இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 13, 2015

ஜூலை 18ல் ஜாக்டோ ஆயத்தக்கூட்டம்

ஜாக்டோ' தொடர் முழக்க போராட்டத்திற்கான மாநில ஆயத்த கூட்டம் ஜூலை 18ல் திண்டுக்கல்லில் நடக்கிறது.மத்திய அரசுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராடி வந்தன. அரசு செவி சாய்க்காததால் 27 சங்கங்கள் ஒன்றுசேர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை (ஜாக்டோ) அமைத்துள்ளன. இந்த அமைப்பு சார்பில் ஆக., 1ல் சென்னையில் தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இப் போராட்டத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளது. போராட்டத்திற்கான ஆயத்தக் கூட்டம் ஜூலை 18ல் திண்டுக்கல்லில் நடக்கிறது. இதில் 27 சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அமல்ராஜ் கூறுகையில், ''தொடர் முழக்க போராட்டம் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும். போராட்ட நடவடிக்கை குறித்து திண்டுக்கல்லில் நடக்கும் ஆயத்த கூட்டத்தில் திட்டமிடப்படும்'' என்றார்.

பி.எப் கணக்கு விபரங்களை இனி தமிழிலும் அறியலாம்

தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின் கணக்கு இருப்பு மற்றும் பிற தகவல்களை, தமிழில், எஸ்.எம்.எஸ்., மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தாம்பரம் பி.எப்., மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.எப்., சந்தாதாரர்களுக்கு, ஒருங்கிணைந்த நிரந்தர அடையாள எண் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, 'ஆன் - லைன்' மூலம், பி.எப்., கணக்கு விவரங்கள் மற்றும் பிற வசதிகளை பெற முடியும்.

சந்தாதாரர்கள், EPFOHO UAN TAM என, குறிப்பிட்டு, 77382 99899 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அவர்களின் பி.எப்., கணக்கு பற்றிய தகவல்கள், தமிழில், எஸ்.எம்.எஸ்., ஆக வரும். செயலற்ற கணக்குகளை முடிவுக்கு கொண்டு வரவும், பழைய கணக்கில் உள்ள தொகையை, புதிய கணக்கிற்கு மாற்றவும், உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பணிக்கு செல்வோருக்கு, மையப்படுத்திய உறுப்பினர் சான்று வழங்கப்படும்.

'ஆன் - லைன்' மூலம், சந்தாதாரர் கணக்குகளை மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் கணக்குகள், 'ஆன் - லைனில்' பதிவேற்றம் செய்யப்படுகிறது; 2014 - 15ல், 14.5 கோடி உறுப்பினர் கணக்குகள், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும், 'ஆன் - லைன்' மூலம் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 அசல் சான்று நாளை முதல் விநியோகம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு முடித்த மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது 90 நாட்களுக்கு செல்லத்தக்கது; இதன் மூலம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

நாளை முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரிடமும் அசல் மதிப்பெண் சான்றிதழை பெறலாம். வேலைவாய்ப்பு: மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் 10ம் வகுப்பில் பதிவு செய்த வேலைவாய்ப்பு அட்டையின் நகலை பள்ளிகளில் ஒப்படைத்து பிளஸ் 2 தகுதியை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை, எண் குடும்ப அட்டை போன்றவற்றையும் மாணவர்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்;

மொபைல் போன் எண் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும்.வரும் 15 முதல் 29ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மற்றும் கூடுதல் தகவல் சேர்க்கும் பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடக்கும். பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணியை மேற்கொள்ளாவிட்டால் அது குறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம். இத்தகவலை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, July 12, 2015

ஊதிய உயர்வு தடை.அரசு ஊழியர் சங்கம் அதிர்ச்சி

எட்டாவது ஊதிய மாற்றம் செயல்படுத்தும் வரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர்கள் வைக்க வேண்டாம் என அரசு கேட்டு கொண்டுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2006 ஜன.,1 முதல் 7 வது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது. இதில் பல முரண்பாடுகள் இருப்பதாக கூறி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

அதிலும் சில முரண்பாடுகள் இருப்பதாக கூறியதை அடுத்து, 3 நபர் குழு அமைக்கப்பட்டு 89 அரசாணைகள் வெளியிடப்பட்டன. மீண்டும் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்காக 7 வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்திலும் 8 வது ஊதிய மாற்றம் செய்யப்பட உள்ளது. அதுவரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்த வேண்டாம் என, நிதித்துறை கேட்டு கொண்டுள்ளது. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அரசின் அறிவிப்பு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22 ல் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம், ஆக., 22 ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த உள்ளோம், என்றார்.

