Pages

Thursday, November 07, 2013

மாணவர்களுக்கு மொபைல் வேன் கவுன்சிலிங் : ஒழுக்கத்தை மேம்படுத்த கல்வித் துறை ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், "டீன் ஏஜ்' மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை மேம்படுத்தி, உளவியல் ரீதியாக மாற்றம் கொண்டு வர, மொபைல் வேன் மூலம், கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. இதற்காக, 10 வேன்களை, கல்வித்துறை வழங்கி உள்ளது. பள்ளி மாணவர்களிடையே, வன்முறை மற்றும் ஒழுக்கமின்மை அதிகம் ஏற்பட்டுள்ளது. இவர்களை, நல்வழிபடுத்தி, அதிக மதிப்பெண்கள் எடுக்க, பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கவுன்சிலிங் கொடுக்க உள்ளனர்.

இதற்காக,சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர் என, 10 மண்டலங்களாக பிரித்து, தலா ஒரு வேன் கொடுத்துள்ளனர். இதில் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர், ஒரு உதவியாளர் இருப்பார்கள். இவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தலின் படி, குறிப்பிட்ட பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு "கவுன்சிலிங்' வழங்குவர். இதில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, மனநலம் பற்றி விழிப்புணர்வு, ஞாபக மறதி, மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னை, ஒழுக்கம், போதை பொருள் பற்றிய விழிப்புணர்வுகளுக்கு, "டிவி' மூலமும், தனியாகவும் "கவுன்சிலிங்' கொடுக்கின்றனர்.

இதேபோல், பள்ளிகளில் தலா இரு ஆசிரியர்களுக்கும், கவுன்சிலிங் தருகின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில்,"" இந்தியாவில் முதன் முறையாக, தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பில், மாணவர் களுக்கு வேன் மூலம் "மொபைல் கவுன்சிலிங்' நடத்தப்படுகிறது. இது, மாணவர்களிடையே உளவியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி, நல்வழிபடுத்தும். கற்றலில் பின் தங்கிய மாணவர்கள் கூட, அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment