ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 83 லட்சம் செலவில் புதிதாக 25 விடுதிகள் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் தமிழகத்தில் தற்பொழுது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,277 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 40 பழங்குடியினர் விடுதிகளும், 299 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகள் கல்வி கற்பதற்காக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக அதிக அளவில் மாணவ, மாணவியர் கல்வி கற்பதற்கு முன்வருவதாலும், இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளதாலும், மாணவ, மாணவியர் தங்கி பயிலுவதற்கு அதிக விடுதிகள் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான புதிய விடுதிகள் தொடங்குவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
25 புதிய விடுதிகள் 2012–13–ம் நிதியாண்டில் 16 பள்ளி விடுதிகள், 8 கல்லூரி விடுதிகள், 1 ஐ.டி.ஐ விடுதியும் என மொத்தம் 25 புதிய விடுதிகள் தொடங்குவதற்கு முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எஸ். கொடிக்குளம், ராஜபாளையம், அரச்சநல்லூர், எஸ்.புங்கம்பாளையம், கருமந்தக்குடி, தேவக்கோட்டை, ஆத்தூர், தோப்பூர், நெய்கொப்பை, குமராட்சி, பெரியசாமிபுரம், கடம்பன்குளம், ஒஸ்.ஓகையூர், கல்லாக்கோட்டை, சுப்ரமணியபுரம், விராலிமலை, உதகமண்டலம், திருச்சி, உடுமலைப்பேட்டை, உளுந்தூர்பேட்டை, நன்னிலம், திருப்பத்தூர், அரக்கோணம், புதுக்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும். இதில் ஒரு விடுதிக்கு 50 மாணவ, மாணவியர் வீதம் 1,250 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டு பயன் அடைவார்கள்.
75 பணியிடங்கள் இந்த விடுதிகளை பராமரிக்க ஒரு விடுதிக்கு பட்டதாரி காப்பாளர், காப்பாளினி பணியிடம் 1, சமையலர் பணியிடம் 1, காவலர், ஏவலர் பணியிடம் 1 என 3 பணியிடங்கள் வீதம் 25 விடுதிகளுக்கு 75 பணியிடங்களை தோற்றுவிக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.புதிதாக தொடங்கப்பட உள்ள 25 விடுதிகளுக்கு அரசுக்கு தொடர் செலவினமாக ரூ.3 கோடியே 33 லட்சத்து 3 ஆயிரத்து 600–ம், தொடரா செலவினமாக ரூ.49 லட்சத்து 93 ஆயிரத்து 750–ம் என மொத்தம் ரூ.3 கோடியே 82 லட்சத்து 97 ஆயிரத்து 350 செலவு ஏற்படும். இரண்டு அடுக்கு கட்டில்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 68 கல்லூரி மாணவர் விடுதிகளில் 7,828 மாணவர்களும், 61 மாணவியர் விடுதிகளில் 4,738 மாணவியர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன் பெறும் வகையில், அவர்களுக்கு இரண்டு அடுக்கு கட்டில்கள் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, 68 கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள 7,828 மாணவர்களுக்கு 3,932 கட்டில்களும், 61 கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள 4,588 மாணவியர்களுக்கு 2,313 கட்டில்களும் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடியே 28 லட்சத்து 1 ஆயிரத்து 475 நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மின்னணு எடை இயந்திரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களை சரியாக அளக்க, அனைத்து விடுதிகளுக்கும், உண்டி உறைவிடப் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் ரூ.5 ஆயிரம் விலையில் ஒரு மின்னணு எடை இயந்திரம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதற்காக ரூ.80 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சுகாதார குட்டை தகளி மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 466 மாணவியர் விடுதிகள், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 16 மாணவியர் விடுதிகள், 100 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் ஆக மொத்தம் 582 விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி பயிலும் மாணவியர்களின் உடல் நலத்தைப் பேணவும், விடுதியின் சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்கவும், ஒவ்வொரு விடுதிக்கும், உண்டி உறைவிடப் பள்ளிக்கும் ஒரு சுகாதார குட்டை தகளி (நாப்கின் இன்சினிரேட்டர்) வழங்கவும், அதற்காக ரூ.1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.