இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, February 21, 2015

ஊக்க ஊதிய உயர்வில் தவறு.மாற்றி அமைத்தது தமிழக அரசு

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்க ஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது.

ஊக்க ஊதியம்: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பணிக்காலத்தின் போது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு, உயர்கல்வித் தகுதி முதல் ஊக்க ஊதியமும், பின் எம்.எட்., பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியமும் வழங்கப்படும். இந்நிலையில், 2013 ஜனவரியில், பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்காலத்தின் போது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., முடித்து உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு, உயர்கல்வித் தகுதி முதல் ஊக்க ஊதியம் வழங்கப்படும்.

மேலும் எம்.எட்., அல்லது எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றிருந்தால், இரண்டாவது ஊக்க ஊதியத்துக்கு தகுதியுடையவர்களாவர் என்று கூறப்பட்டிருந்தது. இதில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என்பதற்குப் பதிலாக, வெறும் பட்டதாரி ஆசிரியர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இரண்டாவது ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. எழுத்துப் பிழையால் நடந்த இந்தப் பிரச்னை குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் மற்றும் செயலரிடம் இதுகுறித்து மனு அளித்தது. மனுவை ஆய்வு செய்த, பள்ளிக்கல்வி செயலர் சபீதா, அரசாணையின் தவறை திருத்தி புதிய ஆணை பிறப்பித்துள்ளார். பிப்., 12ம் தேதியிட்ட அரசாணைப்படி, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என்பதும் இணைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு நன்றி: இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சங்கங்கள் வரும் 25ம் தேதி முதல்வரை சந்திக்க ஏற்பாடு

ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, 'கோரிக்கை குறித்துப் பேச்சு நடத்த தயார்' என்று, தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆசிரியர் சங்கங்கள் முதல்வரை சந்திக்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கை குறித்து, கடந்த பல ஆண்டுகளாக, அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பப்பட்டது; ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

26 சங்கங்கள்: அதனால், 2003க்கு பின், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளன. தொடக்கப் பள்ளி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அனைத்து ஆசிரியர் நலச்சங்கம் உள்ளிட்ட, 28 சங்கங்கள், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைந்துள்ளன. இந்த, 'ஜாக்டோ' உயர்மட்டக்குழு கூட்டம், சென்னையில் இரு நாட்கள் நடந்தது. இதில், 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று முடிவாகி உள்ளது. ஆசிரியர்கள் போராட்டம் குறித்து, இந்த முடிவை அறிந்த பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், 'ஜாக்டோ' குழுவை சந்தித்து பேச ஒப்புக் கொண்டனர்.

'ஜாக்டோ' குழு தலைமைச் செயலகம் சென்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அரசு முதன்மை செயலர் சபிதாவை சந்தித்து பேசினர். அப்போது, 'தற்போது சட்டசபை நடப்பதால், முதல்வரால் சந்திக்க இயலாது; வரும் 25ம் தேதி, முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம்; அதுவரை பொறுத்திருங்கள்; பிளஸ் 2, 10ம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு வருவதால், தற்போது போராட்ட முடிவுகள் எடுக்க வேண்டாம்' என்று, கல்வித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, நிதித் துறைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் மற்றும் முதல்வர் அலுவலகத்தில், மனு அளித்து விட்டு, ஆசிரியர் சங்கங்கள் நம்பிக்கையுடன் திரும்பி உள்ளனர். அவர்கள் கோரிக்கைகள்:

* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, 6வது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, தமிழக ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் படிகள் வேண்டும்.

* அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை ஊதியத்துடன் தர வேண்டும்.

* பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

* தமிழ்ப்பாடம் கடைசியாக உள்ள அரசாணையை ரத்து செய்து, தமிழை முதல் பாடமாக்க வேண்டும்.

* அரசின் நலத் திட்டங்களை அமல்படுத்த, பள்ளிகளுக்கு தலா ஒரு அலுவலர் வேண்டும்.

* மருத்துவப் பணி சார்ந்த பாதுகாப்புச் சட்டம் போல், ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் வேண்டும்.

