பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 200–க்கு 200 மதிப்பெண் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 5–ந்தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் 31–ந்தேதி முடிவடைந்தது. மாணவர்கள் மருத்துவம் அல்லது முன்னணி கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கட் ஆப் மதிப்பெண் 200–க்கு 200 பெறவேண்டும் என்று நினைப்பது வழக்கம். சில மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் தேர்வுகளில் 150–க்கு 140 மதிப்பெண் எடுக்கும் சூழ்நிலையில் தேர்வு எழுதினார்கள். 150–க்கு 150 மதிப்பெண் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டால் சரியாக எழுதிய விடைத்தாள் அனைத்தையும் அடித்துவிடுங்கள்.
அவ்வாறு செய்தால் விடைத்தாளை திருத்துபவர்கள் நீங்கள் அடித்த பகுதியை மதிப்பீடு செய்யாமல் 0 மதிப்பெண் போட்டு விடுவார்கள் என்று சில பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அதற்கு காரணம், பெயிலான மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும். அப்போது கேள்விகள் எளிதாக இருக்கும். 150–க்கு 150 மதிப்பெண் எடுத்துவிடலாம். அப்படி எடுத்தால் மருத்துவத்துப்படிப்பில் அல்லது என்ஜினீயரிங் கல்லூரிகளில் முன்னணி கல்லூரிகளில் சேர முடியும் என்று அந்த மாணவர்களின் ஆசிரியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. விடைத்தாளில் கோடு போட்டனர் ஆசிரியர்கள் சொன்னது போலவே, குறைவான மதிப்பெண் கிடைக்கும் என்று நினைத்து மாணவர்கள் விடைத்தாள்களில் சரியாக எழுதியதை கோடு போட்டு அடித்துவிட்டு அந்த தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளனர்.
அவ்வாறு கோடு போட்டால் அதை திருத்தாமல் விடுவது வழக்கம். இவ்வாறு கோடு போட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் இந்த தகவலை அரசு தேர்வுத்துறைக்கு தெரிவித்துள்ளார். எனவே அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டாம் என்று முதன்மை கல்வி அதிகாரி வழியாக அரசு தேர்வுத்துறை அதிகாரி வாய்மொழியாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதால் சில பிளஸ்–2 மாணவர்கள் விடைத்தாள்களில் எழுதியது அனைத்தையும் அடித்து உள்ளனர். இது பெரிய பிரச்சினை ஆகும் என்று கருதி அந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேரில் வந்து எங்கள் பிள்ளைகள் தெரியாமல் விடைத்தாளில் கோடு போட்டுவிட்டனர். அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டனர். இதையொட்டி அந்த விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். தேர்வுத்துறை விடைத்தாள்களை திருத்திவிட்டதால் பெயிலாகி மீண்டும் தேர்வு எழுதி 100 சதவீத மதிப்பெண் எடுக்கலாம் என்று கனவு கண்டவர்களின் கனவு தவிடு பொடியாகிவிட்டது இந்த தந்திரம் தான் தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.