இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 15, 2015

எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி...மிச்சம் நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்


நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும்.

எல்.இ.டி., என்பது, 'லைட் எமிட்டிங் டையோடு' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம். குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி அதிக ஒளியை, நீண்ட காலத்திற்கு வழங்கும் திறன் கொண்ட இந்த புதுமையான மின் விளக்குகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாதவை. இந்த விளக்குகளை பயன்படுத்துபவர்களுக்கும், அரசுக்கும் பல விதங்களில் நன்மை கிடைப்பதால், எல்.இ.டி., விளக்குகளை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு, மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது. மின்துறை சார்பில், இதற்கென சிறப்பு பிரிவை உருவாக்கி, வீடுகள் தோறும் விதவிதமான, எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்த, பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் தீவிர முயற்சியால், ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், குண்டு மின் விளக்குகள் மற்றும் சி.எப்.எல்., எனப்படும் பாதரசம் கொண்ட விளக்குகளின் பயன்பாடு, 90 சதவீதம் தவிர்க்கப்பட்டு, எல்.இ.டி., விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், மின் நுகர்வோருக்கு மின் கட்டணமும் குறைவதால், பொதுமக்களும் ஆர்வமாக, எல்.இ.டி., விளக்குகளை வாங்கி, வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம்:

* ஜனவரி முதல், டி.இ.எல்.பி., எனப்படும், முழுவதும், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும் திட்டம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டில்லி, உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
* அடுத்தகட்டமாக, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு - காஷ்மீர், அசாம், சண்டிகர், கர்நாடகாவிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
* இ.இ.எஸ்.எல்., எனப்படும், மத்திய மின்துறை யின் துணை அமைப்பு, எல்.இ.டி., மின் விளக்குகள் வினியோகத்தை மேற்கொள்கிறது
* இதுவரை, இரண்டு கோடி எல்.இ.டி., விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன
* நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படும், 77 கோடி சாதாரண விளக்குகள், 40 கோடி, சி.எப்.எல்., விளக்குகளை அடியோடு நிறுத்திவிட்டு, அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளை புழக்கத்தில் கொண்டு வருவது தான், இ.இ.எஸ்.எல்.,லின் இலக்கு.

எந்த வகையில் சிக்கனம்? சாதாரண குண்டு மின் விளக்கு, 350 - 400, 'லுமென்' வெளிச்சத்தை உமிழ, 60 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. பாதரசத்தை மூலப்பொருளாக கொண்ட, சி.எப்.எல்., எனப்படும் விளக்குகள், 450 - 550 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ, 14 - 16 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால், எல்.இ.டி., விளக்குகள், 6 வாட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, 600 - 700 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ்கிறது. மேலும், இந்த விளக்குகள், பிற விளக்குகளால் அறவே கொடுக்க முடியாத, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் மணி ஆயுட்காலத்தை கொடுக்கும்.லுமென் என்பது, ஒளியின் திறனை அளவிடும் அளவீடு.

என்ன கிடைக்கிறது? *அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும் மாநிலங்களால், தினமும், 68 லட்சம் கிலோவாட் மின்சக்தி மிச்சமாகிறது
* 'பீக் ஹவர்' எனப்படும், உச்சகட்ட நேர மின் தேவை, 645 மெகாவாட் ஆக குறைந்துள்ளது
* தினமும், 5,520 டன் கார்பன் மாசு வீழ்ச்சி அடைந்துள்ளது
* மின் கட்டணம், உற்பத்திச் செலவு போன்றவற்றில், தினமும், 2.71 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டுள்ளது.

விலை எப்படி? மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால், ஓராண்டிற்கு முன், 650 - 700 ரூபாயாக இருந்த ஒரு எல்.இ.டி., விளக்கின் விலை, இப்போது பாதியாக குறைந்துள்ளது; தற்போதைய சந்தை விலையில், 300 - 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.மத்திய அரசின் திட்டப்படி, ஒரு எல்.இ.டி., விளக்கு, 78 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது; மீதமுள்ள தொகை, மானியமாக வழங்கப்படுகிறது.

Wednesday, October 14, 2015

இ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


இ-சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க லாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற் றுள்ள கே.அருள்மொழி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங் களில் நடத்தப்படும் இ-சேவை மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைய வழி விண்ணப்ப சேவைகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன.

இ-சேவை மையங்களில் ரூ.50 செலுத்தி நிரந்தரப்பதிவு, ரூ.30 செலுத்தி தேர்வுகளுக்கு விண்ணப் பம், ரூ.5 செலுத்தி விண்ணப்பங் களில் மாறுதல்கள், ரூ.20 செலுத்தி விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்ப நகல் பெறு வது உள்ளிட்ட சேவைகளை பெற லாம். மேலும் நிர்ணயிக்கப் பட்ட தேர்வுக்கட்டணத்தையும் செலுத்தலாம். பணம் செலுத்தியதற் கான ஒப்புகைச் சீட்டினையும் பெற்றுக் கொள்ளலாம். மேற்படி சேவைகள் எல்காட் நிறுவனத் தால் நடத்தப்படும் இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். குரூப் 4 தேர்வுகளுக்கான அறிக்கை விரைவில் வெளியிடப் படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து வெளிப்படைத் தன்மையுடன் விண்ணப்பதாரர் நேய அணுகு முறையுடன் இயங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள் அரசு ஆய்வு


அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும், அவற்றை களைய வலியுறுத்தியும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன. மேலும் பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. ஊதிய முரண்பாடுகளை ஆராய அரசு நிதிச்செயலர் அனைத்து துறை செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 7 வது ஊதிய மாற்றத்திற்கு முன் மற்றும் பின் ஒவ்வொரு பதவிகளின் ஊதியகட்டு விபரம், துறை வாரியாக ஊழியர்களின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், காலியிடங்கள், அதிகாரத்திற்கு உட்பட்ட பதவி, பணியாளர்களின் கல்வித்தகுதி, பணி தன்மை உள்ளிட்ட விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறை தீர்க்க கமிட்டி அமைக்க உத்தரவு


பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்:

* பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்து, ஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும்
* அதில், குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால், வட்டார வள மைய அதிகாரி தலைமையிலான, வட்டார கமிட்டி விசாரித்து, 30 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்
* அதற்கு மேல், கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் மாவட்ட கமிட்டி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, ஆசிரியர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்
* இறுதியாக, மாநில அளவில், தொடக்கக் கல்வி இயக்குனரை தலைவராக கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இந்தக் கமிட்டி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, குறைகளை தீர்த்து வைக்க வேண்டும்
* ஆசிரியரின் பணி விதிமுறைகள், பதவி உயர்வு, நிதி சார்ந்த கோரிக்கைகள், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனை தொடர்பான குறைகளை, இந்தக் கமிட்டிகள் விசாரிக்காது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் இந்த உத்தரவால், எந்த பலனும் ஏற்படாது என, ஆசிரியர்கள் குறை கூறிஉள்ளனர்.

இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:ஏற்கனவே, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தில், கிராம கல்விக் குழு என்ற குறை தீர்ப்பு கமிட்டி இருக்கிறது; ஆனால், அது முறையாக செயல்படவில்லை என்ற குறையே இன்னும் போக்கப்படவில்லை. பணி விதிமுறைகள், பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை ஆய்வு செய்யாமல், ஆசிரியர்களின் குறைகளை எப்படி தீர்க்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்

Tuesday, October 13, 2015

மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு?


மத்திய அரசு ஊழியர்களைப் போன்றே, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும்.

அதன்படி, மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கான கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு


அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஆசிரியர்களின் புகார்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில், பள்ளி அளவிலான குறைபாடுகளைக் களைய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் தங்களது குறைகளை இந்தக் குழுக்களில் தெரிவிக்க வேண்டும். வட்டார, மாவட்ட, மாநில அளவிலான குறைதீர் குழுக்களையும் மாநில அரசு அமைக்க வேண்டும் என விதிகளில் பொதுவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒவ்வொரு குழுக்களும் எத்தனை நாள்களில் புகார்களுக்கு தீர்வு காண வேண்டும், இந்தக் குழுக்களில் யார் இடம்பெற வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசு இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

அதேநேரத்தில், பணி தொடர்பான விவகாரங்கள், கல்வித் துறையால் தாற்காலிகப் பணியிடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான விவகாரங்களை இந்தக் குழுக்கள் விசாரிக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையின் விவரம்: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பள்ளிகள் அளவிலான முதல் குறைதீர் அமைப்பாக செயல்படும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது புகார்களை இந்தக் குழுவின் அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலரிடம் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக புகார் பெறப்பட்ட 15 நாள்களுக்குள் அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தப் புகார் மீது நடவடிக்கை இல்லையென்றாலோ அல்லது அதற்கான பதில் திருப்தியளிக்கவில்லை என்றாலோ வட்டார அளவிலான குறைதீர் குழுவிடம் ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கலாம்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான வட்டார குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும். வட்டார கல்வி அதிகாரி இந்தக் குழுவின் அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலராகச் செயல்படுவார். புகார் பெற்ற 30 நாள்களுக்குள் இந்தக் குழு அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தக் குழு தேவையின் அடிப்படையில் கூட வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். மாவட்ட அளவிலான குழு: மாவட்ட அளவிலான குறைதீர் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கல்வி அதிகாரி அமைப்பாளராகவும், உறுப்பினர் செயலராகவும் இருப்பார். நகராட்சிகளின் மூத்த உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். இந்தக் குழு 3 மாதங்களுக்குள் அந்தப் புகாருக்கு தீர்வு காண வேண்டும்.

மாநில அளவிலான குழு: மாவட்ட அளவிலான குழுவில் திருப்தியில்லை என்றால் ஆசிரியர்கள் மாநில அளவிலான குறைதீர் குழுவிடம் முறையிடலாம். இந்தக் குழுவுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் தலைவராகவும், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பரிந்துரை செய்யும் 2 பேர் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்தக் குழு 90 நாள்களுக்குள் புகார்களுக்குத் தீர்வு காண வேண்டும். குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவிஐபிக்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு!


