Pages

Sunday, September 17, 2017

அபராதத்தில் யாருக்கு விலக்கு? எஸ்.பி.ஐ., தீவிர ஆலோசனை


சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையில் இருந்து, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு விலக்கு அளிப்பது குறித்து, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி ஆலோசித்து வருகிறது. நாட்டின் மிகப் பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை இந்தாண்டு ஏப்ரலில் அமல்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, இதில் மாற்றம் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக, வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர், ரஜ்னிஷ் குமார் கூறியதாவது:நாடு முழுவதும் ஸ்டேட் வங்கியில், 40 கோடி வங்கி கணக்குகள் உள்ளன. அதில், அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை, 13 கோடி. இந்த கணக்குகளுக்கு அபராதம் கிடையாது. மீதமுள்ள, 27 கோடி கணக்கில், 20 சதவீதம் பேர், மாத குறைந்தபட்ச இருப்பை பராமரிப்பதில்லை. இதுபோன்றவர்களுக்கே அபராதம் விதிக்கபடுகிறது.

ஜூன் மாதத்தில், இந்தக்கணக்குகளில் இருந்து, 235 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில், ஸ்டேட் வங்கியின் இந்த அபராதத் தொகை மிகவும் குறைவே. வங்கி கணக்குகளை பராமரிக்க அதிகம் செலவிடுகிறோம். செயல்பாட்டு செலவுகளை ஈடு செய்யவே, இந்த அபராத முறை கொண்டு வரப்பட்டது. இந்த அபராத முறைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், மூத்த குடிமக்கள், மாணவர்கள் போன்ற ஒரு சிலரின் கணக்குகளுக்கு மட்டும் இந்த அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்; விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment