தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில்,
1. கடந்த நான்கு ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் 14 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த நான்காண்டுகளில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும், தரமான கல்வியை வழங்கும் நோக்கிலும், மேற்குறிப்பிட்ட தேவைகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டும், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள், என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர் / விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2. அண்ணா பல்கலைக்கழகம் தற்போது பல்கலைக்கழக துறைகளை உள்ளடக்கிய 4 வளாகங்களையும், 13 உறுப்புக் கல்லூரிகளையும் மற்றும் 4 மண்டல அலுவலகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த துறைகள் மிகச் சிறப்பு வாய்ந்த வளர்ச்சி நிலைக்கு உயர்த்தப்படும். மேலும், விடுதிகள், போக்குவரத்து வசதிகள், மைய நூலகங்கள், கணினி மையங்கள், சூரிய ஒளியில் இருந்து ஆற்றல் உருவாக்கும் அமைப்புகள், ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
3. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் சிறப்புற மேற்கொள்ள ஆளில்லா வான்வெளி வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாகனம் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து மதிப்பு மிகுந்த தகவல்களை தர வல்லது. இவ்வாகனத்தின் திறன்களை பயன்படுத்தி அனுபவம் வாய்ந்த நிவாரண பணியாளர்கள் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள இயலும். அதே போல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்கள்,ஆகியவற்றை கண்காணிப்பதற்கும் இது பயனுள்ளதாக அமையும். எனவே, ஆளில்லா வான்வெளி வாகனம் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மூலம் ஆளில்லா வான்வெளி வாகனம் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படும். இத்திட்டத்திற்கென அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 20 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
4. பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்பட தரமான உட்கட்டமைப்பு வசதிகள் இருத்தல் வேண்டும். எனவே, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
5. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும் வகையில், 62 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
6. கடந்த 4 ஆண்டுகளில் 11 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாணவிகள் தொழில்நுட்பக் கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரிகளுக்குத் தேவையான ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும், கணினிகள், அறை கலன்கள், நூல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் இல்லாத இடங்களில், இத்தகைய கல்லூரிகளைத் துவங்குவதன் மூலம் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நீண்ட தூரம் பயணம் செய்து கல்வி பயிலும் நிலை தவிர்க்கப்பட்டு, அவர்கள் தொழில்நுட்பக் கல்வி பெற இயலும். பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் தொழில்நுட்பக் கல்வி பெற்று வேலைவாய்ப்பு பெற இது வழி வகுக்கும். எனவே, 5 புதிய அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
7. தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கப்படுகிறது. 1957ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரி துவங்கப்படவில்லை
Friday, September 25, 2015
5 புதிய கல்வியல் கல்லூரிகள் துவக்கப்படும்
Thursday, September 24, 2015
பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை இலவசமாக மின்னணு முறையில் டிச.,31 முன் வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாலுகா வாரியாக இதற்கான ஒருங்கிணைப்பு மையங்கள் செப்.,30க்குள் தேர்வு செய்யப்பட உள்ளன. கல்வி உதவித்தொகை, உயர்கல்விக்காக பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், பெற்றோரின் வருமானச்சான்றிதழ் ஆகிய மூவகைச்சான்றுகள் தேவைப்படுகின்றன. சில நேரங்களில் இவை தாமதமாக கிடைப்பதால் உரிய காலத்தில் சமர்ப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் தாலுகா வாரியாக ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்து டிச.,31க்கு முன் ஆறாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக இந்த மூவகை மின்னணு சான்றிதழை வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் (பொறுப்பு) கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இச்சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஒரே விண்ணப்பம் தரப்பட்டு நிரப்பி பெறப்படும். 3,000 முதல் 4,000 வரை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரின்டர், இணையதள வசதியுள்ள பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையங்களாக செப்.,30க்குள்
தேர்வு செய்யப்படும். அங்கு தலைமையாசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.தினமும் 100 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். விபரங்கள் சரிபார்க்கப்பட்டு டிச.,31க்கு முன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கு கட்டணம் கிடையாது. இதன்மூலம் தாலுகா அலுவலகத்திற்கு செல்வது தவிர்க்கப்படும். இப்பணிகள் கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் நடக்கும், என்றார்.
பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை www.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதமும், செய்முறைத் தேர்வுக்கு ரூ. 600 என்ற அளவிலும் கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை "பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை' என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையாக செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதியாகும். கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அபராதத் தொகை ரூ. 150 சேர்த்து நவம்பர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சும்மா சம்பளம் வாங்கும் ஆசிரியர் கணக்கெடுக்க அரசு உத்தரவு
அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, அரசு செலவில் வழங்கப்படும் ஊதியம் வீணாகிறது என, புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆக., 31ம் தேதி கணக்கின்படி, மாணவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்கள் பட்டியலை அனுப்ப, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், பல மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், திடீர் ஆய்வு நடத்த துவங்கியுள்ளனர். ஆய்வின் போது, பள்ளி பதிவேடு விவரத்துடன், வகுப்பறையில் இருக்கும் மாணவர் எண்ணிக்கையை ஒப்பிட்டு அறிக்கை தயார் செய்கின்றனர். போதுமான மாணவர் எண்ணிக்கையில்லாமல், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து விட்டு, பாடம் நடத்தாமல் செல்வது குறித்தும் அறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.
இந்த ஆசிரியர்கள் யார்; அவர்களுக்கு மாறுதல் வழங்கப்படுமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
சமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனியார் பள்ளிகள்
சமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டம் மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,யை பின்பற்றும் பள்ளிகளைத் தவிர, மற்ற பள்ளிகள், தமிழக அரசின் சமச்சீர் கல்வியை பின்பற்றுகின்றன.
இதில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையில், மூன்று பருவங்களாக பாடம் நடத்தப்படுகிறது. முதல் பருவத்துக்கு வரும், 26ம் தேதி தேர்வு முடிகிறது. அக்., 5ல், பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படும்.இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வினியோகம் நடந்து வருகிறது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால் மற்றும் சேவைகள் கழகம், 'ஆன் - லைன்' முறையில் பதிவு செய்து பாடப் புத்தகங்களை அனுப்புகிறது.
ஆனால், 35 சதவீத பள்ளிகள் புத்தகங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.'புத்தகங்களை வாங்க வேண்டும். தாமதமானால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி நிர்வாகங்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளன
Wednesday, September 23, 2015
தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு
தேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இந்த விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 தொடக்கப் பள்ளிகள்
தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 அரசுத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 4 ஆண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். தொடக்கப் பள்ளிகள் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ள 39 குடியிருப்புப் பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடுநிலைப் பள்ளிக்கு 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 15 பட்டதாரி ஆசிரியர்கள், புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என 78 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்தப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.11 கோடியே 67 லட்சம் செலவு ஏற்படும். புதிதாக 770 கூடுதல் வகுப்பறைகள்: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2,798 கோடியில் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
மேலும் 287 பள்ளிகளின் வகுப்பறைகள் பழுது சரிபார்க்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.56 கோடியே 53 லட்சம் செலவு ஏற்படும். பெரம்பலூர், கோவையில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்: ஆசிரியர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பெரம்பலூர், கோவை மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும். புதிதாக உருவாக்கப்பட உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 10 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 5 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் என 30 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் அதிகமாக உள்ள கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், விழுப்புரம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி பெறும் வகையில் புதிதாக ஒன்றிய ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
இந்த நிறுவனங்களில் 49 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 56 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என மொத்தம் 105 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.21 கோடியே 71 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெயில் பாடப் புத்தகங்களும், பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு உரு பெருக்கப்பட்ட அச்சு பாடப்புத்தகங்களும் வழங்கப்படும். கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்கள், சிறப்பு கவனம் செலுத்தப்படும் மாவட்டங்களில் தனி விழிப்புணர்வும், பாலினம் சார்ந்த விழிப்புணர்வும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.9 கோடி செலவிடப்படும். இந்த நிதியாண்டில் (2015-16) கோவை, மதுரை மாவட்டங்களில் புதிதாக 2 ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.6 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டடங்கள் கட்ட ரூ.1,263 கோடி: முதல்வர் அறிவிப்பு
உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளில் 896 பள்ளிகளுக்கு மட்டும் கட்டடம் கட்டுவதற்காக மத்திய அரசு 75:25 என்ற விகிதத்தில் ரூ.518 கோடி அளித்திருந்தது.
மத்திய அரசால் ஒரு பள்ளி கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட தொகை, போதுமானதாக இல்லாததால், அப்பள்ளி கட்டடங்கள் இதுநாள் வரை கட்டப்படாமலேயே உள்ளன. எனவே, மாநில அரசின் பங்களிப்புத் தொகையான ரூ.129 கோடியை விட கூடுதலான தொகையாக ரூ.996 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோன்று, மத்திய அரசின் நிதியிலிருந்து விடுபட்ட 158 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கும் ரூ.267 கோடி வழங்கப்படும். எனவே, தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலக் கணக்காயர் பராமரிப்புக்கு மாற்றம்: ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கினை மாநில கணக்காயர் அலுவலகத்தில் பராமரிக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று 31.03.2003-க்கு முன்னதாக பணி நியமனம் பெற்று, பணிபுரிபவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகள் அரசுத் தகவல் தொகுப்பு மையத்திலிருந்து, நடப்புக் கல்வியாண்டு முதல் மாநிலக் கணக்காயர் பராமரிப்பின் கீழ் கொண்டுவரப்படும். இதன்மூலம் 1 லட்சத்து 19 ஆயிரம் ஆசிரியர்கள் பயனடைவர்.
