ஏழை-எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளித்த தனியார் பள்ளிகளுக்குச் சேர வேண்டிய கட்டணமான ரூ.97.05 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்த உத்தரவை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபிதா சனிக்கிழமை வெளியிட்டார். கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை-எளிய மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இந்தச் சட்டமானது கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டப்படி, தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் ஏழை-எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கல்வி ஆண்டுகளிலும் (2012 முதல் 2015 வரை) மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக மாணவர்களைச் சேர்த்ததற்கான கல்விக் கட்டணத்தை திருப்பித் தரவில்லை என மெட்ரிக் பள்ளிகள் குற்றம்சாட்டின. இந்தப் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியது.
கட்டாயக் கல்வி சட்டம் என்பது ஒன்றாம் வகுப்பில் இருந்து தொடங்குவதாக தெரிவித்தாலும், தமிழகத்தில் மழலையர் வகுப்புகளில் இருந்தே (எல்.கே.ஜி.,) மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடங்குவதாகவும் அதற்கான கட்டணத்தையும் சேர்த்தே ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இதனிடையே, 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குச் சேர்த்து தனியார் பள்ளிகளுக்குத் தர வேண்டிய கல்விக் கட்டணத்துக்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது. அதன்படி, 2013-14 ஆம் கல்வியாண்டுக்கு ரூ.25.14 கோடியும், 2014-15 ஆம் கல்வியாண்டுக்கு ரூ.71.91 கோடியும் என மொத்தம் ரூ.97.05 கோடியை ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபிதா சனிக்கிழமை பிறப்பித்தார்.
பள்ளிகள் கோரிக்கை: தனியார் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டாலும், கட்டாய கல்விச் சட்டத்தில் உள்ள சில குளறுபடிகளை நீக்க வேண்டுமென பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி-பிரைமரி-மெட்ரிக்-மேல்நிலை-சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது: கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மழலையர் பள்ளிகளில் இருந்தே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இதுவரை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, சட்டத்தில் உள்ள அம்சத்துக்கும், தமிழகத்தில் மாணவர்கள் மழலையர் வகுப்பில் இருந்தே சேர்க்கப்படுவதற்கும் உள்ள குளறுபடியை நீக்கி தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். இந்தக் கல்வி ஆண்டிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்று தெரிவித்தார்.