Friday, May 19, 2017
ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி-சரக்கு,சேவை வரியில் இருந்து கல்வி, சுகாதாரத்துக்கு விலக்கு
சரக்கு, சேவை வரியில் இருந்து கல்வி, சுகாதாரத்துக்கு விலக்கு அளிக்கவும், சிகரெட், கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்,
நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவரப்படுகிறது. ஜூலை 1-ந் தேதி முதல், இதை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
4 வகையான வரி விகிதங்கள்
பொருட்கள் மீது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகையான ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்களை எந்த சதவீத வரிவிகிதத்தில் சேர்ப்பது என்று முடிவு எடுக்க மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் தொடங்கியது.
அதில், 6 பொருட்களை தவிர, 1,205 பொருட்களுக் கான வரி விகிதம் முடிவு செய்யப்பட்டது.
2-வது நாள் கூட்டம்
இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 2-ம் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சேவைகள் மற்றும் சில பொருட்களுக்கான வரி விகிதம் இறுதி செய்யப்பட்டது. அந்த விவரங்களை அருண் ஜெட்லியும், மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியாவும் தனித்தனியாக நிருபர்களிடம் தெரிவித்தனர். அவற்றின் விவரம் வருமாறு:-
* பொருட்களுக்கான வரி விகிதம் போலவே, சேவைகளுக்கான வரி விகிதமும் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதமாக இருக்கும்.
* ரூ.50 லட்சம் மற்றும் அதற்கு கீழ் விற்றுமுதல் கொண்ட உணவகங்களுக்கு 5 சதவீத வரி.
ஓட்டல், லாட்ஜ்
* ஏ.சி. உணவகங்கள், மதுபான உரிமம் பெற்ற உணவகங்களில் உணவு கட்டணம் மீது 18 சதவீத வரி. ஏ.சி. அல்லாத உணவகங்களுக்கு 12 சதவீத வரி. ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு 28 சதவீத வரி.
* ஆயிரம் ரூபாய்க்குள் நாள் வாடகை கொண்ட ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களுக்கு வரி விலக்கு. ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை நாள் வாடகை கொண்டவற்றுக்கு 12 சதவீத வரி. ரூ.2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை நாள் வாடகை கொண்டவற்றுக்கு 18 சதவீத வரி. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வாடகை கொண்டவற்றுக்கு 28 சதவீத வரி.
* தொலைத்தொடர்பு, நிதி சேவைகளுக்கு 18 சதவீத வரி. குதிரை பந்தயம், தியேட்டர்களுக்கு கேளிக்கை வரியும், சேவை வரியும் ஒருங்கிணைக் கப்பட்டு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.
கல்வி, சுகாதாரத்துக்கு வரி விலக்கு
* ஓலா, உபேர் போன்ற போக்குவரத்து சேவைகளுக்கு 5 சதவீத வரி.
* வெள்ளை அடித்தல் போன்ற பணி ஒப்பந்தங்களுக்கு 12 சதவீத வரி.
* கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு. இதனால், இவற்றின் கட்டணங்கள் குறையும்.
* அனைத்து கார், பஸ், சரக்கு வாகனம் (டிரக்), மோட்டார் சைக்கிள், மொபட், தனிநபர் விமானம், உல்லாச படகு ஆகியவற்றுக்கு அதிகபட்ச வரி விகிதமான 28 சதவீத வரி. இவற்றின் மீது கூடுதல் வரியும் விதிக்கப்படுவதால், இப் பொருட்களின் விலை உயரும்.
கார், மோட்டார் சைக்கிள்
* 350 சிசி திறனுக்கு மேற்பட்ட என்ஜின் கொண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தனிநபர் விமானம், உல்லாச படகு மீது 3 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதால், இவற்றின் மீதான மொத்த வரி விகிதம் 31 சதவீதமாக இருக்கும்.
* 1,200 சிசி வரை திறன் கொண்ட சிறியரக பெட்ரோல் கார்கள் மீது ஒரு சதவீத கூடுதல் வரி.
* 1,500 சிசி வரை திறன் கொண்ட சிறியரக டீசல் கார்கள் மீது 3 சதவீத கூடுதல் வரி.
* நடுத்தர அளவு கார்கள், எஸ்.யு.வி. ரக கார்கள், சொகுசு கார்கள் மீது 15 சதவீத கூடுதல் வரி. 10 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடிய வேன், பஸ்கள் மற்றும் 1,500 சிசிக்கு மேல் திறன் கொண்ட கார்களுக்கும் 15 சதவீத கூடுதல் வரி.
