பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது என்பது, வரவேற்கத்தக்கது. இதை சரியான வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டியது அவசியம். இதுகுறித்து, கலந்தாலோசிக்கப்படும்,'' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரும், பாடத்திட்டக் குழு தலைவருமான அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். புதிய பாடத்திட்ட குழு தலைவர் அனந்தகிருஷ்ணன், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
மாநில பாடத்திட்டம், 12 ஆண்டுகள் பழமையானதாக உள்ளது. பிற மாநிலங்களிலும், மத்தியிலும் பாடத்திட்டம் மாற்றியபோதும் கூட, தமிழக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வுகளில் கூட, பங்கேற்க முடியாத அளவுக்கு, மாணவர்கள் திணறி வருகின்றனர். புளூபிரிண்ட் படி, கேள்விகள் கேட்கப்படுவதால், அடிப்படை அறிவு இன்றி சிரமப்படுகின்றனர். தற்போது மாற்றம் செய்யப்படவுள்ள, புதிய பாடத்திட்டம், அடிப்படை அறிவை மேம்படுத்துவதுடன், புதிய தொழில் நுட்பத்தை எதிர்கொள்ளும் வகையில், தன்னம்பிக்கை தருவதாக அமையும். இதற்காக, மூன்று முக்கிய அம்சங்களை முன்னிறுத்தி, முன்வரைவு தயாரித்துள்ளோம். பழைய பாடத்திட்டத்தில் உள்ள, குறைபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., --- ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட, மத்திய அரசு பாடத்திட்டம் மற்றும் பின்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் கற்பிக்கப்படும் முறையையும் ஆய்வு செய்துள்ளோம். இதில், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் இணைத்து, புதிய பாடத்திட்டம் செயலாக்கம் பெறும். ஒன்றாம் வகுப்பில் இருந்து, பாடத்திட்டம் மாறவுள்ளதால், பல புதிய யுக்திகள் புகுத்தப்படும். புதிய முறைப்படி, குழந்தைகளின் வயது, கற்கும் திறனுக்கேற்ப, பாடங்கள் அமைக்கவுள்ளதால், கற்றல் திறன் பரிசோதிப்பதில் சிக்கல் இருக்காது. மேல்நிலை வகுப்புகளில், பாடப்பிரிவுக்கேற்ப புதிய பாடங்கள் இணைக்கப்படும். தொழிற்கல்வி பிரிவை தேர்வு செய்வோர், அது சார்ந்த அறிவியல் பாடங்களும் படிப்பர். அறிவியல் பாடத்திட்டத்தில், ரோபோட்டிக், ஸ்மார்ட் சிட்டி, கணினி தொழில்நுட்பம் குறித்த, பாடங்கள் இடம்பெறும்.
சமூக அறிவியல் பாடத்தில், உள்ளூர் வரலாறு, தொன்மையான இடங்கள், நிலப்பரப்பு சார்ந்த தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உயர்கல்வியில் எந்த துறையை தேர்வுசெய்தாலும், அது சார்ந்த அடிப்படை அறிவு, பள்ளிகளிலே பெறும் அளவுக்கு, பாடங்கள் இடம்பெறும். பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது என்பது, வரவேற்கத்தக்கது. இதை சரியான வழியில் எடுத்து செல்ல வேண்டியது அவசியம். இதுகுறித்து கலந்தாலோசிக்கப்படும். இவ்வாறு, பாடத்திட்ட குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் பேசினார். 'சூழல் கல்வி வகுப்பறையில் வேண்டாம்' எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் : புதிய பாடத்திட்டத்தில், சுற்றுச்சூழல் மேம்பாடு சார்ந்த ஆலோசனைகள் பெறுவது வரவேற்கத்தக்கது. சுற்றுச்சூழல் என்பது பாடமல்ல; விழிப்புணர்வு கல்வி. இதை, மற்ற வகுப்பு போல, பாடம் நடத்துவதால் பலனில்லை. மாணவர்களை வெளியுலகுக்கு அழைத்து செல்ல வேண்டும். மரங்கள், செடிகள், பறவைகள், விலங்குகள், பூச்சியினங்களை அடையாளப்படுத்தி, அதன் செயல்பாடுகள், நன்மைகளை விளக்க வேண்டும். சூழலில் உள்ள, அடிப்படை பிரச்னைகளை விளக்க வேண்டும். சமீபத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சல், முற்றிலும் சூழல் மாசுப்பாட்டால் ஏற்படுவது. இதை விளக்குவதோடு, புராண கதைகள், இதிகாசங்களில், ஐம்பூதங்கள் குறித்து இடம்பெற்றுள்ள தகவல்களை, மாணவர்களுக்கு எடுத்துரைக்க, ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.
'பொதுவினாத்தாள் பாணியில் தேர்வு' ஒய்வு பெற்ற தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர் தேவராஜன்: தேர்வு நடைமுறையால் மட்டுமே, மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், பரிசோதிக்க முடியும். ஆனால், இதில் சில மாற்றங்களை நடைமுறைப்படுத்தலாம். குறிப்பாக, பாடம் சார்ந்த அறிவை, சோதிக்கும் வகையில், கேள்விகள் இடம்பெற வேண்டும். எழுத்துத்திறனை வளர்தெடுக்கும் வினாக்கள், போட்டித்தேர்வுகளில் பங்கேற்க, முன் பயிற்சியை அளிக்கின்றன. பொதுத்தேர்வு குறிப்புகள் முதல், விடைத்தாள் திருத்துவது வரை, அனைத்து பணிகளையும் ஆசிரியர்கள் தான் செய்கின்றனர். இதிலுள்ள குறைபாடுகளுக்கு, ஆசிரியர்கள் மனது வைத்தால், எளிதில் தீர்வு காண முடியும். மேலும், பொதுவினாத்தாள் முறையில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தினால், மாணவர்களின் திறனை வளர்த்தெடுக்கலாம். கலைப்பாடத்துக்கு அதிகரிக்கும் மவுசு எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ்த்துறை தலைவர் பாலசுப்ரமணியன் : நகரத்தில் படிக்கும் மாணவர்களை விட, கிராமப்புற மாணவர்களிடம், அதிக தன்னம்பிக்கை உள்ளது. இவர்களிடம், ஆங்கில மொழிப்புலமை, தொடர்புத்திறன் குறைவாக இருப்பது உண்மை தான். ஆனால், அதை வளர்த்தெடுக்கும் பொறுப்பு, ஆசிரியர்களிடமே உள்ளது. பணப்பலன்கள் உள்ளிட்ட பிற பிரச்னைகளுக்கு, குரல் கொடுப்பது போல, கல்வித்திட்டம் மாற்றம் செய்யவும், போராடியிருக்கலாம். கலைப்பாட பிரிவுகளுக்கு, தற்போது மவுசு அதிகரித்து வருகிறது. இப்பாடத்தில், ஜி.எஸ்.டி., குறித்த தகவல்கள் இணைக்க வேண்டும்.