இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 12, 2015

அரசுப் பள்ளி கழிப்பறைகள் பராமரிப்புப் பணி உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணிகளை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில், போதுமான கழிப்பறை வசதியில்லை. இருக்கும் பள்ளிகளிலும், முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மாணவர்கள் அவதிப்படுகின்றனர். 'அனைத்து அரசுப் பள்ளிகளிலும், கழிப்பறையை உறுதி செய்ய வேண்டும்' என, சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணியை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில், 2,057 அரசுப் பள்ளிகளில், கழிப்பறை முறையாக இல்லை என, ஆய்வில் கண்டறியப்பட்டது; இதை பராமரிக்க, 160.77 கோடி நிதியை, கடந்த பட்ஜெட்டில், தமிழக அரசு ஒதுக்கியது. இதனால், 56.56 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர் எனவும், தமிழக அரசு தெரிவித்தது. இப்பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், கழிப்பறை பராமரிப்பு பணியை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம், அரசு ஒப்படைத்து உள்ளது.

தற்போதுள்ள துப்புரவு பணியாளர்களையோ, அல்லது தினக்கூலி அடிப்படையில், தேவையானவர்களை நியமித்தோ, கழிப்பறைகளை பராமரிக்கவும், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான நிதி, கல்வி வரி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இருந்து வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக, பள்ளிகள், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, தனி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதன்மூலம், மாணவர்களின் அவதி நீங்கும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

பள்ளி திறக்கும் நாளில் பாடப்புத்தகம் வழங்க ஏற்பாடு

பள்ளிக்கூடங்கள் ஜூன் 1–ந் தேதி திறக்கப்படுகின்றன. அன்று அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 67 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், அட்லஸ் ஆகியவை விலை இல்லாமல் வழங்கப்பட உள்ளன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

கல்வி கற்க விலை இல்லா உதவி பொருட்கள் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், புத்தகப்பை, காலணி, அட்லஸ் முதலியவற்றால் மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்று தமிழக அரசு எண்ணி இந்த பொருட்கள் உள்பட கல்வி தொடர்பான 14 பொருட்களை விலை இன்றி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கொடுக்க முடிவு செய்து அதன்படி வழங்கி வருகிறது. இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு மட்டும், பாடப்புத்தகங்கள் அனைத்தும் விடுமுறையிலேயே கிடைக்க பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஏற்பாடு செய்தார். அதன்படி அவை வழங்கப்பட்டுவிட்டது.

விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் 1–ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் அன்று அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு (எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகள் தவிர) பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் விலை இன்றி வழங்கப்பட இருக்கிறது. அனுப்பப்பட்டன பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், செயலாளர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட அரசு குடோன்களுக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்து அவை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் அவை பள்ளிக்கூடங்களுக்கு கொடுக்கப்பட இருக்கின்றன. மே மாத இறுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் அனைத்து பாடப்புத்தகங்களும், நோட்டுபுத்தகங்களும் சென்றுவிடும். இது பற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில்,

‘‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1–வது வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகள் 60 லட்சம் பேருக்கும், 11–வது வகுப்பு படிக்கும் 7 லட்சம் மாணவ–மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் அட்லஸ், ஒரு செட் சீருடை ஆகியவையும் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது’’ என்றார்.

Monday, May 11, 2015

பத்தாம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயம்.பள்ளிக்கல்வித் துறை அதிரடி

பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பகுதி 1ல் உள்ள தமிழ் பாடத்தை கட்டாயமாக மாணவர்கள் பயில வேண்டும். நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதி 1ல் உள்ள தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.

2006-07ம் ஆண்டு 1ம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் 2015-16ம் கல்வியாண்டில் முதன் முதலாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். இவர்கள் தமிழ்பாடத்தை பகுதி 1ல் கட்டாயமாக எழுத வேண்டும். பகுதி 1ல் தமிழ்மொழி பாடம் தவிர பிற மொழியை பயின்று வந்த மாணவர்கள் 2015-16ம் கல்வியாண்டில் பகுதி 1ல் தமிழ்தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டால் அதற்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியரும், பள்ளி தாளாளரும் பொறுப்பேற்க வேண்டும்.

வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1ல் தமிழ் மொழி தேர்வு நடத்தப்படும். பிற மொழிகளில் எழுத முடியாது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்

Sunday, May 10, 2015

இரண்டு ஆண்டு பிஎட் படிப்பை அமல்படுத்தாவிட்டால் அனுமதி ரத்து

'இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தாத நிறுவனங்களின் அனுமதி தானாக ரத்தாகும்' என, தேசிய ஆசிரியர் கல்வி யியல் பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.,) எச்சரித்து உள்ளது. தமிழக அரசு, இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காததால், கல்வி நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளன. வழிகாட்டுதல் தமிழகத்தில், 589 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், ஓராண்டு பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பு கள் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நாடு முழுவதும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை, என்.சி.டி.இ., 2014ல் வெளியிட்டது.

அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பு காலம், 2015 - 16ம் கல்விஆண்டு முதல், இரண்டு ஆண்டு களாக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. புதிய விதிகளின் படி, பி.எட்., படிப்பில், தகவல் தொழில்நுட்ப கல்வி, யோகா, பாலின கல்வி, மாற்றுத்திறன் - ஒருங்கிணைப்பு கல்வி போன்றவை கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இதேபோல், பி.எட்., பட்டப்படிப்பு 'தியரி, ப்ராக்டிக்கல்' மற்றும் 'இன்டர்ன்ஷிப்' (நேரடி களப்பயிற்சி) என, பிரிக்கப்பட்டுள்ளன. இப்பாடத் திட்டத்துக்கு ஏற்ப, புதிய கட்டடங்கள், ஆய்வகம், கூடுதல் ஓராண்டுக்கான கூடுதல் வகுப்பறைகள், புதிய பாடத்துக்கான கூடுதல் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை கல்லுாரிகள் செய்ய வேண்டும்.

ஆனால், புதிய விதிமுறைகளுக்கு எதிராக, தமிழக தனியார், பி.எட்., கல்லுாரிகள், சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அனைத்து, பி.எட்., - எம்.எட்., கல்லுாரிகளுக்கும், என்.சி.டி.இ., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், புதிய விதிமுறைப்படி, 2015 - 16ம் கல்வியாண்டில், பி.எட்., - எம்.எட்., படிப்பு காலம், இரண்டு ஆண்டுகளாகும். மேலும், மாணவர்கள் எண்ணிக்கையை, நிபந்தனைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய வேண்டும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால், கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் தானாகவே ரத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகம் அதேநேரம், இரண்டு ஆண்டு, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான பாடத்திட்டத்தை, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை தயாரித்து, அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளது. ஆனால், அரசின் சார்பில் புதிய பாடத்திட்டத்துக்கு அனுமதி வழங்கவோ, வழக்கை முடிவுக்கு கொண்டு வரவோ நடவடிக்கை எடுக்காததால், வரும் ஜூன் முதல், மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. - நமது நிருபர் - இதனால், ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளன.

அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

அமெரிக்காவில் நடந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், பிரபல'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவில், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள், இணையதளம் மூலம் கற்பிப்பதில் புதுமை புகுத்திய ஆசிரியர்களின் படைப்புகளை அமெரிக்காவை சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் 'மைக்ரோசாப்ட்' ஆய்வு செய்தது.

இதில் தேர்வான ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு, டில்லியில் நடந்தது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற, செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர், திலிப், அமெரிக்காவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்றக தேர்வு செய்யப்பட்டார்.அதன்படி, திலிப்குமார் உள்ளிட்ட 13 இந்தியர்கள் மற்றும் 87 நாடுகளை சேர்ந்த, 300 பேர் அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். இதில், 100க்கு 74 மதிப்பெண் பெற்று, ஆசிரியர் திலிப், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வானார்.ஆசிரியர் திலிப்பின் தகவல் தொழில்நுட்பத்தையும், பயிற்று முறையையும் 'மைக்ரோசாப்ட்' நிறுவன சி.இ.ஓ., சத்தியா நாதல்லா பாராட்டினார்.

கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு நாட்டு ஆசிரியர் குழுக்களை, வேறு நாட்டு பள்ளிகளுடன் இணைத்து, உலக அளவிலான கல்வியை கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்து, மைக்ரோசாப்ட் நிறுவன கல்விக்கான துணைத் தலைவர் ஆண்டனி சல்சிடோ அறிவித்தார். இதன்படி, சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், தைவான் ஆகிய நாடுகளில் உள்ள பள்ளி மாணவர்களுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதுடன், நாடுகளுக்கிடையிலான கலாசார பகிர்வு ஏற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்கள் இடமாற்றமா?

பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், சாதாரண, ஏழை, நடுத்தரக் குடும்ப மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் படித்தால், நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் கிடைக்காவிட்டால் பொறியியல், மருத்துவம், சி.ஏ., மற்றும் முன்னணி அறிவியல் பாடப் பிரிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள் படிக்க முடியாது. இதனால், சமூக அளவில் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம், மிக மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் மாணவர்கள் முன்னணி இடத்துக்கு வராதது, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பல வகையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், தற்போதைய நிலைமையை சமாளிக்க, அரசு பள்ளிகளின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வர, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தேர்ச்சி குறைவு மற்றும் மதிப்பெண் குறைந்த பாடப்பிரிவு ஆசிரியர்கள், பள்ளிகள் பட்டியல்களை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மோசமான செயல்பாடுகள் உறுதி செய்யப்படும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை இடமாற்றவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை

'ஆசிரியர்களின் கவனக்குறைவு மற்றும் சரியாகப் பாடம் நடத்தாததே, பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைய காரணம்' என, கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், 'ஓபி' அடிப்பதைத் தடுக்க, 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவை கட்டாயமாக்க, கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.

நடந்து முடிந்த, பிளஸ் 2 தேர்வில், மெட்ரிக் பள்ளிகளே மாநிலத்தில் முதல் மூன்று இடங்களையும்; மாவட்டத்தில் முதல் இடங்களையும் பிடித்தன. அரசு பள்ளி மாணவர்கள், மாவட்டங்களில் கூட முதலிடம் பிடிக்கவில்லை. இதேபோல், பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு பள்ளிகள், 84.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் மெட்ரிக் பள்ளிகளை (97.67) விட, 13.41 சதவீதமும்; அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளை (93.42) விட, 9.16 சதவீதமும், அரசு பள்ளிகள் குறைந்துள்ளன. அதிருப்தி: கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளிகள், மாநில, 'ரேங்க்' பெறாமல், பரிதாபமான நிலைக்கு சென்றுள்ளதால், அரசு பள்ளிகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்,

'ஆசிரியர்களின் கவனக்குறைவு, பள்ளிக்கு ஒழுங்காக வந்து பாடம் நடத்தாமை' போன்றவையே, இதற்கு காரணங்கள் என கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: *அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் பலர், பள்ளிகளில் பாடம் நடத்துவதை விட, தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாக, 'டியூஷன்' எடுப்பதிலேயே, அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால், பள்ளிகளில் முழுமையாக பாடம் நடத்தாமல், 'டியூஷன்' வர வைத்து, 'போர்ஷன்' முடிக்கின்றனர்; 'டியூஷன்' போக முடியாத, நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது.

* பள்ளிகளில் பெயரளவில், ஒவ்வொரு நாளும் சில பக்கங்களைக் குறித்துக் கொடுத்து விட்டு, வீட்டில் படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்.

கண்காணிப்பு: *பல ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்று விடுகின்றனர். தலைமை ஆசிரியர்களும் இதைக் கண்டு கொள்வதில்லை.

*ஆய்வகங்களில் பெரும்பாலும், செய்முறைப் பயிற்சிக்கு வாய்ப்பு தருவதில்லை. மாறாக ஆய்வகப் பொருட்களை பயன்படுத்துவதாக, கணக்கு காட்டும் நிலை உள்ளது. *காலை, மாலை நேர சிறப்பு வகுப்புகளை, பல பள்ளிகளில் நடத்துவதில்லை.

'ரிவிஷன் டெஸ்ட்' எனப்படும், மாதாந்திர திருப்புதல் தேர்வை முறையாக வைப்பதில்லை. வாராந்திரப் பாடம் நடத்தும் தயாரிப்பு திட்டம் முறையாக செயல்படுத்துவதில்லை.இப்படி பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. எனவே, முதற்கட்டமாக ஆசிரியர்களின் பணி வருகையை உறுதிப்படுத்தவும், 'போர்ஷன்' முடித்தல் அறிக்கை தரவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்படும். ஆசிரியர்கள், ஓபி அடிப்பதைத் தடுக்க, 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு முறை கொண்டு வரப்படும். அவ்வப்போது ஆய்வுகள் செய்து, ஆசிரியர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பான் எண் அட்டை 48மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை

பான்' எண் அட்டைகளை, 48 மணி நேரத்தில் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வருமானவரித் துறையால் வழங்கப்படும், 'பெர்மனென்ட் அக்கவுன்ட் நம்பர்' என்பதன் சுருக்கம் தான், பான். வருமான வரி செலுத்துபவர்களும், வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வரவு - செலவு மேற்கொள்பவர்களும், பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட, பொருட்கள், சேவை, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு, பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என, அந்த எண்ணுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தார்.இதன்மூலம், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தலாம் என்பது, அரசின் எண்ணம். ஆனால், இந்த பத்து இலக்க எண் கொண்ட அட்டை, 21 கோடி பேருக்கு தான் கிடைத்துள்ளது; இன்னமும், நுாறு கோடி பேருக்கு மேல், அட்டை வழங்கப்பட வேண்டியுள்ளது.