* செயற்கை குளிர்பானங் கள், எலுமிச்சை சாறு பானம் மீது 12 சதவீத கூடுதல் வரி.
பான் மசாலா, சிகரெட்
* பான் மசாலா குட்கா மீது 204 சதவீத கூடுதல் வரி. நறுமண புகையிலை, வடிகட்டிய புகையிலை மீது 160 சதவீத கூடுதல் வரி.
* 65 மி.மீட்டருக்கு மிகாத பில்டர் மற்றும் பில்டர் அல்லாத சிகரெட்டுகளுக்கான வரி, ஆயிரம் சிகரெட்டுக்கு ரூ.1,591 ஆக இருக்கும். அதன் மீது 5 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படும்.
65 மி.மீட்டருக்கு மேற்பட்ட பில்டர் சிகரெட் மீதான வரி, ஆயிரம் சிகரெட்டுக்கு ரூ.2,126. அத்துடன் 5 சதவீத கூடுதல் வரி. 65 மி.மீட்டருக்கு மேற்பட்ட பில்டர் அல்லாத சிகரெட் மீதான வரி, ஆயிரம் சிகரெட்டுக்கு ரூ.2,876. அத்துடன் 5 சதவீத கூடுதல் வரி.
* சுருட்டுகள் மீதான வரி, ஆயிரம் சுருட்டுக்கு ரூ.4,170 அல்லது 21 சதவீத கூடுதல் வரி, இவற்றில் எது அதிகமோ அது விதிக்கப்படும். கம்பெனி குட்கா மீதான கூடுதல் வரி 72 சதவீதம் ஆகும்.
இதனால் புகையிலை பொருட்கள், சிகரெட் ஆகியவற்றின் விலை உயரும்.
* நிலக்கரி, பழுப்பு நிலக்கரி மீது டன்னுக்கு ரூ.400 என்ற வீதத்தில் தூய்மையான எரிசக்தி வரி விதிக்கப்படும்.
ரெயில், விமானம்
* ஏ.சி. வசதி ரெயில் பெட்டி பயணத்துக்கு 5 சதவீத வரி. ஏ.சி. அல்லாத ரெயில் பயணத்துக்கு வரி விலக்கு.
* மெட்ரோ, புறநகர் ரெயில் மற்றும் ஹஜ் உள்ளிட்ட மத பயணங்களுக்கு வரி விலக்கு.
* விமானத்தில் சாதாரண வகுப்பு பயணத்துக்கு 5 சதவீத வரி. உயர் வகுப்பு பயணத்துக்கு 12 சதவீத வரி.
* லாட்டரி மீது வரி கிடையாது.
தங்கத்துக்கு வரி எவ்வளவு?
மேற்கண்ட முடிவுகளை அறிவித்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடர்ந்து கூறியதாவது:-
சேவைகளுக்கு எவ்வளவு வரி என்பதுதான் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. எல்லா சேவைகளுக்கும், பொருட்களுக்கும் ஏற்கனவே இருந்ததை விட குறைவான வரி விகிதமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இது நுகர்வோருக்கு சாதகமான வரி.
தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் பீடிக்கு எத்தனை சதவீத வரி விதிப்பது என்று ஜூன் 3-ந் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்! : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்
ரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல், விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை செயலர், விளக்கம் அளித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 'ரேங்க்' முறையை கைவிடுவதாக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், கடுமையாக கஷ்டப்பட்டு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பலரும், பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மாணவியர் விரக்தி : மாநில அளவிலும், மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலும், முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, பதக்கம், பாராட்டு என, எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்காததால், விரக்தி அடைந்துள்ளனர்.இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்த மாணவ, மாணவியரின் போட்டோக்கள் மற்றும் மதிப்பெண்களுடன், 'பிளக்ஸ்' பேனர்களிலும், நாளிதழ்களிலும் பள்ளி நிர்வாகங்கள் விளம்பரங்கள் செய்துள்ளன.இதற்கும் தடை விதிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'இத்தகைய விளம்பரங்கள் வெளியிடக்கூடாது' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளம்பரங்கள் வெளியிட்ட பள்ளி நிர்வாகங்களை மிரட்டும் வகையில், முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் விளக்கம் கோரப்பட்டு உள்ளது.
