இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 17, 2017

நாளை மறுநாள் காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு: செல்போனிலும் தகவல் அனுப்ப ஏற்பாடு


நாளை மறுநாள் காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி இன்று வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 30ம் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் வருகிற 19ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். 25ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் மே 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மொழி ரூ.305, மொழி (ஆங்கிலம்) ரூ.305. கணிதம், அறிவியல், சமூக அறிவியல்ரூ.205, விருப்ப மொழிப்பாடம் ரூ.205 மறுக்கூட்டல் கட்டணம் ஆகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் : இயக்குனர் உத்தரவு


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உறைவிட பள்ளி, விடுதிகளில் தங்கி பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை பள்ளி திறக்கும் நாளில் வழங்க அதன் இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். அவர் உத்தரவில் கூறியுள்ளதாவது:

மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்களான பாடநுால்கள், குறிப்பேடுகள், காலணிகள், புத்தகப்பைகள், வண்ண பென்சில்கள், புவியியல் வரை புத்தகங்கள் போன்றவைகளை பள்ளி திறக்கும் நாளன்றே வழங்க வேண்டும். 2017 ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உறைவிட பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா நான்கு இணை சீருடைகளை வழங்கப்படவுள்ளது.

இதற்காக வகுப்பு வாரியாக மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை மே 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனைத்து மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர்கள் அனுப்பி

இந்த ஆண்டே பிளஸ் 1 பொது தேர்வு:தமிழக அரசு திட்டவட்டம்


பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு, இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது. பிளஸ் 1 பெயிலானாலும், பிளஸ் 2 படிக்க, இந்த பொது தேர்வு வழி செய்கிறது. 'பிளஸ் 1க்கு கட்டாயம் பொது தேர்வு நடத்த வேண்டும்' என, அண்ணா பல்கலையின் கல்வி கவுன்சில் கூடி, பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது.

இது குறித்து, நிபுணர்களிடம் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, பிளஸ் 1க்கு, இந்த ஆண்டே பொது தேர்வு நடத்த, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை, இரண்டு நாட்களில் வெளியாகிறது.

நடைமுறை என்ன?

* அனைத்து பள்ளிகளும், பிளஸ் 1 வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். ஆண்டு இறுதியில், அரசு தேர்வுத் துறை மூலம், மாநிலம் முழுமைக்கும் பொதுவாக, பிளஸ் 1 பொது தேர்வு நடத்தப்படும்

* அந்த மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வு முடித்த பின், இரண்டு தேர்வுக்கும் சேர்த்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

* இரண்டு ஆண்டு படிப்பிலும், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், உயர்கல்விக்கு செல்ல முடியாது

* இரண்டு ஆண்டு மதிப்பெண்களுக்கும், சமமான, 'வெயிட்டேஜ்' வழங்கப்பட்டு, இன்ஜி., மற்றும் மருத்துவத்தில், 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ள இந்த நடைமுறை, ஆந்திரா மற்றும் கேரளாவிலும் அமலில் உள்ளது. தனித்தேர்வர்களுக்கும் பிளஸ் 1 தேர்வு உண்டு பள்ளிக்கு வராத தனித்தேர்வர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2வில், பொது தேர்வு எழுத அனுமதிக்கப் படுகின்றனர்.

இவ்வாறு பிளஸ் 2 தேர்வு எழுதுவோர், பிளஸ் 1 பாடம் படித்து, தேர்வு எழுதுவதில்லை. ஆனால், அரசு கொண்டு வரும் புதிய உத்தரவில், பிளஸ் 1க்கும் பொது தேர்வு வருகிறது. எனவே, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுத வேண்டும் என, புதிய விதிகள் சேர்க்கப்பட உள்ளன. பெயிலானாலும் பிளஸ் 2 படிக்கலாம் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சிக்காக, பிளஸ் 1 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், தனியார் பள்ளிகளால் வெளியேற்றப் படுகின்றனர்.

பிளஸ் 1க்கு பொது தேர்வு வந்தால், அதில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், பிளஸ் 2 படிக்க முடியாத நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, பிளஸ் 1 பொது தேர்வு முடித்து, மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி விடாமல் தடுக்க, புதிய அரசாணையில் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி, பிளஸ் 1ல், மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2வுக்கு செல்லலாம். அவர், பிளஸ் 2 சேர்ந்தவுடன், சிறப்பு துணை தேர்விலோ அல்லது டிசம்பரில் நடக்கும் துணை தேர்விலோ, தோல்வி அடைந்த, பிளஸ் 1 பாடத்துக்கு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம்


''கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுக்காக அரசு பள்ளிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தத்தெடுக்கும்,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். பள்ளிக் கல்வியில் முன்னேற்றங்கள் கொண்டு வருவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

இதில், அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரன், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், அமைச்சர் பேசியதாவது: பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அரசின் போக்குவரத்து செலவில் வழங்கப்படும். கழிப்பறை கட்டுதல், பராமரித்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் போன்ற வசதிகளை செய்து தர, அரசு பள்ளிகளை, 17 ஆயிரம் தனியார் கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தத்தெடுக்க உள்ளன.

உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிறுவனங்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கப்படும். தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற தேர்வுகளில், மற்ற மாநிலத்துடன் போட்டியிட முடியவில்லை. எனவே, பிளஸ் 1க்கு பொது தேர்வு வருகிறது. அதை அமல்படுத்த, அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், 12 ஆண்டுகளாக, பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இதுகுறித்து, கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம்; மூன்று ஆண்டுகளில், பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, பள்ளி நுாலகங்கள் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும், விளையாட்டு பிரிவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும். சி.பி.எஸ்.இ.,க்கு மாறும் பள்ளிகளுக்கு, தடையில்லா சான்று வெளிப்படையாக வழங்கப்படுகிறது. இதில், முறைகேடு இருக்கக்கூடாது.மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல், யோகா பயிற்சி அளித்தல், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வைக்கவும், புதிய திட்டங்கள் வர உள்ளன. அரசு ஒதுக்கிய, 26 ஆயிரத்து, 913 கோடி ரூபாயை எப்படி செயல்படுத்த வேண்டும் என, பட்டியல் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பத்தாம் வகுப்பு மாணவர் கவனத்துக்கு

இந்த வார ஆனந்தவிகடன் வலைபாயுதேவில் வந்த என் இரு பதிவு

Tuesday, May 16, 2017

மத்திய அரசு திடீர் உத்தரவு சித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் அடுத்த ஆண்டு நீட் கட்டாயம்


எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இயற்ைக மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று ஆயுஸ் எனப்படும் மத்திய ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தாண்டு சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் ஆயுஸ் நடத்தும் பட்டப்படிப்புகள் சேர்க்கப்படவில்லை. மருத்துவக் கல்வியின் தரத்தை கருத்தில் கொண்டு ஆயுஸ் வழங்கும் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் ஏற்கனவே உள்ள இன சுழற்சியின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். எனினும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் இந்த ஆண்டு ஆயுஸ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அந்தந்த மாநில அரசே பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தலாம்.

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயே ஆயுஸ் வழங்கும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த மாதம் 26ம் தேதியே அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டை, சென்னையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த சித்தா, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் கூட்டம் சென்னையில் 22ம் தேதி நடக்கிறது. அந்த கூட்டத்தில் இந்த உத்தரவு குறித்து விவாதிக்கப்படுகிறது.

பிழை திருத்தும் தமிழ் சாப்ட்வேர் 'சிடி' வெளியீடு


இலக்கண பிழைகளை திருத்தும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற, தமிழ் சாப்ட்வேர், 'சிடி'யை, முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில், பிழை திருத்த, சொல் திருத்த வசதி உள்ளது. அதேபோல், தமிழில், ஒற்றுப்பிழை, சந்தி உள்ளிட்ட இலக்கண பிழைகள் இல்லாமல் எழுதவும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளவும், எழுத்துருக்களை மாற்றிக் கொள்ளவும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற பெயரில், புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் விலை, 300 ரூபாய். இது, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சாப்ட்வேர், 'சிடி'யை, நேற்று(மே 16), தலைமைச்செயலகத்தில், முதல்வர் பழனிசாமி வெளியிட, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

ஊதியக்குழு பரிந்துரை அரசு குழு முதல் கூட்டம்


மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள, திருத்திய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவது குறித்து ஆராய, தமிழக அரசு அமைத்த அலுவலர் குழுவின் முதல் கூட்டம் நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்தது. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர், சண்முகம் தலைமையில், குழு உறுப்பினர்களான, உள்துறை செயலர், நிரஞ்சன் மார்டி, பள்ளிக் கல்வித் துறை செயலர், உதயசந்திரன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, உறுப்பினர் செயலர், உமாநாத் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதிக்குழு அடிப்படையில், தமிழக அரசின் தற்போதைய ஊதியம் மற்றும் ஓய்வூதிய விகிதங்களை, திருத்தி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளை சந்தித்து, கருத்துக்களை கேட்டறிய முடிவு செய்யப்பட்டது

10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், 'ரேங்க் அறிவிக்க கூடாது' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, 'ரேங்க்' முறை, இந்த ஆண்டு அதிரடியாக ஒழிக்கப்பட்டது.

இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர், செயலர் மற்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. தனியார் பள்ளிகளும், தங்கள் பள்ளிகளின், 'டாப்பர்ஸ்' பட்டியலை வெளியிடவில்லை. இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை, நாளை மறுநாள் வெளியிடுகிறது. இதிலும், மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பட்டியல் முறை கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பள்ளிகள், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர்களை, 'டாப்பர்ஸ்' ஆக அறிவிக்க, முடிவு செய்துள்ளன.
இதற்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.

