கேபிள், 'டிவி' ஒளிபரப்புக்கான, 'செட் - டாப் பாக்ஸ்' விலையை, தனியார் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளன. நாடு முழுவதும், 'செட் - டாப் பாக்ஸ்' மூலம், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், கேபிள், 'டிவி' சேவை வழங்குவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, 70 லட்சம் செட் - டாப் பாக்ஸ்களை வழங்கவுள்ளது. ஜெயலலிதா அறிவித்தபடி, அவை இலவசமாக வழங்கப்படவுள்ளன. இதுவரை, செட் - டாப் பாக்ஸ் வாங்காதவர்கள், எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதனால், டிஜிட்டல் உரிமத்தை, ஏற்கனவே பெற்றுள்ள சில தனியார் எம்.எஸ்.ஓ., நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தருவதற்காக வாங்கி வைத்திருக்கும் செட் - டாப் பாக்ஸ்கள் போனியாகவில்லை. எனவே, அவற்றின் விலையை அதிரடியாக குறைத்துள்ளன. இதுவரை, 1,500 ரூபாய்க்கு வழங்கப்பட்ட செட் - டாப் பாக்ஸ், தற்போது, 350 - 550 ரூபாய்க்குள் கிடைக்கிறது.
Thursday, August 10, 2017
செட் - டாப் பாக்ஸ்' திடீர் விலை குறைப்பு!
பாடத்திட்டம் : கோவையில் இன்று கருத்தாய்வு
புதிய பாடத்திட்டம் குறித்து, ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் வகையில், மண்டல கருத்தாய்வு கூட்டம், கோவையில் இன்று நடக்கிறது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலையில், கோவை காளப்பட்டி, என்.ஜி.பி., பொறியியல் கல்லுாரியில், மண்டல கருத்தாய்வு கூட்டம், இன்று நடக்கிறது. திருப்பூர் உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களில் இருந்து, தலா 25 ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, கூட்டம் நடக்கிறது
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது
நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி
- தினேஷ் ராமையா
'நடப்பாண்டில், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாணவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருப்பதாக மாணவ அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. நீட் தேர்வில் மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏன் என்று சிபிஎஸ்இ-க்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கென பொதுவான வினாத்தாள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள், மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.
Wednesday, August 09, 2017
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன்
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என புதிய பாடத் திட்டக்குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு. ஆனந்தகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் புதிய பாடத் திட்டத்தை வடிவமைத்தல் குறித்த மண்டல அளவிலான கருத்தறியும் கூட்டம் புதன்கிழமை மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், புதிய பாடத்திட்டக்குழுத் தலைவருமான மு.ஆனந்தகிருஷ்ணன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூ றியதாவது:
புதிய பாடத்திட்டக் குழுவில் பத்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் உறுப்பினர்களிடையேயான கலந்தாய்வுக் கூட்டம் இருமுறை நடந்துள்ளது. கருத்தறியும் கூட்டம் மதுரையில் தான் முதலில் நடத்தப்படுகிறது. அடுத்ததாக கோவை, தஞ்சை, சென்னையில் நடத்தப்படும். கூட்டங்கள் முடிந்த பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் பள்ளியில் மாணவ, மாணவியர் பயிலும் நிலையில், சமூகத்தில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தயாராவது அவசியம். பாடத்திட்டத்தை மாற்றும்போது ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.
பாடத்திட்டம் தயாரிப்பதுடன், அதை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் பள்ளிகளில் ஏற்படுத்துவது அவசியம். மொழி, அறிவியல், கணினி என அனைத்து பாடங்களிலும் அடிப்படை அறிவை மாணவர்கள் சரியாக பெறும் வகையிலும் பாடத்திட்டத்தை அமைக்கவேண்டியுள்ளது.