மூவகை உத்தரவுகளால் அலைக்கழியும் ஆசிரியர்கள்- தினமலர்

பள்ளிக் கல்வி, எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்களின் உத்தரவுகளை ஒரே நேரத்தில் பின்பற்ற முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர்.அரசு ஆசிரியர்கள் 12 லட்சம் பேரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள். இதில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களில், 90 சதவீதத்திற்கும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளிலும் ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் நடத்துகின்றனர். ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ.,), மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டங்கள் சார்பில் அவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

எஸ்.எஸ்.ஏ., சார்பில் பத்து பயிற்சிகள் பள்ளி வேலை நாட்களிலும், ஏழு பயிற்சிகள் சனிக்கிழமையன்றும் நடக்கிறது. ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில் 15 பயிற்சிகள் வேலை நாட்களில் நடத்தப்படுகின்றன. இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க அத்திட்ட இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதை பின்பற்றி பயிற்சிகளில் பங்கேற்கும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களின் (இவர்கள் 6- 8ம் வகுப்புக்கும் பாடம் நடத்துகின்றனர்) கற்பித்தல் பணி பாதிப்பதாக சர்ச்சை எழுந்து உள்ளது. பயிற்சி நாட்களில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க செல்வதால் பள்ளிச் செயல்பாடு பாதிக்கிறது.

மேலும் கல்வி இயக்குனர் உத்தரவுப்படி பத்தாம் வகுப்பிற்கு 'சிறப்பு வகுப்பு' நடத்தும் ஆசிரியர்களும் பயிற்சிகளில் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த இயக்குனர் உத்தரவை பின்பற்றுவது என்ற குழப்பமும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: இத்துறையில் உத்தரவு பிறப்பிக்கும் மூவரும் இயக்குனர்கள். அவர்களின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். திட்டங்களுக்கு அந்தந்த ஆண்டு ஒதுக்கப்படும் நிதிக்கு ஏற்ப, அதன் செலவினத்தை கணக்கு காட்டுவதற்காக பயிற்சி பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அவ்வப்போது தான் முடிவு செய்கின்றனர். நடப்பு கல்வியாண்டில், ஒரு வட்டார வளமையத்தில், குறைந்தபட்சம் 180 ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எந்த சம்பந்தம் இல்லாத பத்தாம் வகுப்பு ஆசிரியர்களை எஸ்.எஸ்.ஏ., பயிற்சிகளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களை ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திலும் பங்கேற்க வலி யுறுத்துகின்றனர்.

பயிற்சி... பயிற்சி... என சென்று விடும் ஆசிரியர்களால் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி குறைந்தால் கல்வி இயக்குனருக்கு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு ஆசிரியர்களை இப்பயிற்சியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றார்.

பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் நோ

பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றதாக காட்டுவதற்காக, பிளஸ் 1 பாடம் நடத்தாத, தனியார் பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், கண்டிப்பாக பிளஸ் 2 பாடம் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது. 'சென்டம்' தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், மாநில அளவில், 'ரேங்க்' பிடிப்பதும், 100 சதவீதம் தேர்ச்சி காட்டுவதும், அதிக மாணவர்களை, முக்கிய பாடங்களில், 'சென்டம்' எடுக்க வைப்பதும், தனியார் பள்ளிகளின் இலக்காக உள்ளது.

எவ்வளவு மாணவர்கள் மாநில, 'ரேங்க்' பெறுகின்றனர்; எவ்வளவு மாணவர்கள் 'சென்டம்' வாங்குகின்றனர் என்பதற்கேற்ப, இந்த பள்ளிகள் வணிக நோக்கில், மாணவர்களிடம், பல லட்சம் ரூபாயை நன்கொடையாகவும், கட்டணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கின்றன. இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில், சில அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில், தனியார் பள்ளிகளை போல, பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடம் நடத்த, கல்வித் துறையிடம் அனுமதி கேட்டனர். எச்சரிக்கை இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததுடன், 'அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை நடத்தக் கூடாது' என, எச்சரித்து உள்ளனர்.

