இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, August 23, 2015

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரேசன் கார்டு கட்டாயம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ரேஷன் அட்டை நகல்களை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2016ல் தொடங்க உள்ளது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான சான்றுகள் தயாரிக்கும்போது அதில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருக்க பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதற்கான படிவங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்டு அதை பெற்றோரே நேரில் வந்து பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும், தேர்வு எழுத உள்ள மாணவரின் பெயர் ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருந்தால் அதையும் கொண்டு வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகம் முழுவதும், பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. ரேஷன் அட்டை கொண்டு வந்து அதன் நகல் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், ரேஷன் அட்டையின் எண்ணை கணினியில் பதிவு செய்து கொள்ளுவார்கள்.

அத்துடன் மாணவரின் தேர்வு விவரங்களும் அதில் பதிவு செய்யப்படும். அப்படி செய்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியான ஒரு வாரத்தில் ஆன்லைன் மூலம் அந்தந்த மாணவர்களின் ரேஷன் எண்களை ஆன்லைன் மூலம் வருவாய் துறைக்கு அனுப்பி சாதிச் சான்று, வருவாய் சான்று, இருப்பிட சான்று ஆகியவற்றை பள்ளிகளே பெற்றுத் தரும். தவிரவும், பொதுத் தேர்வுக்கு பிறகு அதே ரேஷன் அட்டை எண்ணைப் பயன்படுத்தி அந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவையும் பள்ளிகளில் செய்து கொடுப்பார்கள் என்றனர். இது குறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது, ‘ சில பெற்றோரிடம் ரேஷன் கார்ட் இல்லை. சில இடங்களில் ரேஷன் அட்டையில் மாணவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

எனவே, எந்த அடிப்படையில் ரேஷன் கார்டை தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருகின்றனர் என தெரியவில்லை என்றனர். இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: ரேஷன் அட்டையின் நகல்களை இப்போது வாங்கி வைத்துக் கொள்வோம். தேர்வுக்கு பிறகு ஆன்லைனில் ரேஷன் எண்ணை கணினியில் பதிவு செய்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு செய்வோம். இதனால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, தமிழக எல்லையோரங்களில் இருக்கும் அண்மை மாநில மாணவர்கள் தமிழகத்தில் படித்து அவர்களின் ரேஷன் அட்டைகள் வேறு மாநிலத்தில் இருந்தால் அந்த வகை மாணவர்கள் தமிழகத்தில்வேலை வாய்ப்பு பதிவு செய்ய முடியாது. வெளி மாநிலத்தில் அந்த மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தால் தமிழகத்தில் அவர்களுக்கு மற்ற பிரிவினர் என்றுதான் சான்று தருவார்கள். ஆனால் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அதே பிரிவிலேயே வழங்குவார்கள். எனவே ரேஷன் அட்டை முக்கியமாக வேண்டும். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

24-8-15 Dinamani news

Dinamani.news

பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஆசிரியர் கூட்டணி முடிவு

செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பது என ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூர் கே.ஆர்.சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணசாமி, பொறுப்பாளர் அருள்ஜோதி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் மலர்விழி சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை முற்றிலும் நீக்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை பங்கு விற்பனை, தொழிலாளர் விரோதச் சட்டங்கள், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதற்கு எதிர்ப்பு, கல்வி உரிமைச் சட்டம், மானியம் ரத்து உள்ளிட்டவற்றால் சாமானிய ஏழை மக்களும், அரசு ஊழியர்களும் கடுமையாய் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளதோடு, தேசிய பசுமைப் படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சந்தைகள், கடைகள், வணிக வளாகங்களில், பிளாஸ்டிக் பைகள், 'யூஸ் அன்ட் த்ரோ' பொருட்கள், அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளாகத் தேங்கி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. கழிவுநீர், மழைநீர் சேகரிப்பு குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதுடன், பல இடங்களில் நீர் நிலைகளையும் மாசு படுத்துகின்றன.

எனவே, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசுத்துறைகளும் வலியுறுத்துகின்றன. இந்நிலையில், சென்னை யில் உள்ள பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை தடை விதித்து உள்ளது.சென்னை முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, மாவட்ட கல்வி அதிகாரிகள் வாயிலாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன் விவரம்:பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், ஆபத்துகள் குறித்து, மாணவி, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில், துணிப்பை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.'துணிப்பையை கையில் எடுப்போம்; பிளாஸ்டிக் பையை கைவிடுவோம்' என்ற செய்தியை, பள்ளி பிரார்த்தனைக் கூட்டத் தில் தெரிவிக்க வேண்டும்.மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளிகளில், 'எக்கோ க்ளப்' சுற்றுச்சூழல் மன்ற ங்கள், 'நேஷனல் க்ரீன் கமிட்டி' என்ற தேசிய பசுமைப் படை அமைக்க வேண்டும்.பேச்சு, கட்டுரை, வினாடி வினா, ஓவிய போட்டிகள், விவாதம், நாடகம், கண்காட்சிகள் நடத்தி, பிளாஸ்டிக்கின் அபாயம் மற்றும் மறுசுழற்சி முறை குறித்து, மாணவர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அறியச் செய்ய வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு

பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, கூடுதலாக தேவைப்படும் மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை மத்திய அரசு வழங்க மறுப்பதால், மாநிலங்களின் மதிய உணவு திட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், பல நேரங்களில், மானிய சிலிண்டர் மட்டும் உணவு தயாரிக்க போதுமானதாக இருப்பதில்லை. இதனால், சந்தை விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன.அவற்றிற்கான பணத்தை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு திரும்ப வழங்கி வந்தது.

கடந்த ஏப்ரல் முதல், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், 'மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை தர முடியாது' என தெரிவிக்கப்பட்டது. செலவினங்களை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, மாணவர்களுக்கு போதுமான உணவு தயாரிக்க முடியாத நிலையை ஏற் படுத்தி விடுவ தால், உன்னதமான மதிய உணவு திட்டம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, மாநில அரசுகள் கருதுகின்றன.இதுகுறித்து, அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் அருண் ஜெட்லி தலைமையிலான நிதித் துறைக்கு கடிதம் எழுத மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

மதிய உணவு திட்டம் :

* நாடு முழுவதும், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 10 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

* இதற்கான செலவில், 90 சதவீதத்தை, வட கிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. பிற மாநிலங்களுக்கு, 75 சதவீத செலவுத்தொகையை வழங்குகிறது.

* 2014 - 15ல், 13 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. நடப்பு நிதியாண்டில், 9,000 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது. மதிய உணவு திட்டத்தில், பீகாரில், 1.38 கோடி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் திறம்பட நடத்தி வருகிறோம். இந்நிலையில், மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை வழங்க மத்திய அரசு மறுப்பதால், மாற்று முறைகளை நாட வேண்டியிருக்கும். அதனால் குழப்பங்கள் ஏற்படும். பி.கே.ஷாஹி கல்வி அமைச்சர், பீகார்

படிப்பு காலம் 2 ஆண்டுகளாக அதிகரித்ததால் பி.எட் கல்வி கட்டணத்தை.உயர்த்த முடிவு

படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக அதிகரித்ததால் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். கல்வி கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு

  
பி.எட்., எம்.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அப்படிப்புகளுக் கான கல்விக்கட்டணத்தை திருத்தி யமைக்க நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய்துள்ளது.

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும் கல்விக்கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான தனியார் சுயநிதி தொழில்கல்வி கல்லூரிகள் கட்டண நிர்ணயக்குழு கட்டணத்தை முடிவு செய்கிறது. அந்த வகையில், 2014-2015-ம் கல்வி ஆண்டில் பி.எட்., படிப்புக்கு தேசிய தர மதிப்பீட்டுக் கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கு ரூ.46,500 ஆகவும், மற்ற கல்லூரிகளுக்கு ரூ.41,500 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எம்.எட்., படிப்புக்கு கட்டணம் ரூ.47,500 ஆகும்.

இந்த ஆண்டு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) உத்தரவின்படி தமிழ்நாட்டில் 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் தனியார் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். உள்ளிட்ட படிப்புகளுக் கான கல்விக் கட்டணத்தை திருத்தி யமைக்க நீதிபதி பாலசுப்பிர மணியன் கமிட்டி முடிவுசெய் துள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தேவையான ஆவணங்களுடன் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப் பிக்குமாறு அனைத்து தனியார் சுயநிதி ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களின் முதல்வர் களுக்கும் நீதிபதி பாலசுப்பிரமணி யன் கமிட்டி உத்தரவு பிறப் பித்துள்ளது. அவர்களின் கருத்து கள் கிடைக்கப்பெற்ற பின்னர் கல்லூரி நிர்வாகிகளிடம் கல்விக் கட்டணத்தை திருத்தியமைப்பது தொடர்பாக விரைவில் ஆலோ சனை நடத்தப்படும் என்று கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, August 21, 2015

தத்கால் ரயில் முன்பதிவில் புதிய மாற்றம்: அடையாளச் சான்று இனி வேண்டாம்

தத்கால் ரயில் பயணச் சீட்டு முன்பதிவில் புதிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, இனி தத்கால் முன்பதிவு பயணச் சீட்டு பெறும்போது அடையாளச் சான்று நகலை சமர்ப்பிக்க தேவையில்லை. அதேபோல, இணையத்தில் முன்பதிவு செய்யும் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பயணத்தின்போது அசல் அடையாள சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில் நிலையக் கவுன்ட்டர்களில் தத்கால் முன்பதிவின்போது, அடையாளச் சான்று நகலை இணைப்பது வழக்கமாக இருந்தது.

