இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 13, 2015

கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு


அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஆசிரியர்களின் புகார்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில், பள்ளி அளவிலான குறைபாடுகளைக் களைய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் தங்களது குறைகளை இந்தக் குழுக்களில் தெரிவிக்க வேண்டும். வட்டார, மாவட்ட, மாநில அளவிலான குறைதீர் குழுக்களையும் மாநில அரசு அமைக்க வேண்டும் என விதிகளில் பொதுவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒவ்வொரு குழுக்களும் எத்தனை நாள்களில் புகார்களுக்கு தீர்வு காண வேண்டும், இந்தக் குழுக்களில் யார் இடம்பெற வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசு இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

அதேநேரத்தில், பணி தொடர்பான விவகாரங்கள், கல்வித் துறையால் தாற்காலிகப் பணியிடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான விவகாரங்களை இந்தக் குழுக்கள் விசாரிக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையின் விவரம்: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பள்ளிகள் அளவிலான முதல் குறைதீர் அமைப்பாக செயல்படும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது புகார்களை இந்தக் குழுவின் அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலரிடம் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக புகார் பெறப்பட்ட 15 நாள்களுக்குள் அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தப் புகார் மீது நடவடிக்கை இல்லையென்றாலோ அல்லது அதற்கான பதில் திருப்தியளிக்கவில்லை என்றாலோ வட்டார அளவிலான குறைதீர் குழுவிடம் ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கலாம்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான வட்டார குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும். வட்டார கல்வி அதிகாரி இந்தக் குழுவின் அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலராகச் செயல்படுவார். புகார் பெற்ற 30 நாள்களுக்குள் இந்தக் குழு அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தக் குழு தேவையின் அடிப்படையில் கூட வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். மாவட்ட அளவிலான குழு: மாவட்ட அளவிலான குறைதீர் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கல்வி அதிகாரி அமைப்பாளராகவும், உறுப்பினர் செயலராகவும் இருப்பார். நகராட்சிகளின் மூத்த உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். இந்தக் குழு 3 மாதங்களுக்குள் அந்தப் புகாருக்கு தீர்வு காண வேண்டும்.

மாநில அளவிலான குழு: மாவட்ட அளவிலான குழுவில் திருப்தியில்லை என்றால் ஆசிரியர்கள் மாநில அளவிலான குறைதீர் குழுவிடம் முறையிடலாம். இந்தக் குழுவுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் தலைவராகவும், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பரிந்துரை செய்யும் 2 பேர் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்தக் குழு 90 நாள்களுக்குள் புகார்களுக்குத் தீர்வு காண வேண்டும். குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவிஐபிக்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு!


மதுரை: வி.வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரது பணி நியமனம் செயல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் கல்யாணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் 50 மாணவர்களை வெளியிலில் காத்திருந்து, கல்யாணி வந்ததும், அவர் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்க வைத்தனர்.

இந்த செயல் குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் படித்து வரும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் வரவேற்பில் பங்கத்தடை விதிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (13ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு, ''பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்'' என மதுரை முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டனர். மேலும், அந்த நகலை நாளை (14ஆம் தேதி) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Monday, October 12, 2015

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கே.அருள்மொழி நியமனம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு தலைமைச் செயலர் கு. ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். கே. அருள்மொழி இந்தப் பதவியில் 6 ஆண்டுகளோ அல்லது 62 வயது நிறைவடையும் வரையிலோ நீடிப்பார் என்று அந்த உத்தரவில் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவு ஆளுநர் உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக இதுவரை சி.பாலசுப்பிரமணியன் இருந்து வந்தார்.

வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு


அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.

விருப்பம் உண்டா?: ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2006 ஜன.,1 க்கு பின் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம், கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. 'இந்த பணியிடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.முரண்பாடு: ஏற்கனவே, ஆசிரியர் பயிற்றுனர்களாக பணிபுரிவோர், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வித்துறையின் நடவடிக்கையால் ஆசிரிய பயிற்றுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 'வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை' என, எங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையின் முரண்பாட்டால் எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் கிடைக்காமல் போய்விடும், என்றார்.

வங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்


வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது. வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதற்கு மேல், ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, தற்போது இலவசமாக இருக்கும் வங்கிகளின் இணைய சேவைக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும், 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்., 1 முதல், வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிக்கும்படி, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, பல வங்கிகளில் அமலுக்கு வந்து விட்டது' என்றார்.

அறிவிப்பு இல்லை: தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது:வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிப்பது பற்றி, எந்த முன் அறிவிப்பும் இல்லை. வங்கியின் இணையதளங்களிலும் இது பற்றி குறிப்பிடவில்லை. வங்கிக்கு செல்வோரின் எண்ணிக்கையை குறைப்பதோடு, எந்த நேரத்திலும் பண பரிவர்த்தனையை செய்யும் நோக்கில், ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவையை, வங்கிகள் தான் அறிமுகம் செய்தன.தற்போது அவற்றுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால், சேவை கட்டணத்தை தவிர்க்க, காசோலைகளுடன் மீண்டும் வங்கிக்கு செல்லும் நிலை ஏற்படும். வங்கிகளின் நவீன சேவைகள், வாடிக்கையாளர் மீது கட்டண சுமையை ஏற்படுத்துகின்றன. நான் கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கியில், இணையம் மூலம் செய்யும் பண பரிமாற்றத்துக்கு, சேவை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

TNPSC group 2a பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாமல் நிரப்படவுள்ள 1863 குரூப் 2A பணியிடங்களுக்கு எழுத்து தேர்வினை அறிவித்துள்ளது. இதற்கான விளம்பர அறிவிப்பை இன்று வெளியட்டுள்ளது.