அத்துடன், எந்தெந்த தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடம் நடத்துகின்றனர் என்பதை, ஆதாரத்துடன் கண்டறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள் மூலம், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகளில் திடீர் ஆய்வு நடத்தவும், மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை வாங்கிப் பார்த்தும், மாணவர்களிடம், பிளஸ் 1 பாடங்கள் குறித்த கேள்விகள் கேட்டும், சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள பல பள்ளிகளில், திடீர் ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அரசு பள்ளிகளுக்கு உத்தரவு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் இருந்து, நேற்று முன்தினம் சுற்றறிக்கை வந்துள்ளது. அதில், ஜூலை 15ம் தேதியை, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடவும், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பெருமைகளைக் கூறும் வகையில், போட்டிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Saturday, July 11, 2015

அதிகம்

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம்: இந்த ஆண்டு புது நியமனத்திற்கு வாய்ப்பு இல்லை

கடந்த கல்வியாண்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட, தற்போதுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, அதிக அளவில் உள்ளதால், நடப்பு கல்வியாண்டில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில், புதிய
ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. கடந்த கல்வியாண்டின் துவக்கத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற, 3,500 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 7,000 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என, 10 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஓய்வு:
கடந்த மே 31ம் தேதி, தமிழகம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இப்பணியிடங்களுக்கு, தகுதித்தேர்வு நடத்தி, விரைவில் பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர் கல்வி படித்து, வேலைக்கு காத்திருப்போரிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகளில், பணிநிரவல் நடத்துவதற்காக, 1 முதல், 5ம் வகுப்பு வரை, 1:30 என்ற விகிதத்திலும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, 1:35
என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்திலும், கடந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை அடிப்படையில், கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.இவற்றில், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையை விட, அதிக அளவில் உள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், பணிநிரவல் நடத்தினால், அனைத்து தகுதியான ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பினால் கூட, உபரி ஆசிரியர் பணியிடம் நீடிக்கும் நிலை உள்ளது.

நிர்பந்தம்:
இதனால், இந்தகல்வியாண்டில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது:கடந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. அதனால், உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர் நியமனம் நடைபெற்றது. உதாரணமாக, ஒரு பள்ளியில் பணிநிரவலுக்கு கணக்கெடுக்கும் போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு, ஐந்து ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால், அங்கு, எட்டு ஆசிரியர் பணியிடங்கள்

ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்த உபரியாக உள்ள, மூன்று பணியிடங்களை முறையாக நீக்கியிருப்பின், கடந்த கல்வியாண்டில் புதிய ஆசிரியர் நியமனம், வெகு சொற்பமாகவே இருந்திருக்கும். தேர்வு எழுதி காத்திருப்போரை ஏமாற்றம் செய்யக்கூடாது என்பதற்காக, உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது.கடந்த கல்வியாண்டு இறுதியில், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில், தற் போது பணிநிரவல் நடத்தப்பட்டால், மேற்கண்ட உபரி ஆசிரியர் பணியிடங்கள் குறையும். அதே சமயம், பல ஆசிரியர்களுக்கு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலை கூட உருவாகும். அப்போதும், உபரி ஆசிரியர் பணியிடங்களை முற்றிலும் நீக்க முடியாது. இதனால், காலி ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், அரசு பள்ளிகளில் ஆண்டுக்காண்டு, மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதால், நடப்பு கல்வியாண்டில், உபரி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை கூடவும் வாய்ப்புள்ளது. இந்த காரணங்களால் தான், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுவதும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நெல்லை பல்கலையில் எஸ்.எம்.எஸ் மூலம் ரிசல்ட்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 2015ல் நடத்தப்பட்ட தேர்வுக்கான அட்டவணையை 3 மாதங்களுக்கு முன்னதாகவே தயாரித்து பல்கலைக்கழகங்கள் வெளியிட்டது. மேலும் மாணவர்களுக்கு முதல் முறையாக ஹால் டிக்கெட்டில் புகைப்படத்துடன் அவர்கள் எழுத வேண்டிய தேர்வு கால அட்டவணையும் சேர்த்து வழங்கியது. தேர்வுகள் முடிந்ததும் நெல்லை, நாகர்கோவில் மற்றும் பல்கலைக்கழக வளாகம் என 3 தேர்வுத்தாள் திருத்தும் மையங்களை அமைத்து கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக ஆசிரியர்களை தேர்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தியது.

