இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, August 08, 2015

ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி விரைவில் இ - சேவை மையங்களில் அமல்

தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் துவக்கப்பட்டுள்ள, இ - சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. விரைவில், ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. கைரேகை:இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது: அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள, 264 தாலுகா அலுவலகங்களிலும், தலா, ஒரு பொது இ - சேவை மையம் துவக்கப் பட்டுள்ளது. இந்த மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம். ஆதார் அட்டை பெற ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து, ஒப்புகை சீட்டு பெற்றவர்கள், பொது இ - சேவை மையங்களுக்கு சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள, பதிவு எண்ணை தெரிவித்து, பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏற்கனவே, ஆதார் எண் பெற்றவர்கள், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற, 30 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். பாஸ்போர்ட்:ஆதார் அட்டை பெற்றவர் கள், முகவரி மாற்றம் மற்றும் புகைப்பட மாற்றம் செய்ய விரும்பினால், அதை மேற்கொள்ளும் வசதி, விரைவில், பொது இ - சேவை மையத்தில் துவக்கப்படும். அதேபோல், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வசதியும், விரைவில் ஏற்படுத்தப் படும்.அரசு கேபிள், 'டிவி' மூலம், இணையதள இணைப்பு வழங்கும் பணியும், விரைவில் துவக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Friday, August 07, 2015

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நாளை கடைசி நாள்!

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு பதவிகளில் 74 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதுவரை, 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தமிழகத்தில் துணை கலெக்டர் -19, டி.எஸ்.பி., - 26, வணிகவரி உதவி கமிஷனர் - 21, மாவட்டப் பதிவாளர் - 8 என, மொத்தம் 74 காலியிடங்கள் இருக்கின்றன, இந்த இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர், 8ம் தேதி தேர்வு நடத்துகிறது.

இதற்கு ஜூலை 10ம் தேதி முதல் 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது. டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது. நாளை நள்ளிரவு, 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை வரும் 11ம் தேதி வரை வங்கி மூலம் செலுத்தலாம்.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறும்போது, ''நேற்று மாலை, 6:00 மணி வரை 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் இருந்தாலும், கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, தேர்வர்கள் முன்கூட்டியே பதிவுசெய்வது நல்லது,''என்றார்

ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல்

வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல் மட்டும் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க குறுமையத்திற்கு (3 முதல் 7 பள்ளிகள் வரை) ஒருவர் வீதம் ஆசிரிய பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டனர். சென்ற ஆண்டு 10 பள்ளிகளுக்கு ஒருவர் என மாற்றப்பட்டு, உபரி பயிற்றுனர்கள் பணிநிரவல் மூலம் காலியிடங்களில் நியமிக்கப்பட்டனர். நடப்பாண்டில் காலியிடங்கள் இல்லாததால் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த முடியவில்லை.

இதையடுத்து மனமொத்த மாறுதலை (மியூச்சுவல்) மட்டும் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த ஒன்றியத்திற்கு மீண்டும் மாறுதல் கோர கூடாது. மனமொத்த மாறுதல் கோரும் இருவரும் ஒரே பாடப்பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜனவரியில் நிர்வாக மாறுதல் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாநில திட்ட அலுவலகத்திற்கு ஆக.,11 க்குள் அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெட்' தேர்வு பிரச்னை : ஆக.18ல் இறுதி விசாரணை

ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்ததை எதிர்த்து ஓராண்டுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.ஆசிரியர் பணி நியமனத்துக்கான டெட் தேர்வு 2013 ஆகஸ்டில் நடந்தது; 4.5 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற மொத்த மதிப்பெண்ணான 150க்கு 60 சதவீதமான 90 மதிப்பெண் பெற வேண்டும். அதன்படி 16 ஆயிரத்து 492 பேர் 90 மதிப்பெண் பெற்றனர்.

அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இந்த நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டது. இந்நிலையில் டெட் தேர்வு எழுதியவர்களில் முன்னேறிய வகுப்பினர் தவிர மற்ற பிரிவினருக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத தளர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் புதிய உத்தரவால் 60 சதவீதத்திற்கு கீழ் குறைந்த மதிப்பெண் பெற்ற 27 ஆயிரம் பேர் சான்றிதழ் சரி பார்ப்புக்கு தகுதி பெற்றனர். இதனால் 60 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மதிப்பெண் தளர்வை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இன்னொரு வழக்கில் ஆசிரியர் நியமன நடவடிக்கையை தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற லாவண்யா என்ற பட்டதாரி உட்பட 17 பேர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் 'வெயிட்டேஜ்' என்ற கூடுதல் தர மதிப்பீட்டை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அவை அனைத்தும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டன.கடைசியாக இந்த மனுக்கள் கடந்த மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி தமிழக அரசு நேற்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

