Thursday, July 20, 2017
ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்படிப்பு கலந்தாய்வு தொடக்கம் : டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு
ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்படிப்பு கலந்தாய்வு தொடங்கும் என்று டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு சட்டக்கல்லூரியில் 5ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி.க்கு விண்ணப்பித்தோரின் தரவரிசை பட்டியல் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
Wednesday, July 19, 2017
தெலுங்கானாவில் புத்தக பைகளுக்கு கட்டுப்பாடு
தெலங்கானாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் கொண்டுவரும் புத்தக பைகளுக்கு மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
தெலங்கானாவில் துவக்க பள்ளி மாணவர்கள் 6 முதல் 12 கிலோ வரையிலும், மற்ற வகுப்பு மாணவர்கள் 17 கிலோ வரையிலும் புத்தக சுமையைத் தூக்கிச் செல்கின்றனர். இதனால், மாணவர்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தெலுங்கானா புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி மாணவர்கள்
1 மற்றும் 2ம் வகுப்பு - 1.5 கிலோ
3,4 மற்றும் 5ம் வகுப்பு - 2-3 கிலோ
6 மற்றும் 7 ம் வகுப்பு - 4 கிலோ
8 மற்றும் 9 ம் வகுப்பு - 4.5 கிலோ
10ம் வகுப்பு - 5 கிலோ
வரை புத்தகங்கள் சுமக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் எந்த நோட்டு புத்தகங்களை கொண்டு வர வேண்டும். கொண்டு வரத் தேவையில்லை என்பதை மாணவர்களிடம் தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. துவக்க பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் கொடுக்கக்கூடாது. பாடங்களில் அளிக்கப்படும் பயிற்சியானது அந்த பாடம் முடிந்த உடன் ஆசிரியர் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் அரசு பள்ளிகளுக்கு விதித்துள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டு பாடங்களை குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பாடங்களில் மட்டும் அளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு
தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது.
இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்களின் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சம்பளம் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் வலியுறுத்தினர். குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ. கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக வலியுறுத்தப்பட்டது.
முதல்வர் பழனிச்சாமியின் சம்பள உயர்வு அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன.
Tuesday, July 18, 2017
ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்த ஊழியர்கள், தற்போது, பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:
வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்துள்ள ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு, 10 நாட்களுக்கு முன் விண்ணப்பித்தால், அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே, ஓய்வூதிய பலன்களை பெறும் வசதி தற்போது அறிமுகமாகி உள்ளது. இதற்கு, ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்கள், இணையதளத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், அந்த ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய பலன்களை சுலபமாக பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு
தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர். பல்வேறு விதிகள் அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம்போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன. குளறுபடிகள் கண்டறிந்துள்ளது.
அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Monday, July 17, 2017
நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் மாற்றம்
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வில், தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது.முதுநிலை பட்டம் முடித்தவர்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வு அல்லது மாநில அரசின், 'செட்' என்ற மாநில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'செட்' தேர்ச்சி பெற்றால், எந்த மாநிலம் தேர்வு நடத்தியதோ, அந்த மாநிலத்தில் மட்டுமே, பணியில் சேர முடியும். இதில், ஆங்கிலம் மட்டுமின்றி, அந்த மாநில மொழியிலும், தேர்வு எழுதலாம்.
தேசிய தேர்வில், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே எழுத முடியும். ஆனால், தேர்ச்சி பெறுவோர், நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில் பணியில் சேரலாம்.'நெட்' தேர்வை, மத்திய அரசின் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த ஆண்டு முதல், 'நெட்' தேர்வு, ஆண்டுக்கு இரு முறை என்பது ரத்து செய்யப்பட்டு, ஒரு முறையாக, நவம்பரில் மட்டும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில், மூன்று பாடங்களில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறுவதுடன், தேர்வு எழுதியவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற, முதல், 15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.
