பள்ளி மாணவர்கள் மத்தியில், அதிகரிக்கும் வன்முறைகளை தவிர்க்க, பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனித்தனியாக சிறப்பு கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மத்தியில், சினிமா, ’டிவி’, மொபைல் போன், இன்டர்நெட் உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், மாணவர்கள் ஈடுபடும் குற்றச்சம்பவங்கள், பெருமளவில் அதிகரித்துவிட்டது.
மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட, மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 1300க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஆறு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி ஆசிரியரை தாக்குதல், மிரட்டுதல் போன்ற சம்பவங்கள் கோவை மாவட்டத்திலும், ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் வன்முறை சம்பவங்கள் தலை தூக்குவதை காணமுடிவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை பென்சில், பேனாவால் குத்துதல், விளையாட்டு பாடவேளை நேரங்களில், திட்டமிட்டு பந்தால் எறிந்து தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்படுகிறது. இதில், மாணவியரும் விதிவிலக்கல்ல.
கல்விக் கூடங்களில் வன்முறை கலாசாரத்தை தடுக்கும் முயற்சியில், நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தின் மண்டல உளவியல் நிபுணர் உதவியோடு மாணவர்களுக்கு, ’சிறப்பு கவுன்சிலிங்’ வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் சரியான உறவுமுறை அமையாததன் காரணமாக, மாணவர்களின் மனப்போக்கு மாறுவதுடன், கல்வித்தரமும் பாதிக்கப்படுகின்றது.
மண்டல உளவியல் நிபுணர் அருள்ஜோதி கூறுகையில்,”மாணவர்கள் மத்தியில், கவனிக்கும் தன்மை குறைந்து வருகிறது. பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே, மாணவர்களின் கவனத்தை ஒருங்கிணைக்க முடிகிறது. குறிப்பாக, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் சிறிய அளவிலான வன்முறை சம்பவங்களை தொடர்ந்து காண முடிகிறது. இதை கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், பெரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது, சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கி வருகிறோம். மாணவர்கள் மத்தியில், சிறிதளவில் உருபெற்றிருக்கும் வன்முறைகளை களைய, அனைத்து பள்ளிகளிலும், பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. தங்களது பிள்ளைகளின் நிலையை அறிந்துகொள்ள பள்ளிக்கு அழைத்தாலும், வருவதில்லை. இதுபோன்ற குடும்பச் சூழலே பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதிகப்படியான வன்முறை உணர்வுகளை தூண்டுகின்றது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.