வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவில், உலகின் சிறந்த 500 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து உயர் கல்வியை வழங்க முடியும் என பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) அதிரடியாக விதிமுறை வகுத்துள்ளது. இதன்மூலம், தரமற்ற வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைவதை தடுக்க முடியும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உயர்கல்வி அளிக்க வகை செய்யும் மசோதா 2010ம் ஆண்டு மே மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, தங்களது படிப்புகளை வழங்க அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், மசோதா நிறைவேற்றப்படவில்லை. இம்மசோதாவில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை, தரமில்லாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் புகுந்துவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன, போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், உரிய விதிமுறைகளை வகுக்கும் பணியை யு.ஜி.சி., தற்போது நிறைவு செய்துள்ளது. புதிய விதிமுறைகளின் படி, இந்திய கல்வி அமைப்புகளின் அனுமதியுடன், உரிய தரத்தில், உலகின் சிறந்த 500 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் தங்களது படிப்புகளை வழங்க முடியும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘நாக்’ எனப்படும் தேசிய தர நிர்ணயக் குழுவின் ’ஏ’ அல்லது அதற்கு இணையான தர அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். முதுநிலை பாடப்பிரிவுகளை வழங்குவதில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவமிக்க கல்வி நிறுவனங்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டு விதிமுறைகளில் இருந்தும் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசு கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின்கீழ் செயல்படும் இந்திய கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள, பல்கலையின் அனுமதி பெற வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் யு.ஜி.சி.,யின் அனுமதியை பெறவேண்டும். அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் அதற்குமேல் தொடரவும், அனுமதி மறுக்கவும் அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் யு.ஜி.சி.,க்கு அதிகாரம் உண்டு. மேலும், விதிமுறைகளை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய மத்திய அரசுக்கு யு.ஜி.சி., பரிந்துரைக்கும். இந்திய மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை குறித்து பொதுமக்கள் அறியும் வகையில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன இணையதளத்தில் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இந்த இரு தரப்பினருக்கான ஒப்பந்தம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். வெளிநாட்டு பரிமாற்றங்களில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்படுதல் அவசியம். இவ்வாறு சில முக்கிய கட்டுப்பாடுகளை யு.ஜி.சி., அதிரடியாக வகுத்துள்ளது.
Pages
▼
No comments:
Post a Comment