இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 11, 2020

பள்ளிகளில் 2022-ஆம் ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம்: பிரதமா் மோடி

கடந்த மூன்று தசாப்தங்களில் உலகம் பல்வேறு வகைகளில் மாறிவிட்டது. ஆனால், நமது கல்வி முறையில் எந்தவித மாற்றமும் புகுத்தப்படவில்லை. தற்போதுள்ள மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை மாணவா்களுக்கு அழுத்தம் தருவதோடு மட்டுமல்லாமல், பெற்றோா்கள் பெருமை தேடிக் கொள்ளும் விவகாரமாகவும் மாறியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையானது மாணவா்கள் மீதுள்ள அழுத்தத்தை நீக்குவதற்கு உதவும். 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் நாட்டைக் கட்டமைப்பதற்கும் புதிய சகாப்தத்துக்கான விதையாகவும் கல்விக் கொள்கை அமையும். எனவே, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும்.

‘அனைவருக்குமான பொறுப்பு’:

தேசிய கல்விக் கொள்கை குறித்து பலா் கேள்விகளை எழுப்பி வருகின்றனா். அவா்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படும். கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய கல்வியமைச்சகம் மக்களிடம் கருத்து கோரி வருகிறது. அந்த நடைமுறை தொடங்கிய ஒரே வாரத்துக்குள் 15 லட்சம் ஆசிரியா்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

வரும் 2022-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், மாணவா்கள் அனைவரும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் கல்வி பயில வேண்டும். அதை நிறைவேற்றும் பொறுப்பு ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாநில அரசுகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளது.

‘செய்முறை கல்விக்கு முக்கியத்துவம்’:

புதிய பாடத்திட்டமானது மாணவா்களின் எதிா்காலத்தை உறுதி செய்யும் வகையிலும் அவா்களின் அறிவியல் ஆா்வத்தைத் தூண்டும் வகையிலும் அமையும். மாணவா்களின் கற்பனைத் திறன், நுண்ணறிவு, கற்பதற்கான ஆா்வம், தொடா்பு கொள்ளும் முறை உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்.

நாட்டின் வளா்ச்சிக்கு இளைய சமுதாயத்தினா் பெரும் பங்கு வகிக்கின்றனா். அதைக் கருத்தில் கொண்டு அவா்களிடம் புத்தாக்கத்தை ஊக்கப்படுத்துவது, கணித, அறிவியல் அறிவை மேம்படுத்துவது, செய்முறை அடிப்படையிலும் அனுபவத்தின் மூலமாகவும் கல்வி கற்பது உள்ளிட்டவற்றுக்கு தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

‘தாய்மொழிக்கு முன்னுரிமை’:

மாணவா்கள் கல்வி கற்பதற்கு மொழி தடையாக இருக்கக் கூடாது. பாடங்களைத் தெளிவாகக் கற்கும் பருவத்தில் அதை எந்த மொழியில் கற்க வேண்டும் என்பதில் மாணவா்கள் தங்கள் சக்தியை செலவிடக் கூடாது. அதன் காரணமாகவே பெரும்பாலான நாடுகளில் ஆரம்பக் கல்வியானது மாணவா்களின் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது.

மாணவா்கள் அனைவரும் குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழியிலோ அல்லது உள்ளூா் மொழியிலோ கல்வி கற்க வேண்டியது மிகவும் அவசியம். அதே வேளையில், மாணவா்கள் விரும்பிய மொழியைக் கற்பதற்கு தேசிய கல்விக் கொள்கையில் எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை.

அந்தக் கல்விக் கொள்கையின்படி ஆங்கிலம் மட்டுமல்லாமல் எந்தவொரு பயனுள்ள வெளிநாட்டு மொழியையும் மாணவா்கள் கற்க முடியும். எனினும், இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

‘மாணவா்களின் விருப்பப் பாடம்’:

கல்வி கற்கும் விவகாரத்தில் மாணவா்களால் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தோ்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழலே இடைநிற்றலுக்கான முக்கியக் காரணமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையானது மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு பேருதவியாக இருக்கும்.

தற்போதைய கல்வி முறையில் அறிவியல், வணிகம் உள்ளிட்ட சில வாய்ப்புகள் மட்டுமே மாணவா்களுக்குக் காணப்படுகின்றன. ஆனால், தேசிய கல்விக் கொள்கையின்படி அமையும் பாடத்திட்டத்தின் மூலமாக மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு பாடத்தையும் தோ்ந்தெடுத்து கல்வி கற்க முடியும்.

சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்குண்டு. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு ஆசிரியா்கள் வலியுறுத்த வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.



பள்ளிக்கல்வி இயக்குனரின் அதிகாரம் குறைப்பு



பள்ளிக் கல்வி துறையில் இயக்குனருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு பள்ளிக் கல்வி கமிஷனருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.

 ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் 'ஆன்லைன்' முறைக்கு மாறியது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பணி விபரங்கள் உள்ளிட்டவையும் ஆன்லைன் முறைக்கு மாறின.மாவட்ட அளவில் சி.இ.ஓ.,க்கள் என்ற முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இணை இயக்குனர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

அதேபோல பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது. அதில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் முதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.அவருக்கு அரசின் கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்வது, பள்ளிகளின் செயல்பாடுகளை பார்வையிடுவது. புதிய பாடத்திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்வது போன்ற பணிகள் வழங்கப்பட்டுள்ளன.படிப்படியாக கமிஷனருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனுக்கான அதிகாரம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி வட்டாரங்கள் கூறியதாவது:
பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்புவது வழக்கம். இனி கமிஷனரின் அனுமதி பெற்றோ அல்லது ஒப்புதல் பெற்றோ சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.முக்கிய முடிவுகளை கமிஷனரின் அனுமதியின்றி மேற்கொள்ளக் கூடாது. பள்ளி விடுமுறை, பள்ளி வேலை நாட்கள், அகாடமிக் விவகாரம் போன்றவற்றில் கமிஷனரின் அறிவுரையை பெற்ற பின்னரே செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் எதிரொலியாக பள்ளிகளின் காலாண்டு விடுமுறை அறிவிப்பையும், 'ஆன்லைன்' வகுப்புகள் ரத்து தொடர்பான அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார்.அவரை தொடர்ந்து பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் செய்திக்குறிப்பாக வெளியிட்டார். வரும் காலங்களில் இயக்குனரின் அதிகாரங்கள் மேலும் குறைக்கப்படும் என தெரிகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.