மனுவில் '5 சதவீத மதிப்பெண் தளர்வு முறை இடஒதுக்கீட்டின் படி வழங்கப்பட்டது. அதை நீக்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த மனு வரும் 18ம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது.கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

கலை ஆசிரியர் தேர்வு ரத்து :டி.ஆர்.பி., புது முடிவு

அரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., திடீரென ரத்து செய்துள்ளது; 'விரைவில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்விப் பாடப்பிரிவுகளில் காலியாக இருந்த, 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 2013ல், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது.

மாநில அளவில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில், தேர்வர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து, பட்டதாரிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, 'போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. ஜனவரியில், கலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பாடத்திட்டத்துக்கு, அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்தப் பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த, இந்த தேர்வுக்கான அறிவிப்பை திடீரென ரத்து செய்து, டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி பிறப்பித்துள்ளார். மேலும், போட்டித் தேர்வு அறிவிப்பு புதிதாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு, மே மாதம் நடக்கும். இந்த ஆண்டு, மூன்று மாதங்கள் தாமதமாக, பல சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று துவங்குகிறது.முதற்கட்டமாக, இன்று காலை, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களான ஏ.இ.இ.ஓ., பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. சென்னையில், தொடக்கக் கல்வி இயக்குனர் அலு வலகத்திலும், மற்ற மாவட்டங்களில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும் நடக்கிறது.

மாலை 3:00 மணிக்கு, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தொடக்கக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு நடக்கிறது. ஏ.இ.இ.ஓ.,க்களைப் பொறுத்தவரை, அதிகாரியாக இருந்தால், அவர்கள் தங்களுக்கான குறிப்பிட்ட மாதத்தில் ஓய்வு பெற்று விட வேண்டும். மாறாக, ஆசிரியராக இருந்தால், அவரது ஓய்வுக்கான மாதம் வந்தாலும், அவர் அந்தக் கல்வி ஆண்டு முடியும் வரை பணியாற்ற முடியும். இந்த வசதிக்காக, ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகள், மீண்டும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக, ஆசிரியர் பணிக்கு திரும்புவர்.

ஏ.இ.இ.ஓ.,க்கள், தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், அரசின் நிதி உதவி அளித்தல், ஆசிரியர் நியமனம் போன்ற, பல நடவடிக்கைகளுக்கு பொறுப்பு அதிகாரியாக இருப்பதால், தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களுக்கு, மாறுதல் பெற அதிக போட்டி உள்ளது. இருப்பினும், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, இடமாறுதல் பெற, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஏ.இ.இ.ஓ.,க்கள் முடிவு செய்துள்ளனர்

ஆசிரியராகிறார் பிரணாப் முகர்ஜி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வரும் செப்.,4ம் தேதி, ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, தனது மாளிகையில் அமைந்துள்ள, ராஜேந்திரபிரசாத் சர்வோதயா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த உள்ளார். டில்லி அரசு, 'ஆசிரியர் ஆகுங்கள்' என்ற திட்டத்தை விரைவில் துவக்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ், கலை, பண்பாடு, வர்த்தகம், விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவர்.

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி:எழுத்துத்தேர்வை கணக்கில் கொள்ளாமல் பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் தடை


பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத்தேர்வை கணக்கில் கொள்ளாமல் பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் தடை

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல் பணி நியமனம் செய்யும் நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், ஆய்வு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு விரும்பினால், தற்போது இந்த உத்தரவில் பரிந்துரைத்துள்ள ஏதேனும் ஒரு முறைப்படி பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பி.சதீஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.

அதில் ஐந்து நபருக்கு ஒருவர் என்ற விகிதத்தின் அடிப்படையிலும், நேர்காணலின்போது பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலும் பணியிடம் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு செய்யும் முறையில் கடுமையான முரண்பாடுகள் உள்ளன. இது சட்ட உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்தத் தேர்வு நடைமுறை அரசு வெளியிட்ட முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக உள்ளது.

இந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 31-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. எனவே, பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். மேலும், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரினார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4, குரூப்-2 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை மட்டுமே நடத்தி பணி நியமனம் செய்கிறது. இத்தேர்வு விடைத்தாள் கணினி மூலம் மதிப்பீடு செய்யப்படுவதால் இத்தேர்வு நியாயமாகவும், வெளிப்படையாகவும் உள்ளது.

