புதிய கல்விக் கொள்கை அறிக்கை, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துகளை அனுப்ப, கூடுதலாக ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான புதிய கல்விக் கொள்கையை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த கொள்கையின், வரைவு அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் இணையதளத்தில், ஜூலையில் வெளியிடப்பட்டது. பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்களின் கருத்துகளை, ஜூலை, 31 வரை தெரிவிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டது. பின், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தி, தமிழ், உருது, மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட, 12 பிராந்திய மொழிகளில், கல்விக் கொள்கை அறிக்கை மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை தெரிவிக்க, செப்., 15 வரை கூடுதல் அவகாசம் தரப்பட்டு உள்ளது
Sunday, August 14, 2016
புதிய கல்வி கொள்கை குறித்து செப் 15வரை நீட்டிப்பு
Saturday, August 13, 2016
பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தம் செப்., 1ம் தேதி துவக்கம்
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, செப்., 1 முதல் துவக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்., 1ம் தேதி, மாநிலம் முழுவதும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சட்டசபை தேர்தல் நடைபெறாமல் உள்ள, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் மட்டும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது.
வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட தொகுதிகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக, செப்., 30 வரை, மனு அளிக்கலாம்; செப்., 10 மற்றும், 24ம் தேதி, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் படித்து காட்டப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, செப்., 11 மற்றும், 25ம் தேதி, ஓட்டுச்சாவடி அளவில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். வரும், 2017 ஜனவரி, 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாகிறவர்கள், பெயர் சேர்க்க மனு கொடுக்கலாம். வாக்காளர் இறுதி பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும்.தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு, பின் வெளியிடப்படும்.
பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி
அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொலை நிலையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., முடித்த பின், பயிற்சி மேற்கொள்ள விரும்பினால், தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தி, பயிற்சி மேற்கொள்ளலாம்.
அதேநேரம், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளியில் பயிற்சி பெறலாம். 'இந்த பயிற்சிக் காலம், பணிக் காலமாக எடுத்துக் கொள்ளப்படாது; எனவே, பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு
தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் 5-ம்வகுப்புக்கு பின் பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமு் கட்டாய கல்வி சட்டம் மூலம் 8-ம்வ குப்பு வரை கல்வி வழங்க மத்திய அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அதே போல் 10-ம் வகுப்பு வரை படிக்க அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்ககம் என்ற ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் நாடு முழுவதும் 6 முதல் 12 வயதிற்குட்பட்டோரில் 61 லட்சம் பேர் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டது தெரிய வந்துள்ளது. இதற்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.இதில் 26.65 லட்சம் பேர், 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோர். கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட 57 ஆயிரத்து 229 பேர் 5-ம் வகுப்பிற்கு பின், பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர்
Friday, August 12, 2016
பி.எட்., கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது. இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்; அவர்களில், 3,736 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள்.
மாணவர் சேர்க்கை செயலர் தில்லைநாயகி வெளியிட்ட அறிவிப்பு: பி.எட்., கவுன்சிலிங், வரும், 22 முதல், 30 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் வரும், 17ம் தேதி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி இணையதளத்தில், (www.ladywillingdoniase.com) வெளியாகும். விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலமும், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலமும், அழைப்பு தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பி.எட்., பயிற்சி: ஆசிரியருக்கு கெடுபிடி
தொடக்க, நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பல்கலைகளில் தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., படிக்கும்போது பள்ளியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற வேண்டும். தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளிகளில் பயிற்சி பெற வேண்டும். அதேபோல் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6 முதல் 8 ம் வகுப்புகளில் பயிற்சி பெறலாம் என, தொடக்கக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி பெறுவதால், அவற்றை பணிக்காலமாக கருத வேண்டு மென, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 'இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக விடுப்பு எடுத்தே பி.எட்., பயிற்சி பெற வேண்டும். அரசாணையில் குறிப்பிடாததால் பயிற்சியை பணிக்காலமாககருத முடியாது,' என தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் விரயமாகும் ஆசிரியர் ஊதியம்
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; நடுநிலைப் பள்ளிகளில், 35 பேருக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். அதேபோல், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே, தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவார்; இல்லையென்றால், பணியில் இருக்கும் ஆசிரியரில் ஒருவர், தலைமை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தப்படுவார்.
ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடக்கும் போது, ஆசிரியர் - மாணவர் விகிதப்படி, அதிகமாக உள்ள ஆசிரியர்களை, கட்டாய பணி மாற்றம் செய்வர்; இந்த பணி நிரவல், அரசு பள்ளிகளுக்கு மட்டும் உண்டு. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசின் ஊதியம் மற்றும் சலுகைகள் பெறும் ஆசிரியர்கள் பலர், மாணவர் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர்; ஆனால், இவர்களுக்கு கட்டாய பணி மாறுதல் கிடையாது. எனவே, அரசின் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் பலர், பணியில்லாமல், வெறுமனே பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. அரசு நிதி விரயமாவதை தடுக்க, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களையும், கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பிளஸ் 2 கணிதம்,அறிவியலோடு நாடு முழுதும் ஒரே பாடத்திட்டம் :அடுத்த ஆண்டு முதல் அமல்
பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டம் தற்போது அமலில் இருந்து வருகிறது. இதனால் மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 முடித்த பின், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதும்போது மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்துடன் ஏற்கெனவே தேசிய பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர கூட்டு நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனால் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, இந்த ஒரே பாடத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தேசிய அளவிலான கல்வி ஆலோசனைக் குழு அமைக்கப்பட் டிருந்தது. தெலங்கானா மாநில மேல்நிலைக் கல்வி வாரிய செய லாளர் ஏ.அசோக் தலைமையிலான இந்தக் குழு கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டத்தைப் பரிந்துரை செய்தது. இது தொடர்பாக இந்தக் குழு நாடு முழுவதிலும் உள்ள 30 மேல்நிலை கல்வி வாரியங்களிடம் பேசியதாகவும் வரும் 2017-18-ம் கல்வியாண்டு முதல் ஒரே பாடத் திட்டத்துக்கு இவை சம்மதம் அளித்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த ஒரே பாடத்திட்டம் 70 சதவீத அளவுக்கு மட்டுமே அமல்படுத்தப்படும். மீதமுள்ள 30 சதவீதத்தில் மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிப்பது குறித்து மாநில கல்வி வாரியங்களே தங்களுக்கு ஏற்றபடி மாற்றம் செய்து கொள்ளலாம். மாநில மேல்நிலைக் கல்வி வாரியங்க ளுடன் மத்திய கல்விக்குழு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து ஒப்பந்தம் இட்டுள்ளனர். சமூகவியல் பாடங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த மாநில கல்வி வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்தன” என்றனர்.
திரிபுரா மாநில மேல்நிலை கல்வி வாரியத்தின் செயல் தலைவ ரான இ.பி.கார்பி தலைமையிலும் ஒரு மத்திய கல்வி ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழு, நாடு முழுவதிலும் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் ஒரே வித வினாத்தாள் அமைக்க ஆலோசித்து வருகிறது. இத்துடன், குறுகிய விடை, ஒருவரி விடை, கட்டுரை போன்றவற்றுக்கான மதிப்பெண்கள் ஒரே மாதிரியாக அளிக்கவும் திட்டமிட்டு வருகிறது. இதன் பரிந்துரைகள் மாநில மேல்நிலைக் கல்வி வாரியங்கள் முன் வைக்கப்பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும்.
வட மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களான ஜாமியா மில்லியா, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் பிளஸ் 2 கல்வி போதிக் கப்படுகிறது. ஆனால் இவற்றிலும் மத்திய, மாநில பாடத்திட்டங்களை விட பிளஸ் 2 பாடத்திட்டம் வேறுபட்டதாக உள்ளது. எனினும் தேசிய கல்வி ஆராய்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத் திட்டங்கள் நாடு முழுவதிலும் ஒரே மாதிரியாக உள்ளன. இதே பாடத்திட்டத்தை நாட்டின் சுமார் 15 மேல்நிலைக் கல்வி வாரியங்கள் பின்பற்றி வருகின்றன. தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை தங்கள் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என இவை கருதுவதே இதற்கு காரணம்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கணிதம், அறிவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டுவர கடந்த 2010-ல் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் மாநில மேல்நிலைக் கல்வி வாரியங்களுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இதை அமல்படுத்த முடியவில்லை.