click below
Tuesday, October 08, 2013
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்தை அறிமுகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் தாங்கள் கற்கும் கல்வியுடன், பொது அறிவான தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த அறிவு அவர்களுக்கு உயர் கல்வி பயிலும் போதும், பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இதனை அறிந்துக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருப்பது வரைப்படங்களேயாகும். எனவே, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் 3,246 அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான 48,247 வகுப்பறைகள் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஒரு லட்சம் வகுப்பறைகள் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கும் தேசிய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வரைபடம் என மூன்று வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 11 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 660 ரூபாய் செலவிட அனுமதி வழங்கியுள்ளார்.
கணினியின் இன்றியமையாத் தன்மையையும், தற்பொழுது பெரும்பான்மையான பணிகள் கணினியைச் சார்ந்தே அமைந்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வழியில் கல்வி வழங்கி, தமிழகத்தில் கணினிப் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகின்றார்.
அந்த வகையில், மாணாக்கர்களுக்கு கணினி வழியாக கல்வி கற்பித்து அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘SMART CLASS ROOM’ என்ற புதிய தொழில்நுட்பத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் வகுப்பறைகளில் ஏதேனும் ஒரு வகுப்பறை (20’x20’) ஸ்மார் கிளாஸ் ரூம்களாக மாற்றியமைக்கப்படும். இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைப்பதற்கு தேவையான கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கிட ஒரு பள்ளிக்கு 5,05,000 ரூபாய் வீதம் 100 பள்ளிகளுக்கு 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Monday, October 07, 2013
10-ஆம் வகுப்பில் குறைவான தேர்ச்சி: 1000 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற ஆயிரம் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 113 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமை (அக்.8) வழங்கப்படுகிறது.
இதுபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகக் குறைவான தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பகுதி வாரியாக இந்தப் பயிற்சி வழங்கப்படும். பள்ளியை எப்படி நிர்வகிப்பது, கற்பித்தலை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது, பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். இத்தகைய பயிற்சிகளின் மூலம் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும் என அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர் கூறினார்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடம் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம். தேர்வு முடிவுகளுடன் இறுதி செய்யப்பட்ட சரியான விடைகளும் வழங்கப்பட்டுள்ளன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஓரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை மொத்தம் 1.59 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான "பி' வரிசை கேள்வித்தாளில் நிறைய அச்சுப்பிழைகள் இருந்தன. எனவே, இந்தப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் அல்லது கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்ப் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே, தமிழ்ப் பாடத்தைத் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலமாக இன்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். எனவே, இணையத்தில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேருக்கு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பயிற்சி அக்டோபர் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
இணையக் குற்றங்கள் தொடர்பாக பாடங்களில் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பாக முதல்முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். இணையப் பாதுகாப்பு, இணையக் குற்றங்கள், குழந்தைகளின் உரிமைகள், தவறான நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவை தொடர்பாக இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை நடத்துகின்றன.
காவல்துறை அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு மாநில அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (அக்.8), நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமையும் (அக்.10) மாநில அளவில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில அளவில் மொத்தம் 240 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என கண்ணப்பன் தெரிவித்தார். இந்த 240 ஆசிரியர்களும் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சியை வழங்குவார்கள். அவர்களின் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் இந்தப் பயிற்சி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாற்காலிக அடிப்படையில் 6,545 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவு
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 3,900 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தாற்காலிக அடிப்படையில் உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்திலும், பட்டதாரி ஆசிரியர்களை ரூ. 4 ஆயிரம் தொகுப்பூதியத்திலும் தாற்காலிகமாக நியமித்துக்கொள்ளவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார்
. இந்தப் பணியிடங்களை அந்தந்த பள்ளி அளவிலேயே தலைமையாசிரியர்கள் நிரப்பலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் கூறினார். தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், உயிரியல், தாவரவியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் 2,645 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு, நகராட்சிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை வெளியிடவும், சான்றிதழ்களை சரிபார்க்கவும், பணி நியமனம் செய்யவும் ஓரிரு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்கவும், அரசுப் பள்ளி மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்யவும் இந்த காலிப் பணியிடங்களை பள்ளி அளவில் தாற்காலிகமாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ராமேஸ்வரமுருகன்தெரிவித்துள்ளார்.
தொடரும் இரட்டைப்பட்டம் வழக்கு
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நண்பகல் 12.45க்கு விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி அவர்கள் 45நிமிடம் வாதாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக திரு.பீமன் அவர்கள் தன் வாதத்தை தொடர்ந்தார்கள். அதன் பின் வழக்கு விசாரணை வருகிற புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணை நிறைவு பெறும். தீர்ப்பு ஒரிரு வாரங்களில் வெளியாகும்.
Sunday, October 06, 2013
Saturday, October 05, 2013
கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான, சிறப்பு ஆய்வு கூட்டம், சென்னையில் அக்.,17,18, தேதிகளில் நடக்கிறது. பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பள்ளி கல்வித் துறையில், மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
அதிக புத்தகம் படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு
அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன. இதையடுத்து, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, புத்தகங்களை மாணவர்களின் வயதுக்கு ஏற்ப, பிரித்து அடுக்கி வைக்க வேண்டும். எளிதில் எடுக்கும்படி, இருக்க வேண்டும். தினமும் புத்தகங்கள் படிப்பதற்கு, நேரம் ஒதுக்க வேண்டும். திங்கள்கிழமைகளில் நடக்கும் வழிப்பாட்டு கூட்டத்தில், அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, October 04, 2013
குருப்2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம் : டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், கூறியதாவது: குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சத்து, 85 ஆயிரத்து, 198 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணத்தை, வரும், 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இதற்கான தேர்வு, டிச., 1ம் தேதி, 115 இடங்களி"ல் நடக்கிறது. துணை வணிகவரி அலுவலர் பணியிடத்திற்கு, 66 பேர், இந்து அறநிலையத்துறையில், "ஆடிட் இன்ஸ்பெக்டர்' பணிக்கு, 39 பேர் உட்பட, 1,064 பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடக்கிறது. குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 12 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. விரைவில், இதன் முடிவு வெளியிடப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.
அக்டோபர் 7 முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்கிறது !
பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 3 சதவீதம் வரை அக்டோபர் 7ம் தேதி முதல் உயர்த்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே பட்ஜெட்டில், டீசல் விலைக்கு ஏற்ப 6 மாதத்திற்கு ஒரு முறை சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி உயர்த்தப்பட்ட சரக்கு ரயில் கட்டணம், மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது.
நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையல், பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு அக்., 7 முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
Thursday, October 03, 2013
குரூப் - 2 தேர்வு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்
குரூப் - 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். துணை வணிக வரி அலுவலர், சார் - பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில், 1,064 பணியிடங்களை நிரப்ப, குரூப் -2 தேர்வு அறிவிப்பை, செப்., 4ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. செப்., 5ம் தேதி முதல், தேர்வாணைய இணையதளம் வழியாக, பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தேர்வு கட்டணத்தை, 8ம் தேதிக்குள், செலுத்த வேண்டும். இதுவரை, 4.5 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நாளான இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் - 2 முதல் நிலைத்தேர்வு, டிசம்பர், 1ம் தேதி நடக்கிறது.