Thursday, June 04, 2015
தங்கத்தின் விலை நிர்ணயிப்பது எப்படி?
ஏழை, பணக்காரர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் விரும்பவது தங்கம். ஒவ்வொரு நாளும் இதன் விலை மாறிக் கொண்டேயிருக்கிறது. இந்த நடைமுறையைப் பற்றி இன்றைய தகவல் துளிகள் பகுதியில் பார்க்கலாம்.
தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி?
காலை, மாலை என இரண்டு முறை தங்கத்துக்கு பண்டகச் சந்தையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் இருப்பு, சுரங்கத்தில் இருந்து கிடைப்பவை ஆகியவற்றின் அடிப்படையில் லண்டன் பண்டகச் சந்தையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
எனினும், அதை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு விஷயங்களைப் பொறுத்து இந்தியாவில் தங்கம் விலை இருக்கும். தங்கத்தின் விலை நிலவரத்துக்கு குறிப்பிட்ட அளவுகோல் என எதுவும் கிடையாது.
மற்ற பொருட்களைப் போல சந்தையில் தங்கத்தை உலோகமாக குவித்து விலை பேசுவதுமில்லை.
பிறகு எப்படி தினசரி விலை நிர்ணயம் நடக்கிறது? வங்கிகள் மூலமாகவே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு டீலர்கள் வழியாக நகை வர்த்தகர்களை அடைகிறது. தங்கத்தின் இறக்குமதி வரி, வாட் வரி, உற்பத்தி வரி ஆகியவற்றுடன் தங்கள் லாப விகிதத்தையும் கணக்கிட்டு இந்திய நகை வணிகர்கள் சங்கம், மும்பையில் தங்கத்தின் விற்பனை விலையை நிர்ணயிக்கிறது.
தினசரி வர்த்தக தொடக்கம் மற்றும் நிறைவு நேரங்களில் விலை அறிவிக்கப்படுகிறது. பெரிய டீலர்கள் 10 பேர் தங்கத்தை வாங்கிய விலை, மாலை விற்பனை செய்த விலை ஆகியவற்றின் சராசரியே அன்றைய தங்கத்தின் விலையாகிறது.
மும்பையில் வெளியாகும் விலையுடன் மாநில வரிகளைக் கணக்கிட்டு தமிழகம் உட்பட மாநிலங்களில் தங்கத்தின் விலை அறிவிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் தங்கத்துக்கு தினசரி விலை நிர்ணயிக்கும் முக்கிய பண்டகச் சந்தை லண்டனில் செயல்படுகிறது. இந்தியாவில் விலை நிர்ணயத்தில் இந்த சர்வதேச தங்கம் விலையும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது
Wednesday, June 03, 2015
வாக்காளர் விரலில் மை வைப்பதில் மாற்றம்
வாக்காளர்களின் விரலில் மை வைப்பதில் மாற்றம்: தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவு
தேர்தலில் வாக்களிப்பவர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அடையாள மையை பெரியதாகவும், தடிமனாகவும் வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்களின் விரலில் அதிகாரிகள் சரியாக மை வைப்பதில்லை என தொடர்ச்சியாகப் புகார் எழுந்ததையடுத்து மேற்கண்ட முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில், "வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலின் நக முனையிலிருந்து முதலாவது மூட்டு தொடும் வரை பெரிய அளவில் பட்டையாக மை வைக்க வேண்டும்;
இதற்காக பிரத்யேக பிரஷ் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னம் பொருந்திய பொத்தானை வாக்காளர் அழுத்துவதற்கு முன்பு அவரது விரலில் அழியாத மை வைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாளும் தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சில தேர்தல்களில் வாக்களர்களின் விரலில் சரியாக மை வைக்கப்படவில்லை என புகார்கள் வந்ததால், இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்கவுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு இதுகுறித்துப் பயிற்சி அளிப்பதுடன், பெரிய மை குறித்த அறிவிப்புச் சீட்டை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைத்து அனுப்பி வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் விரல்களில் மை வைக்க சில இடங்களில் தீக்குச்சியைப் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மையுடன் சேர்த்து, பிரஷ் ஒன்றையும் அனுப்பி வைக்குமாறு மைசூர் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
கர்நாடக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், "மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ்' நிறுவனத்திடம் இருந்து வாக்குப்பதிவு அடையாள மை கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நிறுவனம் கடந்த 1962-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முதல் தற்போது வரை மை வழங்கி வருகிறது. சில வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து மை அனுப்பப்படுகிறது.
