய் செலவிட்டும், மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் இல்லை. எனவே, 'ஆசிரியர்கள், தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை உயராவிட்டால், அந்த பள்ளிகளை மூடுவது குறித்து, அரசு பரிசீலிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்டில் மாணவர் சேர்க்கை முடிய உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கு முன்னும், பின்னும் அறிக்கை தர, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள் மூடப் படுவதை தவிர்க்க, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், ஆசிரி யர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மகப்பேறு விடுப்பு அரசு புது உத்தரவு


இரட்டைக் குழந்தை பெற்ற, அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கும் விடுமுறை வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

இதற்கான அரசாணை, 2016 நவம்பரில் வெளியானது. அதில், திருமணமான அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பாக, தலா, 270 நாட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.ஆனால், முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகள் பெற்றால், அவர்களுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கு விடுப்பு அளிக்க அதிகாரிகள் மறுத்தனர்.

இந்நிலையில், முதலாவது மகப்பேறில் எத்தனை குழந்தைகள் பெற்றாலும், அவர்களுக்கு இரண்டாவது மகப்பேறுக்கும், 270 நாட்கள் விடுமுறை அனுமதிக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, பணியாளர் நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணையை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது

Thursday, June 21, 2018

அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு


தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சமமான விதிகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கான, விரிவான பொது சட்டத்தை, தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

இந்த சட்டத்தின் அம்சங்களை, தமிழக சட்டத் துறை ஆய்வு செய்து வருகிறது.சுதந்திரத்துக்கு முன், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்காக, சென்னையில், டி.பி.ஐ., என்ற பெயரில், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அடங்கிய, பொது உத்தரவு இயக்குனரகம் செயல்பட்டது.

சுதந்திரத்துக்கு பின், தமிழகத்துக்கான பள்ளிக் கல்வி இயக்குனரகமாக, டி.பி.ஐ., வளாகம் மாற்றப்பட்டது. தமிழக பள்ளிகள், 1892ல் இயற்றப்பட்ட, மெட்ராஸ் கல்வி விதிகளின் படி செயல்பட்டன. பின்,1920ல்,மெட்ராஸ் தொடக்க பள்ளிகள் சட்டம் அமலுக்கு வந்தது. இதை அடுத்து, 1973ல், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, தனியாக சட்டம் இயற்றப் பட்டது.

இந்த சட்டப்படி, 1976 முதல், மெட்ரிகுலேஷன் பாடத்திட்ட பள்ளிகளுக்கு, சென்னை மற்றும் மதுரை பல்கலைகள் அனுமதி வழங்க, அரசு ஒப்புதல் அளித்தது.பின், 1994ல், தமிழ்நாடு கட்டாய தொடக்க கல்வி சட்டம் இயற்றப் பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தை, 2009ல் மத்திய - மாநில அரசுகள் தனித்தனியாக இயற்றின.

இந்த சட்டங்களின் கீழ், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தனியாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளுக்கு தனித்தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றி, ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றன.

இதனால், இந்த பள்ளி களின் பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் நியமனம், அவர்களுக்கான பணி விதிகள், ஊதிய விகிதம் என, அனைத்தும் வெவ்வேறாக பின்பற்றப்படுகின்றன.

இந்த விதிகளில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், நீதிமன்ற வழக்குகளின்போது, கல்விதொடர்பான வழக்குகளில் முடிவு எடுப்பதில், பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், சமமான நிர்வாக முறை இல்லாததால், ஆசிரியர்கள், பணி யாளர் நியமனங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டு உள்ளன.இந்த நிலையை மாற்ற, அனைத்து பள்ளி களுக்கும், ஒரே விதமான சட்டத்தை உருவாக்க, 40 ஆண்டுகளுக்கு முன்,உச்ச நீதிமன்றமும், பின், உயர் நீதிமன்றமும் பரிந்துரைத்தன.

இந்நிலையில், தற்போதைய நிர்வாக சீர் திருத்தத் தின் முக்கிய அம்சமாக, அனைத்து பள்ளிகளுக்கு மான பொது பள்ளிகள் சட்டத்தை, தமிழக அரசு தயாரித்துள்ளது.இதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்த நிலையில், சட்டத்தின் முக்கிய அம்சங் களை, சட்டத்துறை ஆய்வு செய்யத் துவங்கி உள்ளது. விரைவில் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

முக்கிய அம்சங்கள் என்ன?