கணினிமயம்: மாணவ, மாணவியருக்கான விலையில்லாப் பொருள்களை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, சென்னை, வேலூர், பர்கூர், தஞ்சாவூர், சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் கிடங்குகள் ரூ.30 கோடியில் கணினிமயமாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
விடுமுறை நாளிலும் கட்டாய பணிபள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி
அரசு விடுமுறை நாட்களிலும், அலுவலகம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதால், ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வி அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமிழக பள்ளி கல்வித் துறையில், 20க்கும் மேற்பட்ட இயக்குனரக மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் கல்வி திட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றிலும், பள்ளிகளிலும், 15 ஆயிரம் நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த அலுவலகங்களில், சில ஆண்டுகளாக, ஓய்வு பெறுவோர், பணி மாறுதல் பெறுவோர், விருப்ப ஓய்வு பெறுவோர் மற்றும் ஏற்கனவே உள்ள காலியிடங்களில் தேவையான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தேக்கமடைந்த பணிகளைக் கவனிக்க, அரசு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஊழியர்களை அலுவலகத்துக்கு வரச் சொல்லி, அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் பல ஊழியர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளிடம் கூட ஒன்றாக இருக்க முடியாமல், மன அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னையில், இன்று பள்ளி கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாடு, எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் நடக்கிறது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பொதுச் செயலர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆவணம் சேகரித்தல், பள்ளி வாரியாக புள்ளிவிவரம் சேகரித்தல் உள்ளிட்ட பல பணிகள், ஊழியர்கள் மீது கூடுதலாக சுமத்தப்படுகின்றன. எனவே, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை கூடுதலாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விடுமுறை நாட்களில் ஊழியர்கள் அலுவலகம் வர நிர்ப்பந்திக்க கூடாது.அலுவலக பணியாளர்களின் குறைகளைத் தீர்க்க, மூன்று மாதங்களுக்கு, ஒருமுறை உயரதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். நிர்வாக மாறுதல் என்ற பெயரில் அலுவலக பணியாளர்களை விசாரணையின்றி, போதிய காரணங்களின்றி ஆணைகள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும். இதுகுறித்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசு அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்!
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, ஏழாவது சம்பள கமிஷன், விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்ய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியர்கள், பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான, சம்பள உயர்வு குறித்த அறிக்கை தயாரித்து, அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. கடைசியாக, 2006ம் ஆண்டு, ஆறாவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அரசு ஊழியர்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள் குறித்து ஆராய்ந்து, சம்பள விகிதத்தை நிர்ணயிக்கும் பரிந்துரையை தயார் செய்துள்ளனர். விரைவில் இந்த அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 55 லட்சம் ஓய்வூதியர்கள் பலனடைவர். மத்திய அரசை தொடர்ந்து, மாநில அரசுகளும், இந்த அறிக்கையின் அடிப்படையில், தேவையான சில மாற்றங்களை செய்து, மாநில அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவிக்கும் என்பதால், அறிக்கை, அரசு ஊழியர்களிடையே பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி பராமரிப்பு
வருங்கால வைப்பு நிதி பராமரிப்பு
1.6.1981 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்பட்டு வந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக ஈர்த்துக் கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுப் பணியில் இணைக்கப்பட்டனர்.
ஏற்கனவே அரசுப் பணியில் இருந்து வரும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மாநில கணக்காயர் அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசுப் பணியில் இணைக்கப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மட்டும் அரசுத் தகவல் மையத்தின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாசிரியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கினை மாநில கணக்காயர் அலுவலகத்தில், பராமரிக்க வேண்டுமென்று அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.3.2003-க்கு முன்னர் பணி நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகள் அரசு தகவல் தொகுப்பு மையத்திலிருந்து நடப்புக் கல்வி ஆண்டு முதல் மாநிலக் கணக்காயர் அவர்களின் பராமரிப்பில் கொண்டு வரப்படும். இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் ஆசிரியர்கள் பயனடைவர் .