நிதி, சட்டம், வருவாய், உள்பட பல்வேறு துறைகளில் 1863 காலிப்பணியிடங்கள் உள்ளன. வழக்கமான குரூப் 2 தேர்வைப் போல மூன்று கட்டமாக இல்லாமல், எழுத்துத் தேர்வின் மூலம் நேரடியாக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளை உடையது. முதல் பிரிவில் பட்டப்படிப்பு கல்வித் தகுதி அடிப்படையிலான பொதுப் பாடங்கள் குறித்த வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான வினாக்கள் இடம்பெறும்.
இரண்டாவது பிரிவில் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திற்கான 100 வினாக்களை உள்ளடக்கியது. குரூப் 2-A தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களை காணலாம்.

விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தங்களது அடிப்படைக் கல்வி தகுதியை 10 +2 + 3 என்ற அடிப்படையில் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.
மேலும் பத்தாம் வகுப்பில் தமிழை கட்டாயம் படித்திருப்பது முக்கியம். மொத்தப் பணியிடங்களில் 20 சதவிகித இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
அனைத்துப் பணிகளுக்கும் 1.07.2015ன் படி குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதர பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
கூடுதல் விவரங்களுக்கு www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களை அணுகவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
இணைய தளம் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in இணைய தளங்களை அணுகவும்.
விண்ணப்பிக்கும் போது, புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்திருப்பது அவசியம். பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
தேர்வுக்கட்டணம் 75 ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய் சேர்த்து மொத்தம் 125 ரூபாய் செலுத்த வேண்டும். நிரந்தர பதிவெண் பெற்றவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கட்டணத்தை இணைய தளம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். இந்தியன் வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களிலும் கட்டணத்தை செலுத்த முடியும். இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்ப விவரங்களை பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணத்தை வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் செலுத்த கடைசி நாள் நவம்பர் 13ம் தேதி ஆகும்.

இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய நவம்பர் 11ம் தேதி கடைசி நாள். எழுத்துத் தேர்வு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நுழைவுச்சீட்டை தேர்வுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Sunday, October 11, 2015

உலக சிக்கன நாளை முன்னிட்டு போட்டிகள் நடத்த உத்தரவு


உலக சிக்கன நாளை முன்னிட்டு, நிதி சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகளை மாணவர்களிடம் நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; இதில், பணத்தை சிக்கனப்படுத்துவது குறித்த அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன. சர்வதேச சிறுசேமிப்பு மற்றும் சிக்கன நாள் வரும், 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும், சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நிதியை சிக்கனமாக பயன்படுத்துதல்; இந்திய ரூபாயின் உள்நாடு மற்றும் சர்வதேச மதிப்பு; வங்கிகளின் சிக்கன மற்றும் சேமிப்பு திட்டங்கள்; குடும்பங்களில் சிக்கனத்தை பேணுவது போன்ற பல தலைப்புகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படும்.

பணத்தை வீணடிக்கா மல், அதை சேமிப்பது குறித்து விளக்கம் அளிக்கவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Saturday, October 10, 2015

ஜனவரி 19 முதல் 'ஸ்டிரைக்':அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு


கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், ஜன., 19ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அவர் அளித்த பேட்டி:தமிழக அரசு துறைகளில், இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பாமல், அரசு மெத்தனம் காட்டி வருகிறது. பணிச்சுமை, மன அழுத்தம், அதிகாரிகளின் அச்சுறுத்தல் போன்றவை காரணமாக, ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும், 3.5 லட்சம் ஊழியர்களிடம், அரசு, அடக்குமுறையை கையாள்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, டிச., 22ல், முதல்வரை சந்திக்க உள்ளோம். அதற்கு பிறகும் தீர்வு கிடைக்கவில்லை எனில், வரும், ஜன., 19ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்

பல்கலை பேராசிரியர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள, அரசு பள்ளிகளில் மட்டும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக உள்ளது.