எனவே, அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் போன்ற கீழ்நிலைப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி நேரம், சக்தி போன்றவற்றை அரசு செலவிட தேவையில்லை. எனவே, அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனத்தின்போது எழுத்துத் தேர்வு மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டு பட்டியல் தயாரிக்க வேண்டும்.

அப்போது எழுத்துத் தேர்வு மதிப்பெண் 150 உடன், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண், உயர் கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண், பணி முன் அனுபவத்துக்கு 2 மதிப்பெண் என மொத்தம் 167 மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். அல்லது அதற்கு மாற்றாக நேர்முகத் தேர்வுக்கு 8 மதிப்பெண்களைச் சேர்த்து மொத்தம் 175 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இந்தத்தேர்வைப் பொருத்தவரை, எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கணக்கில் கொள்ளாத தேர்வு நடைமுறைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு விரும்பினால், தற்போது இந்த உத்தரவில் பரிந்துரைத்துள்ள ஏதேனும் ஒரு முறைப்படி பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 06, 2015

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழர்கள்

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழர்கள்

1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) ரா.பி.சேதுப்பிள்ளை
1956 - அலை ஒசை (புதினம்) கல்கி. ரா. கிருஷ்மூர்த்தி
1957 - விருது வழங்கப்படவில்லை
1958 - சக்ரவர்த்தித் திருமகன் (இராமாயண உரைநடை) இராசாசி
1959 - விருது வழங்கப்படவில்லை
1960 - விருது வழங்கப்படவில்லை
1961 - அகல் விளக்கு (புதினம்) மு.வரதராசனார்
1962 - அக்கரைச் சீமை (பயணநூல்) மீ.ப.சோமு
1963 - வேங்கையின் மைந்தன் (புதினம்) அகிலன்
1964 - விருது வழங்கப்படவில்லை
1965 - ஸ்ரீ ராமானசர் வரலாறு (வாழ்க்கை வரலாறு) பி.ஸ்ரீ.ஆச்சார்யா
1966- வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) ம.பொ.சி
1967 - வீரர் உலகம் (திறனாய்வு) கி.வ.ஜகந்நாதன்
1968 - வெள்ளைப் பறவை (கவிதை) அ.சீனிவாச ராகவன்
1969 - பிசிராந்தையார் (நாடகம்) பாரதிதாசன்
1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) கு.அழகிரிசாமி
1971 - சமுதாய வீதி (புதினம்) நா.பார்த்தசாரதி
1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்) ஜெயகாந்தன்
1973 - வேருக்கு நீர் (புதினம்) - ராஜம் கிருஷ்ணன்
1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (திறனாய்வு) க.த.திருநாவுக்கரசு
1975 - தற்காலத் தமிழ் இலக்கியம் (திறனாய்வு) இரா. தண்டாயுதம்
1976 - விருது வழங்கப்படவில்லை
1977 - குருதிப்புனல் (புதினம்) இந்திரா பார்த்தசாரதி
1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (திறனாய்வு) வல்லிக்கண்ணன்
1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) தி. ஜானகிராமன்
1980 - சேரன் காதலி (புதினம்) கண்ணதாசன்
1981 - புதிய உரைநடை (விமர்சனம்) மா. இராமலிங்கம்
1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) பி.எஸ்.இராமையா
1983 - பாரதி காலமும் கருத்தும் (திறனாய்வு) தொ.மு.சி, ரகுநாதன்
1984 - ஒரு காவிரியைப் போல - திரிபுர சுந்தரி
1985 - கம்பன் புதிய பார்வை (திறனாய்வு) அ.ச. ஞானசம்பந்தன்
1986 - இலக்கியத்துக்காக ஒரு இயக்கம் (திறனாய்வு) க.நா.சுப்பிரமணியன்
1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) ஆதவன்
1988 - வாழும் வள்ளுவம் (திறனாய்வு) வா.செ.குழந்தைசாமி
1989 - சிந்தாநதி (தன்வரலாறு) லா.ச.ராமாம்ருதம்
1990 - வேரில் பழுத்த பலா (புதினம்) சு.சமுத்திரம்
1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (புதினம்) கி.ராஜநாராயணன்
1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்றுப் புதினம்) கோ.வி.மணிசேகரன்
1993 - காதுகள் (புதினம்) எம்.வி.வெங்கட்ராம்
1994 - புதிய தரிசனங்கள் (புதினம்) பொன்னீலன்
1995 - வானம் வசப்படும் (புதினம்) பிரபஞ்சன்
1996 - அப்பாவின் சினேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) அசோகமித்திரன்
1997 - சாய்வு நாற்காலி (புதினம்) - தோப்பில் முகமது மீரான்
1998 - விசாரணைக் கமிசன் (புதினம்) சா. கந்தசாமி
1999 - ஆலாபனை (கவிதைகள்) அப்துல் ரகுமான்
2000 - விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்(திறனாய்வு) தி.க.சிவசங்கரன்
2001 - சுதந்திர தாகம் (புதினம்) சி.சு.செல்லப்பா
2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) சிற்பி
2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (புதினம்) வைரமுத்து
2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) ஈரோடு தமிழன்பன்
2005 - கல்மரம் (புதினம்) திலகவதி
2006 - ஆகாயத்துக்க அடுத்த வீடு (கவிதைகள்) மு.மேத்தா
2007-இலையுதிர் காலம்
நீல பத்மநாபன்
2008-மின்சாரப்பூ-மேலாண்மை பொன்னுசாமி
2009-கையொப்பம்-புவியரசு
2010-சூடிய மலர் சூடற்க-நாஞ்சில் நாடன்
2011-காவல் கோட்டம்-சு.வெங்கடேசன்
2012-தோல்-டி.செல்வராஜ்
2013-கொற்கை-ஜோ.டி குரூஸ்
2014-அஞ்ஞாடி-பூமணி