இனிமேல், இது போன்ற விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என, பள்ளி நிர்வாகங்களிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அலுவலர்களின் இந்த நடவடிக்கை, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. துறை மேலிடத்தின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், தவறான அணுகுமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் கையாள்வதாக பள்ளி நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.இதுபற்றி, தெளிவான விளக்கத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்க வேண்டுமென, எதிர்பார்க்கின்றனர்.
ஆரோக்கியமற்ற போட்டி : இந்த குளறுபடிகள் குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறைச் செயலர் உதயசந்திரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளுக்கு இடையில், ஓர் ஆரோக்கியமற்ற போட்டி உருவானதைத் தடுக்கவே, 'ரேங்க்' முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.அந்த அரசாணையின்படி, முதலிடம் என்று எந்த மாணவரின் போட்டோ மற்றும் மதிப்பெண்ணைப் போட்டு, விளம்பரம் செய்யக்கூடாது; அதேபோன்று, 'சென்டம்' எடுத்த மாணவர் என்றும், யாருடைய போட்டோவையும் வெளியிடக்கூடாது.
ஆனால், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டங்களில் செயல்படுத்தப்படும் புதிய முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, போட்டோக்களுடன் விளம்பரங்கள் வெளியிடலாம். தங்களது பள்ளியில், 450க்கு மேல் அல்லது 1,100க்கு மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை, வெவ்வேறு பாடங்களில் 'சென்டம்' எடுத்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை விளம்பரங்களில் குறிப்பிடலாம். நடப்பாண்டில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் மட்டுமின்றி, கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரின் போட்டோக்களையும் வெளியிடக்கூடாது.மற்றபடி, பள்ளிகளின் சிறப்புகளைக் குறிப்பிட்டு, விளம்பரங்கள் வெளியிடுவதற்கு, எந்தத் தடையும் இல்லை; இது குறித்து, தெளிவான விளக்கத்துடன் துறை அலுவலர்களுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு, பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.
துறை செயலரின் இந்த விளக்கம், பள்ளி நிர்வாகங்களை மிரட்டிய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு போதுமானதாக இருக்குமா அல்லது மறு உத்தரவு வரும் வரை, இது போன்ற மிரட்டல் தொடருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Thursday, May 18, 2017
கடந்தாண்டு கட்-ஆப் விபரத்தை வெளியிட்டது அண்ணா பல்கலை.,
பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2 செல்ல முடியும்!
பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் குழு வல்லுநர்கள் தெரிவித்தனர். புதிய சலுகை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வைப் போன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் நிகழாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை (மே 17) அறிவித்தார்.
எனினும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்கூட, பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம் என்ற முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக கல்வி சீரமைப்புக் குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் மேலும் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 1 தேர்வை எழுதும் சுமார் 9 லட்சம் மாணவர்களில், 50,000 முதல் 55,000 மாணவர்கள் வரையில் தேர்ச்சி பெறாத நிலை உள்ளது.
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். கல்லூரியைப் போன்று... பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அனுமதிக்கப்பட்டாலும்கூட, கல்லூரிகளைப் போன்று தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுதுவது அவசியமாகும்.
அக மதிப்பீட்டு மதிப்பெண்: தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வில் வேதியியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்து பிரதான பாடங்களுக்கும் 10 சதவீத அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன. இந்த மதிப்பெண்கள் செய்முறைப் பயிற்சி உள்ள பாடங்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் மாணவர்கள் பாடங்கள் குறித்த கூடுதல் திறனறிவைப் பெறுவதுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறையும்.