மதுரை: வி.வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரது பணி நியமனம் செயல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் கல்யாணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் 50 மாணவர்களை வெளியிலில் காத்திருந்து, கல்யாணி வந்ததும், அவர் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்க வைத்தனர்.

இந்த செயல் குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் படித்து வரும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் வரவேற்பில் பங்கத்தடை விதிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (13ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு, ''பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்'' என மதுரை முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டனர். மேலும், அந்த நகலை நாளை (14ஆம் தேதி) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Monday, October 12, 2015

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கே.அருள்மொழி நியமனம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு தலைமைச் செயலர் கு. ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். கே. அருள்மொழி இந்தப் பதவியில் 6 ஆண்டுகளோ அல்லது 62 வயது நிறைவடையும் வரையிலோ நீடிப்பார் என்று அந்த உத்தரவில் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவு ஆளுநர் உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக இதுவரை சி.பாலசுப்பிரமணியன் இருந்து வந்தார்.

வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு


அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.

விருப்பம் உண்டா?: ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2006 ஜன.,1 க்கு பின் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம், கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. 'இந்த பணியிடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.முரண்பாடு: ஏற்கனவே, ஆசிரியர் பயிற்றுனர்களாக பணிபுரிவோர், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வித்துறையின் நடவடிக்கையால் ஆசிரிய பயிற்றுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 'வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை' என, எங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையின் முரண்பாட்டால் எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் கிடைக்காமல் போய்விடும், என்றார்.

வங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்


வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது. வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதற்கு மேல், ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, தற்போது இலவசமாக இருக்கும் வங்கிகளின் இணைய சேவைக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும், 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்., 1 முதல், வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிக்கும்படி, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, பல வங்கிகளில் அமலுக்கு வந்து விட்டது' என்றார்.

அறிவிப்பு இல்லை: தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது:வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிப்பது பற்றி, எந்த முன் அறிவிப்பும் இல்லை. வங்கியின் இணையதளங்களிலும் இது பற்றி குறிப்பிடவில்லை. வங்கிக்கு செல்வோரின் எண்ணிக்கையை குறைப்பதோடு, எந்த நேரத்திலும் பண பரிவர்த்தனையை செய்யும் நோக்கில், ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவையை, வங்கிகள் தான் அறிமுகம் செய்தன.தற்போது அவற்றுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால், சேவை கட்டணத்தை தவிர்க்க, காசோலைகளுடன் மீண்டும் வங்கிக்கு செல்லும் நிலை ஏற்படும். வங்கிகளின் நவீன சேவைகள், வாடிக்கையாளர் மீது கட்டண சுமையை ஏற்படுத்துகின்றன. நான் கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கியில், இணையம் மூலம் செய்யும் பண பரிமாற்றத்துக்கு, சேவை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

TNPSC group 2a பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாமல் நிரப்படவுள்ள 1863 குரூப் 2A பணியிடங்களுக்கு எழுத்து தேர்வினை அறிவித்துள்ளது. இதற்கான விளம்பர அறிவிப்பை இன்று வெளியட்டுள்ளது.

நிதி, சட்டம், வருவாய், உள்பட பல்வேறு துறைகளில் 1863 காலிப்பணியிடங்கள் உள்ளன. வழக்கமான குரூப் 2 தேர்வைப் போல மூன்று கட்டமாக இல்லாமல், எழுத்துத் தேர்வின் மூலம் நேரடியாக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளை உடையது. முதல் பிரிவில் பட்டப்படிப்பு கல்வித் தகுதி அடிப்படையிலான பொதுப் பாடங்கள் குறித்த வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான வினாக்கள் இடம்பெறும்.
இரண்டாவது பிரிவில் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திற்கான 100 வினாக்களை உள்ளடக்கியது. குரூப் 2-A தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களை காணலாம்.

விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தங்களது அடிப்படைக் கல்வி தகுதியை 10 +2 + 3 என்ற அடிப்படையில் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.
மேலும் பத்தாம் வகுப்பில் தமிழை கட்டாயம் படித்திருப்பது முக்கியம். மொத்தப் பணியிடங்களில் 20 சதவிகித இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
அனைத்துப் பணிகளுக்கும் 1.07.2015ன் படி குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதர பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
கூடுதல் விவரங்களுக்கு www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களை அணுகவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
இணைய தளம் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in இணைய தளங்களை அணுகவும்.
விண்ணப்பிக்கும் போது, புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்திருப்பது அவசியம். பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
தேர்வுக்கட்டணம் 75 ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய் சேர்த்து மொத்தம் 125 ரூபாய் செலுத்த வேண்டும். நிரந்தர பதிவெண் பெற்றவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கட்டணத்தை இணைய தளம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். இந்தியன் வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களிலும் கட்டணத்தை செலுத்த முடியும். இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்ப விவரங்களை பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணத்தை வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் செலுத்த கடைசி நாள் நவம்பர் 13ம் தேதி ஆகும்.

இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய நவம்பர் 11ம் தேதி கடைசி நாள். எழுத்துத் தேர்வு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நுழைவுச்சீட்டை தேர்வுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.