சிறப்பாசிரியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பாணை வாபஸ்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு மூலம் நியமனம் செய்யும் அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் நடைபெறக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

அதேபோன்று, பள்ளிக் கல்வித் துறையின் 17.11.2014-ஆம் தேதியிட்ட அரசாணையில், போட்டித் தேர்வு மூலம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வேலைவாய்ப்பு அலுவலக மாநிலப் பதிவு மூப்பு அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்பப் பெறப்படுகிறது. இது தொடர்பான புதிய அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுக்கு இது கட்டுப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

660 வி.ஏ.ஓ., காலியிடங்களுக்குதகுதியானோர் பட்டியல் வெளியீடு

தமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 660 கிராம நிர்வாக அலுவலரான - வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தகுதியானோர் பட்டியலை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி. எஸ்.சி., வெளியிடப்பட்டுள்ளது. வரும், 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.தமிழக வருவாய்த் துறையில் காலியாக இருந்த, 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, 2014 ஜூனில் எழுத்துத் தேர்வு நடந்தது; 7.63 லட்சம் பேர் பங்கேற்றனர். பின், டிசம்பரில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இதில், 660 இடங்களுக்கு, முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் யாரும் தேர்வாகவில்லை.

இதையடுத்து, இரண்டாம் கட்ட காலி இடம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானோர் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:இரண்டாம் கட்டத்தில் காலியாக உள்ள, 660 இடங்களுக்கு, வரும், 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். இந்த முறை, முதல் நாளில் சான்றிதழ் சரிபார்ப்பும், அதில் தேர்வாகும் தேர்வருக்கு, மறு நாளில் பணி நியமன கவுன்சிலிங்கும் நடத்தப்படும்.முழுவதும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வர்களின் பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டு, அதன் படியே சான்றிதழ் சரிபார்ப்பும், கவுன்சிலிங்கும் நடக்கும். எனவே, மதிப்பெண் வரிசைப்படியே இடங்களையும் தேர்வு செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பு 'பாஸ்' மாணவர்களுக்குவேலை வாய்ப்பு பதிவில் சலுகை

'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தால், வரும், 19ம் தேதி வரை பதிவு மூப்பில் சலுகை வழங்கப்படும்' என, அறிவிக்கப் பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது; மே, 21ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது;

பின், மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் 'பெயில்' ஆனவர்களுக்கான மறு தேர்வுகள் நடந்தன. திருத்தப்பட்ட மதிப்பெண்களுடன், அசல் மதிப்பெண் சான்றிதழ், கடந்த, 5ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளிகளில், வேலைவாய்ப்பு பதிவுப் பணி நடந்து வருகிறது. மாணவர்கள், வரும், 19ம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்; வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:மாணவர்கள், 19ம் தேதி வரை எந்த தேதியில் பதிவு செய்தாலும், ஆக., 5ம் தேதிக்கான பதிவு மூப்பு கிடைக்கும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மதிப்பெண் சான்றிதழ் வாங்கி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

AEEO panel list

Click below

http://www.trbtnpsc.com/2013/08/panel.html