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் (2018-19) 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான புத்தகங்கள் தயார் செய்தல், அவற்றுக்கான பயிற்சியை ஆசிரியருக்கு அளித்தல் ஆகிய பணிகளும் நடைபெறவுள்ளன. அடுத்த 12 ஆண்டுகளுக்கான தொலைநோக்கோடு இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் பொறியியல் பாடமும் சேர்க்கப்படும் என்றார்.
காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் ஐகோர்ட்டு உத்தரவு
காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை நிரப்புவதற்கு தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் தேர்வு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை 1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து கடந்த மே மாதம் 9-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில், 40 முதல் 70 சதவீத உடல் ஊனம் உள்ளவர்கள் மட்டுமே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஊனத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, மொத்த இடங்களில் 4 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும். ஆனால், 3 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்குவதாக கூறி, அதைவிட குறைவான இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியும், உடல் ஊனம் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கியும் புதிய அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தடை விதிப்பு
இந்த மனு கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம், ஆனால், அந்த தேர்வின் முடிவை வெளியிடக்கூடாது என்று ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் பதவிக்கான தேர்வில், மாற்றுத்திறனாளிகளின் உடல் ஊனம் தகுதியை அறிவியல்பூர்வமாகவும், அறிவார்ந்த முறையிலும் நிர்ணயம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. தற்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதி மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், இதற்காக அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளது என்றும் கூறினார். நிரப்பலாம் தற்போது 3,456 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாமல் கிடப்பில் போடப்பட்டால் அது மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த பணியிடங்களில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன்படி, மொத்த காலிப்பணியிடங்களில் சுமார் 140 இடங்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்ப வேண்டும். எனவே, இந்த 140 இடங்களை மட்டும் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தடை விதிக்கிறோம். மற்ற இடங்களை நிரப்பிக்கொள்ளலாம். இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
என் சி இ ஆர் டி புத்தகங்கள் வாங்குவதற்கு புதிய இணையதளம்
இனி பெற்றோர் புத்தகங்களை வீட்டிற்கே வரவழைக்க முடியும். அதே போல பள்ளிகளும் இந்தப் புதிய இணையதளத்தில் புத்தகங்களை வாங்கலாம். எனினும் புத்தகங்களை வாங்கும் போது உடனடியாக பணம் கட்ட வேண்டாம். இப்புத்தகங்கள் தேவையான அளவிற்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்துகிறது இத்தளம். இது தவிர பள்ளிகள் அவரவர் நகரங்களிலும் உள்ள என் சி இ ஆர் டி விற்பனையாளர்களிடமும் வாங்கிக் கொள்ளலாம். புத்தகத்தை அஞ்சலில் பெறுவதற்கு சாதாரண கட்டணம் போதும் என்கிறார் ஒரு அதிகாரி.
பல நேரங்களில் இப்புத்தகங்கள் போதுமான அளவிற்கு வெளியில் கிடைக்காமல் போகும் போது தனியார் வெளியிடும் புத்தகங்களை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கிறது என்று பரவலாக குற்றச்சாட்டும் இருக்கிறது.
ஆனால் என் சி இ ஆர் டி அதிகாரிகளோ ஒவ்வொரு பள்ளியும் தங்களுக்கு எவ்வளவு புத்தகம் தேவை என்பதை முன்கூட்டியே சொல்லி விட்டால் அவற்றின் அளிப்பை உறுதி செய்ய முடியும் என்கின்றனர். இதனிடையே என் சி இ ஆர் டி புத்தகங்களை பயன்படுத்தும் சி பி எஸ் இ தனது பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் 19,000 பள்ளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் புதிய இணைய தளத்தில் புத்தகங்களை வாங்கச் சொல்லியிருக்கிறது. இதன் மூலம் தேவையான் அளவிற்கு புத்தகங்களை பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
Tuesday, August 08, 2017
ஆசிரியர் பயிற்சிக்கு மவுசு குறைந்ததால் 30 நாள் நடக்க வேண்டியது 3 நாளில் முடிந்தது
ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் இன்றுடன் முடிகிறது. அதிக அளவில் யாரும் விண்ணப்பிக்காமல் போனதால் 3 நாளில் முடிகிறது. தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு டிஇடி தேர்வு கட்டாயமானதால் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்வதற்கு மாணவ மாணவியர் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் பல தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
அதேபோல ஆண்டு தோறும் அந்த படிப்பில் சேரும் மாணவர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 32, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 9, ஒன்றிய அளவில் 6, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 34, சுயநிதி தனியார் பள்ளிகள் 321 இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 26500 இடங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியானது.
