அனைத்து அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் கலவை சாதத்துடன் மசாலா முட்டை வழங்கும் வகையில், சத்துணவுக்கூட ஊழியர்களுக்கு மறு பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை சமூக நலத்துறை மேற்கொண்டு வருகிறது.
13 வகை சத்துணவு
தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், கடந்த ஆண்டு முதல், அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களிலும் மற்றும் 3 அரசு பள்ளிகளிலும் சோதனை அடிப்படையில் எலுமிச்சை சாதம், புளி சாதம், கொண்டைக்கடலை சாதம், கீரை சாதம், கருவேப்பிலை சாதம், சாம்பார் சாதம், சோயா சாதம், வெஜிட்டபுள் புலவு உள்பட கலவை சாதங்களும், தக்காளி முட்டை, மிளகு முட்டை, தக்காளி மற்றும் மிளகு கலந்த முட்டை, அவித்த முட்டை என மொத்தம் 13 வகைகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம்
இந்த பள்ளிகளில், மாணவ-மாணவிகள் கலவை சாதம் மற்றும் மசாலா முட்டைகளை விரும்பி உண்ணுகின்றனர். இதனால், சாப்பாடு வீணாவது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின உரையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த கலவை சாதம் மற்றும் மசாலா முட்டை அனைத்து அங்கன்வாடிகள் மற்றும் அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கான அரசாணை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்துணவு ஊழியர்களுக்கு மறு பயிற்சி
கலவை சாதம் மற்றும் மசாலா முட்டை வழங்கும் திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்துவதன் மூலம், சுமார் 54 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.
அனைத்து அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவுக்கூட ஊழியர்களுக்கு கலவை சாதம் மற்றும் மசாலா முட்டை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே சத்துணவு ஊழியர்களுக்கு செப் தாமு மூலம் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது அனைத்து பள்ளிகளிலும் இந்த உணவு முறை பயன்பாட்டிற்கு வர உள்ளதால், மீண்டும் செப் தாமு மூலம் சத்துணவுக்கூட ஊழியர்களுக்கு மறு பயிற்சி வழங்க சமூக நலத்துறை பரிசீலனை செய்து வருகிறது.
இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 பேர் கொண்ட குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மூலம் அனைத்து பள்ளி மற்றும் அங்கன்வாடி சத்துணவுக்கூட ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க சமூக நலத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.