போராட்ட வடிவம் குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர், சத்தியமூர்த்தி கூறியதாவது: விளக்க கூட்டம்: ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு, முதற்கட்டமாக, நாளை மாவட்ட வாரியாக, விளக்கக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 25ம் தேதி, முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என்று, கல்வித் துறை அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர். பின், மார்ச் 8ம் தேதி, மாவட்ட வாரியாக ஆசிரியர் சங்கங்களின் சார்பில், கோரிக்கை குறித்துப் பேரணி நடத்தப்படும். அடுத்தகட்ட திட்டம் குறித்து, உயர்மட்டக் குழு விரைவில் முடிவெடுக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பக்கமும் 25 வரிகள் எழுத வேண்டும்.மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சுற்றறிக்கை: இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கை: தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதவற்றை, மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் கையெழுத்திட வேண் டும், விடைத்தாளின் ஒரு பக்கத்தில், 20 - 25 வரிகள் வரை எழுத வேண்டும். விடைத்தாளின் இரண்டு பக்கங்களிலும் எழுத வேண்டும். செய்முறைகள் அனைத்தும் விடைத்தாளின் பகுதியிலேயே இருக்க வேண்டும்; வினா எண்ணைத் தவறாமல் எழுத வேண்டும். இரு விடைகளுக்கு இடையில், இடைவெளி விட்டு எழுத வேண்டும்; வினாத்தாளின் வரிசை யை, மதிப்பெண்கள் பக்கத்தில் குறிக்க வேண்டும்; விடைத்தாளில் விடைகளை கறுப்பு அல்லது நீல மை பேனாவால் எழுத வேண்டும். தேர்வு முடியும் போது, விடைத்தாளில் எழுதாத பக்கங்கள் இருந்தால், அவற்றில் குறுக்குக் கோடு போட வேண்டும்; இதேபோல் எதை செய்யக்கூடாது என்றும் மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

பெயர் எழுதக்கூடாது: மேலும், வினாத்தாளில் எந்தக் குறியீடும் இடக்கூடாது; விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது; விடைத்தாளின் எந்தப் பக்கத்திலும் தேர்வு எண் அல்லது பெயர் எழுதக் கூடாது. வண்ண பேனா, பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது; விடைத்தாளில் கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது; விடைத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது. இவ்வாறு மாணவர்களை அறிவுறுத்துமாறு, பள்ளிகளுக்கும், தேர்வு மையங்களுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும், தேர்வுத்துறை இயக்குனர், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Friday, February 20, 2015

தொழிலாளர் வங்கி துவக்க பிஎப் நிறுவனம் திட்டம் : உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை

லாபத்தை அதிகரிக்கவும், தொழிலாளர்களுக்கு கடன் வழங்கும் வகையிலும் தொழிலாளர் வங்கி துவக்க பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சுமார் 6.5 லட்ம் கோடி தொழிலாளர் நிதியை நிர்வகித்து வருகிறது. இதில் சுமார் 5 கோடி தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிலாளர்களின் நிதியை எந்த வகையில் முதலீடு செய்வது என்பது குறித்து தொழிலாளர் அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டங்களும் பல முறை நடத்தப்பட்டு வந்துள்ளன. தொழிலாளர் நிதியை பங்குகளில் முதலீடு செய்வது மற்றும் வீட்டுக்கடன் வழங்குவதற்கான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து கடந்த ஆண்டு இறுதியில் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆராய நிபுணர் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. வருங்கால வைப்பு நிதி நிறுவன சந்தாதாரர்களுக்கு குறைந்த விலை பிரிவிலான வீடுகள் வாங்குவதற்கு உதவுவது குறித்தும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிஎப் நிதியின் ஒரு பகுதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய லாம் அல்லது வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து, அதன் சந்தாதாரர்கள் வீடு வாங்குவதற்கு உதவ முடியும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தொழிலாளர்களுக்கு குறைந்த விலை வீடு வழங்கும் திட்டம் மாநில அரசின் வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட திட்டம் உள்ளது. இந்த திட்டத்துக்கு வரவேற்பு உள்ள அதேநேரத்தில், பங்கு சந்தை முதலீட்டுக்கு எதிர்ப்பு உள்ளது. பங்கு வர்த்தகம் நிலையானதாக இல்லை என்பதோடு, திடீர் இழப்பு ஏற்பட்டால் சமாளிப்பது எப்படி என்ற குழப்பமும் உள்ளது. தொழிலாளர் தொடர்புடைய விஷயம் என்பதால் இதில் கவனமாக கையாளப்பட வேண்டும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக் காது என்று பல உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் வைப்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்று சிலர் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி தொழிலாளர்களின் நிதியை கொண்டு, அவர்களுக்கென நிதிச்சேவைகள் அளிப்பது குறித்தும் சமீபத்தில் விவாதம் செய்யப்பட்டது. தொழிலாளர் துறை செயலாளர் கவுரி குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தொழிலாளர் வங்கி அமைப்பது பற்றி  ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழிலாளர்களுக்கு வங்கி சேவை அளிக்கும் நோக்கில் தொழிலாளர் வங்கி அமைப்பது பற்றி மத்திய வாரிய குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்த வங்கி பிஎப் நிறுவனத்துக்கு போட்டியாக இருக்காது.

அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கு நிதிச்சேவை அளிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கும். தொழிலாளர்களுக்கு நிரந்தர பிஎப் எண் வழங்கப்பட்டது போல, முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட வங்கியாக இது இருக்கும். இதுபற்றி நிதிச்சேவைகள் துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார். தொழிலாளர் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தொழிலாளர் வங்கி துவக்குவது குறித்த பரிந்துரை பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு செய்யப்படும். இந்த வங்கி வருவாயை அதிகரிப்பதையும், கடன் வழங்குவதையும் நோக்கமாக கொண்டிருக்கும். பிஎப் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்கும் திட்டமும் உள்ளது’’ என்றார்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு

இந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, இன்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அதிகாரிகள், வழிகாட்டுதல் வழங்க உள்ளனர். கடந்த 2011 - 12ம் கல்வியாண்டில், சமச்சீர்க் கல்வி மற்றும் புதிய பாடத்திட்டம் அறிமுகமானதால், 10ம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கு, செய்முறைத் தேர்வு அறிமுகமானது.

மொத்தம், 100 மதிப்பெண்களில், 75 மதிப்பெண்கள் அறிவியல் கருத்தியல் (தியரி) தேர்வுக்கும், 25 மதிப்பெண்கள் செய்முறைத் தேர்வுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் செய்முறைத் தேர்வில், 20 மதிப்பெண்கள் வினா - விடைகளுக்கும், ஐந்து மதிப்பெண்கள் மாணவர்களின் செயல்பாடுகளுக்கான, சி.சி.இ., என்ற தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு அடிப்படையில் வழங்கப்படும். ஆய்வுக்கூட செயல்திறன், ஆய்வுக்கூட வருகை, செயல் ஈடுபாடு ஆகியவற்றுக்கு தலா ஒரு மதிப்பெண்ணும், ஆய்வக பதிவுக் குறிப்பீடுக்கு இரு மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், வரும் 24ம் தேதி முதல் செய்முறைத் தேர்வை நடத்தி, மார்ச் 4க்குள் முடிக்க, பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம், தலைமை ஆசிரியர்களுக்கு, இன்று உரிய அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

Thursday, February 19, 2015

நாளை தாய்மொழி தினம்

tnptfmani.blogspot.com
இந்தியா முழுவதும் பிப்ரவரி 21-ந்தேதியை (நாளை) தாய்மொழி தினமாக கொண்டாடுங்கள் என்று சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கு சுற்றறிக்கையை மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச தாய்மொழி தினவிழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடவேண்டும். குறிப்பாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடவேண்டும். சி.பி.எஸ்.இ. அனுமதி பெற்ற அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் கொண்டாடுங்கள்.

தாய் மொழி தினம் முழுக்க முழுக்க தாய்மொழியை மேம்படுத்தவும், பாரம்பரிய கலாசாரத்தை வளர்க்கவும் கொண்டாடவேண்டும். அதாவது பள்ளிக்கூடங்களில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை கொடுத்து அதை தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்தல் நல்லது.