ஆனால், சுமார் 2000 மாணவ மாணவியர் மட்டுமே ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டுகளில் இதற்கான கவுன்சலிங் சுமார் 1 மாதம் நடக்கும். ஆனால் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று முடிகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்த கவுன்சலிங் மூன்றே நாளில் முடிவடைவது மாணவர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணியமான உடை அணிய கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிரிக்கை
கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சரியான நேரத்தில் வர வேண்டும் என்றும், கண்ணியமாக உடை அணியுங்கள் என்றும் அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கலை கல்லூரிகள், பி.எட். கல்லூரிகள், உடற்பயிற்சி கல்லூரிகள் உள்பட மொத்தம் 1,480 கல்லூரிகள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த கல்லூரிகளுக்கு, கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிதாக கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அறிவுரை கூற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம்.
அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வர்கள், புதிதாக சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு தேவையான அறிவுரைகளை கூறியிருப்பார்கள். மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும். கல்லூரிகளில் இந்த ஆடை கட்டுப்பாடு ஏற்கனவே அமலில் உள்ளது.
கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சரியான நேரத்தில் வரவேண்டும். தேவையான மற்றும் தவிர்க்க முடியாத விடுமுறையை தவிர மற்ற விடுமுறைகளை எடுக்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் குறுந்தகடு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவில் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். பிறமாநிலங்களை ஒப்பிடும்போது மத்திய அரசின் நீட் தேர்வை எழுதுவதற்கு வசதிபடைத்த மாணவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவு செய்து பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையை போக்குவதற்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் 54 ஆயிரம் கேள்விகள் உரிய புகைப்படத்துடன் 30 மணி நேரம் ஓடக்கூடிய குறுந்தகடு (சி.டி.) வழங்க உள்ளோம்.
புதிய பாடத் திட்டம் குழு : மதுரையில் இன்று கருத்துகேட்பு
பள்ளி கல்வியில் புதிய பாடத்திட்டம் தயாரிப்புக்கான கருத்து கேட்புக் கூட்டம் மதுரையில் இன்று (ஆக.,9) நடக்கிறது. தமிழக பள்ளிகளில் பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையாக, அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்கும் பணி துவங்கி உள்ளது.
இதற்காக சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்களிடம் இதுகுறித்து குழு ஆலோசனை நடத்தி வருகிறது.இதன் முதல் கூட்டம் சென்னையில் கடந்த மாதம் நடந்தது. அடுத்ததாக, மதுரை காளவாசலில் உள்ள தர்பார் ஓட்டலில் இன்று (ஆக.௯) நடக்கிறது. இதில் அனந்தகிருஷ்ணன், எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து செய்துள்ளார்.
யோகா மனு தள்ளுபடி
யோகாவை கட்டாயமாக்கக் கோரிய மனு தள்ளுபடி
பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமாக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜே.சி.சேத் என்பவர் தொடர்ந்த வழக்கில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த மத்திய அரசு, ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் யோகாக் கல்வியை அடிப்படை உரிமையாக அமல்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், யோகா கல்வியைக் கட்டாயமாக்குவது குறித்து அரசு கொள்கைரீதியில் முடிவெடுக்கலாம் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற தனியார் தொண்டு நிறுவன விழா ஒன்றில் பேசிய மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே.குரியன், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் யோகா கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒருவரின் ஆளுமை முழுமையான வளர்ச்சி பெற யோகா உதவும் என்றும் கூறியிருந்தார்.