பி.எப் பண பட்டுவாடா புதிய சட்டப்பிரிவு தொடக்கம்
பி.எப் சேமிப்பிலுள்ள தொகையினை உரிய தொழிலாளிக்கு பட்டுவாடா செய்வது குறித்த புதிய சட்டப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக மண்டல ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய நிதி சட்டம் 2015ல் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலுள்ள தொகையினை உரிய தொழிலாளிக்கு பட்டுவாடா செய்வது குறித்த புதிய பிரிவு 192எ சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவு கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு குறைவாக பணிக்காலம் உடைய தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு ெதாகையானது 30 ஆயிரம் மற்றும் அதற்கு கூடுதலாக கணக்கு முடிப்பு பட்டுவாடா செய்யப்படும் போது வருமான வரி கீழ்கண்ட விகிதத்தில் மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும். அதன்படி, ெதாழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை சமர்ப்பித்திருந்தால் மூலத்தொகையிலிருந்து வருமான வரி பிடித்தமானது 10 சதவிகிதமாக இருக்கும். அவர், படிவம் எண் 15ஜி, 15எச்-ஐ சமர்ப்பித்திருந்தால் வருமான வரியானது மூலத்தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது.
அதேபோல், தொழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண் மற்றும் படிவம் எண் 15ஜி, 15எச்-ஐ சமர்ப்பிக்க தவறினால் அதிகபட்ச சதவிகித அளவிலான (34.608) வருமான வரியானது மூலத்தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும். சட்டமாற்றத்திற்கு உட்பட்ட வகையில் வருங்கால வைப்புநிதி திட்ட உறுப்பினர்கள் தங்களது பி.எப் கணக்கு முடிப்பு படிவம் எண் 19ஐ சமர்ப்பிக்கும்போது, பணி முடிப்பு பற்றியதான சரியான விவரம் மற்றும் வருமானவரி நிரந்தரகணக்கு எண் (பான் கார்டு) விவரத்தையும் உரிய பகுதியில் அளிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
படிவம் எண் 15ஜி, 15எச்-ஐ பி.எப் கணக்கு முடிப்பு படிவ எண் 19 உடன் இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள பி.எப் அலுவலகங்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் இல்லை
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய முறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய வகையில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அட்டை வழங்க அரசு திட்டமிட்டது. இதற்காக மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்தது. 2015-16 கல்வியாண்டில் இந்த 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர்.
ஒரு சில நிர்வாக காரணத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பழைய திட்டப்படியே மாணவர்களுக்கு பஸ் பாஸ் ஏற்பாடு செய்து கொடுக்க அரசு உத்தர விட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு மாணவரின் பெயர், முகவரி, பெற்றோரின் தொழில், ரத்த வகை, உட்பட பல்வேறு புள்ளி விவரங்களுடன் கூடிய 'ஸ்மார்ட்' கார்டு வழங்க ஏற்பாடு நடந்தது. இக்கார்டிலுள்ள தகவல்கள் ஆன்-லைனில் பதிவு செய்யப்படும். ஒரு மாணவர் பற்றிய விவரம் அறிய கார்டு மட்டும் இருந்தால் போதும் .
இதற்கான இயந்திரத்தில் பொருத்தினால் அனைத்து தகவல்களை பெற முடியும். இதற்கான பணி முடியாததால் ,இவ்வாண்டு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழைய திட்டப்படியே அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பெற்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் இலவச பஸ் பாசை உடனே பெற அரசு அறிவுறுத்தியுள்ளது, என்றார்.மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில் திட்டம் நிறைவேறுமா? அல்லது கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்களை ஈர்க்க கே.ஜி வகுப்புகள் தொடங்க திட்டம்?
மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்கப் பள்ளிகளில், சென்னை மாநகராட்சி போல், கே.ஜி., வகுப்புகளைத் துவங்க, தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தால், அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
அதேநேரம், அரசு பள்ளி களில் மாணவர்களை சேர்க்க, பெற்றோரிடம் பிரசாரம் செய்யுமாறு, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், ஒரு பள்ளிக்கு குறைந்தது, 30 மாணவர்களாவது இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாத, ஓர் ஆசிரியர் மட்டுமே இருக்கும் தொடக்கப் பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும், தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது; இப்பணியில், தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில், அழகாபுரி மற்றும் கோவைபுரி ஆகிய இடங்களிலுள்ள தொடக்கப் பள்ளிகள், அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் தலா, இரு மாணவர்கள் மட்டுமே இருந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், 250 பள்ளிகள், ஒற்றை இலக்க மாணவர்களுடன் இயங்குவது தெரியவந்துள்ளது; இப்பள்ளிகள் மூடப்பட்டு, அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவனிடம் கேட்ட போது,
''தொடக்கப் பள்ளிகளை மூடும் பேச்சுக்கே இடமில்லை. எப்படியாவது, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உத்தரவிடப்பட்டு உள்ளது. ''ஆகஸ்ட் வரை, மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தவும், மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்கள் தொடர்ந்து முயற்சி எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார். சென்னை மாநகராட்சியில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகள், சிறுபான்மை மொழி உருது மற்றும் தெலுங்குப் பள்ளிகளில், 100 இடங்களில், கே.ஜி., ஆங்கில வகுப்புகள் துவங்கி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இதை பின்பற்றி, மற்ற மாநகராட்சிப் பள்ளி களிலும், ஆங்கில மழலையர் வகுப்புகள் துவங்க, தொடக்கக் கல்வி இயக்கம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது
Tuesday, June 02, 2015
கேந்திரியா வித்யா பள்ளிகளில் வேலைவாய்ப்பு
மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3,344 ஆசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதில், 2,566 இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள், 391 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 387 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அடங்கும்.
மூவகைப் பணிகள்
இடைநிலை ஆசிரியர் பணியைப் பொறுத்தவரையில், ஆசிரியர் பயிற்சியில் பட்டயப் படிப்புடன் “சி-டெட்” எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30-க்குள் இருக்க வேண்டும். இதேபோல், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இளங்கலை படிப்பு மற்றும் பி.எட். முடித்திருப்பதுடன் சி-டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம். வயது வரம்பு 35-க்குள். “முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டப் படிப்புடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 40-க்குள்”.
கடைசித் தேதி
அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதியுள்ள நபர்கள் போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாகத் தேர்வுசெய்யப்படுவார்கள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் ஜூன் 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பு அறிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சி-டெட் தேர்வில் குறைந்தபட்சம் 82 மதிப்பெண் பெற்ற எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். பாடவாரியான காலியிடங்கள், தேர்வு முறை, பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தின் அடியில் ‘எம்ப்ளாய்மென்ட் நோட்டீஸ்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிக்குள் சென்று விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
12மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 12 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 36 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தவிர அனைவருக்கும் கல்வி திட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 12 பேரை திடீர் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் ஜெயக்குமார் கன்னியாகுமரிக்கும், திருவண்ணாமலை பொன்குமார் விருதுநகருக்கும், கரூர் திருநிறைச்செல்வி தஞ்சாவூருக்கும், தஞ்சாவூர் தமிழரசு கிருஷ்ணகிரிக்கும், கிருஷ்ணகிரி ராமசாமி கரூருக்கும், தூத்துக்குடி முனுசாமி பெரம்பலூருக்கும், நாகப்பட்டினம் ராமகிருஷ்ணன் தூத்துக்குடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கோவை ஞானகவுரி சேலத்துக்கும், புதுக்கோட்டை அருள்முருகன் கோவைக்கும், காஞ்சிபுரம் பாண்டி புதுக்கோட்டைக்கும், சேலம் உஷா காஞ்சிபுரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நாளை பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை இணையத்தில் நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து, தற்காலிக மதிப்பெண் பட்டியல் கடந்த 29ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டன.
இதுதவிர, தற்காலிக மதிப்பெண் தேவைப்படுவோருக்கு தாங்களே இணையத்தில் இருந்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியோர், தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியோர் நாளை முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணைய தளத்தில் சென்றதும் ‘‘provisional Mark Sheet SSLC Result - March 2015’’ என்ற திரை தோன்றும். மாணவர்கள் தங்கள் மதிப்பெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை டைப் செய்ய வேண்டும்.