மெட்ரிக் பள்ளி இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கையில், 'எந்த தனியார் பள்ளியும், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறும், தங்கள் மாணவர்களுக்கு, முதல் மூன்று, 'ரேங்க்' வைத்து, அவர்களின் பட்டியலை பிரபலப்படுத்தக் கூடாது; அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தாண்டு அனுமதி கிடையாது: மத்திய அமைச்சர்


டில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது: புதிய பி.எட். கல்லுாரிகளுக்க இந்த அனுமதி வழங்குவதில்லை என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றும், கல்லுாரிகளின் தரம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரம் கல்லுாரிகள் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அறிக்கை அளிக்காத 4ஆயிரம் கல்லுாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் கூறும்போது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.

தமிழகம் முழுவதும் அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு சிப்ஏடிஎம் கார்டு


தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள ஒரு கோடி பேருக்கு புதிய சிப் பொருத்திய ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட உள்ளதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர். அஞ்சலக சேவை இந்தியா முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரம் அஞ்சலகங்கள் உள்ளன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என நான்கு மண்டலங்கள் உள்ளது. இவற்றில் 94 தலைமை அஞ்சலகங்கள் உட்பட மொத்தம் 12 ஆயிரத்து 185 அஞ்சலகங்கள் இயங்கி வருகின்றன. அஞ்சலகத்தில் தபால் மற்றும் பார்சல் சேவையுடன் வங்கி சேவைகளும், ஏ.டி.எம். வசதி, பாஸ்போர்ட்டு பெறும் வசதி என தொடங்கப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்கு அஞ்சல் துறையில் ரூ.50 இருப்புத்தொகையில் சேமிப்பு கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்., மையத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்; சர்வீஸ் சார்ஜ் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டினர்.

ரூபே ஏடிஎம் கார்டு வேலுார் மாவட்டத்தில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதே போல தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில், 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இவர்களுக்கு ரூபே ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட்டது. புதிய எலெக்ட்ரானிக் சிப்-கார்டு இந்த கார்டுகளை வாடிக்கையாளர்கள் ரெடிமேட் ஷோரூம்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்கு ஏற்றாற் போல் புதிய எலெக்ட்ரானிக் சிப் பொருத்திய ஏ.டி.எம்., கார்டுகள் வழங்கப்பட இருக்கின்றன. அதை அனைத்து பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, May 15, 2017

மருத்துவ விண்ணப்பம் எப்போது?- சுகாதார செயலர் விளக்கம்


தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) அண்மையில் நடந்து முடிந்தது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 8-ல் வெளியாகிறது.

ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்,

"நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு முடிவுக்காக காத்திருக்கிறோம். குடியரசுத் தலைவர் ஒப்புதலை எதிர்பார்த்து இருப்பதாலேயே இன்னும் மருத்துவப் படிப்பு விண்ணப்பங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மத்திய அரசின் முடிவுக்குப் பின்னரே மருத்துவ விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்" என்றார்

சாதனை பள்ளிகள் விபரம் பள்ளிக்கல்வி துறை வெளியீடு


பிளஸ் 2 பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, தேர்வில் சாதித்த பள்ளிகளின் பட்டியலை, முதன் முதலாக, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியாகும். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பெற்றோர், உறவினர்களால் கண்டிப்புகள் இருக்கும். இதனால், பல மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவதுடன், விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கும்.

இதற்கு, இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது; 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவர்களின் மதிப்பெண்ணை வைத்து, வணிக ரீதியில் செயல்படும் பள்ளிகளுக்கும், 'செக்' வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பதிலாக, சாதித்த பள்ளிகளின் விபரங்களை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், எந்த குறிப்பிட்ட பள்ளிக்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.தேர்வில் பங்கேற்ற, 6,700 பள்ளிகளிலும் தேர்வு எழுதிய மாணவர் எண்ணிக்கை; பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள்; 'சென்டம்' பெற்றவர்கள் எண்ணிக்கை; பள்ளியின் சராசரி தேர்ச்சி ஆகியன இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம், எந்த பள்ளியில் மாணவர்கள், அதிக அளவில் மதிப்பெண் பெற்றுள்ளனர்; குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்; தேர்ச்சி பெற்றவர்கள் யார்; நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எவை என, அனைத்து விபரங்களும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பி.இ., 2-ம் ஆண்டு சேர்க்கை நாளை முதல் விண்ணப்பம்


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல் லுாரிகளில், டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ கூறினார்.

அவர் கூறும்போது: இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் நாளை முதல் ஆன்லைனில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் www.accetlea.com என்ற இணையதளத்தில் சென்று, விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப எண் வரும். அலைபேசி எண்ணுக்கு பாஸ்வேர்டு வரும். விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு மூலம் அவர் அனுப்பிய விண்ணப்பத்துக்கான தகவல்களை பார்க்க முடியும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து,அதனுடன் டிப்ளமோ மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவையின் நகலையும், ரூ.300-ன் காசோலை அசலையும், செயலர், இரண்டாம் ஆண்டு பி.இ., நேரடி சேர்க்கை 2017, அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரி, காரைக்குடி -630 003 என்ற முகவரிக்கு ஜூன் 14-ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும், என்றார். மேலும் விபரங்களை 04565-230 801 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.-