இனி, தத்கால் முன்பதிவு பயணச் சீட்டு பெறும்போது அதை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், தத்கால் முன்பதிவில் சமர்ப்பிக்கும் அடையாள அட்டையைத்தான் பயணத்தின் போதும் காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறைக்குப் பதிலாக, இப்போது பிற அடையாள அட்டையைக் காண்பிக்கலாம். 30 சதவீதம்: ரயில்களில் முன்பதிவு செய்யும்போது, 30 சதவீத பயணச் சீட்டுகள் தத்கால் முன்பதிவுக்கு ஒதுக்கப்படுகின்றன. பயண தேதிக்கு, ஒரு நாளுக்கு முன், ரயில் நிலைய முன்பதிவு மையங்கள், இணையதளத்தின் மூலம் தத்கால் முன்பதிவு செய்து கொள்ளலாம். அப்போது சமர்ப்பிக்கும் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை, பயணத்தின்போதும் எடுத்துச் செல்ல வேண்டும். பிற அடையாள அட்டை காண்பித்தால், பயணச் சீட்டு பரிசோதகர் ஏற்பதில்லை. இதனால், பல நேரங்களில் பயணிகள், அபராதம் செலுத்த வேண்டி இருந்தது. இப்போது மாற்று வசதியாக, தத்கல் முன்பதிவின்போது சமர்ப்பிக்கும் அடையாள அட்டையின்றி, புகைப்படத்துடன்கூடிய வேறு அடையாள அட்டை கொண்டு பயணிக்கும் வசதியை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

என்னென்ன அடையாள அட்டைகள்?: வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு வழங்கும் புகைப்படத்துன்கூடிய அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லுôரி அடையாள அட்டை, தேசிய வங்கி கணக்குப் புத்தகம், புகைப்படத்துடன்கூடிய கிரெடிட் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட, 10 வகையான அடையாள அட்டைகளைக் காண்பித்து பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி

தமிழக அரசு தொடக்கப் பள்ளித் துறையில், கலந்தாய்வு மூலம், 1,390 ஆசிரியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு, பல கட்டங்களாக நடக்கிறது. இதில், 230 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 376 பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 105 பட்டதாரி ஆசிரியர், 108 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதேபோல், 145 பட்டதாரி ஆசிரியர், 426 இடைநிலை ஆசிரியர், தொடக்கப் பள்ளிகளின், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பணி நிரவலில் குளறுபடி: தொடக்கக் கல்வியில் மாணவர் குறைவாக இருக்கும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாற்றும் கலந்தாய்வில், பல குளறுபடிகள் நடந்துள்ளன. இந்த பணி நிரவலில், பல பள்ளிகள் போலி மாணவர் எண்ணிக்கையைக் காட்டி, இடமாறுதலை தவிர்த்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்னையால், கோவை மாவட்டம், சூலுார் வட்டத்தில் நடந்த கலந்தாய்வு, சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆசிரியர் கூறும் மாணவர் எண்ணிக்கை, பள்ளிகளில் உண்மையில் உள்ளதா என, அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதன் பிறகே, ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை?

மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில், மதுவிலக்கு அமல் செய்யக்கோரியும், வேறு காரணங்களை முன் வைத்தும் நடத்தப்படும் போராட்டங்களில், அரசியல் கட்சிகள், நலச்சங்கங்கள், சமூக ஆர்வலர்களுடன், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பங்கேற்பது வழக்கமாகி விட்டது.

போராட்டங்களில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, பள்ளி மாணவர்கள், போராட்டங்களில் பங்கேற்க தடை விதித்தும், மீறி பங்கேற்றால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்துள்ளார். பள்ளிகளில் நடக்கும் இறைவணக்க கூட்டங்களில், மாணவர்களுக்கு தகுந்த முறையில் அறிவுரை வழங்கும்படியும், இயக்குனரது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'மதுவிலக்கு உள்ளிட்ட போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்றால், அவர்கள் மனதில் எதிர்மறை சிந்தனைகள் எழும் என்பதாலும், பாதுகாப்பு கருதியும், போராட்டங்களில் பங்கேற்காத வகையில் அறிவுரை வழங்கும்படி கூறியுள்ளனர்' என்றார்.

மேலும், அவர், 'பெற்றோர் அனுமதியின் பேரில் மாணவர்கள் பங்கேற்றால், தலைமையாசிரியர்கள் எவ்வாறு பொறுப்பேற்க இயலும்? அறிவுரைகள் மட்டுமே வழங்க முடியும். போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்றால், தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது ஏற்புடையதல்ல' என, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

14,500 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல்

அரசு பள்ளிகளில் பணிபுரியும், 14 ஆயிரத்து 500 சிறப்பு ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்கள்:அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கைவினை, உடற்கல்வி போன்ற சிறப்பு பாடங்களுக்கு, 4,000 நிரந்தர ஆசிரியர்கள்; 15 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில், சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு தகுதி தேர்வு நடத்தி, அதன்படி பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான தேர்வு பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டது.

அதனால், இந்த ஆசிரியர்கள் எப்போது வேண்டுமானாலும், தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, பணி வரன்முறை செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.இருந்தும், தேர்வு நடந்தால், தங்களது பணி பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில், பல சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர். அனைவருக்கும் கல்வி:இந்நிலையில், சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம், பணியிட மாறுதல் வழங்க, பள்ளிக்கல்வியின் கீழ் இயங்கும், மாநில அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

பணி நிரவலுக்கான ஆசிரியர் பட்டியலை, வரும், 28ம் தேதிக்குள் தயார் செய்து அனுப்ப, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Thursday, August 20, 2015

மாணவர்களிடம் ஆதார் எண் கேட்காதீர் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்களிடம் ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான உதவித்தொகை, 9ம் வகுப்பு எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவு மாணவிகளுக்கான உதவித்தொகை, தேசிய வருவாய் திறன்வழித்தேர்வு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை என மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அதற்கு மாணவர்கள் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்கான புகைப்படம் எடுத்துவருகின்றனர். இந்நிலையில் ரேஷன், காஸ்,மண்ணெண்ணெய் வினியோகம் தவிர்த்து பிற அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களிடம் ஆதார் எண் கேட்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி உதவித்தொகை வழங்க மாணவர்களின் வங்கி கணக்கு எண் பெற்றால் போதுமானது.

ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லை என்ற காரணத்திற்காக லேப்டாப் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,”என்றார்.

23ல் சிவில் சர்வீசஸ் தேர்வு 9.5 லட்சம் பேர் பதிவு

ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பதவிகளுக்கான, 1,129 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு வரும், 23ம் தேதி நடக்கிறது. இதில், 9.5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு, நாடு முழுவதும், 71 நகரங்களில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் வேலுாரில் நடக்கிறது. புதுச்சேரியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. காலையில், இரண்டு மணிநேரம், முதல் தாள்; பிற்பகலில், இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்படும். இரண்டாம் தாளில், கட்டாயம், 33 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மதிப்பெண் அடிப்படையில் மெயின் தேர்வு எழுத முடியும். இரண்டு தாள்களிலும், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம்பெறும். வினாத்தாள், ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். இந்த தேர்வில், தவறான விடைக்கு, 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு. அதாவது, மூன்று தவறான விடைக்கு, ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். அல்லது ஒரு தவறான விடைக்கு, 0.33 மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வு அறைக்குள் விடைத்தாள் வைப்பதற்கான அட்டை மற்றும் பேனா தவிர, வேறு எந்த பொருளையும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளி கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இது, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற, நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான குழு மூலம், பள்ளிகளின் கட்டமைப்புகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி வாரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை, தமிழக அரசின் இணையதளத்தில் (http://www.tn.gov.in/) பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. மாவட்ட வாரியாக உள்ள பள்ளிகளில், வகுப்பு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

2வது 4வது சனிக்கிழமைகளில் இனி வங்கி விடுமுறை

வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி சாய்த்த மத்திய அரசு, செப்., 1ம் தேதி முதல், மாதந்தோறும் 2வது, 4வது சனிக்கிழமையில் வங்கிக்கு விடுமுறை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பொதுத்துறை, தனியார் வங்கிகள், அனைத்து சனிக்கிழமைகளிலும் அரைநாள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கல்விக்கடன் விண்ணப்பத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

மாணவர்களின் கல்விக் கடனுக்காக விசேஷ இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம், ஐந்து வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும்; எந்த வங்கி கடன் தரத் தயாராக உள்ளதோ, அது குறித்த விவரமும், இந்த இணையதளத்தில் வெளியாகும்.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்லிமென்டில் தாக்கல் செய்து பேசிய, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'மாணவர்களின் நிதித் தேவை, கல்வி உதவித்தொகை போன்றவற்றிற்காக விசேஷமான தகவல் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஆணையம் அமைக்கப்படும்' என்றார். அதன் ஒரு விளைவாக, www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தை மத்திய நிதித்துறை, சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ., வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய, ஐந்து வங்கிகளுக்கு, கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்க முடியும். அதற்கான விண்ணப்பம், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, வங்கிக் கடன் விவரம் போன்ற அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த ஐந்து வங்கிகளுடன், மேலும், 13 வங்கிகள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளன. விரைவில் அனைத்து வங்கிகளும் இந்த இணையதளத்தில் சேரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.