எனவே, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பலவித பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி, பல்கலை பேராசிரியர்கள் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை பல்கலை பேராசிரியர்கள் மூலம், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 300 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். வரும், 12ம் முதல், 16ம் தேதி வரை; அதன்பின், 26ம் முதல், 30ம் தேதி வரை என, இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து, மற்ற பாட ஆசிரியர்களுக்கும், தொழில்நுட்ப பல்கலைகள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.-

அரசு பள்ளிகளில் கை கழுவும் பயிற்சி


வரும் 15ம் தேதி, உலக கை கழுவும் தினத்தை ஒட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உலக கை கழுவும் தினம், வரும், 15ம் தேதி கடைபிடிக்கப்படுவதால், 'யுனிசெப்' நிறுவனத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், 'துாய்மையான பாரதம், துாய்மையான பள்ளி' என்ற அடிப்படையில், கை கழுவும் முறை, பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் சுகாதாரம் போன்றவை குறித்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தருவர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ரேஷன் கார்டுகளில் வருகிறது உள்தாள் மீண்டும் 'ஸ்மார்ட் கார்டு' இப்போதைக்கு இல்லை


ஸ்மார்ட் கார்டு'க்கு பதில், பழைய ரேஷன் கார்டுகளில் மீண்டும் உள்தாள் பயன்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், அரிசி வாங்கு வோர், சர்க்கரை வாங்குவோர், காவலர், எந்த பொருளும் வாங்காதோர் என, மொத்தம், 2.07 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன. உணவு வழங்கல் துறை சார்பில், 2005ல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம், 2009ல் நிறைவடைந்தது. அரசின் சலுகை பின், ரேஷன் கார்டில், ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டப்பட்டு, அவற்றின் செல்லத்தக்க காலம், வரும் டிசம்பர் மாதம் வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மற்ற மாநிலங்களில், ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு, தமிழகத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ஆனால், அரசின் சலுகைகளை பெற சிலர், பல முகவரியில், அதிக ரேஷன் கார்டுகளை வைத்துள்ளனர். இதனால், கூடுதல் செலவை தவிர்க்க, விழி, விரல் ரேகை பதிவுடன், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. மத்திய அரசு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு விழி, விரல் ரேகை மற்றும் புகைப்படத்துடன், 'ஆதார்' அடையாள அட்டை வழங்கி வருகிறது.

இந்த விவரங்களை, மத்திய அரசிடம் பெற்று, அதை, 'ஸ்மார்ட் கார்டு'க்கு பயன்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. இதுதவிர, ரேஷன் கடை மூலமும், மக்களிடம் இருந்து, கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தனியார் இதையடுத்து, 350 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கார்டு' ஒருங்கிணைப்பு பணிகளை, தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'டெண்டர்' கோரப்பட்டது. இதில் தேர்வான, 'ஆம்னி அகேட் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்திடம், 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் பணி, ஜனவரி மாதம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனம், 'ஸ்மார்ட் கார்டு' மென்பொருளை தயாரித்து வருகிறது.

தமிழகத்தில், அடுத்த ஆண்டு, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கினால், மக்களிடம், எதிர்ப்பு எழுவதற்கு வாய்ப்புள்ளதாக அரசு கருகிறது. இதனால், 2016ல், 'ஸ்மார்ட் கார்டு'க்கு பதில் வழக்கம் போல், ரேஷன் கார்டில் உள்தாள் பயன்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, சென்னை, தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரியலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில், 90 சதவீதத்திற் கும் மேல், 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டு உள்ளன. இதனால், முதற்கட்டமாக, அம்மாவட்டங்களில், தற்போது, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கவும், பின், மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, ரேஷன் கார்டில், கடந்த ஆண்டு ஒட்டப்பட்ட உள்தாளில், ஒரு பக்கம் காலியாக உள்ளது. அது, 2016ல் பயன்படுத்தி கொள்ளப்படும். இதற்கான, அரசாணை விரைவில் வெளியிட்டு, அந்த விவரம், உணவுத் துறை மூலம், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். தற்போது, 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தின் ஒரு பகுதியாக, ரேஷன் கடைகளில், 'பில்' போட, 'டேப்லெட்' கருவி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டங்களில், 90 சதவீதத்திற்கும் மேல், 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதனால், முதற்கட்டமாக, அந்த மாவட்டங்களில், தற்போது, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கவும், பின், மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, அரசு அறிவுறுத்தி உள்ளது

நோபல் பரிசின் நடைமுறைகள்

நோபல் பரிசின் நடைமுறைகள்

ஒரு ஆண்டுக்கான நோபல் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை அதற்கு முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கிவிடும்.

உலகெங்கும் இருக்கும் சுமார் ஆயிரம் விஞ்ஞானிகள், தலைவர்கள் உள்ளிட்டோருக்கு நோபல் பரிசுக்கான பரிந்துரைப் படிவங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்தப் படிவங்கள் அனைத்தும் மறு ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் நோபல் தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும்.

பிப்ரவரியில் பரிந்துரைப் படிவங்களின் பரிசீலனை நடைபெறும். அடுத்ததாக மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் நோபல் பரிசுக்குரியவரைத் தேர்வு செய்வது குறித்து நிபுணர்களுடன் தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள்.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பரிசுக்கானவர் குறித்து தேர்வுக்குழு தன்னுடைய பரிந்துரைப் பட்டியலைத் தயார் செய்யும். செப்டெம்பர் மாதத்தில் பரிந்துரை குறித்தப் பட்டியில் நோபல் அகாதெமியிடம் சமர்ப்பிக்கப்படும்.

அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட நாள்களில் ஒவ்வொரு துறைக்கும் பரிசுக்குரியவர்கள் தேர்வுக்குழுவினரிடன் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி இவர்களுக்கான பரிசுகள் வழங்கப்படும்.