'ஜன் தன்' வங்கிக் கணக்குத் திட்டம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, பான் எண் அவசியம் என்பதால், அனேகமாக, அனைவருக்கும் பான் எண் வழங்கவும், அதை விரைவாக வழங்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பான் எண் பெற, இப்போது, குறைந்தபட்சம், ஒரு வாரம் முதல், இரு வாரங்கள் வரை ஆகும் நிலையில், அதை, 48 மணி நேரத்தில் வழங்கவும், அதற்காக இணையதள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.பான் எண், 48 மணி நேரத்தில் கிடைக்கவும், அட்டையை ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கவும், வருமானவரித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பான் எண் பெற, வயது சான்றிதழுக்கான ஆதாரமாக, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 'ஆதார்' அடையாள அட்டை நகலை வழங்கலாம் என, வருமானவரித் துறை தெரிவித்து உள்ளது.

எளிமையான வருமான வரி படிவம் இம்மாத இறுதியில் அறிமுகம்

எளிமையான வருமான வரி கணக்கு தாக்கல் படிவம், இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என, தெரிகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம், 2015 - 16ம் வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தை, கடந்த மாதம் வெளியிட்டது. அதில், ஒருவருக்கு எத்தனை வங்கிகளில் கணக்கு உள்ளது என்பதையும், அவற்றில் உள்ள தொகை குறித்தும் தெரிவிக்கும் பிரிவு இடம் பெற்றிருந்தது.

மேலும், கடந்த நிதியாண்டில் வெளிநாடு சென்றிருந்தால், பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் வழங்கிய அலுவலகம், சென்ற நாடுகள், பயணங்களின் எண்ணிக்கை, பயணச் செலவுகள், அவற்றுக்கான நிதியாதாரம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் பிரிவும் காணப்பட்டது. இத்துடன், 'ஆதார்' எண்ணைக் குறிப்பிட, தனி பிரிவும் படிவத்தில் இருந்தது. இந்த விதிமுறைகள் கடுமையாக உள்ளதாக கூறி, எம்.பி.,க்கள், வரி வல்லுனர்கள், தொழில் அமைப்பினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ''

புதிய படிவம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்; எளிமையான படிவம் அறிமுகப்படுத்தப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இது தொடர்பாக, நடப்பு பார்லிமென்ட் கூட்டம் முடிந்த பின்னர், நிதியமைச்சக அதிகாரிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், செயல்படாமல் உள்ள வங்கி கணக்கு விவரங்களை கோரும் பிரிவை நீக்குவது உள்ளிட்ட சில மாற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதாக, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Saturday, May 09, 2015

பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பேருந்து பயண அட்டை திரும்ப பெறப்படும்

பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் அவர்களது இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்க்க உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது.

போக்குவரத்துத் துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித் துறை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சனிக்கிழமை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதன் விவரம்:- அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், குறும்படங்களையும் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தில் போக்குவரத்துத் துறை, காவல் துறை உயர் அதிகாரிகளைப் பங்கேற்கச் செய்து பெற்றோர்களுக்கு படிக்கட்டு பயணம் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும். போக்குவரத்து காவல்துறையால் பேருந்துகளில் படிக்கட்டு பயணம் செய்யும் மாணவர்கள் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டால், இது தொடர்பாக மாணவரை பள்ளி நிர்வாகம் எச்சரிக்க வேண்டும்.

மேலும், அதே மாணவர் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்வதாகத் தகவல் பெற்றால், அந்த மாணவரின் பெற்றோரை அழைத்து அவர்களின் முன்னிலையில் அறிவுரை வழங்கப்பட வேண்டும். பேருந்து படிக்கட்டு பயணத்தால் உண்டாகும் விபத்து, அதனால் ஏற்படும் இழப்புகளைப் பற்றி ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்கள், பெற்றோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும்போது படிக்கட்டு பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் இலவசப் பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என்பதையும், மேலும் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.

பேருந்து தினம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் இது போன்ற நிகழ்வில் பங்கேற்பதைத் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.