* அரசு பள்ளிகள், அரசு உதவி பள்ளிகள், மெட்ரி குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் மற்றும் தமிழக பாடத்திட்டத்தை நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஆகியவற்றுக்கு, தற்போது அமலில் இருக்கும், தனித்தனி விதிகள்ரத்தாகும். இனி, புதிய சட்டத்தில்இடம்பெற்றுள்ள விதிகளையே, அனைத்து வகையான பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்

* மாணவர்கள் சேர்க்கையில், அரசு பள்ளிகளைப் போன்றே, நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன்
மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும், இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும்

* அனைத்து பள்ளிகளுக்கும், தனியார்சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணய கமிட்டியே, கட்டணத்தை நிர்ணயிக்கும்

* ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில், அரசு பள்ளிகளின் அனைத்து விதிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் பின்பற்ற வேண்டும். சிறுபான்மை பள்ளிகளுக்கு, இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள சலுகைகளின் படி, இயங்க அனுமதிக்கப்படும். ஆனால் பள்ளிகள், பொது சட்டத்தையே பின்பற்ற வேண்டும்

* தனியார் பள்ளிகளின் ஆசிரியர், பணியாளர்களுக்கு, அரசு பள்ளிகளை போல ஊதியம் வழங்க வேண்டும். பணி நியமனங்களில், அரசு விதிக்கும் கல்வித்தகுதி மற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால், நியமன பணிகளை, தனியார் பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளலாம்.

* மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிஅமர்த்தப்பட வேண்டும். உள் கட்டமைப்பு விதிகளையும், அங்கீகார விதிப்படி மேற்கொள்ள வேண்டும். பொது பள்ளி சட்டத்தின் படியே, புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.இந்த அம்சங்கள் எல்லாம், புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, June 20, 2018

NEW SYLLABUS





மன உளைச்சலில் 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்கள் : 4 ஆண்டுகளாக இல்லை கலந்தாய்வு


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) ஆசிரியர் பயிற்றுனருக்கான கலந்தாய்வு நான்கு ஆண்டுகளாக நடக்காததால் ஆசிரியர்கள் மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.ஆண்டுதோறும் பள்ளி கல்வி கலந்தாய்வுக்கு பின், ஆசிரியர் பயிற்றுனருக்கான மாறுதல் நடக்கும். இது 2013க்கு பின் நடக்கவில்லை. 'ஒவ்வொரு ஆண்டும் 500 பேர் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியராக மாற்றம் செய்யப்பட வேண்டும்,' என்ற உத்தரவும் பின்பற்றப்படவில்லை.

இந்நிலையில் 2014ல் பத்து பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியர் பயிற்றுனர் என நிர்ணயம் செய்யப் பட்டது. இதனால் மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 398 பேர் பணிநிரவல் அடிப்படையில் வட மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். பின் புதிய நியமனம் இல்லை. இதனால் 'காலிப் பணியிடம் இல்லை,' என கூறி 2014 - 17 வரை கலந்தாய்வு நடத்தாததால் 3944 ஆசிரியர் பயிற்றுனர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அதன் உத்தரவால் 23.2.2018 ல் 350 பேர் பள்ளிகளுக்கு ஆசிரியராக மாற்றப்பட்டனர். காலியிடமான அந்த 350 இடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:

பள்ளி கல்விக்கு மாற்றப்பட்ட 350 பேர் தவிர பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலம் புதிய காலி பணியிடங்கள் ஏற்பட்டு 600க்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது உள்ளன. ஜூன் 30க்குள் மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை என்றால், ஜூலை 1 முதல் குடும்பத்துடன் சென்னையில் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

மாவட்ட மாறுதல் குறித்த இயக்குநரின் செயல்முறைகள்


Tuesday, June 19, 2018

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு பதிவு தேதி மாற்றம்

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தேதி, தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 22 முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்திருந்தது. தேர்வுக்கான மொழிகளில், மாநில மொழிகள் ரத்து செய்யப்பட்டு, பின், திடீரென சேர்க்கப்பட்டு உள்ளன. எனவே, 'ஆன்லைன்' பதிவு விண்ணப்பத்தில், மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.அதனால், '22ல், துவங்கவிருந்த, ஆன்லைன் பதிவு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது; புதிய தேதி, விரைவில் அறிவிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

Monday, June 18, 2018

தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்ப தேதி அறிவிப்பு


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மத்திய அரசுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். விருது பெற விரும்புவோர், மத்திய மனிதவள அமைச்சகத்தின்,

www.nationalawardtoteachers.com என்ற இணையதளத்தில், வரும், 30க்குள், விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, வழிகாட்டு நெறிகளை பின்பற்றி, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

பி.எட் பயில விண்ணப்பிக்க

Saturday, June 16, 2018

நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் புதிய கல்விமுறை!


பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும் நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் 16.60 கோடி குழந்தைகளுக்கு புதிய கல்விமுறையை 2018-19 கல்வியாண்டு முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரைவு ஆவணம் தயார்செய்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி கடந்த மாதம் கருத்துகளை கேட்டுப் பெற்றுள்ளது.

அரசுகளின் பங்களிப்பு என்ன?: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பும், மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும். தமிழகம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் புது தில்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் 60:40 விகிதத்தில் பங்களிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு 90:10 விகிதத்தில் பங்களிப்பு எனவும், சண்டீகர், அந்தமான்-நிக்கோபார், லட்சத்தீவு ஆகியவற்றுக்கு மத்திய அரசே 100 சதவீதம் நிதி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பயன் பெறும் வகுப்புகள்: இத்திட்டமானது ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை முழுமையாக அமல்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இப்போதுள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அமல்படுத்தப்படுகிறது.

