Friday, September 18, 2015
Thursday, September 17, 2015
அனைத்து சத்துணவு மையங்களுக்கும்டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு
தமிழகத்தில் அனைத்து சத்துணவு மையங்களும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது.சத்துணவு மையங்களில் விறகு அடுப்புகளால் சமையலர், உதவியாளர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சத்துணவு மையங்களில் 'காஸ்' இணைப்பு பெறப்பட்டு வருகிறது. இதற்கான தொகை முதற்கட்டமாக சமூகநலத்துறை மூலம் வழங்கப்பட்டது. அதன்பின் நிறுத்தப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழகத்தில் உள்ள 42,619 மையங்களில் 40 சதவீதம் மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து விடுப்பட்ட அனைத்து மையங்களிலும் இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு இணைப்புக்கும் ரூ.22,300 ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அடுப்பு, 'டியூப்,' மேடை அமைத்தல் போன்றவற்றிற்காக ரூ.16,400 ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான 'டெண்டர்' ஒன்றிய அளவில் விடப்பட உள்ளன. மீதத்தொகையில் 'காஸ்' இணைப்புக்கான 'டிபாசிட்' செலுத்தப்படும்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அருணாச்சலம் கூறுகையில், “திண்டுக்கல் மாவட்டத்தில் 1,351 மையங்களில் 624 ல் 'காஸ்' இணைப்பு உள்ளன. மீதமுள்ள மையங்களுக்கு விரைவில் இணைப்பு பெறப்படும்,” என்றார்.
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: பேனா கொண்டு வர தடை
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான, மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்), 20ம் தேதி நடக்கிறது; மூன்று லட்சம் பேர் எழுதுகின்றனர். மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையான ஆசிரியர் பணியில் சேர, முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை சேர, இரண்டாம் தாளையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை, மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப் படுகிறது.தேர்வு முடிவு வெளியான தேதியிலிருந்து, ஏழு ஆண்டுக்கு இந்தச் சான்றிதழ் செல்லும்.
நடப்பு ஆண்டின் முதல் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. இரண்டாவது தேர்வு வரும், 20ம் தேதி நடக்கிறது. சி.பி.எஸ்.இ., அறிவிப்புநாடு முழுவதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். இந்தியாவில், 77 மையங்களிலும், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில், சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்தாள் பிற்பகல், 2:30 மணி முதல், 4 மணி வரையிலும், இரண்டாம் தாள் காலை, 9:30 மணி முதல் நண்பகல், 12மணி வரையிலும் நடக்கும்.
தேர்வு துவங்குவதற்கு, 90 நிமிடங்களுக்கு முன் வந்து விட வேண்டும்; தேர்வு எழுதுவதற்காக நீல மை பேனா வழங்கப்படும்; கணினி வழி ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் மட்டுமே எழுத வேண்டும்; தேர்வர்கள் தங்களுடன் பேனா உட்பட, எந்தப் பொருளும் கொண்டு வரக் கூடாது; தேர்வு நேரம் முடிவதற்கு முன், வெளியில் செல்லவும் அனுமதியில்லை. இவ்வாறு சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது
Wednesday, September 16, 2015
ஆசிரியர் தேர்வு மூலம் நலத்துறை பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்பப்படும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், மொத்தம் உள்ள 8 ஆயிரத்து 34 ஆசிரியர் பணியிடங்களில், காலியாக உள்ள 858 ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tuesday, September 15, 2015
சுருக்க முறை திருத்தம்: கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சுருக்க முறை திருத்தப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
நகர்-ஊரமைப்புத் துறை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார்-மதுரை. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர்-தலைமை செயல் இயக்குநர் எஸ்.நாகராஜன்-விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர். வேலைவாய்ப்பு-பயிற்சித் துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி-அரியலூர், பெரம்பலூர், திருச்சி. மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலாளர் அணில் மேஷ்ராம்-தஞ்சாவூர், திருவாரூர். தொல்லியல்-வரலாற்று ஆராய்ச்சிப் பிரிவு ஆணையாளர் எம்.ஏ.சித்திக்-நாமக்கல், கரூர். கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் டி.என்.வெங்கடேஷ்-திண்டுக்கல், தேனி, விருதுநகர். மாநில மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையாளர் கே.மணிவாசன்-ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு உறுப்பினர் செயலாளர் ஏ.கார்த்திக்-காஞ்சிபுரம். அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி-திருவள்ளூர். பூம்புகார் கப்பல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர ரத்னு-கோவை. நில அளவை-நிலவரித் திட்ட ஆணையாளர் ஆர்.வாசுகி-கடலூர், நாகப்பட்டினம்.
தொழில் துறை கூடுதல் செயலாளர் எம்.எஸ்.சண்முகம்-தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம். சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் ஆர்.லால்வேனா-நீலகிரி, திருப்பூர், ஈரோடு. தொழில்-வணிகத் துறை கூடுதல் ஆணையாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர்-தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன்-சென்னை.
பி.எட்., தரவரிசை பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கிறது. அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்லுாரி, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.
மொத்தமுள்ள, 1,800 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 7,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. மதிப்பெண்ணுக்கு ஏற்ப, 'வெயிட்டேஜ்' முறையில், தரம் நிர்ணயிக்கப்படுகிறது. தரவரிசை பட்டியல், 18ம் தேதி வெளியிடப்படும் என, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.
Monday, September 14, 2015
Sunday, September 13, 2015
பிஎட் படிப்புக்கான பாடத்திட்டம் வெளியீடு
பிஎட், எம்எட் கல்வியியல் பயிற்சி பட்டப்படிப்புகள் இதுவரை ஓராண்டாக இருந்தது. இந்த ஆண்டு முதல், இந்த படிப்புகளை இரண்டாண்டு பட்டப்படிப்புகளாக மாற்றி, மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, தமிழகத்தில் சுயநிதி கல்லூரிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை நவ. 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிஎட் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மேலும், அதற்கான பாடத்திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.
அதில், யோகா உட்பட மூன்று கட்டாயப் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. எஞ்சியுள்ள 33 பாடங்களில் தமிழ், ஆங்கிலம், உயிரியல், அமைதி மற்றும் சுற்றுச்சூழல், கணிதம், கணினி அறிவியல், ப்ளே ஸ்கூல் கல்வி போன்ற பாடங்கள் இடம் பெற்றுள்ளன. கணினி அறிவியலில் புதிதாக மூன்று செயலிகள் (ஆப்ஸ்) கண்டுபிடிப்பது செய்முறையில் சேர்க்கப்பட்டுள்ளது. செப். 28 முதல் பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வு நடக்க உள்ளது. பிஇ, பிடெக் பட்டம் பெற்றவர்களும், பிஎட் படிப்பில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பயிற்சி
தேர்வு நேரத்தில் தொடர் பயிற்சி ஆசிரியர் கூட்டணி கண்டனம்
தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது, மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக, தமிழ்நாடு ரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 19ல் முதல் பருவ தேர்வு துவங்குகிறது; தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவ, மாணவியருக்கு தர வேண்டிய சூழலில், ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ஏ., சார்பில், கணித உபகரண பயிற்சி, 9, 10, 11ம் தேதிகளில் நடத்தப்பட்டது; இரண்டாம் கட்டமாக, 14, 15, 16ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15, 16, 18ம் தேதிகளிலும், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15ம் தேதியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிகளில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுகின்றனர்; சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களே பள்ளியில் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது.
எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆண்டுக்கு, 20 நாட்கள் தர வேண்டிய பயிற்சியை, ஒரே சமயத்தில் பருவ தேர்வு நேரத்தில் அவசரமாக அளிப்பது, கேள்விக்குறியாக உள்ளது; இதனால், பள்ளி களில் ஆசிரியர் பணியை பாதிக்கிறது. முதல் பருவ தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது, மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Saturday, September 12, 2015
வாசிக்க ஒரு இணைய தளம்
இது கொஞ்சம் விநோதமான இணையதளம். இப்போது என்ன வாசிக்கலாம் எனப் பரிந்துரைக்கிறது இந்தத் தளம் (readpoopfiction). சிலருக்குக் கழிவறையில் அமர்ந்திருக்கும்போது ஏதாவது படிக்கும் பழக்கம் இருக்கிறது. இந்தப் பிரிவினர், படிப்பதற்கு ஏற்ற கதைகளை இந்தத் தளம் முன்வைக்கிறது. 2 நிமிடங்களில், 3 நிமிடங்களில், 4 நிமிடங்களில் படிக்கக் கூடிய குறுங்கதை, சிறிய கதை போன்றவற்றைத் தேடலாம். அதற்கு மேல் படிக்கக் கூடிய கதை என்றால் கால அளவைக் குறிப்பிட்டுத் தேடலாம்.
அந்த இடத்தில் படிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம், நல்ல கதைகளை வாசிக்க இந்தத் தளத்தின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கதைகள் ஆங்கிலத்தில் இருப்பது மட்டுமே சின்னக் குறை.