Monday, August 07, 2017
பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும் ௨ ஊக்க ஊதிய உயர்வு : பள்ளி கல்வித் துறை உத்தரவு
நான்கு ஆண்டுபோராட்டத்திற்கு பின்பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும், உயர்கல்விக்கு ௨ ஊக்க ஊதிய உயர்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உயர் கல்வி தகுதிகளுக்கு ௨ ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., (அ) எம்.எஸ்சி.,க்கு முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., க்கு இரண்டாவது ஊக்க ஊதியமும் பெற்று வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் பல்கலை.,கள் தொலைதுாரகல்வியில் இருந்து எம்.எட்.,ஐ நீக்கின. இதனால்ஆசிரியர்கள் தொலைதுார கல்வி மூலம் எம்.எட்., படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எம்.எட்.,க்கு பதிலாக எம்.பில்., (அ) பி.எச்டி., முடித்திருந்தாலும் ௨வது ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என, 2013, ஜன.,1 ல் பள்ளி கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. தமிழாசிரியர்களை பொறுத்தவரை பி.லிட்., முடித்தோர் எம்.ஏ.,க்கு ஒரு ஊக்க ஊதியமும், பி.எட்.,க்கு இரண்டாவது ஊக்க ஊதியமும் பெற்று வந்தனர். ஆனால் பி.ஏ., பி.எட்., முடித்து பட்டதாரி தமிழாசிரியராக சேர்ந்தோருக்கு எம்.ஏ.,க்கு மட்டும் ஒரே ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வந்தது.
'மற்ற பட்டதாரி ஆசிரியர்களைப்போல் தங்களுக்கும் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,' என வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதையடுத்து ஒரு ஆசிரியர் தங்களது பணிக்காலத்தில் உயர்கல்விக்கு ௨ ஊக்க ஊதிய உயர்வு பெறலாம். அதன்படி பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் எம்.எட்., (அ)எம்.பில்., (அ) பி.எச்டி முடித்திருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம். இந்த உத்தரவை அரசாணை வெளியிட்ட 2013, ஜன.,1லிருந்து செயல்படுத்த வேண்டுமென, பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
பி.எப்., விபரங்கள் அறிய எளிய நடைமுறை அறிமுகம்
சம்பளம் பெறும் ஊழியர்கள், பி.எப்., நிலவரம் அறியவும், தொகை பெறவும், 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.மாத சம்பளம் பெறும் ஊழியர்களிடம், பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதில், 4.5 கோடி சந்தாதாரர்கள், 45 லட்சம் ஓய்வூதியர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த சேமிப்பு கணக்கு விபரங்கள், முந்தைய ஆண்டு செலுத்திய தொகை, அதற்கான வட்டி மற்றும் இருப்பு விபரங்கள் ஆகியவை, ஊழியர்களுக்கு, நிறுவனம் மூலம், பிப்., மாதம் வழங்கப்படும். தற்போது, 'இ--கவர்னன்ஸ்' முறையில், எளிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 'ஆன்ட்ராய்டு' போன் மூலம், இ.பி.எப்.ஓ., என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இணையதளத்தில் நுழைந்தால், சந்தாதாரருக்கு வழங்கப்பட்டுள்ள, யு.எ.என்., எண் மூலம் தங்கள் வைப்பு நிதி பாஸ் புக்கை காணலாம். கடைசியாக செலுத்தப்பட்ட, பி.எப்., தொகை மற்றும் இருப்பு தொகை விபரங்களையும் பெற முடியும்.தற்போது, பி.எப்., தொகை திரும்ப பெறுதல் மற்றும் கடன் பெற, இந்த செயலி வழியாக விண்ணப்பிக்கும் வகையில், நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. இதனால், இதில் இணைந்துள்ள ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.