இந்த நடைமுறையை மாற்ற, கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, இந்த ஆண்டு முதல், மூன்று பாடங்களிலும் ஒட்டு மொத்தமாக தேர்ச்சி பெறுவோரில், முதல் ஆறு சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
Sunday, July 16, 2017
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் 25ம் தேதி வெளியீடு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வை 6.30 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் நடந்த தேர்வை சுமார் 40,000 பேர் எழுதினர். இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகடாமி நிறுவன தலைவர் சங்கர் கூறியதாவது:
சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது. இல்லாத பட்சத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். அக்டோபரில் மெயின் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகளில் தொடரும் கள ஆய்வு: பிளஸ் 1 வகுப்புக்கு விரைவில் மாதிரி வினாத்தாள்
பிளஸ் 1 வகுப்புக்கு புதிய வினாத்தாள் வடிவமைப்பதற்காக பள்ளி மாணவர்களிடம் கள ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்தப் பணி அடுத்த சில நாள்களுக்குள் முடிக்கப்பட்டு வினாத்தாள் தொடர்பான அரசாணை வெளியிடப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளஸ் 1 வகுப்புக்கு நிகழ் கல்வியாண்டு (2017}18) முதல் மொத்தம் 600 மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு 10}ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்}2 என மூன்று பொதுத் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரி வினாத்தாள் தயாரிக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் வலியுறுத்தல்: இந்தநிலையில் பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வுக்கான புதிய மாதிரி வினாத் தாள்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இது குறித்து தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறியது:
பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மே மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. புதிய வினாத்தாளில் எத்தனை ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண், 8 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும், அவை எந்தெந்த பாடங்களிலிருந்து கேட்கப்படும் என்பதை அறிய மாதிரி வினாத்தாள், ப்ளு பிரிண்ட் ஆகியவை உதவிகரமாக இருக்கும். பருவத் தேர்வுகளுக்கும், பாடங்களை முடிப்பதற்கும் ஆசிரியர்களுக்கு குறைந்த காலமே இருப்பதால் ப்ளு பிரிண்டுடன் கூடிய வினாத்தாளை வெளியிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பள்ளிகளில் கள ஆய்வு: இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி கூறுகையில், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளியல், வணிகவியல் உள்ளிட்ட 23 முக்கிய பாடங்களுக்கும், தொழிற்கல்வி சார்ந்த 11 பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 20 பாடங்களுக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் வினாத்தாள் அளிக்கப்பட்டு அவர்களைத் தேர்வு தேர்வு எழுதச் செய்து அதன் பின்னர் கருத்துக் கேட்கப்படும். இந்தக் கள ஆய்வு கடந்த சில நாள்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. முழு மதிப்பெண் சற்று கடினம்: இதைத் தொடர்ந்து புதிய வினாத்தாளின் தன்மை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் கூறும் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வினாத்தாள்கள் முழுமையாக வடிவம் பெறும்.
தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளை தமிழக மாணவர்கள் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் எளிதில் 100 மதிப்பெண் பெற முடியாத அளவுக்கு வினாத்தாள் சற்று கடினமாக இருக்கும். பிளஸ் 1 புதிய வினாத்தாள் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் எந்தக் குழப்பமும் அடைய வேண்டாம். ஒரு வாரத்துக்குள் இந்தப் பணி முடிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். மேலும் மாதிரி " வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். இதைப் பார்த்து கேள்விகள் எந்த முறையில் கேட்கப்படும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்" என்றார்.
பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்
தமிழகத்தில், 21 கல்லுாரிகளுக்கான, பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று(ஜூலை 17) துவங்குகிறது. தமிழக அரசின், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, 21 கல்வியியல் கல்லுாரிகளில், 1,753 இடங்களில், பி.எட்., படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, தமிழக அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியால், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நடத்தப்படுகிறது.
இந்த கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. முதல் நாளான இன்று, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. மற்ற பிரிவினருக்கு, நாளை முதல் கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பம் பெற்ற, 6,281 பேரில், 5,833 பேர் விண்ணப்பம் அனுப்பினர்.
அவர்களில், சரியான, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்ற, 2,996 பேர், முதற்கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு,1,000 ரூபாய்; மற்றவர்களுக்கு, 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை, 'செயலர், தமிழ்நாடு, பி.எட்., மாணவர் சேர்க்கை, 2017 - 18' என்ற பெயரில், 'டிடி' என்ற, வங்கி வரைவோலையாக தர வேண்டும்.கவுன்சிலிங், 22ம் தேதி வரை நடக்கிறது.
பி.இ., - பி.டெக்., படித்தவர்களுக்கு, வரும், 19ம் தேதி இடங்கள் ஒதுக்கப்படும். அவர்களுக்கு, 10 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, www.ladywillingdoniase.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Saturday, July 15, 2017
ப்ளஸ் 2 சான்றிதழை மின் ஆவணக் காப்பகம் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு
கடந்த மார்ச் மாதம் மேல்நிலை தேர்வெழுதிய மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மத்திய அரசின் மின் ஆவணக் காப்பகத்தின் (டிஜிட்டல் லாக்கர்) மூலம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மின் ஆவணக் காப்பகம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால் மாணவர்கள் மின் ஆவணக் காப்பகத்தின் www.di-g-i-l-o-c-k-er.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தங்களுக்கான மின் ஆவணக் காப்பகக்கணக்கினைத் தொடங்க வேண்டும். மாணவர்கள் ஆதார் எண்ணுடன் அவர்களது செல்போன் எண் இணைக்கப்படாதபட்சத்தில் அருகாமையிலுள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகி ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து மின் ஆவணக் காப்பகக் கணக்கினைத் தொடங்கலாம்.
மாணவர்களின் மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மின் ஆவணக் காப்பகக் கணக்கு மூலமாகப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு மின்னணுச் சான்றிதழை இணையதள வழியாகவும் சமர்ப்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மின்னணுச் சான்றிதழ், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து மின்னணு முறையில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளப்படுவதால், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.