இணையதள முகவரி: http://readpoopfiction.com
Friday, September 11, 2015
Regular b.ed counsling dates
பி.எட் கலந்தாய்வு செப் 28ல் தொடங்குகிறது
16ம் தேதி முதல் அழைப்புக்கடிதம் அனுப்பப்படும்
அட்டவணை
செப்.28-உடல் ஊனமுற்றோர்,முன்னாள் ராணுவத்தினர்
செப்29,-கணிதம்
செப்30-இயற்பியல்,வேதியியல்
அக் 1-தாவரவியல்,விலங்கியல்
அக் 3-தமிழ்,ஆங்கிலம்,கணினி அறிவியல்
அக் 5- வரலாறு,புவியியல்,வணிகவியல்,
பொருளாதாரம்,மனையியல்
கலந்தாய்வு மொத்த இடம் -1777
ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கோரிக்கை மனுவிற்கு தொடக்கக்கல்வி இயக்குனரின் பதில்
Name P.SIVAKUMAR
Petition No 2015/843312/EP Petition Date 07/09/2015
Address ,,,Vallimathuram,Titagudi,Cuddalore-,Tamilnadu
Grievance வணக்கம்.அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு கட்டங்களாக இடமாறுதல் கலந்தாய்வு நடைப்பெற்றது.வட மாவட்டங்களில் பணியாற்றும் தென்மாவட்ட ஆசிரியர்கள் மாவட்ட இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இடமாறுதலும் பெற்றனர்.அவர்களில் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணிவிடுவிப்பு செய்யப்பட்டு அவர்கள் விருப்ப மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்றுக்கொண்டனர்.
ஆனால் மாவட்ட மாறுதல் ஆணை பெற்ற ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி விடுவிப்பு ஆணை வழங்கப்பட்டாததால் இடமாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்க முடியாத சூழல் நிலவுகிறது.சொந்த மாவட்டத்திலிருந்து வெகு தூர மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு மாவட்ட மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் விருப்ப மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்கும் வகையில் உடனடியாக பணி விடுவிப்பு ஆணை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டுமாய் பணிவுடன் மாவட்ட மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். கேட்டுக்கொள்கிறோம்
Grievance Category SERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYME Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - ELE.EDN DIR
Reply அரசு விதிகளின்படி ஈராசிரியர் பள்ளிகளின் பதிலி ஆசிரியர் பணி ஏற்கும் வரை பணிவிடுப்பு செய்ய இயலாது என தெரிவிக்கலாகிறது. இவ்வலுவலக ந.க.எண்.185/அ6/2015 நாள்.11.09.2015
கடந்த 4 ஆண்டுகளில் 277 மெட்ரிக். பள்ளிகளுக்கு அனுமதி
கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 277 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், மெட்ரிக். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 11 லட்சம் அதிகரித்துள்ளது. கடந்த 2011-12 கல்வியாண்டில் தமிழகத்தில் 3,769 மெட்ரிக். பள்ளிகள் இருந்தன. இவற்றில் 25 லட்சத்து 55 ஆயிரத்து 625 மாணவர்கள் படித்து வந்தனர். இந்த எண்ணிக்கை 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் 2014-15 ஆண்டு நிலவரப்படி, 36 லட்சத்து 56 ஆயிரத்து 317 பேர் படிக்கின்றனர். இதில், 2014-15 கல்வியாண்டில் மட்டும் 156 புதிய மெட்ரிக். பள்ளிகளுக்கும், 195 மெட்ரிக். பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு தாற்காலிக அங்கீகாரமும், அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரமும் வழங்கப்படுகின்றன. நிகழ் கல்வியாண்டில் (2015-16) அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை டிசம்பரில்தான் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி கடன் வட்டி சலுகை: இறுதி நாள் எதுவரை?
கல்வி கடன் வட்டி சலுகையை, 2014 - 15ல், கடன் பெற்றவர்கள் செப்., 15ம் தேதிக்குள்ளும்; 2009 - 2014 வரை கடன் பெற்றவர்கள், அக்., 10ம் தேதிக்குள்ளும் பெற வேண்டும்.'இந்த இறுதி வாய்ப்பை தவறவிட்டால், வட்டிச் சலுகையை பெற முடியாது' என, இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. கோரிக்கை: வங்கிகள் அளிக்கும் கல்வி கடனுக்கு, வட்டிச் சலுகை அளிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த காலங்களில், வட்டிச் சலுகை பெறுவதில் பெரும் குழப்பம் நிலவியது. பல மாணவர்களுக்கு முழுமையாக வட்டிச் சலுகை கிடைக்கவில்லை.