"சமக்ர சிக்ஷா அபியான்': பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ), ராஷ்ட்ரீய மாத்யமிக் சிக்ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ) ஆகிய 2 திட்டங்களையும் இணைத்து "சமக்ர சிக்ஷா அபியான்' (எஸ்எம்எஸ்ஏ) என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2001- ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு செயல் வழிக் கற்றலும், 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பித்தல் நடைபெற்றது.
இதில், 6-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, பள்ளி வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளைக் கட்டுவது, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிதல், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி, பெண் கல்வி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இடம் பெற்றிருந்தன. 2012-இல் இத்திட்டம் முடிவடைந்தாலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.

இதேபோல, 2005-ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அமல்படுத்தப்பட்டது. இதில், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கற்பித்தல் முறையை மேம்படுத்தி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வியை உறுதி செய்தது. இப்போது, இரு திட்டங்களையும் இணைத்து நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஒரே கல்வி திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான கல்வி செயல்பாடுகள் சமக்ர சிக்ஷா அபியானின் கீழ் மேற்கொள்ளப்படும்.

ஏற்கெனவே எஸ்எஸ்ஏ மற்றும் ஆர்எம்எஸ்ஏ திட்டங்களுக்குத் தனித்தனியே அலுவலர்கள் நியமித்து மாநில அளவில், மாவட்ட அளவில், வட்டார அளவில் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்நிலையில், இரண்டும் ஒன்றாக இணைக்கப்படுவதால் இவ்விரு திட்டங்கள் சார்ந்த அலுவலகங்களும் இனி கலைக்கப்படும். அவற்றுக்குப் பதிலாக
"சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தை செயல்படுத்த புதிய அலுவலர்களைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். ஒரே அலுவலகம் செயல்படும். கல்வித்துறை அமைச்சரைத் தலைவராக கொண்ட ஆளுகை குழுவும், பொதுக் கல்வித் துறை செயலாளரைக் கொண்ட நிர்வாகக் குழுவும் இடம் பெறும். புதிய குழுக்களுக்கான அதிகாரங்களும், கட்டுப்பாடுகளும் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு மாநிலங்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எப்படி?: முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரைத் தலைமையாகக் கொண்டு, தலைமைச் செயலர், பள்ளிக் கல்விச் செயலர் ஆகியோர் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூலம் மாநில அமலாக்க அமைப்பை உருவாக்கி, மாநில திட்ட இயக்குநர் நியமனம் செய்து, பள்ளிக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குத் தனியாக ஒரு இயக்குநர் (எஸ்சிஇஆர்டி), பள்ளிகளின் மேம்பாடு, ஆசிரியர்கள் பயிற்சிக்கு தனி இயக்குநர், மாணவர்களின் உரிமைகள் பாதுகாப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும். தொழில்நுட்பக் குழுவும் ஏற்படுத்தப்படும். இந்த மாநிலக்குழுவின் நிர்வாக வடிவமைப்பின்படியே, மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் குழுக்கள் அமைத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒதுக்கீடு எவ்வளவு?: இத் திட்டத்துக்காக 2018-19ஆம் ஆண்டுக்கு மட்டும் மத்திய அரசு பங்களிப்பாக ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.1427.30 கோடியை மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தின் பங்களிப்பான 40 விழுக்காடு தொகையும் சேர்த்தால் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு இத்திட்டத்துக்கு முழுமையான ஒப்புதல் அளித்தவுடன் அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு முறைப்படி தெரிவித்து தமிழகத்துக்கான முழு மத்திய நிதி ஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இத்திட்டத்துக்கு முழுமையான ஒப்புதல் அளித்தவுடன் அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு முறைப்படி தெரிவித்து தமிழகத்துக்கான முழு மத்திய நிதி ஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Friday, June 15, 2018

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு வருகிற 22-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19 கடைசி தேதியாகும். பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தத் தேர்வில் தாள்-1, தாள்-2 என இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும்.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-1 இல் மட்டும் பங்கேற்றால் போதுமானது. அதுபோல் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-2 இல் பங்கேற்றால் போதுமானது. இரண்டு நிலைகளிலும், அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களும் எழுத வேண்டும். இந்த தேர்வானது 16-9-2018 அன்று நடத்தப்பட உள்ளது. காலையில் 9.30 மணி முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 22-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வறை அனுமதிச் சீட்டை 20-8-2018 அன்று ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். கல்வித் தகுதி: பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப் படிப்புடன், 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும். அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டையும் எழுதுபவர்களுக்கு ரூ.1200. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 350 கட்டணம். இரண்டு தாள்களையும் எழுத ரூ. 600 செலுத்தினால் போதுமானது. மேலும் விவரங்களுக்கு சி.டி.இ.டி. இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.