கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ‛விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்’ என்று அறிவித்து இருந்தார் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன். தற்போது 'ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஏற்கனவே தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு இருக்கும் 30 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும்’ என்று சொல்லி இருக்கிறார்.
இந்தத் தகவலை அவர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி விழா தொடக்க நிகழ்ச்சியில் தெரிவித்து இருக்கிறார். அண்மையில் பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் வளர்மதி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமைச்சர்.
அ.தி.மு.க. ஆட்சியில், கல்வித்துறையில் நடைபெற்ற நல்ல விஷயங்களில் ஒன்று பார்க்கப்பட்டது ஆசிரியர் தகுதித்தேர்வு. 2012-ம் ஆண்டில் இரண்டு முறை, 2013-ம் ஆண்டில் ஒரு முறை என, இதுவரை மூன்று முறை மட்டுமே தகுதித்தேர்வு நடைபெற்று இருக்கிறது. இந்த மூன்று தேர்விலும், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. 2014-ம் ஆண்டு சட்டசபையில் 82 மதிப்பெண் வரை பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். இதன் மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரமாக உயர்ந்தது.
காலியிடங்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்க, பள்ளி, கல்லூரி மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெயிட்டேஜ் முறையில் பின் தங்கி இருந்ததால் வேலை வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது.
வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றம் வழக்குத் தொடுத்தனர். வழக்குகள் விசாரணையில் இருந்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறாமல் இருந்தது. கடந்த மாதம் அனைத்து வழக்குகளிலும் தமிழக அரசுக்குச் சாதகமான முறையில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ‛வெயிட்டேஜ் முறை சரியானது தான். இனி தமிழக அரசு இதுகுறித்து தகுந்த முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரை அணுகி, வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வாய்ப்பு வழங்கும் படி முறையிட்டிருந்தனர்.
'முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வரிடம் சொல்லி தகுந்த முறையில் தீர்வு காணப்படும்' என்றும், 'புதிய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேதியினை அறிவிப்பார்' என்றும் சொல்லி இருந்தார் அமைச்சர். எதிர்பாராத விதமாக ஜெயலலிதா இறந்து விட, தற்போது அமைச்சர் 'ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்' என்று அறிவித்து இருக்கிறார். இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகத் தெரிகிறது.
பாடநூல் கழகத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி, இந்த விவகாரத்தில் மூக்கை நுழைப்பதற்கு முன் பிரச்சனையைத் தீர்த்து விட வேண்டும் என்று, முடிவெடுத்து இருக்கிறார் கல்வி அமைச்சர். எனவேதான், ‛தன்னிடம் முறையிட்ட பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்க வழி செய்து இருக்கிறார்' என்கிறார்கள் பள்ளி கல்வித் துறையில் உள்ளவர்கள். இது வெயிட்டேஜ் முறையினால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
தமிழ்நாடு பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறுகையில்“மிகவும் மகிழ்ச்சியான செய்தி தான். மற்றவர்களின் குறுக்கீடு வருவதற்கு முன்னதாக இந்த நியமனத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளில் நிறைய காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. ஆனால் அவை சரியாக கணக்கு எடுக்கப்படாமல் இருக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சுட்டிக்காட்டி இருப்பது போல் மாணவர்கள் - ஆசிரியர்களின் விகிதங்களின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இதனை எல்லாம் மேற்கொள்ளும் போது நிச்சயம் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும். மேலும், தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையில் வயது, ஏற்கனவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ள மூப்பு, பி.எட்., மதிப்பெண், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் போன்றவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு மதிப்பிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கான அமைப்பைச் சார்ந்த ராஜபாண்டி“தற்போது அமைச்சர் அறிவித்து இருப்பது சந்தோஷமான செய்திதான். வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் விரைவாக நிரப்பிட வேண்டும். இடையில் மற்றவர்களின் குறுக்கீடு இல்லாமல் செய்தால் சிறப்பாக இருக்கும். பணியிடங்களை நிரப்பும் போது 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்றார்.
இதுதவிர, 'ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 4 ஆயிரத்து 900 பேரையும், ஆசிரியர் அல்லாத காலியாக உள்ள இதர 800 பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்' என்றும் கூடுதல் தகவலைச் சொல்லி இருக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். பணியிடங்கள் நிரப்புவதில் எந்த விதமான குறுக்கீடும் இல்லாமல் நடைபெற்றால் கல்வித் துறை செழிக்கும். செய்வாரா அமைச்சர்?
- ஞா. சக்திவேல் முருகன்