அறிவு தொடர்பான போட்டி உள்பட அனைத்துவித போட்டிகளையும் தாய்மொழியில் படித்தவர்களுக்கும், ஆங்கிலவழியில் படித்தவர்களுக்கும் நடத்தவேண்டும். தாய்மொழியில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றை நடத்தி தாய்மொழி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இதை அதிக நாட்கள் தொடர்ந்துசெய்யவேண்டும். தாய்மொழி தவிர மேலும் ஒரு இந்திய மொழியை படிப்பது நல்லது அதை மாணவ-மாணவிகளிடம் ஊக்கப்படுத்துங்கள்.

அந்நிய மொழி கலக்காமல் தாய்மொழியில் எழுதவும், படிக்கவும் கற்பித்துகொடுங்கள். தாய்மொழியில் பேசி விளையாடுங்கள். தாய்மொழியையும் இந்திய மொழிகளையும் மேம்படுத்துங்கள். மொத்தத்தில் பள்ளிக்கூடங்களில் தாய்மொழித்திருவிழாபோல நடத்தப்படவேண்டும்.

இதனால் தாய்மொழியில் படிக்காத மாணவர்களும் தாய்மொழியை நன்றாக எழுதத்தெரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு தாய்மொழி விழா நடத்துவதால் மாணவ-மாணவிகளுக்கு பேச்சாற்றல் வளரும்.

பள்ளிகளில் தாய்மொழிவிழா நடத்துவதை வீடியோ, புகைப்படம் எடுத்து அருகில் உள்ள சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பவேண்டும். தமிழ்நாட்டைப்பொருத்தவரை தாய்மொழியாம் தமிழில் பள்ளிக்கூடங்களில் நடத்தும் மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் நடத்துங்கள்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின்படி தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தாய்மொழியாம் தமிழ்மொழியில் தாய்மொழி தினம் நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் ரூ1100 கோடி மதிப்பில் மடிக்கணினி வழங்க ஏற்பாடு

நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் ரூ.1100 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டம்

தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தகவல் தொழில் நுட்ப செயலாளர் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் (பொறுப்பு), தா.கி. ராமச்சந்திரன், அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் பிரவீண் குமார், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அதுல் ஆனந்த், பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

ஏற்கனவே 2011-12 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்ற 8.67 லட்சம் மாணவ மாணவிகளுக்கும், 2012-13 ஆம் ஆண்டில் 7.18 லட்சம் மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.மேலும் 2013-14-ம் ஆண்டு 5 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 21 லட்சத்து 15 ஆயிரம் மடிக்கணினிகள் மாணவ மாணவிகள் பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்காக இதுவரை 2,781 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1100 கோடிக்கு மடிக்கணினி தமிழக அரசு இவ்வாண்டு (2014-15), 5 லட்சத்து 50 ஆயிரம் மடிக்கணினிகளும், 2015-16 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் மடிக்கணினிகளும் என ஆக மொத்தம் 11 லட்சம் மடிக்கணினிகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

2014-15-ம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக ரூ.1100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இவ்வாண்டு (2014-15), 5 லட்சத்து 50 ஆயிரம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்யும் பணி தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகள் அவர்களுக்கு உயர்கல்வி படிக்கும்போது நன்றாக பயன்படுகிறது. இந்த தகவல் அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கால அவகாசம்

வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும், 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். பிற இடங்ளுக்கு குடி பெயர்தல், கவனக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால், 10 சதவீதம் பேர் புதுப்பிக்க தவறி விடுவதால், பதிவு மூப்பை இழந்து விடுகின்றனர்; வேலைவாய்ப்பும் பாதிக்கிறது.இது போன்றோர் பயன்பெறும் வகையில், '2011 முதல் 2013 வரை, பதிவை புதுப்பிக்கத் தவறியோர், மார்ச் 7ம் தேதி வரை, பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்' என, அரசு சிறப்பு சலுகை அறிவித்தது. அன்று முதல், ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும், இணைய தளம் வாயிலாகவும் பதிவை புதுப்பித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசின் சிறப்புச் சலுகை, மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. இந்த வாய்ப்பை தவற விட்டால், மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்காது. வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை பெற முடியாமல் போகும்' என்றார்.

இந்த ஆண்டாவது வெளிப்படையான கவுன்சிலிங்.ஆசிரியர்கள் கோரிக்கை

இந்த கல்வி ஆண்டி லாவது, வெளிப்படையான முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்' என,ஆசிரியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், பள்ளி துவங்குவதற்கு முன், ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.பணிமூப்பு அடிப்படையில்மாவட்ட வாரியாக, காலி பணியிட பட்டியல் சேகரிக்கப்பட்டு, பணிமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு, பணியிட மாறுதல் செய்து, உத்தரவு வழங்க வேண்டும்.

எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு, கடந்த கல்வி ஆண்டில், கலந்தாய்வு, 'கலவரமாக' மாறியது. 'ஆன் - லைன்' வழியில் கலந்தாய்வை நடத்தியதும், முக்கிய நகரங்கள், நகரங்களை ஒட்டிய புறநகர் பகுதிகளில் உள்ள இடங்கள் மறைக்கப்பட்டதாக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். அதிக இடங்கள்:குறிப்பாக, பள்ளி கல்வித்துறையில், அதிக இடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த, ராமேஸ்வர முருகன், இட மாற்றம் செய்யப்பட்டதற்கு, இதுதான் காரணம் எனவும், ஆசிரியர்கள் கூறுகின்றனர். தற்போது, பள்ளிக்கல்வி இயக்குனராக, கண்ணப்பன் உள்ளார். இந்நிலையில், வரும் ஏப்ரலில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது.

கடந்த ஆண்டைப் போல் இல்லாமல், இந்த ஆண்டாவது, வெளிப்படையான முறையில், கலந்தாய்வை நடத்த, அதிகாரிகள் முன்வர வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். லட்சங்களில் புரண்ட 'டிரான்ஸ்பர்' கடந்த ஆண்டு, 'டிமாண்ட்' உள்ள இடங்கள், ஐந்து லட்சம் ரூபாய் வரை விலை போனதாக, ஆசிரியர் கூறுகின்றனர்.முக்கியமாக, குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில், தேவைக்கும் அதிகமாக, ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து, அதன்மூலம் பெரும் அளவிற்கு முறைகேடு நடந்ததாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, ஆசிரியர் சிலர் கூறியதாவது:விரும்பும் இடத்துக்கு, பணம் கொடுத்து மாறுதல் பெறுவது என்ற எண்ணம் ஆசிரியர்களிடையே அதிகரித்து விட்டது. இதனால், கிராமப்புற பள்ளிகளில், பணிபுரிய விரும்பாதவர்கள், உடனே வேறு பள்ளிக்கு மாறி விடுகின்றனர்.ஆசிரியர் உபரியாக உள்ள பள்ளிக்கும், 'நிர்வாக இடமாறுதல்' கிடைத்து விடுவதால், அரசு பணம் விரயமாகிறது.

இடமாறுதல் என்பதை, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே என்றும், அதையும் வெளிப்படையாக நடத்தவும், தமிழக அரசு முன் வரவேண்டும்.இல்லாவிட்டால், நிர்வாகத்தில் ஏற்படும் குளறுபடிகளால், அரசு பள்ளிகள் மூடும் நிலைக்குதள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பிப்ரவர் 23ல் பி.எட் செய்முறை தேர்வு

:பி.எட்., மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்குகிறது.தமிழகத்தில் 661 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு 2014--15 க்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்கி மார்ச் 13 வரை 6 கட்டங்களாக நடக்கிறது. பிப்., 23, 24 ல் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பிப்., 25, 26 ல் திருச்சி, அரியலுார், பெரம்பலுார், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் நடக்கிறது.மார்ச் 2, 3 ல் நெல்லை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும், மார்ச் 5, 6 ல் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் நடக்கிறது. மார்ச் 9, 10 ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், வேலுார் மாவட்டங்களிலும், மார்ச் 12, 13 ல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் நடக்கிறது. இதனை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 18, 2015

தினம் ஒரு அரசாணை

தினம் ஒரு அரசாணை27
------------------------------------------
அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல்  விடுப்பு அனுமதி உண்டா??
அரசாணை நிலை  எண்.120, சுகாதாரம் மற்றும் குடும்ப  நலத்துறை   நாள்.20.1.1997ன்படி அரசுப்பணியாளரின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது பணியாளருக்கு மருத்துவரின் மருத்துவச்சான்றின் அடிப்படையில்  7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு.

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நாளை நுழைவுச் சீட்டு வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு நுழைவுச் சீட்டுகளை www.tndge.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.