படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக அதிகரித்ததால் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். கல்வி கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு
பி.எட்., எம்.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அப்படிப்புகளுக் கான கல்விக்கட்டணத்தை திருத்தி யமைக்க நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய்துள்ளது.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும் கல்விக்கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.
தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான தனியார் சுயநிதி தொழில்கல்வி கல்லூரிகள் கட்டண நிர்ணயக்குழு கட்டணத்தை முடிவு செய்கிறது. அந்த வகையில், 2014-2015-ம் கல்வி ஆண்டில் பி.எட்., படிப்புக்கு தேசிய தர மதிப்பீட்டுக் கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கு ரூ.46,500 ஆகவும், மற்ற கல்லூரிகளுக்கு ரூ.41,500 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எம்.எட்., படிப்புக்கு கட்டணம் ரூ.47,500 ஆகும்.
இந்த ஆண்டு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) உத்தரவின்படி தமிழ்நாட்டில் 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் தனியார் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். உள்ளிட்ட படிப்புகளுக் கான கல்விக் கட்டணத்தை திருத்தி யமைக்க நீதிபதி பாலசுப்பிர மணியன் கமிட்டி முடிவுசெய் துள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தேவையான ஆவணங்களுடன் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப் பிக்குமாறு அனைத்து தனியார் சுயநிதி ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களின் முதல்வர் களுக்கும் நீதிபதி பாலசுப்பிரமணி யன் கமிட்டி உத்தரவு பிறப் பித்துள்ளது. அவர்களின் கருத்து கள் கிடைக்கப்பெற்ற பின்னர் கல்லூரி நிர்வாகிகளிடம் கல்விக் கட்டணத்தை திருத்தியமைப்பது தொடர்பாக விரைவில் ஆலோ சனை நடத்தப்படும் என்று கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.