தமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற மாநில அரசு ஊழியர்கள்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்., 1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தில் முன்பணம் பெற ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் மார்ச் 21ல் அனுமதி அளித்துள்ளது. பணியில் சேர்ந்து 10 ஆண்டு முடிந்திருந்தால், அவர்களின் பங்குதொகையில் 25 சதவீதம் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம்.
திருமணம், முதல்முறையாக வீடு வாங்க அல்லது கட்ட, இருதயநோய், சிறுநீரக, புற்றுநோய் உள்ளிட்ட 15 வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற முன் பணம் பெறலாம். முன்பணம் பெற (மருத்துவ செலவை தவிர) 5 ஆண்டுகள் இடைவெளி வேண்டும். மொத்தம் 3 முறை மட்டுமே பணம் பெற முடியும் என, தெரிவித்துள்ளது. ஆனால் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் முன்பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய பென்ஷன் திட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: தமிழக அரசு வசூலித்த பணத்தை செலுத்தாததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வூதிய பணம் பெற முடியாமல் தவிக்கின்றனர். தற்போது முன்பணமும் பெற முடியாத நிலை உள்ளது. பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவிலும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் இல்லை. இதனால் மனஉளைச்சலில் உள்ளோம், என்றார்.