'அரசு அறிவித்த வட்டிச் சலுகையை மாணவர்களுக்கு முழுமையாக அளிக்க வேண்டும்' என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதையேற்று, '2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரையில், கல்வி கடன் பெற்றோருக்கு, வட்டிச் சலுகை அளிக்க வேண்டும்' என, இந்தியன் வங்கிகள் சங்கத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டது.இந்த கோரிக்கையை ஏற்று, வட்டிச் சலுகை அளிப்பதற்கான சுற்றறிக்கையை கடந்த மாதம், 26ம் தேதி, இந்திய வங்கிகள் சங்கம் வங்கிகளுக்கு அனுப்பியது. இதில், முன்னோடி வங்கியான கனரா வங்கிக்கு, வட்டிச் சலுகை விவரங்களை, பிற வங்கிகள் அளிக்க வேண்டும். இவற்றைத் தொகுத்து, மத்திய அரசுக்கு கனரா வங்கி அளிக்கும். இதன்பின், வங்கிகள் அளித்த வட்டிச் சலுகையை, மத்திய அரசு, வங்கிகளுக்கு திருப்பி அளிக்கும். வட்டிச் சலுகையை தொகுத்து, கனரா வங்கிக்கு அளிக்க வேண்டிய இறுதி நாளையும், வங்கிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்வி கடன் பெற்றவர்களுக்கான, வட்டிச் சலுகை விவரங்களை, அக்., 10ம் தேதிக்குள்ளும்; 2014 - 15ல் கடன் பெற்றவர்களுக்கான வட்டிச் சலுகை விவரங்களை வரும், 15ம் தேதிக்குள்ளும், கனரா வங்கிக்கு வங்கிகள் அளிக்க வேண்டும். மாணவர்கள் வட்டிச் சலுகை பெற, இது தான் கடைசி நாள். இதுகுறித்து, கல்வி ஆலோசனை குழு அமைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:'வட்டி சலுகை அளிப்பதற்கான இந்தியன் வங்கிகள் சங்கத்தின் சுற்றறிக்கை பல வங்கி கிளைகளுக்கு செல்லவில்லை' என, புகார் எழுந்தது. தொடர் வற்புறுத்தலுக்கு பின், அந்த சுற்றறிக்கை வங்கி கிளைகளுக்கு சென்று விட்டதாக, சில வங்கி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. உரிமை உண்டு: கல்வி கடன் வட்டிச் சலுகை பெற, தங்களின் கணக்கு விவரங்கள் கனரா வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதை, வங்கி கிளைகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். வட்டி சலுகை பெற, விண்ணப்பங்களையும் அளிக்கலாம்.
இதற்கான உரிமை, மாணவர்களுக்கு உண்டு. தகவல் தெரிவிக்க மறுக்கும் வங்கி கிளைகள் குறித்து, சம்பந்தப்பட்ட வங்கித் தலைவர் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துக்கு புகார் செய்யலாம். தொழிற்கல்வி படிப்புக்கு...: கல்வி கடன் வட்டிச் சலுகை பெற, தொழிற்கல்வி படிப்புகளுக்கு, கடன் பெற்றிருக்க வேண்டும்; இந்திய வங்கிகள் சங்க கல்வி கடன் திட்டத்தின் கீழ், இந்தியாவில் படிக்க கடன் வாங்கியிருக்க வேண்டும்; பெற்றோரின் ஆண்டு வருமானம், 4.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
25 வயதுக்கு பின் வாக்காளராககேள்விக்கு பதில் சொல்லணும்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 25 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தால், 'இதற்கு முன் ஏன் விண்ணப்பிக்கவில்லை' என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில், 2016 ஜன., ௧ம் தேதி, 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக விண்ணப்பிக்கும், 18 - 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர, மற்றவர்கள் அவர்களின் முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், ஆகியவற்றை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
இருப்பிட மாற்றம் செய்யாமல் இருந்தாலும் கூட, இப்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவு; முன்னர் பெயர் சேர்க்க, விண்ணப்பிக்க இயலாத காரணம் அல்லது இப்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் விடுபட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்கள் படிவம் ஆறில், பாகம் நான்கை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம். இதுகுறித்து, தேர்தல் அதிகாரி கூறியதாவது:வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், பதிவாகி உள்ள பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் வாக்காளர்கள், முகவரி மாறி செல்லும்போது, ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்காமல், புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர்.
இதனால், இரண்டு இடங்களில், அவர்களின் பெயர் பதிவாகிறது. இதை தவிர்க்க, 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடம், 'ஏன் இதுவரை பெயர் சேர்க்க வில்லை' என, விளக்கம் கேட்கப்படுகிறது. ஏற்கனவே வேறு முகவரியில் பெயர் இருந்தால், படிவம் நான்கை பூர்த்தி செய்து தரும்போது, தானாக வேறு இடத்தில் உள்ள, அவர்களின் பெயர் நீக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வருங்கால வைப்பு நிதி புகார்களுக்குத் தீர்வுகாண புதிய திட்டம்
தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஒ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற பெயரில் புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இதன்படி, மாதம்தோறும் 10 ஆம் தேதி சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறும்.
அன்றைய தினம் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணப்படும். இத்திட்டத்தின்படி, இம்மாதத்துக்கான குறைதீர்வு முகாம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வருங்கால வைப்பு நிதி தொடர்பான அனைத்துப் புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.