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள... ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எழுதும் நிலையில், பிளஸ் 1 பாடத் திட்டங்களின் அடிப்படையில்தான் அவற்றில் பெரும்பாலான கேள்விகள் அமைவதை கடந்த சில ஆண்டுகளாக கல்வியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்களைத் தயார்படுத்தவும், பி.இ. படிப்புகளில் சேரும் நிலையில் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பதைத் தவிர்க்கவுமே பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
வங்கியை போல் ஒரே படிவத்தில் பி.எப்., பணத்தை எடுக்கலாம்
வங்கிகளைப் போல், ஒரே படிவத்தை பூர்த்தி செய்து, பி.எப்., சந்தாதாரர்கள் பணத்தை எடுத்துக் கொள்ள, புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மண்டல மத்திய, பி.எப்., கூடுதல் கமிஷனர் வர்கீஸ் கூறியதாவது:
வருங்கால வைப்பு நிதி எனும், பி.எப்., திட்டத்தில், நாடு முழுவதும், 17 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். முன்பணம், திரும்பப் பெறுதல், பென்ஷன் என மூன்று பிரிவுகளில், சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். முன், பலவகை படிவங்கள் நடைமுறையில் இருந்தன. தற்போது, ஒரே படிவத்தில் மேற்குறிப்பிட்ட, மூன்று பிரிவுகளிலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பி.எப்., அலுவலக உதவி மையத்தில், படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
தங்களின் வங்கி பாஸ்புக் முன்பக்க நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மூன்று பிரிவுகளில், எந்த பிரிவுக்கு பணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனரோ, 20 நாட்களில், அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். சந்தாதாரர்கள், சிரமமின்றி தங்களின் பணத்தை எடுத்துக் கொள்ள உதவுவதே, இத்திட்டத்தின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்கள் குறைந்தாலும் பள்ளிக்கு 3 ஆண்டு 'கிரேஸ்'
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலவச கல்விக்கு விண்ணப்பிக்க மே 26 வரை அவகாசம் நீட்டிப்பு
எட்டாம் வகுப்பு வரை, மெட்ரிக் பள்ளிகளில் இலவசமாக படிப்பதற்கான, விண்ணப்ப பதிவுக்கு, மே, 26 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணம், நன்கொடை இன்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
எல்.கே.ஜி.,யில் சேரும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை, எந்த கட்டணமும் இன்றி படிக்கலாம். பொருளாதாரத்தில் நலிந்த, ஆண்டுக்கு, ௨ லட்சம் ரூபாய்க்கு குறைவான, வருமானம் பெறுவோரின், குழந்தைகள், இதில் சேரலாம். இந்த ஆண்டு, எல்.கே.ஜி., என்ற நுழைவு வகுப்பில், 10 ஆயிரம் பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள், ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், பதிவு செய்ய வேண்டும். இதுவரை, 43 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்த பதிவு, இன்று முடிவதாக இருந்தது. ஆனால், அவகாசத்தை நீட்டிக்க, பெற்றோர் விரும்புவதாக, நமது நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, வரும், 26ம் தேதி வரை, கூடுதல் அவகாசம் வழங்கி, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்த விபரங்களை, மாவட்ட கலெக்டர் அலுவலகம், முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், தொடக்கப் பள்ளிக்கல்வி அதிகாரி அலுவலகம் ஆகியவற்றில், தெரிந்து கொள்ளலாம். இ - சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு குறித்து நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு விவகாரம் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..!
கார்த்திக்.சி
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்குத் தடை விதிக்க முடியாது, என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பிற்கு, மத்தியில் மே 7-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளும் தேர்வு வினாத்தாள்களும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பின. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. மேலும் நாடு முழுவதும் ஒரே வினாத்தாள்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே நடைபெற்ற இந்தத் தேர்வின் அடிப்படையில் மாணவர்சேர்க்கைக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் பொதுவான வினாத்தாளில் புதிதாகத் தேர்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்களைப் பயன்படுத்தி தேர்வு நடத்துவது குறித்து மத்திய பள்ளிக் கல்வி வாரியம் மற்றும் இந்திய மருத்துவ வாரியம் ஆகிய இரு அமைப்புகளும் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Wednesday, May 17, 2017
பணியிட மாறுதலில் மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை
ஆசிரியர் பணியிட மாறுதலில் மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அரசுடன் சங்க நிர்வாகிகள் புதன்கிழமை (மே 17) நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பிரச்னை என்ன?: கடந்த 2016 -ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியிட மாறுதல் பட்டியலில் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நிகழாண்டு பட்டியலில் அவர்கள் 6-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தனர். இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டியலில் முன்னுரிமை (4-ஆவது இடம்) அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
தங்களது இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், தலைமைச் செயலகம் முன்பு வியாழக்கிழமை (மே 18) காலை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்திருந்தது. உடன்பாடு: இதனிடையே, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் கார்மேகம் ஆகியோர் கடந்த இருநாள்களாக சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பணியிட மாறுதல் முன்னுரிமை விவகாரத்தில் பார்வையற்றோர், இதயம் - சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தவர்கள், கடும் புற்றுநோய் பாதித்தவர்கள், 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதித்த உடல் ஊனமுற்றவர்கள், 5 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் பணியாற்றிய ராணுவ வீரர்களின் மனைவி என வரிசைப்படி ஒதுக்கீடு செய்ய உடன்பாடு ஏற்பட்டது.
ஓரிரு நாளில் அரசாணை: இதற்கான அரசாணை திருத்த உத்தரவு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதால், போராட்டத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.