மேலும் அந்த திரையில் தோன்றும் குறியீட்டை அதில் உள்ளது போலவே டைப் செய்ய வேண்டும். அதற்கு பிறகு View Result என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது மாணவர்களின் பதிவெண் பெயரில் ஒரு பிடிஎப் பைல் பதிவிறக்கம் ஆகும். அந்த பைலில் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்று இருக்கும். அதை மாணவர்கள் அப்படியே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
ஜூலை 1ல் ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங்
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 270 உள்ளன. இவற்றில் மொத்தம் 40 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேரக்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் விண்ணப்பங்களை வழங்கலாம்.
இதையடுத்து, தகுதியுள்ள மாணவ, மாணவியர் கவுன்சலிங் மூலம் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கை உத்தரவு வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் மேற்கண்ட கவுன்சலிங் வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடக்கும். மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கான கவுன்சலிங் ஜூலை 1ம் தேதி நடக்கிறது. ஆங்கில வழியில் படிக்க விண்ணப்பித்துள்ளோர், சிறுபான்மை மொழியில் படிக்க விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 2ம் தேதியும், தொழில் பிரிவினருக்கு 3ம் தேதியும், கலைப்பிரிவினருக்கு 4 மற்றும் 6ம் தேதியும், அறிவியல் பிரிவினருக்கு 7ம் தேதி முதல் 10ம் தேதி வரையும் கவுன்சலிங் நடக்கும்.
22மையங்கள் மூலம் மாணவர்கள் பஸ் பாஸ் வழங்கத்திட்டம்
அரசு மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது. தமிழகத்தில் 52 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.
இந்த ஆண்டு பள்ளித் திறக்கும் நாளன்றே பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்ததால், தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் அந்தந்த பள்ளிகளில் தலைமையாசிரியரின் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் கடந்த மாதமே நடந்தது. ஆனால், எத்தனை மாணவர்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்ற முழு விவரங்களை பெரும்பாலான பள்ளிகள் தயார் செய்யாததால், பஸ் பாஸ் வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது.
பழைய பஸ் பாசுடன் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து வந்தால் பஸ்களில் அனுமதிக்கும்படி அரசு பேருந்து கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு முறையாக போய் சேராததால், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கண்டக்டர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நிலவியது. இந்நிலையில், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு 25 லட்சத்து 44 ஆயிரத்து 576 மாணவ, மாணவிகளுக்கு 17 மையங்கள் மூலம் பஸ் பாஸ் வழங்கும் பணி நடந்தது. இந்த ஆண்டு பள்ளி திறந்த உடனேயே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பெரும்பாலான பள்ளிகள், மாணவர்கள் பட்டியல் தயாரிப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றன. இதனால் திட்டமிட்டபடி பணிகள் துவங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இருந்தாலும், போக்குவரத்து துறையினருக்கு வந்துள்ள மாணவர்கள் பட்டியலின்படி, அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி நேற்று காலை முதல் துவங்கியது. இந்த ஆண்டு 5 மையங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, 22 மையங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு நாளை முதல்.விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுத தட்கல் முறையில் நாளையும், 5ம் தேதியும் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2015 ஜூன், ஜூலையில் நடக்கவுள்ள பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) நாளையும், நாளை மறுதினமும் (ஜூன்4, 5) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் மார்ச் 2015 பிளஸ் 2 தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வராக எழுதியிருக்க வேண்டும்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது வருகை புரியாத அனைத்து பாடங்களையும் எழுதலாம். தட்கல் முறையில் சென்னையில் மட்டுமே தேர்வெழுத முடியும். விண்ணப்பதாரர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஜூன் 4, 5 ஆகிய இரண்டு நாட்களில் பதிவு செய்ய வேண்டும். மார்ச் 2015 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விண்ணப்பம் பதிவு செய்யும்போது காண்பிக்க வேண்டும். ஒரு பாடத்திற்கு ரூ.50, இதரக்கட்டணம் ரூ.35, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000, பதிவு கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.