இதனால் குறுகிய காலத்திற்குள் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டது. தேர்வு முடிவுகளை தமிழகத்திலேயே முதல்முறையாக ஒரே நேரத்தில் இணையதளத்திலும் மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும் வெளியிட்டது. இப்பணியை செய்த ஊழியர்களை துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர், இயக்குனர், நிதி அலுவலர் பாராட்டினர். இதுகுறித்து தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் பிரபாகர் கூறுகையில், ‘‘முதற்கட்டமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் கிடைத்த மாணவர்களின் செல்போன் எண்கள் அனைத்திற்கும் எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட் அனுப்பப்பட்டுள்ளது. 30 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்’’ என்றார்.

அரசுப் பள்ளிகளில் கட்டாய சிறப்பு வகுப்பு

கல்வியாண்டு துவக்கத்திலேயே, ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, அரசு பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களை விட, தினமும் மூன்று மணி நேரம் கூடுதலாகவும், சனிக்கிழமை முழுவதும், பள்ளியில் செலவிட வேண்டியுள்ளதால், ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது. முழு வேலை நேரம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு, காலாண்டு தேர்வு முடிந்ததும் துவங்கிய கெடுபிடி, இந்த கல்வியாண்டில், வகுப்பு துவங்கியதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.காலை, 8:15 மணியிலிருந்தும், மாலை, 4 மணியிலிருந்தும் இருவேளை சிறப்பு வகுப்புகளும், சனிக்கிழமை முழு வேலை நேரமாக சிறப்பு வகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும், ௧௦ம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இந்த ஆசிரியர்கள் காலை, 8:00 மணிக்கு பள்ளிக்கு வந்து, மாலை, 6:00 மணிக்கு பின்பே வீடுதிரும்பும் நிலை உள்ளது. மற்ற வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள், காலை, 9:௦௦ மணிக்கு வந்து, மாலை, 4:௦௦ மணிக்கு வீடு திரும்பும் நிலையில், ஆசிரியர்களிடையே காட்டப்படும் இந்த பாகுபாடு, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:பொதுவாக, அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்த பின், தேர்ச்சி விகிதம் கூட்டுவதற்காக, ஆசிரியர்களே விரும்பி, சிறப்பு வகுப்புகளை நடத்துவது வழக்கம். ஆனால், தற்போது, கல்வியாண்டின் துவக்கதிலேயே சிறப்பு வகுப்புகளை நடத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.பொதுவாக, பள்ளியில் சீனியர் ஆசிரியர்களே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்துவது வழக்கம். அவர்களுக்கு அதிக வேலைநேரம் ஒதுக்கிவிட்டு, மற்ற பாட ஆசிரியர்களுக்கு, குறைந்த நேரம் மற்றும் சனிக்கிழமை விடுமுறை உள்ளிட்டவை யும் கிடைக்கிறது.இதனால், பல ஆசிரியர்கள், ௧௦ம் வகுப்புக்கு பாடம் நடத்துவதை விட்டுவிட்டு, கீழ் வகுப்புகளுக்கு சென்றுவிடலாமா என யோசித்து வருகின்றனர்.

பள்ளி வேலை நேரத்தில், நலத்திட்டம் வழங்குதல், புள்ளி விவரம் சேகரித்தல் என, அலுவலக பணிகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தினமும் சிறப்பு வகுப்பு கள் என்பதை, பெற்றோரையும், பொதுமக்களையும் ஏமாற்றும் செயலாகவே அமைந்துள்ளது. பலன் தரும் பெரும்பாலான ஆசிரி யர்கள், விருப்பமின்றி கடமைக்கு, நடத்துகின்றனர். இதனால், பெரிய அளவில், எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. அதிக நேரம் வகுப்புகளால், மாணவ, மாணவியரும் களைத்து போகின்றனர். கட்டாய சிறப்பு வகுப்புகளைவிடவும், பள்ளி வேலைநேரத்தில் முழுமையாக பாடம் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது நல்ல பலனை தரும் என்பதை, கல்வி நிர்வாகம் உணர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயமா

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அரசு அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பருக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தக்குமார் கூறியதாவது:

'டெட்' தேர்வு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயம் என்றால் அவர்கள் 'டெட்' தேர்வை முடித்து விட்டு அரசு பள்ளிகளுக்கு சென்று விடுவர். இதனால் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். தனியார் பள்ளிகள் மீண்டும் புதிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளுக்கான 97 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும்; விரைவில் அங்கீகாரம் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பள்ளி நிர்வாகிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

REGULAR b.ed result release

Click below

http://www.tnteu.in/result.html